சிலம்பு - தமிழ்த் தேசியக் காப்பியம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:16
இளங்கோ அடிகள் இலக்கியப் பேரவை தொடக்க விழா!
27-1-13 அன்று மதுரை பந்தயத் திடல் இளைஞர் விடுதியில் இளங்கோ அடிகள் இலக்கியப் பேரவையின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சாத்தூர் சேகரனார் தலைமை தாங்கினார். அகவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மரு. பொ. முத்துச்செல்வம், புலவர்
உ. அரசுமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இலக்கியப் பேரவையைத் தொடக்கி வைத்து பழ.நெடுமாறன் பேருரை ஆற்றினார். ஆ. கதிர்வேல் நன்றியுரை கூறினார். விழாவில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முத்தமிழையும் இணைத்து முதன்மையான காப்பியம் செய்த பெருமை இளங்கோவடிகளையே சாரும். இயல், இசை, கூத்து ஆகிய மூன்று தமிழும் சிலப்பதிகாரத்தில் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு ததும்பி வழிகின்றன.
சங்கப் பாடல்கள் இயல் துறையைச் சார்ந்த பாடல்கள் ஆகும். இயலும் கதையும் கலந்த காப்பியம் மணிமேகலை ஆகும். ஆனால், தமிழில் முதன் முதலாக இயல், இசை, கூத்து மூன்றினையும் உள்ளடக்கிய
முத்தமிழ்க் காப்பியமாக சிலப்பதி காரத்தை இளங்கோவடிகள் படைத்தார்.
"சிலப்பதிகாரம் நமக்குக் கிட்டாமல் போயிருந்தால் மற்ற தமிழிலக்கியப் பரப்பின் உதவியாலோ, தொல் காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்களாலோகூட நாம் பண்டைத் தமிழிலக்கியத்தின் அரும்பெரும் மாண்பையும் அகல் விரிவையும் அவ்வ ளவாக மதிப்பிட்டு அறிய முடியாத வர்கள் ஆவோம்'' என அறிஞர் கா. அப்பாத்துரையார் அவர்கள் குறிப்பிட்டார். 1
தமிழர்களின் பண்பாட்டு வரலாற் றினையும் அரசியல் வரலாற்றினையும் சமுதாய வரலாற்றினையும் ஒருங்கே கூறும் ஒப்பில்லாத நூல் சிலப்பதிகாரம்.
இந்நூலைக் குறித்து தமிழீழத்தின் தலைசிறந்த அறிஞரான முனைவர் க.கைலாசபதி பின்வருமாறு மதிப்பிட்டார் :
1. தலையாய முத்தமிழ்க் காப்பியம்
2. சிறப்பான தமிழ் வரலாற்றுக் காப்பியம்
3. புரட்சி மிகுந்த அரசியல் காப்பியம்
4. பெண்மைக்குப் பல்லாண்டு பாடும் காப்பியம் 2
முத்தமிழின் சிறப்பும் இக்காப் பியத்தின் மூலம் புலனாகிறது. தமிழர் இசை, தமிழர் நடனம் போன்றவற்றை சிலப்பதிகாரம் எடுத்துக்கூறாமல் போயி ருந்தால் அவை மறைந்து போயிருக்கும். வடபுலத்து மன்னர் தமிழரை இகழ்ந்தனர் என்பதை அறிந்து கொதித்த சேரன் செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படையெடுத்துச் சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கனகவிசயர் தலையில் ஏற்றி தமிழகம் கொண்டுவந்து கண்ணகிக் கோட்டம் அமைத்தான் என்பது போன்ற தமிழர் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சிகள் இக்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன. சோழ நாட்டைச் சேர்ந்த பெண்ணான கண்ணகி அந்நிய நாடான பாண்டிய நாட்டில் தனது கணவனுக்கு இழைக்கப் பட்ட அநீதியை துடைத்து எறிய உறுதி பூண்டு பாண்டிய மன்னனின் அவை யில் அஞ்சாமல் எதிர்நின்று "தேரா மன்னா' என மன்னனை விளித்து அவன் செய்த தவற்றினைச் சுட்டிக்காட்டி உண்மையை நிலைநாட்டிச் செய்த புரட்சியை இக்காப்பியம் விளக்குகிறது.
