பிரிவினை விதைகளைத் தூவும் தேசியத் தலைமை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 20 மார்ச் 2013 12:45
தமிழக விவசாயிகளின் துன்பத் திற்கும் இழப்பிற்கும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும்தான் பொறுப்பு என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டி யிருப்பது எல்லா வகையிலும் சரியானது; நூற்றுக்கு நூறு உண்மையானது.
கடந்த 44 ஆண்டு காலமாக காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவை அளித்த எந்தத் தீர்ப்பையும் அல்லது உத்தரவையும் ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு நியாயமாக உரிய தண்ணீரைத் தருவதற்கு கர்நாடகம் மறுத்தே வந்திருக்கிறது. ஒருமுறைகூட மேற்கண்ட உயர் அமைப்புகளுக்குக் கட்டுப்பட்டு தண்ணீர் தந்ததில்லை. இயற்கை அளித்த கொடையான காவிரி நீர் குடகு நாட்டில் உற்பத்தியானாலும் கர்நாடகம் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு வழியே ஓடி மண்ணை யும் மக்களையும் செழிக்க வைத்திருக் கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக நிலவிவந்த இந்த மரபினை கர்நாடகம் துச்சமாக மதித்துத் தூக்கி எறிந்துவிட்டு தனது அணைகளில் காவிரி நீரைத் தேக்கிவைத்துக்கொள்வதும், காவிரி நீர் ஏதோ தனக்கு மட்டுமே சொந்தம் எனக் கருதுவதும், வெள்ளப்பெருக்கு எடுக் கும் காலங்களில் வழிந்தோடும் நீரை மட்டும் தமிழகத்திற்கு போனால் போகிறது என்று தருவதும் இயற்கை நீதிக்கு மட்டுமல்ல சர்வதேசச் சட்டத்திற்கும் முரணானது.
தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா ஆகிய கட்சிகள்தான் கர்நாடகத்தை மாறிமாறி ஆண்டு வந்தி ருக்கின்றன: வருகின்றன. இக்கட்சிகளுக் கிடையே எவ்வளவு வேறுபாடு இருந் தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுநீர் தருவது இல்லை என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
1968ஆம் ஆண்டு தொடங்கி 1990ஆம் ஆண்டு வரை இரு மாநில முதல்வர்களும் மத்திய அமைச்சரின் முன்னிலையில் நடத்திய பேச்சுவார்த் தைகள் எந்தப் பயனும் அளிக்கவில்லை. ஆனால், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற 22 ஆண்டு காலத்தில் கர்நாடகம் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி போன்ற புதிய அணைகளையும் அமைத்து தனது பாசன வசதியை பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டது. இது சட்டவிரோதமானது. ஆனால், இதைத் தடுத்து நிறுத்தவோ தட்டிக் கேட்கவோ உரிய நடவடிக்கை எடுக் கவோ மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், ஜனதா கட்சி அரசுகள் முன்வரவில்லை.
1990ஆம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்த போது நடுவர் மன்றத்தை அமைக்கவேண்டும் என அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களிடம் வற்புறுத்தி னார். ஆனால் கர்நாடக முதலமைச்சராக இருந்த பங்காரப்பா மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் பிரதமரைச் சந்தித்து நடுவர் மன்றம் அமைக்கக்கூடாது என வற்புறுத்தினர். நடுவர் மன்றத்தை அமைக்கும் அதிகாரம் தன்னிடமிருந்தும் பிரதமர் வி.பி.சிங் அதை அமைக்க முன்வரவில்லை. பிரச்சினையை உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு விடுவதாக அறிவித்தார்.
24-4-90இல் உச்சநீதிமன்றம் நடுவர் மன்றத்தை உடனடியாக அமைக் கும்படி மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு அடிபணிந்தே பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றத்தை அமைக்க முன்வந்தாரே தவிர கருணாநிதி கூறுவதைப்போல அவரது வேண்டு கோளை ஏற்று அமைக்க முன்வர வில்லை. அவ்வாறு பிரச்சாரம் செய்வது உண்மைக்குப் புறம்பானதாகும்.
