முள்ளிவாய்க்கால் படுகொலை குற்றவாளிகள் மன்னிப்புக் கேட்கப் போவது எப்போது? PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 20 மார்ச் 2013 12:44
1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவசர கால நிலைமையைப் பிரகடனம் செய்தார். இதன் விளைவாக சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாசு நாராயணன் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான பேர் கொடிய மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தில்லியில் துர்க்மென் கேட் என்ற பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
நாடெங்கும் உள்ள பத்திரிகைகளுக்கு கடுமையான தணிக்கை முறைகள் செயற்படுத்தப்பட்டன. சுருக்கமாகக் கூறினால் எழுத்துரிமை பறிக்கப்பட்டது. பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்பட்டன. தொடர்ந்து மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.
இதன் விளைவாக 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திராகாந்தி உள்பட காங்கிரஸ்கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியடைந்தனர்.
தனது தவறை இந்திராகாந்தி உணர்ந்தார். 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முன்னிலையில் இந்திரா பின்வருமாறு பேசினார்.
"கடந்த காலத்தில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். அதை உணர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். முன்பு நடைபெற்ற தவறுகள் மீண்டும் ஒருபோதும் நடைபெறாது என உறுதி கூறுகிறோம்.'' என பகிரங்கமாக அறிவித்தார்.
பிரிட்டிசு பிரதமர் மன்னிப்பு
ஆங்கிலேயர் ஆட்சியின்போது ரவுலத் சட்டம் என்ற பெயரில் கொடிய அடக்குமுறைச் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதற்கெதிராகப் போராட முன்வந்த பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களான டாக்டர் கிச்சுலு, சத்யபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு நடைபெற்றது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஜெனரல் டயர் என்ற வெள்ளைக்காரத் தளபதி படையுடன் மைதானத்திற்கு வந்தான். பீரங்கி வண்டிகளும் அணிவகுத்து வந்தன.
எத்தகைய எச்சரிக்கையும் கொடுக்காமல் மக்களை நோக்கி பீரங்கியால் சுடும்படி ஜெனரல் டயர் உத்தரவிட்டான். மக்கள் தப்பியோட வழியில்லை. ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில் பிணமாயினர். சுமார் 10 நிமிட நேரம் சுட்ட பிறகு "சுட்டேன்... சுட்டேன்... குண்டுகள் தீரும்வரை சுட்டேன்' என இரத்த வெறிபிடித்த ஜெனரல் டயர் கொக்கரித்தான். இச்சம்பவத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்தக் கொடிய நிகழ்ச்சி நடந்து 94 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு கடந்த 24-2-2013 அன்று வருகை தந்த பிரிட்டிசு பிரதமர் டேவிட் கேமரூன் அமிர்தசரஸ் சென்று ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் தெரிவித்தார். அங்கு அவர் பேசும்போது "வரலாற்றில் வெட்ககரமான நிகழ்ச்சி' என அந்தப் படுகொலையை வர்ணித்தார். அத்துடன் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை குற்றவாளிகள் மன்னிப்புக் கேட்பது எப்போது?
2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர் வரலாற்றில் மிக துயரமான நிகழ்ச்சி இதுவாகும். இதற்குக் காரணமான சிங்கள வெறியர் இராசபக்சேயும் அவருக்குத் துணை நின்று இந்தப் படுகொலைக்குத் தேவையான ஆயுதங்களை அள்ளித்தந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்தப் படுகொலைகளை மூடி மறைக்க அவருக்கு எல்லாவகையிலும் உதவி புரிந்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் தாங்கள் இழைத்த குற்றங்களுக்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கப் போவது எப்போது?
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.