அதைப்போலவே கற்பின் செல்வி கண்ணகிக்கு இணையாக மாதவியும் திகழ்ந்தாள் என்பதையும்
பாண்டியன் நெடுஞ்செழியனின் அரசி யான கோப்பெருந்தேவியும் கணவரோடு உயிர் துறந்தாள் என்பதும் போன்ற பெண்மையின் சிறப்பைப் பாடும் காப்பிய மாகவும் சிலப்பதிகாரம் திகழ்கிறது.
திருக்குறள் வாழ்க்கைக்கு இலக்கணம் கூறும் ஒப்பற்ற நூலாகும். வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறிக்கு அமைந்த இலக்கிய நூல் சிலப்பதிகாரம் என்று சொன்னால் மிகையாகாது.
"தமிழிலக்கிய வகைமை வரலாற் றில் எந்த ஒரு இலக்கியத்துடனும் ஒப்பிட்டுக்கூறமுடியாத ஒரு தனித்த வகையாக சிலப்பதிகாரம் விளங்குகிறது'' என தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சிலப்பதிகாரத்தின் மேன்மை நன்கு புரியும். 3
கவிதை நயம் பற்றி எழுந்த நூல் சிலப்பதிகாரம் அல்ல. அக்காலத் தமிழர் களின் நாகரிகத்தை, பண்பாட்டினை, கலைச் சிறப்பினை எடுத்துக்கூறும் வரலாற்று நூலே சிலப்பதிகாரமாகும். அதே வேளையில் சிலப்பதிகாரம் தமிழ் இலக்கிய மரபை விட்டு அகலாமல் அத்துடன் இணைந்து நிற்கும் நூலாகும். சிலப்பதிகாரக் கதை தமிழ் இலக்கிய மரபை பின்பற்றியதாகும். சங்க இலக்கிய அகத்துறைப் பாடல்களைக் கோர்வை யாக்கினால் கதை வடிவமாகத் திகழும். தலைவன் - தலைவி - தோழி - கற்பு - இல்லறம் - பரத்தை - ஊடல் போன்ற தமிழ் அகத்துறை மரபினை அடியொற்றி சிலப்பதிகாரக் காவியம் உருவாக்கப் பட்டுள்ளது.
வர்க்க மோதல்
மேற்கே கிரேக்கம், எகிப்து, ரோமாபுரி ஆகிய நாடுகள் வரைக்கும் கிழக்கே தென் கிழக்காசிய நாடுகளுக்கு அப்பால் சீனம் வரையிலும் சென்று வணிகம் நடத்தி பொருளீட்டியவர்கள் தமிழர்கள். தமிழ் வணிக வர்க்க வளர்ச்சியின் அடையாள முத்திரை சிலப்பதிகாரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் வணிகர்கள் எந்த அளவுக்குச் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தார்கள் என்பதை கோவலன் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கோவலன் - கண்ணகி திருமணச் செய்தியினை நகர மக்களுக்கு அறிவிக்க யானை மேல் முரசு அறைந்து அறிவித்ததாகச் சிலம்பு கூறுகிறது. மன்னர்கள் குடும்பத்தில் நடக்கும் திருமணத்தைப் போல கோவலன் - கண்ணகி திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. இதன் மூலம் அரசர்களுக்கு இணையாக வணிகர்கள் செல்வ வளத்தில் திளைத்தார்கள் என்பது தெரிகிறது.
வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகத் திகழ்ந் தார்கள். மன்னர்கள் சைவ சமயத்தைச் சார்ந்திருந்தார்கள்.
