அணு உலை எதிர்ப்பு: மக்களின் மாபெரும் முற்றுகைப் போராட்டம் - பா. செயப்பிரகாசம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012 15:03
மக்களின் நல்வாழ்வுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பல உருவாக்கப்படுகின்றன. வளர்ச்சியை எப்படிக் கணக்கிட வேண்டும்?
"ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வளர்ச்சியடைவதற்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துமுன் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு விவசாயியை வரவழைத்து கைகளைத் தூக்கச் சொல்வேன். உழைப்பை மட்டுமே அறிந்த அவனது விலா எலும்புகள் அப்பொழுது வெளிப்படையாக நன்கு தெரியும். வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய பிறகு, ஓராண்டு கழித்து அந்த விவசாயியை அழைப்பேன். அப்பொழுது அவனது விலா எலும்புகள் தெரிகிறதா என்று பார்ப்பேன். அப்பொழுது சில விலா எலும்புகளாவது மறைந்திருந்தால் அதுதான் வளர்ச்சி''“
ஜே.சி. குமரப்பா என்ற காந்தியவாதி, ஒரு பொருளாதார நிபுணரும் கூட. விலா எலும்புச் சோதனைதான் மக்களது வளர்ச்சியைச் சரியாகக் கணக்கிடும் முறை என்றார்.
1970களில் போபால் யூனியன் கார்பைடு ஆலை மக்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. விலா எலும்புகளை மட்டுமல்ல. பத்தாயிரக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்துக் கொண்டது. யூனியன் கார்பைடோ, ஸ்டரிலைட்டோ வளர்ச்சிக்கானதென்றால், அந்த ஆலைகளைப் பாராளுமன்றத்துக்குப் பக்கத்தில் இரண்டிரண்டாய் வைத்துக்கொள்ளலாம். சென்னையில் சட்டமன்றம் அருகிலும் முன்புறமும் வைத்துக்கொள்ளலாம். புதுடில்லியில் பிரதமருடைய இல்லம், மத்திய அமைச்சர்களுடைய இல்லங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் துலங்கும் சாணக்கிய புரி, செல்வச் சீமான்கள் வசிக்கும் குபேரபுரிகளில் யூனியன் கார்பைடை நிறுவிக்கொள்ளலாம். சீமான்களும் சீமாட்டிகளும் வாழும் போயஸ்கார்டனிலும் கோபாலபுரத்திலும் உருவாக்கிக்கொள்ளலாம். அதுபோல அணு உலைகளையும், மின்ஆற்றலுக்கு அணு உலையைப் பரிந்துரை செய்யும் அரசியல்வாதிகளின் குடியிருப்புகளில், ஏன் அவர்களின் மடியில் கூட வைத்துக் கொள்ளலாம்.
வளர்ச்சித் திட்டங்கள் என்பவை விலா எலும்புகளை மறைக்க உண்டானவை அல்ல; நேற்றும் இன்றும் இது நிஜம். இந்திய முதலாளிகளின், பன்னாட்டு முதலைகளின் புடைத்த வயிறு இன்னும் இன்னும் வீங்க நிறைவேறும் திட்டங்கள் இவை.
அணுஉலை வெடித்தால் அழிவது நாங்கள்
ஆகாயத்தில் பறப்பது நீங்கள்
வேண்டாம் வேண்டாம்
அணு உலை வேண்டாம்
சுனாமி அலையால் அழிந்தது மக்கள்
புகுஷிமா உலையால் மடிந்தது மக்கள்
வேண்டாம் வேண்டாம்
அணு உலை வேண்டாம்
அணு உலை வேண்டாமென்று
கேரளம் மறுக்குது; வங்காளமும் மறுக்குது
தமிழன் மட்டும் இளிச்சவாயனா?
கண்ணைக் கொடுத்து சித்திரம் வாங்கும்
முட்டாள்களல்ல தமிழக மக்கள்
மக்கள் உயிரே முக்கியமென்று
உச்சநீதி மன்றமே உரக்கச் சொல்லுது
வேண்டாம் வேண்டாம்
அணுஉலை வேண்டாம்
யூனியன் கார்பைடும், ஸ்டெரிலைட்டுகளும், அணு உலைகளும் வேண்டாமென்பதற்கு ஆயிரம் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பேராசிரியர் மருதமுத்து வடித்த ஆயிரம் சான்றுகளின் சாரத்தைப் பிழிந்து தரும் இந்த முழக்கங்களும் இது போன்ற குரல்களும் முன்நடந்தன 29.10.2012 அன்று. தமிழகத் தலை நகரில் பழ நெடுமாறன் தலைமையில் அணு உலை எதிர்ப்பு அணியினர் ஒன்றிணைந்தனர். 29.10.2012, திங்களன்று சட்டமன்றம் தொடங்கியது. அன்றைய நாளிலேயே போராடும் கூடங்குள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தத் திரண்டனர்.
