ஈழத் தமிழர் இனப் படுகொலை : இரஷ்ய - கியூபா கம்யூனிஸ்டுக் கட்சிகள் தங்கள் நிலையை மறுபரீசீலனை செய்ய வேண்டும்? உலகக் கம்யூனிஸ்டு மாநாட்டில் டி. இராஜா வேண்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:20
"சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதில் ஒரே ஒரு வழிதான் உண்டு எனச் சொல்லப்படுவது தவறு என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவகையிலும் வழியிலும் சோசலிசத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தந்த நாட்டின் தேசியப் பிரச்சினைகளையொட்டி சோசலிசம் உருவாகும். சீனப் பண்பாட்டிற்கு ஏற்ப சோசலிசத்தை உருவாக்கி வருவதாக சீனா கூறுகிறது. அதைப்போல இந்தியாவும் சோசலிசத்தை அடைய தனக்கென தனியான வழியையும் இந்தியப் பண்பாட்டிற்கு ஏற்பவும் கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடே முக்கியமானதாகும். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் வேறுவித சமுதாய முரண்பாடுகளும் உள்ளன. இந்தியாவில் நிலவும் சாதிய முறை குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். அது இந்திய சமுதாயத்தில் நிலவும் தனித்தன்மை வாய்ந்த உண்மை யாகும். வேறு எந்த நாட்டிலும் இதைப் போன்று சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கிற முறையை நீங்கள் கண்டிருக்க முடியாது. பிறப்பின் அடிப்படையில் சமுதாயப் படிநிலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூக ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படுகிறது. பொருளாதார ரீதியான சுரண்டலுக் கெதிராகப் போராடுவது மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராகவும் போராட வேண்டிய நிலைமையில் இந்திய கம்யூனிஸ்டுகள் உள்ளார்கள். பொருளாதார சுரண்டலுக்கும் சாதிய படிநிலைக்கும் எதிரான போராட் டங்களை ஒன்றிணைத்து இந்தியக் கம்யூனிஸ்டுகள் போராடினால் ஒழிய இந்தியாவில் புரட்சி என்பது வெற்றிபெற முடியாது.
மற்றொரு முக்கிய பிரச்சினை யையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கம்யூனிஸ்டுகள் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்னும் பிரச்சினையில் உலக கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே இன்னும் சிறந்த வகையில் புரிந் துணர்வும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். ஆனால், புரியாமையின் காரணமாக சில பிரச்சினைகளில் நம்மிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு மிக முக்கியமான பிரச்சினையாகும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரால் இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக முழு அளவிலான அடக்குமுறையை அவிழ்த்துவிட்டிருக்கிறது. சமீபகால வரலாற்றில் இந்த அளவுக்கு மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி வேறு எங்கும் நடைபெறவில்லை. இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை செய்யப்படு கிறார்கள். ஐ.நா. பேரவையும் ஐ.நா. மனித உரிமை ஆணையமும் அதை தங்கள் கவனத்தில் கொண்டு ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத் தில் தீர்மானம் ஒன்றினை நிறை வேற்றியுள்ளன. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இரஷ்ய கூட்டாட்சி கம்யூனிஸ்டுக் கட்சியும் கியூபா கம்யூனிஸ்டு கட்சியும் இந்தப் பிரச்சினையில் எடுத்துள்ள நிலை என்ன? அந்தத் தோழர்களை நான் வேண்டிக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையில் உங்களுடைய நிலைப் பாட்டை தயவு செய்து மறுபரீசீலனை செய்யுங்கள். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக உங்களுடைய குரலை எழுப்புங்கள் என வேண்டிக் கொள்கிறேன்''.
இவ்வாறு மாஸ்கோவில் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16ஆம் நாட்களில் நடைபெற்ற உலகக் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியச் செயலாளர் டி. இராஜா அவர்கள் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
இன்றும் நாளையும் முதலாளித் துவ நெருக்கடி மேலும் மேலும் அதிகமாகி வரும் பின்னணியில் நமது நிலைப்பாடு என்ன? - என்பதைப் பற்றி ஆராய்வதற்காக உலகக் கம்யூனிஸ்டுக் கட்சிகளின் பிரதிநிதி கள் மாஸ்கோவில் கூடிப் பேசினர். இம்மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சியின் பிரதிநிதியாக தோழர் டி. இராஜா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.