வணிக வர்க்கத்திற்கும் மன்னர் வர்க்கத்திற்கும் இடையே முரண் பாடுகள் மூண்டதற்கு செல்வ வளமும் சமயச் சார்பும் காரணங்களாக அமைந் தன. சிலப்பதிகாரக் கதை இந்த முரண் பாட்டைச் சுற்றியே பின்னப் பட்டுள்ளது.
கண்ணகியின் காற்சிலம்பை விற்று முதலீடாக வைத்து வணிகம் செய்து பிழைக்கும் நோக்கத்துடன் மதுரையை நோக்கிச் சென்றான் கோவலன். ஆனால், கள்வன் என பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னனால் மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்தான். சிலம்பு ஒன்றைத் திருடியதாகக் குற்றம் சாட் டப்பட்ட கோவலனிடம் தீர விசாரித்து அறியாமலும் அறம்கூர் அவையத்தின் முன் நிறுத்தாமலும் அவனது உயிரைப் பறிக்கும் கொடுந்தண்டனை விதிக்கப் பட்டது வணிக வர்க்கத்தின் மீது அரச வர்க்கத்திற்கு ஏற்கெனவே இருந்த பொறாமையும் வெறுப்புமே காரணங் களாகும்.
வணிக வர்க்கத்திற்கு எதிராக அரச வர்க்கம் விதித்த தடைகள், அடக்கு முறைகள் ஆகியவற்றை எதிர்த்து எழுப்பப்பட்ட கண்டன முழக்கத்தின் வடிவமே சிலப்பதிகாரம்.
"நிலவுடைமைச் சமூகத்தைச் சார்ந்த அரசனுக் கெதிராக வணிக வர்க்கம் நடத்திய போராட்டத்தையும் அதன் விளைவுகளையுமே சிலப்பதி காரம் சித்தரிக்கிறது' என எழுத்தாளர் தொ.மு.சி. இரகுநாதன் கருதுகிறார். 4
தமிழ்த் தேசியக் காப்பியம்
சோழ நாட்டில் பிறந்த கண்ணகி பாண்டிய நாட்டிற்குப் பிழைக்கச் சென்ற தன் கணவன் கோவலனு டன் சென்று, அங்கு பொய்யாகக் கள்வன் என குற்றம்சாட்டப்பட்ட கணவனை இழந்து மனம் பொறாமல் சினத்துடன் பாண்டி யன் அவைக்குச் சென்று, தனது கணவன் கள்வன் அல்லன் மன்னனே தவறிழைத்தவன் என்பதை நிறுவி, அவன் உயிரிழக்கக் காரணமாகி மதுரை யையும் எரித்து சேர நாடு நோக்கிச் சென்று தெய்வமாகிறாள் என்பது சிலப்பதிகாரக் கதையின் சுருக்கமாகும்.
சிலப்பதிகாரக் கதையில் சோழ, பாண்டிய, சேர நாடுகளைச் சமமாகப் பாடுகிறார் இளங்கோவடிகள். முதற் காண்டத்திற்கு சோழ நாட்டின் தலை நகரான புகார் நகரின் பெயரைச் சூட்டி புகார்க் காண்டம் என அழைக்கிறார்.
பாண்டிய நாட்டிற்கு கண்ணகி சென்றது முதல் அங்கு நடந்த நிகழ்ச்சி கள் அனைத்தையும் கூறும் காண்டம் மதுரைக் காண்டம் ஆகும். பாண்டிய நாட்டின் தலைநகரின் பெயரால் இந்தக் காண்டத்தை அவர் பாடுகிறார்.
சேர நாடு சென்றடைந்த கண்ண கிக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றியும், சேரன் செங்குட்டுவன் அவளின் சிறப்பை அறிந்து வடபுலம் நோக்கி படையெடுப்பு நடத்தி கனகவிசயர் தலை யில் இமயக் கல்லேற்றி கொண்டுவந்து கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் சமைத்தது பற்றிக் கூறும் காண்டம் வஞ்சிக்காண்டமாக அமைந்தது. சேர நாட்டின் தலைநகரின் பெயரை இக்காண்டத்திற்குச் சூட்டியுள்ளார் இளங்கோவடிகள்.