தேசப்பற்று, தேசத்துரோகம் என்பதன் அளவு கோலாக கூடங்குளம் அணுஉலை மாறிவிட்டது. 29.10.2012 அன்று சென்னையில் “தேசத்துரோகிகள்“ அனைவரும் ஒன்றிணைந்தனர் எனலாம். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் தேசத் துரோகிகள் ஒருமுகப்பட்டிருந்தனர். கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்) தலைமையில், பழ. நெடுமாறன் (தமிழர் தேசிய இயக்கம்) சட்டமன்ற முற்றுகைப் போராட்டப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இ.க.க. (மா.லெ மக்கள் விடுதலை இயக்கம்) தோழர் மீ.த. பாண்டியன் ஒருங்கிணைப்புப் பணியினை ஆற்ற,
தோழர்கள் வை.கோ (ம.தி.மு.க), தொல். திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), பெ. மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பேரா. ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), வியனரசு (பாட்டாளி மக்கள் கட்சி), தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தெகலான் பாகவி ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி), காலித்முகமது (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா), பாலசுந்தரம் (சி.பி.ஐ. எம்.எல்-விடுதலை), குணங்குடி அனிபா (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்), கே.எம்.செரீப் (தமிழ்நாடு மக்கள் சனநாயகக் கட்சி), அரங்க குணசேகரன் – (தமிழக மக்கள் புரட்சிக்கழகம்), செல்வி (தமிழ்நாடு மக்கள் கட்சி), செந்தில் (சேவ் தமிழ்ஸ்), திருமுருகன் (மே 17 இயக்கம்), கிறிஸ்டினா (பெண்கள் முன்னணி), ஜே.கே.சு. மணி (தமிழ்நாடு மக்கள் மீனவர் சங்கம்), தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு, பூவுலகின் நண்பர்கள், காஞ்சி மக்கள் மன்றம், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற ஐம்பது அமைப்புக்களும் பங்கேற்றிட முக்கியத் தலைவர்கள் உரையாற்றினர்.
இங்கு முக்கியமான வேறொன்றைச் சுட்டியாக வேண்டும். இடது அல்லது வலது பார்வைகளைத் தாண்டி உண்மையைத் தேடுதல் என்பது அடிப்படையானது. உண்மை எப்போதும் மக்களோடு நெருக்கமாய்ப் பயணிக்கும். உண்மைகளுக்கு அப்பால் நம்பிக்கைகளின் மேல் கட்டமைக்கப்படும் அரசியல், அதிலிருந்து எழும் கருத்தியல், எழுத்து, பேச்சு என ஒரு வகை உண்டு. இடதோ, வலதோ – நம்பிக்கைகளின் மேல் கட்டமைக்கப்படும் அரசியலைக் கொண்டே சமகால அரசியல் இயக்கங்கள் செயல்படுகின்றன. நாடாளுமன்ற, சட்டமன்ற, நகர்மன்றப் பதவிகளைப் பிடிப்பதற்கு இந்த நம்பிக்கைதான் அவசியம். நம்பிக்கை என்பது சிந்திக்கும் பொறுப்பை இன்னொருவரிடம் தள்ளிவிடுகிறது. நமக்காக தலைமைகள் சிந்திக்கிறார்கள்; கட்சி சிந்திக்கிறது; நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று மூளை உறைந்துவிடுகிற, சுயசிந்தனை அற்றுப் போகிற கூட்டம் அமைப்பு என்ற பெயரில் திரட்டப்படுகிறது. தேடலும் சுயசிந்தனையும் இணைய உண்மையின் பக்கம் நிற்பதையும் இந்த அமைப்புகள் தடுக்கின்றன; அந்தச் செயலே மக்கள் பக்கம் நிற்பதையும் தடுக்கிறது. ஆனால் உண்மையின் அருகிலும் மக்களோடும் நிற்பவர்களெல்லோரும் அணு உலை எதிர்ப்பாளர்களாய் அணிவகுக்கிறார்கள்.
"பிறந்த குழந்தைகூட அழுகைப்புரட்சி செய்துதான் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது.
