களங்களில் உருவாகும் தலைவர்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 அக்டோபர் 2012 12:01
கூடங்குளம் அணுமின் நிலையத் திற்கு எதிரான மக்களின் அறவழிப் போராட்டம் புதிய பரிமாணத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை வீச்சு, தடியடி
ஆகிய கொடிய அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்த போதிலும் அந்த மக் கள் கொஞ்சமும் அஞ்சாமல் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் உயிர்களைப் பணயமாக வைத்து அலை கடலுக்குள் இறங்கி நின்று நடத்திய போராட்டம் இதுவரை நாம் கேள்விப் படாத போராட்டமாகும். இந்தப் போராட் டம் அனைவரையும் நெக்குருகச் செய்திருக்கிறது.
கடந்த 400 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் ஜனநாயக நெறிமுறை களின்படியும், காந்திய வழியிலும் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து உணர்வுப் பூர்வமாக ஈடுபட்ட போதிலும் இதுவரை ஒரு சிறு வன்முறைக்குக்கூட இடம் தராமல் கட்டுப்பாட்டுடன் போராடி வந்தி ருக்கின்றனர். அந்த மக்கள் வன்முறை யில் ஈடுபட்டனர் என்று காவல்துறை யினர் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை. போராட்டத்தை எப்படியேனும் ஒடுக்கியே தீர வேண்டுமெனத் திட்ட மிட்டு வீண்பழியினைச் சுமத்தி மிகக் கொடுமையான வகையில் அடக்கு முறைகளை காவல்துறை கையாண்டுள் ளது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
கடந்த 400 நாட்களுக்கு மேலாகப் போராடி வரும் அந்த மக்களின் நியாய மான சந்தேகங்களுக்கு இதுவரை விளக் கம் தரப்படவில்லை. அணுமின் நிலை யத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் யாரும் மக்களைச் சந்தித்துப் பேசவில்லை.
இதற்கு மாறாக, கூடங்குளம் பகுதியில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமான எண்ணிக்கையில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
தங்களுக்கும் எதிர்கால தலை முறையினருக்கும் அணு உலையால் நேரிடக்கூடிய அபாயத்தை எண்ணிப் பார்த்தே அந்த மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இந்த உண்மையை மத்திய-மாநில அரசுகள் உணர்ந்து தங்களின் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும்.
அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க உள்ள நிலையில் எப்படி நிறுத்துவது என மத்திய அரசு வாதம் செய்கிறது. ஆஸ்திரியாவில் மின் உற்பத் திக்கு முந்தைய நாள் அணு உலை மூடப்பட்டுள்ளது. உலகின் பல நாடு களில் மின் உற்பத்தி தொடங்கிய பிறகும் அணு உலைகள் மூடப் பட்டுள்ளன.
காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி போன்ற அபாயம் இல்லாத இயற்கையான வழிமுறை களுக்கு தமிழ்நாட்டில் தாராளமாக இடம் இருக்கும்போது அபாயகரமான அணுமின் உலைகள் தேவையா? குறிப் பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அணுஉலைகள் இயங்காது. ஆனால் அவற்றிலிருந்து வெளியாகும் அணுக் கதிர் வீச்சைத் தடுப்பதற்கு மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செல வழிக்க வேண்டியிருக்கும். ஆனாலும் முழுமையாகத் தடுத்துவிட முடியாது. பிறகு ஏன் மத்திய அரசு இதில் பிடிவாதமாக இருக்கிறது?
அணுமின் உலைகளில் கிடைக் கும் ப்ளுட்டோனியம் அணு ஆயுதங் கள் செய்வதற்குப் பயன்படும். காந்தியடி களைத் தேசத்தந்தையாகக் கொண்ட நாடு அணு ஆயுத உற்பத்திக்காக அப் பாவி மக்களைப் பலியிடத் துணிந்திருப் பது வேதனை மிக்க செய்தியாகும்.
கூடங்குளம் பகுதியில், குறிப்பாக இடிந்தகரை சிற்றூரில் குடிநீர் அறவே கிடையாது. வெளியிலிருந்து லாரிகள் மூலம் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. 6000 பேர் வாழும் அந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்கூட கிடையாது. அவசர மருத்துவ உதவிகளுக்கு நாகர்கோவில் அல்லது திருநெல்வேலிக்குதான் செல்ல வேண்டியுள்ளது. சாலை வசதி மிக மோசமாக உள்ளது. இத் தகைய அடிப்படை வசதிகள் அப்பகுதி யில் உள்ள பல கிராமங்களில் அறவே இல்லை. இப்பகுதியில் சாலை வசதி, மருத்துவமனை, குடிநீர்த் திட்டம் போன்ற குறைந்தபட்ச வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ.200 கோடியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அளித்த
திட்டத்தின் கதி என்ன ஆயிற்று என்பதே தெரியவில்லை. இந்த குறைகளை போக்க மாநில அரசோ மத்திய அரசோ இதுவரை அக்கறை காட்டவில்லை.