இந்த மூன்று காண்டங்களிலும் மூன்று நாடுகளைப் பற்றிப் பாடும் போதும் அவைகளின் சிறப்பையும் வளத்தையும் சமமாகப் பாடுகிறார் இளங்கோவடிகள். அதன் நோக்கமே மூன்று நாடுகளாகப் பிரிந்து நின்று தங்களுக்குள் அடிக்கடி மோதிக் கொண்ட மன்னர்களும் மக்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வின் அடிப்படையில் இந்தக் காப்பியத்தை இளங்கோவடிகள் படைத்துள்ளார்.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் மூன்று மாமன்னர்கள் குறிப்பிடப்படு கிறார்கள். பொற்கோட்டு இமயத்துப் புலிபொறித்து ஆண்ட பூம்புகார்ச் சோழன் கரிகால் பெருவளத்தான், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், வடபுல மன்னரின் கொட்டம் ஒடுக்கிய சேரன் செங்குட்டுவன் ஆகிய மூன்று மன்னர்கள் இக்காப்பியத்தில் குறிப்பிடப் படுகிறார்கள். இருந்தாலும் முடி மன்னர் களின் காப்பியமாக இதை அமைக்காமல் குடிமக்கள் காப்பியமாக உருவாக்கி யுள்ளார் இளங்கோவடிகள்.
மூன்று நாடுகள், மூன்று மன்னர் குலங்கள், மூன்று நாட்டு மக்கள் ஆகிய இவர்கள் ஒற்றுமையுடன்- அனைவரும் தமிழரே என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை உணர்த்துவ தற்காக எழுந்த காப்பியமே சிலப்பதிகாரம் ஆகும்.
தமிழ்த் தேசிய உணர்வை முதன் முதலாக வெளிப்படுத்திய காப்பியம் சிலப்பதிகாரமே.
தமிழர் இசை, நடனம், நுண் கலைகள், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பினையும் மேன்மையினையும் விளக்கும் நூலே சிலப்பதிகாரம். பிற் காலத்தில் 20ஆம் நூற்றாண்டில் எழுந்த தமிழிசை இயக்கத்திற்கு வழிகாட்டிய தேசிய நூல் சிலப்பதிகாரமே ஆகும்.
அது மட்டுமல்ல சைவம், வைண வம், சமணம், பவுத்தம் ஆகிய சமயங்கள் ஓங்கி நின்ற காலக்கட்டத்தில் எழுந்த இந்த நூலில் சகல சமய வழிபாடுகளை யும் விருப்பு வெறுப்பின்றி இளங் கோவடிகள் பதிவு செய்துள்ளது அவரது சமயப் பொறையையும் தமிழ்த் தேசிய உணர்வையும் காட்டுகிறது.
இந்திர வழிபாடு குறித்தும் சிலப் பதிகாரம் சிறப்பாக எடுத்துக்கூறுகிறது. சங்க நூல்களில் இந்திரனைப் பற்றி சில இடங்களில் மட்டுமே குறிப்புகள் உண்டு. ஆனால், சிலம்பில் இந்திர விழா தனிக் காதையாக புகார்க் காண்டத்தில் சிறப்பான இடத்தைப் பெறுகிறது.