குழந்தைக்கு இந்நிலை என்றால், வளர்ந்த மானுடர்களுக்குப் போராடாமல் விடியல் வராது. இந்த வாசகத்தைப் போராளிகளுக்குத் தந்தவர், மக்களுக்கு மறுக்கப்பட்ட சனநாயகத்தைப் பெற்றுத்தர விடுதலை ராணுவத்தைக் கட்டியமைத்து, இந்தியாவைச் சுற்றி வளைத்து அடிமைகொண்ட பிரிட்டானியரை அப்புறப்படுத்த முனைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
அதிகாரம் மேலோங்கி ஆட்டம் போடும் இடங்களில் சனநாயக அழிப்பு நடக்கிறது. சனநாயகக் கொலை ஒரு புள்ளியில் அல்ல, பல புள்ளிகளில் தொடங்குகிறது. மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப் படுவது, அதைக் கேட்கும் உரிமை மறுக்கப்படுவது, எழுத்து, பேச்சு, போராட்டம் மறுக்கப்படுவது, கருத்துச் சுதந்திரத்தின் மூல ஊற்றை அடைப்பது எனப் பல புள்ளிகளில் சனநாயகக் கொலை தொடங்குகிறது.
பிரமாண்ட திட்டங்கள் எல்லாமும் மக்களுக்கான சனநாயகத்தின் மேல் எழுப்பப்படும் கல்லறைகள் ஆகும். ஒரு நாட்டின் கல்லறை தாஜ்மகாலாகவும், இன்னொரு நாட்டின் கல்லறை பிரமிடுகளாகவும் அமைகிறது. இவை அனைத்தும் பிரமாண்டங்கள்தாம். நர்மதா அணைக்கட்டு, யூனியன் கார்பைடு, கனிமவள பகாசுர ஆலைகள், அணு உலைகள் போன்ற நவீன பிரமாண்டங்களால் இந்தியா நிறைக்கப்படும் வேளையில், மக்கள் வாழ்வு சிதைக்கப்படுகிறது. பெரிய பெரிய விதானங்களுடனான கூடங்குள அணு உலைக் கூடங்கள் கட்டிடக்கலையின் அழகை வெளிப்படுத்துபவையாக இருக்கலாம்; ஆனால் அச்சமூட்டுபவை. ரூ. 14 ஆயிரம் கோடியில் சனநாயகத்தின் மீது எழுப்பப்பட்ட கல்லறையைக் கண்டு கூடங்குள வட்டார மக்கள் பயந்து போனார்கள். இந்த வாழ்வுப் பயத்திலிருந்து எழுந்து வருகிறது அவர்கள் போராட்டம்.
சனநாயகம் மறுக்கப்பட்ட பிரமாண்டத்திலிருந்து விடுதலை பெறும் போராட்டம் அது. சட்டமன்ற முற்றுகைப் பேரணியைத் தொடக்கிவைத்து உரையாற்றுகையில் பழ. நெடுமாறன் குறிப்பிட்டார்.
"அணு உலைகளில் உள்ள ஆபத்தையும் அபாயத்தையும் உணர்ந்து அவற்றை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணு உலையால் தமிழ் மக்களின் எதிர்காலமே நாசமாகிவிடும். அணு உலைகளில் உள்ள ஆபத்தை அறப்போராட்டங்கள் மூலம் இந்தியா முழுதும் எதிரொலிக்கச் செய்ய வேண்டும்''
உண்மைதான், “ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால், அது பெரு நெருப்பாக உருவெடுக்கும்“. என்று சொல்வார்கள். கூடங்குள அணு உலைக்கு எதிர்ப்புக் கருத்தாகத்தான் முதலில் அம்மக்களிடம் முளைவிட்டது. அது பரவிப் பரவி, மேலெழுந்து, மேலெழுந்து "அணுமின் ஆற்றலே வேண்டாம்''“ என உலக முழுதுக்குமான முழக்கத்தோடு இணைந்து விட்டது. உலகமக்களோடு இணைந்துள்ள முழக்கம், இந்திய மக்களுக்கு அந்நியமல்ல; இந்திய மக்களுக்கும் உரித்தானதே என்பதை கூடங்குளப் போராளிகள் உணர்த்தியுள்ளார்கள். இன வேற்றுமைகள் தாண்டி, எல்லைகள் கடந்து இந்த அணு எதிர்ப்புக் கருத்தாக்கம் வேர்கொள்ள ஆரம்பித்துள்ளது.
முற்றுகைப் பேரணியில் பேசிய வை.கோ. "தற்போது சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்த அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவே போராட்டம் வெற்றி அடைந்துவிட்டதற்கு உதாரணம்'' என்றார்.
