கிறிஸ்தவ தேவாலயங்களில் தமிழ்ப் புறக்கணிப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 14:32
பெங்களூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் தமிழ்க்கிறிஸ்தவர்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக தமிழ் கிறிஸ்தவ பொதுநலச் சங்கத்தின் நிர்வாகிகளான அ.இரா. புஷ்பராஜ், இரா. அந்தோணி குரூஸ் ஆகியோர் பெங்களூர் வந்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களிடம் புகார் செய்தனர். அப்போது அவர்கள் அளித்த மனுவில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
1. முன்னாள் சென்னை மயிலை பேராயர் மேதகு அருளப்பா அவர்கள் அகில இந்திய ஆயர் குழுவின் செயலராக இருந்தபோது புனித அருளப்பர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை பெங்களூரில் கட்டுவதற்கு அனுமதியளித்துள்ளார். இந்நிறுவனம், அகில இந்திய ஆயர்குழுவின் நிர்வாகத்துக்குட்பட்டதாயினும் இதில் கொங்கனி மற்றும் மலையாள மொழியினரே மருத்துவக்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பெரும்பாலும் பெறுகின்றனர். தமிழ் இறைமக்களுக்கு பெயரளவுக்கு வாய்ப்புகளை கொடுத்தாலும், எடுபிடி வேலைகளையே தருவார்கள். கொங்கனி மற்றும் மலையாள மொழியினர் சில காலம் இம்மருத்துவமனையில் பெறுகின்ற அனுபவம் வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற எளிதாகிறது. தமிழ் மக்களுக்கு மருத்துவக் கல்வியும் வேலை வாய்ப்பும் தரப்படாததால் வெளிநாடுகளில் தகுதியான வேலை வாய்ப்பு இழக்கப்படுகிறது. புனித அருளப்பர் மருத்துவ கல்வி மற்றும் மருத்துவமனை அகில இந்திய ஆயர் பேரவையின் நிர்வாகத்துக்குட்பட்டதால், தமிழ் மக்களுக்கும் மருத்துவக் கல்வி வேலை வாய்ப்பில் முறையான உரிமை கிடைக்க தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. இந்திய மாநிலங்களின் சீரமைப்புக்கு முன்னதாக, பாண்டிச்சேரி மறைமாவட்டத்திலிருந்து மைசூர் மாவட்டம் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து மைசூரிலிருந்து பெங்களூர் மறைமாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. பின்னர் பெங்களூரிலிருந்து சிமோகா மறைமாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிக்கப்படாததற்கு முன்னர் இம்மறை மாவட்டங்களில் தமிழ் இறைமக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். மாநிலங்கள் சீரமைப்புக்குப்பின் கர்நாடகத்தில் தமிழ்மக்கள் மொழி சிறுபான்மையினராக அரசியல் சட்டப்படி உள்ளனர். மொழி சிறுபான்மையினர் உரிமைகள் காக்கப்பட அரசியல் சட்டத்தில் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி உயர் மறைமாவட்டத்திலிருந்து தமிழ் இறைமக்களை பிரித்து கர்நாடக மாநிலத்துக்கு மறைமாவட்டம் உருவாக்க கொடுக்கப்பட்டபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்கள் மைசூர், பெங்களூர், சிமோகா, சிக்மகளூர் மற்றும் பெல்லாரி மாவட்டங்களில் கிறித்துவர்களாகவே உள்ளனர். இவ்வாறிருக்க மாநிலம் மாறியதால், கர்நாடக மறைமாவட்டங்களில் தமிழர்களின் தாய்மொழி மட்டும் மாறிவிடுமோ? கர்நாடகத்தின் மறைமாவட்டங்களில் தமிழ் இறைமக்களின் கல்வி மற்றும் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பெரும்பான்மை தமிழ் இறைமக்கள் மீது - வழிபாட்டில் மாநிலம் என்ற போர்வையில் - மாநில மொழி திணிக்கப்படுகிறது. இதனால் தமிழ் இறைமக்களின் ஆன்மீகம் நற்செய்தியில்லாமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
3. ஆதலால் தாங்கள் கர்நாடகத்தில் உள்ள தமிழ் இறைமக்களின் ஆன்ம நலன் கருதி மீண்டும் பாண்டிச்சேரி மறைமாவட்டத்துடன் இணைக்க ஆவன செய்ய வேண்டுமெனவும் அதற்கென உரிய நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(குறிப்பு : கோயம்புத்தூர் உயர் மறைமாவட்டத்தில் கேரளத்தின் பாலக் காடும், பெல்காம் மறைமாவட்டத்தில் மகாராட்டிரத்தின் சோலாபூரும் உள்ளன).
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.