பூம்புகார் நகரில் பெருவிழாவாகக் கொண்டாடப் படும் அவ்விழாவின் போது அனைத்துச் சமயத்தினரும் தம்தம் தெய்வங்களை வழிபடுகின்றனர். இவ்விழாவில் பல சமயத்தினரும் பங்கு பெறுவதால் இவ்விழா ஒரு குறிப்பிட்ட சமயத்தின் விழா என சிலம்பில் சுட்டப் படவில்லை. இதன் மூலம் இந்திர விழா வினை சமய எல்லைகள் கடந்த தமிழர் களின் தேசியத் திருவிழாவாக இளங் கோவடிகள் சித்தரிக்கிறார். 5
சிலப்பதிகாரக் காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த பக்தி இலக்கியக் காலம் சமயப் பூசல் மலிந்த காலம். தொலைநோக்கோடு வரப்போவதை அறிந்து சமய உணர்வுகளுக்கு அப்பால் தமிழ்த் தேசியத் தெய்வம் ஒன்று வேண் டும் என்று உணர்ந்த இளங்கோவடிகள் பத்தினித் தெய்வமாகக் கண்ணகியை உருவகப்படுத்தினார். சகல சமயங் களுக்கும் அப்பால் தமிழ்த் தேசியத் தெய்வமாக கண்ணகியைப் படைத்து பத்தினித் தெய்வ வழிபாட்டினை தனது நூலின் மூலம் தொடங்கிவைத்த பெருமை இளங்கோவடிகளுக்கே உரியதாகும்.
இரண்டாம் நூற்றாண்டின் இறுதி யில் எழுந்த நூலான சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட கூறிய பத்தினித் தெய்வ வழிபாடு சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு போன்றவற்றிலும் அண்டை நாடான இலங்கையிலும் பரவி யது. சமண சமயத்தைச் சார்ந்த கண்ண கியைப் பத்தினித் தெய்வமாக சகல சமயங்களையும் சார்ந்த தமிழர்கள் வழிபட்டுப் போற்றினர். அதற்கான சான்றுகள் இன்னமும் உள்ளன.
தமிழ்நாட்டில் கண்ணகி வழிபாடு மாரியம்மன் வழிபாடாகவும் இன்னும் பல வகையிலும் திரிந்துவிட்டது. சேரநாடான இன்றைய கேரளத்தில் பகவதி வழி பாடாக நின்று நிலவுகிறது. சோழ நாட்டின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த இன்றைய கர்நாடகத்தில் மங்கள தேவி வழிபாடு என்ற பெயரில் இன்னமும் உள்ளது. ஈழ நாட்டில் கண்ணகி கோயில் இல்லாத ஊர் இல்லை என்று சொல்லப் படும் அளவுக்கு இந்த வழிபாடு இன்றள வும் நின்று நிலவுகிறது. சிங்களரும் பத்தினி தெய்யோ - அதாவது பத்தினித் தெய்வம் என கண்ணகியை வழிபடு கிறார்கள்.
நாட்டாலும் மதத்தாலும் வேறு பட்டு மூன்று பிரிவாகப் பிரிந்து கிடந்த தமிழர்கள் நடுவே தமிழ்த் தேசிய உணர் வை விதைத்து அவர்களை ஒன்றி ணைத்து வைக்கவே சிலப்பதிகாரம் எழுந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
தமிழ்த் தேசிய உணர்வின் வடிவமாக கண்ணகி வழிபாட்டை அவர் தோற்றுவித்தார். எனவேதான் இளங் கோவடிகளின் சிலப்பதிகாரத்தை தமிழில் தோன்றிய முதல் தமிழ்த் தேசியக் காப்பியம் என நாம் போற்றுகிறோம்.
சிலப்பதிகாரம் ஒரு தமிழ்த் தேசியக் காப்பியம் என்பதை உணர்ந்த தமிழரசுக் கட்சியின் நிறுவனத் தலைவ ரான ம.பொ.சிவஞானம் அவர்கள் சிலம்பின் பெயரால் இலக்கிய இயக் கத்தையே நடத்தினார்.