இரு மாநில விவசாயிகளிடம் விரிவான விசாரணை நடத்தியும். இரு மாநில அரசுத் தரப்பின் விவாதங் களைக் கேட்டறிந்தும், 30-6-1991அன்று நடுவர் மன்றம் இடைக்கால ஆணை யைப் பிறப்பித்தது. இந்த ஆணையை ஏற்பதற்கு கர்நாடகம் மறுத்ததோடு காவிரி பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து இந்த ஆணையைச் செல்லாததாக்க முயன்றது. மத்திய அரசோ அல்லது எந்த தேசியக் கட்சித் தலைமைகளோ கர்நாடகத்தின் போக்கைக் கண்டிக்க முன்வரவில்லை.
22-11-91 அன்று கர்நாடகத்தின் சட்டம் செல்லாது என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதற்குப் பின்ன ராவது மத்திய அரசு இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் காலங்கடத்தும் வகையில் அதை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. அதாவது அநீதிக்கும் காலங்கடத்துவதற்கும் துணைநின்றது.
மத்திய அரசின் செயலைக் கண்டிக்கும் வகையில் தமிழக முதல் வராக இருந்த ஜெயலலிதா 18-6-91 அன்று உண்ணாவிரதம் இருந்தார். நதிநீர்த் தாவா சட்டத்தின்படி உடனடி யாக இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அதை நிறைவேற்றுவ தற்காக காவிரி பள்ளத்தாக்கு அமைப்பை ஏற்படுத்தவோ பிரதமராக இருந்த நரசிம்மராவ் முன்வரவில்லை. மாறாக காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவை கண்காணிக்க ஒரு குழுவை யும் அதை நடைமுறைப்படுத்த, ஆராய மற்றொரு குழுவையும் அமைத்தார். இதுவும் சரியாகச் செயல்படவில்லை.
நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்த நீதியரசர் சித்ததோஷ் முகர்சி மீது பொய்யான பழியைச் சுமத்தி அவ ருக்கு எதிராக அப்போதைய கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜனதா கட்சியின் தலைவர் தேவகவுடே வழக்குத் தொடுத்தார். வழக்கு நிலுவையில் இருந்த கால கட்டத்தில் அவரே முதலமைச்சராக ஆகி பிறகு பிரதமர் பதவியையும் ஏற்றார். அதன் பின்னர்கூட அந்த வழக்கை அவர் திரும்பப் பெறவில்லை. பிரதமராகப் பதவி வகிக்கும் ஒருவரே தன்மீது பொய்யான வழக்கைத் தொடுத் ததைக் கண்ட நீதியரசர் சித்ததோஷ் முகர்ஜி தனது பதவியிலிருந்து விலகினார். 5 ஆண்டுகள் விசாரணை நடத்தி முடித்துவிட்ட நிலையில் அவர் விலகியதன் விளைவாக 8 மாதங்கள் நடுவர் மன்றம் செயல்படவில்லை. நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த பிற நீதிபதிகளும் மாறினார்கள். இதற்குப் பிறகே புதிய உறுப்பினர்களும் தலைவர்களும் நடுவர் மன்றத்திற்கு நியமிக்கப்பட்டனர். இதன் விளைவாக தமிழகத்திற்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டன.
2007ஆம் ஆண்டு சனவரியில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பினையும் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. சட்டப்படி அதை அரசிதழில் வெளியிடவோ, காவிரி பள்ளத்தாக்கு அமைப்பை நிறுவவோ மத்திய அரசு முன்வரவில்லை. கர்நாடகத்தின் இந்த செயல் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்கும் செயலாகும். காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதாகட்சி ஆகியவற்றின் தேசியத் தலைமைகள் அதைக் கண்டித்துத் திருத்த முன்வரவில்லை.
