குமரி முனையில் திருக்குறள் திருவிழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:32
உலகத் தமிழர்கள் ஓரிடத்தில் கூடிக்கொண்டாடி மகிழும் திருவிழா ஒன்றினை உருவாக்கிட எண்ணிய ஐயா பழ. நெடுமாறன் அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் விடை (வைகாசி) திங்கள் முதலாம் நாள் அன்று திருக்குறள் திருவிழா கொண்டாடுவது என்று முடிவு செய்து அறிவித்ததற்கிணங்க, குமரியை அடுத்த இலீபுரம், திருக்குறளூரில் செயற்பட்டு வரும் திருவள்ளுவர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் திருவிழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டும் விடை (வைகாசி)த் திங்கள் முதலாம் நாள் (14-5-12) அன்று திருக்குறள் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் அறக்கட்டளையால் குமரிக் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள திருக்குறள் ஒண்சுடர்த்தூணில் நெய் விளக்கேற்றும் நிகழ்ச்சியில், கோவை திருமதி. தமிழ்ச்செல்வி தமிழ்வாணன் நெய்விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். நெய்வேலி பொறியாளர் பெருந்தேவன், தமிழ்த்திரு. கோ. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 9.30 மணியளவில் திருவள்ளுவர் சிலையில், திருவள்ளுவர் அறக்கட்டளையின் இணைச் செயற்பொறுப்பாளர் திரு. சங்க வள்ளிமணாளன் அவர்கள் தலைமையில், ஆ. நெடுஞ்சேரலாதன், புலவர் சோ.க. அறிவுடை நம்பி ஆகியோர் முன்னிலையில், திருக்குறள் போற்றியுடன் மலர்வழிபாடு நடைபெற்றது. அதன்பின் பகல் 11 மணியளவில், குமரி காந்திமண்டபம் முதல் மாதவபுரம் வரை, அருட்செல்வன் தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணியில் அலங்கரிக்கப்பட்ட உந்தில், திருவள்ளுவர் சிலை கொண்டு வரப்பட்டது.

மாலை 4 மணியளவில், பாவலர் கதிர் முத்தையன் தலைமையில் திருக்குறள் போட்டியில் வென்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பொறிஞர். ஆ. கருப்பையா அவர்களின் வரவேற்புரைக்குப்பின் ம. வீரபாண்டியனால் எழுதி இயக்கப்பட்ட "திருவள்ளுவர் தமிழர்க்குக் கிடைத்த தங்கப் புதையல்' என்னும் நாடகம் நடைபெற்றது. கலைவேந்தன், க. கபிலன், ம. வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பாக நடித்தனர். முனைவர் கேசவப் பெருமாள் திருக்குறள் போட்டியில் வென்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசு வழங்கினார். பேராசிரியர் மு.நா.பா. தமிழ்வாணன், இன, மொழி, உணர்வைத் தூண்டும் பாடல்களைப் பாடிய கடையநல்நூர் பசும்பொன் அவர்களைப் பாராட்டினார்.

க. இளந்திரையன் தலைமையில் சங்க வள்ளிமணாளன் முன்னிலையில், புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன் அறிமுகவுரை ஆற்ற, பேராசிரியர்,

மு. ஆல்பென்சு, நத்தானியேல் பாராட்டுரை வழங்க, கேசவ சுப்பையா அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

நிறைவு விழாவுக்கு திருமுதுகுன்றம் பொறிஞர் ஆ. கருப்பையா தலைமை ஏற்றார். கோ. சத்திய வாகீசுவரன் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் மு.நா.பா. தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்கினார். மு.ம. இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். நிறைவில் திருவள்ளுவர் அறக்கட்டளையின் செயற்பொறுப்பாளர் சோ. நன்மாறன் நன்றி கூறினார்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.