"இன உணர்வை வளர்த்துத் தமிழ் வழங்கும் நிலப்பகுதியை உண்மை யான தமிழ்நாடாக மாற்றுவதற்கு சிலப்பதிகாரம் ஒன்றே சிறந்த கருவி என்பதை கால் நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்தேன்'' 6 என்று கூறிய ம.பொ.சி. அவர்கள் 1951ஆம் ஆண்டில் தமிழறிஞர்களான மு.வரதராசனார், ந. சஞ்சீவி ஆகியோரை முன்னிறுத்தி சிலப்பதிகார மாநாடு நடத்தினார். 1956ஆம் ஆண்டு இளங்கோ விழா கொண்டாடினார். தமிழகம் எங்கும் இளங்கோ மன்றங்களைத் தொடங்கு வதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட் டார். ஆண்டுதோறும் சித்திரைத் திங் களில் வரும் முழு மதி நாளை இளங்கோவின் நினைவு நாளாகக் கொண்டாடினார்.
தமிழ்த் தேசியம் என்ற இன உணர்வை எழுப்பும் காவியம் சிலம்பு என்று விளக்கமுறச் செய்ததில்
பேரா. ந. சஞ்சீவிக்கும் பெரும் பங்கு உண்டு.
"தமிழ்நாட்டின் உரிமை பற்றிய பல்வேறு இயக்கங்கள் தோன்றுவதற்கு சிலம்பே அடிப்படை எனக் கருதும் ந. சஞ்சீவி "இளங்கோ அடிகளின் நோக் கமே தமிழ்த்தேசியத்தை நிலைநாட்டு வதுதான்; அதற்கேற்பவே காவியத் தைக் கட்டியுள்ளார்'' 7 என விளக்கமாக எழுதுகிறார். இளங்கோ அடிகள் தொடங்கி குன்றக் குறவர்கள் வரை தமிழ்நாட்டின் மேல் பற்றுடையவர்களாக விளங்குவதை எடுத்துக்காட்டுகிறார்.
"சித்திரச் சிலப்பதிகாரம் செந்தமிழ் நாட்டிற்கு விடுக்கும் செய்திகள் பலப்பல. இன்று நாமும் நம் தலை முறையும் பெற்றுள்ள உணர்வூட்டும் செய்திகளுக் கெல்லாம் சிறப்புடையதாய் விளங்குவது மொழிப்பற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பற்றே ஆகும்'' 8 இவ்வாறு விளக்குகிறார் ந. சஞ்சீவி.
இளங்கோ அடிகளின் சிலப்பதி காரம் தமிழ்மொழி உணர்வை, தமிழ் இன உணர்வை, தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டுகின்ற ஒரு இலக்கிய மாகத் திகழ்கிறது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். தமிழ்த் தேசிய உணர்வை வளர்க்க சிலப்பதிகாரம் பெருந் தொண்டாற்றி உள்ளது. இன்னமும் தொண்டாற்றும். தமிழ்த்தேசிய உணர்வினை தமிழர் களுக்கு ஊட்டுவதற் காகவே முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை இளங்கோ அடிகள் படைத்தார்.
அடிக்குறிப்பு
1. சிலப்பதிகாரத் திறனாய்வுகள் - முனைவர் க. பஞ்சாங்கம் - பக். 80
2. அடியும் - முடியும் - க. கைலாசபதி பக்.206
3. சிலப்பதிகாரத் திறனாய்வுகள் - முனைவர் க. பஞ்சாங்கம். பக். 125
4. சிலப்பதிகாரத் திறனாய்வுகள் - முனைவர் க. பஞ்சாங்கம். பக். 128
5. நெஞ்சை அள்ளும் சிலம்பு - தொகுப்புநூல் - பக். 142
6. சிலப்பதிகாரத் திறனாய்வுகள் - முனைவர் க. பஞ்சாங்கம் - பக். 83
7. சிலப்பதிகாரத் திறனாய்வுகள் - முனைவர் க. பஞ்சாங்கம் - பக். 84
8. சிலப்பதிகாரத் திறனாய்வுகள் - முனைவர் க. பஞ்சாங்கம் - பக். 84
(27-1-13 அன்று மதுரை பந்தயத் திடல் இளைஞர் விடுதியில் நடைபெற்ற இளங்கோ அடிகள் இலக்கியப் பேரவை தொடக்க விழாவில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை)
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.