பத்தாயிரம் பேர் அளவில் பங்கேற்ற பேரணியை ஒரு நாளிதழ் "1800 பேர் கைது செய்யப்பட்டனர்''“என்று அச்சடித்தது. ஈயடிச்சாங் காப்பி“என்று சிறுபிள்ளைகளை பள்ளிக் கூடங்களில் வாத்தியார்கள் திட்டுவார்கள். ஊடகங்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் நிர்பந்தம் அரசுகள் சொல்வதை அப்படியே சொல்லும் ஈயடிச்சாங் காப்பியாக“வெளிப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டோர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்று நாளிதழ்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கையை தங்கவைக்கப்பட்ட பல இடங்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிட முடியும். எண்ணிக்கையைக் குறைத்துக்காட்ட காவல் துறை வேறொரு சதியையும் செய்ததை நேரில் காணும் வாய்ப்புக்கிட்டியது. கைதாகிய நாங்கள் புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டோம். கீழிருந்த திருமண மண்டப அரங்கைத் திறக்கவில்லை. மண்டபத்தின் மேலிருந்த சாப்பாட்டு அறையைத் திறந்து விட்டிருந்தார்கள். கணக்கெடுப்புச் செய்யும் மூன்று காவலர்களும் குறிப்பேடுகளுடன் மேலேயே இருக்க, அங்கு எவரும் செல்லவில்லை. கீழே மண்டபத்தின் முன் உள்முற்றத்திலேயே அமர்ந்து விட்டனர். அங்கேயே சொற்பொழிவும் நடத்தினர். மேலே குறிப்பேடு வைக்கப்பட்டுள்ளது என்று என்னிடம் செய்தி தெரிவிக்கப்பட்ட பின்னர்தான் போய்க் கையெழுத்திட்டு வந்தேன். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் வந்து கையெழுத்துப் பெற்றிருக்க வேண்டிய காவல்துறை கடமையைச் செய்யவில்லை.
அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு கூட்டம் கூட்டமாய் வெளியூரிலிருந்து வந்தவர்கள், தடுத்து நிறுத்திக் கைது செய்யப்பட்டதை காட்சி ஊடகங்களால் காட்டாமல் இருக்க முடியவில்லை. ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில், தனிவாகனங்களில் தடுத்து நிறுத்திக் கொத்துக் கொத்தாக அள்ளிப்போட்டுப் போனதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சி, சன் செய்திகள், சன் தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்புச் செய்தார்கள். அணு உலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தி.மு.க. இருந்த போதிலும், அரசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தும் ஆதாய அரசியல் நிலைப்பாட்டை எடுத்தன இந்தக் காட்சி ஊடகங்கள். இந்த வகைச் செயல்பாட்டை "பேத்து மாத்து வேலை பண்றான்''“என்பார்கள் மக்கள்.
தம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கூடங்குள வட்டாரத்தில் வாழும் எளிய மக்கள் அறிவார்கள். என்ன நடக்கிறது என்பதை உண்மையில் அறிந்தவர்களின் போராட்டம் இது. தமது வாழ்வனுபவங்களிலிருந்து, பிற இடங்களில், மற்றைய நாடுகளின் மக்களுக்கு நிகழ்ந்த துயர அனுபவங்களிலிருந்து அவர்கள் யதார்த்தத்தின், உண்மையின் இடத்தை வந்தடைந்தார்கள். உண்மை அறிதலுக்கான தொடர்செய்திகளைப் போராட்ட முன்னோடிகள் அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
உண்மைகளை மறைக்க முயன்றோர் என்னவெல்லாம் உண்டுமோ அவ்வளவு பழிகளையும் சொடுக்கிவிட்டார்கள். தேசத்துரோகிகள், தொண்டு நிறுவன மோசடி, வெளிநாட்டு நிதியுதவி போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் குறைவில்லாமல் நடந்தன.
தன் மக்களுக்கு மறுக்கப்பட்ட சனநாயகத்தை மீளப்பெற, ஆயுதம் தாங்கிய ராணுவத்தினை நேதாஜி கட்டியமைத்தது போல், பறிக்கப்பட்ட சனநாயகத்தை மீட்டுத் தர, ஆயுதந்தாங்காத மக்கள் படையை அணு உலை எதிர்ப்பாளர்கள் கட்டியிருக்கிறார்கள். 29.10.2012 அன்று தமிழகத் தலைநகரில் அணிவகுத்து நடந்தது இந்த மக்கள் ராணுவத்தின் ஒரு பிரிவுதான். இந்த மக்கள் படை வெற்றிப் புள்ளியைத் தொட்டுவிட்டால், வேறொரு மக்கள் பிரச்சனைக்கு, மற்றுமொரு போராட்டத்துக்கு முன்னகர்வார்கள். போராடிப் பழக்கப்பட்டோர் ஓய மாட்டார். தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் பயிற்சிக்களமாக அமையும் அளவுக்கு இந்த முற்றுகைப் பேரணியின் ஒற்றுமை வழி அமைத்துத் தந்துள்ளது.
 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.