தொடர்ந்து இவ்வாறு கர்நாடகம் எல்லாவிதமான நீதிகளையும் சட்டங் களையும் மீறியபோது வேறுவழியே இல்லாமல் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற வழக்கை முதல்வர் ஜெயலலிதா தொடுக்க ஏற்பாடு செய்தார். உச்சநீதிமன்றம் தலையிட்டு மத்திய அரசின் போக்குக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
தனது 22 ஆண்டு காலப் போராட்டத்தில் இது தனக்குக் கிடைத்த வெற்றியாகும் என குறிப்பிட்டிருப்பது சரியானதாகும். அவரது பொதுவாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது என்பதோடு மட்டுமல்ல, தமிழக விவசாயிகளுக்குக் கிடைத்த நீதி என்பதிலும் சந்தேகம் இல்லை.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானது முதல் தொடர்ந்து மத்திய அரசில் தி.மு.க. இடம் பெற்றிருந்தும் மாநிலத்தில் ஆட்சியிலிருந்தும் அரசித ழில் இதை வெளியிட வற்புறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 46 ஆண்டு காலமாக காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடகம் பிடிவாதமாக தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதியை இழைத்தது. காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதாகட்சி போன்ற தேசியக் கட்சிகள்தான் அங்கே மாறிமாறி ஆட்சி புரிந்தன. சட்டத்திற்கும் நீதிக்கும் பணிய மறுத்த கர்நாடகத்தைத் தட்டிக்கேட்க மத்திய ஆட்சி முன்வரவில்லை. மேற் கண்ட 3 கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகளும் இதில் தலையிட்டு கர்நாடகத்தில் உள்ள தங்கள் கட்சியைத் திருத்துவதற்கு முன்வரவில்லை. இந்தியா ஒரே நாடு என்றும் நாம் அனைவரும் பாரத மாதாவின் புத்திரர்கள் என்றும் தேசியக் கட்சிகள் பேசி வருவது வெறும் உதட்டளவானதே யாகும் என்பதைக் காவிரிப் பிரச்சினை தோலுரித்துக் காட்டிவிட்டது.
நடுவர் மன்றம் அமைக்கவும் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் கிட்டத்தட்ட ஏழு முறைகளுக்கு மேல் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டை நாடிப் பெறவேண்டியிருந்தது. சட்டத்தின் ஆட்சி இங்கே நடக்குமானால் பிரதமர் தலையிட்டு இதில் நீதி வழங்கி யிருக்கலாம். ஆனால் பிரதமர்களாக இருந்தவர்கள், கர்நாடகத்தில் உள்ள தங்கள் கட்சியின் நலனைப் பெரிதாகக் கருதினார்களே தவிர தேசிய ஒருமைப் பாட்டை ஒருபொருட்டும் மதிக்க வில்லை. கட்சி நலன் அவர்களின் கண்களுக்குத் திரையிட்டு மறைத்தது.
இந்தியாவின் ஒரு அங்கம் தமிழகம் என்பதையோ காவிரி பன்மாநில நதி என்பதையோ நினைத்துப் பாராமல், காவிரி ஏதோ அந்த மாநிலத்திற்குச் சொந்தமான ஒரு நதிபோலக் கருதி தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் கர்நாடகம் வஞ்சித்தபோது அதைத் தட்டிக்கேட்க தேசியக் கட்சிகளின் தலைமையோ அல்லது பிரதமர்களோ முன்வரவில்லை. இது நமது வரலாற்றில் பதிந்துவிட்ட களங்கமாகும்.
காவிரியில் தண்ணீரை விடாமல் கர்நாடகம் தடுத்தது ஒருபுறம் இருக் கட்டும். ஆனால் கர்நாடகத்தின் இயற் கைக்கும், நீதி நெறிக்கும் புறம்பான போக்கை தேசியக் கட்சிகளின் தலை மைகள் கண்டித்திருந்தால்கூட நமக்கு ஒரு ஆறுதல் கிடைத்திருக்குமே என்பது தமிழர்களின் ஆதங்கமாகும்.
இலங்கையில் இருந்து தமிழீழம் பிரியுமானால் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு பிரிந்துவிடும் என தில்லியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். அதன் காரணமாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எதிரிடையான நிலை எடுத்திருக் கிறார்கள். இந்தக் கருத்து எத்தகைய ஆதாரமும் அற்ற கருத்தாகும். தமிழீழப் பிரிவினைப் போராட்டத்தைப் பார்த்து தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு அண்டை மாநிலமான கர்நாடகம் காவிரிப் பிரச்சினையிலும் மற்றொரு அண்டை மாநிலமான கேரளம் முல்லைப்பெரியாறு பிரச்சினையிலும் நடந்துகொள்ளும் சுயநலமான போக்கு தான் பிரிவினை விதைகளைத் தமிழக மக்கள் மத்தியில் விதைத்துக்கொண்டி ருக்கிறது என்பதை டில்லியில் உள்ளவர்கள் உணரவேண்டும்.
நன்றி : ஜூனியர் விகடன்

 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.