போராடும் மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவு படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அந்த மக்கள் ஒன்றுபட்டு நின்றனர். அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றுப் போராட்டத்தை நடத் தும் தேசத் துரோகிகள், அந்நிய கைக் கூலிகள் எனப் போராட்டக் குழுவினர் மீது அடாத பழி சுமத்தப்பட்டது.
உறுதியாகப் போராடி வரும் மக்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் புனையப்பட்டன.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சி கையாண்ட பிரித் தாளும் சூழ்ச்சிகளையும் அவதூறுப் பிரச்சாரங்களையும் காங்கிரசுக்காரர்கள் இப்போது கையாளுவதுதான் வேடிக்கை யிலும் வேடிக்கையானதாகும்.
அடக்குமுறைகள், அவதூறு களை அள்ளிப் பொழிதல், சுயநல சூழ்ச்சிகள் இவற்றைக் கையாளுவதன் மூலம் மக்கள் போராட்டங்களை ஒடுக்கி விட முடியாது. போராட்டக் களங்களில் தான் உண்மையான மக்கள் தலைவர்கள் உருவாகிறார்கள்.
தென்னாப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிரான போராட்டத்தில் பூத்த புரட்சி மலர்தான் அண்ணல் காந்தியடி கள் ஆவார். வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் இராஜாஜியின் தலைமை உருவாயிற்று. வைக்கம் போராட்டம் பெரியார் இராமசாமி அவர்களைப் பெற்றெடுத்தது. நீலன் சிலை அகற்றும் போராட்டம், நாகபுரி வாள் போராட்டம் போன்ற போராட்டங் களைத் திட்டமிட்டு காமராசர் நடத்திய போதுதான் அவரது செயல்திறனை மற்றவர்கள் உணர்ந்தார்கள்.
மேற்கண்ட போராட்டங்களையும் தலைவர்களையும் அடியொற்றி நடை பெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் உதயகுமாரின் தலைமைத்துவம் உருவாயிற்று.
போராட்டக்களங்கள் ஈன்றெடுத்த தலைவர்களை யாராலும் மிரட்டிப் பணியவைக்க முடியாது என்பதை ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
அறப்போராளியான உதயகுமா ருக்கு எதிராக இராணுவம், கடற்படை, மாநிலக் காவல் படை ஆகியவை கூட்டாக நடத்திவரும் மனித வேட்டை யை உடனடியாகக் கைவிட வேண்டும். உதயகுமார் தனி மனிதரல்ல; அந்தப் போராடும் மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்! அதனால்தான் அவரால் இந்தப் போராட்டத்தை இன்னமும் உறுதியுடன் தொடர்ந்து நடத்த முடிகிறது. யதார்த்தப்பூர்வமான இந்த உண்மையை உணர்ந்து அவரை அழைத்துப் பேச மத்திய-மாநில அரசுகள் முன் வரவேண்டும்.
மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் முன் னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை அறவே கைவிடும்படி வேண்டுகோள் விடுத்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதைப்போல ஒரு வேண்டுகோளை மத்திய அரசுக்கு முன்னாள் கடற்படை தலைமைத் தளபதி இராம்தாஸ், மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ர மணியன், அணு சக்தி கட்டுப்பாட்டுக் குழு முன்னாள் தலைவர் ஏ. கோபால கிருஷ்ணன், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, விஞ்ஞானிகளான பி.எம். பர்கவா, எம்.வி. ரமணா, டி. பாலசுப்ரமணியம், எழுத்தாளர் களான அருந்ததிராய், ரொமிலா தாப்பர், பிரபுல் பித்வாய் மற்றும் பலர் கையெழுத் திட்டு ஒரு வேண்டுகோளை விடுத்திருக் கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்கள் நலனை மனதில் கொண்டு இந்த அறிஞர்கள் விடுத்திருக்கும் வேண்டு கோளுக்காவது செவி சாய்க்க மத்திய- மாநில அரசுகள் முன்வரவேண்டும்.
இடிந்தகரை மக்கள் மீது நடத்தப் பட்ட மிகக் கொடுமையான அடக்கு முறைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உதயகுமார் மீதும் மற்றும் போராட்டக் குழுவினர் மீதும் போடப்பட்டுள்ள பொய்யான வழக்கு களை திரும்பப் பெறவேண்டும்.
அடக்குமுறைகளினால் அம்மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக் கச் செய்ய முடியாது. அவ்வாறு செய்வது எதிர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்பதை எவ்வளவு விரைவில் மத்திய-மாநில அரசுகள் உணர்கின்றனவோ அவ்வளவு விரை வில் அப்பகுதியில் அமைதி திரும்பும்.
காவல்துறையின் காட்டாட்சி தர்பாரின் விளைவாக இடிந்தகரை எனும் சிற்றூரில் மட்டுமே நடைபெற்ற இப்போராட்டம் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இப்போராட்டம் பரவுவதற்குள் சரியான முடிவுகள் எடுத்து மத்திய-மாநில அரசுகள் செயல்பட வேண்டும். இல்லையென்றால் விபரீதம் விளையும்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.