பாலச்சந்திரன் படுகொலை உலகத் தமிழர்கள் கொதிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 மார்ச் 2013 10:38
சோழன் கிள்ளிவளவன் தனது பகைவனான மலையமான் என்னும் சிற்றரசனின் இரு புதல்வர்களை சிறைப்பிடித்துக் கொண்டுவந்து அவர்களை கழுத்தளவு மண்ணில் புதைத்து யானையைக் கொண்டு அவர்களது தலையை இடறும்படி உத்தரவிட்டான். அந்த சிறு குழந்தைகளின் முன்னால் யானை ஒன்று நின்றபோது ஒன்றும் புரியாமல் மிரண்டு திகைத்தனர். அப்போது புலவரான கோவூர் கிழார்
இச்செய்தியை அறிந்து விரைந்து வந்து சோழன் கிள்ளிவளவனை நோக்கிப் பாடுகிறார்.
நீயே, புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழுஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே.
"மன்னா புறாவைக் காப்பாற்ற தன் சதையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கர வர்த்தியின் பரம்பரையில் வந்தவன் நீ. இவர்களோ புலவர்களுக்குப் பெருங்கொடை அளித்து மகிழும் மரபில் பிறந்தவர்கள். சிறுவயதுடைய இளையவர்கள். அவர்கள் கண்களில் வெளிப்படும் மிரட்சியைப் பார்ப்பாயாக. பிறகு நீ விரும்பியதை செய்வாயாக' என்பது இந்தப் பாடலின் பொருளாகும். புலவரின் அறிவுரையை ஏற்று சோழன் கிள்ளிவளவன் அக்குழந்தைகளை விடுவித்தான் என்பது வரலாறு.
தண்டனை விதித்தவனும் தமிழன். தண்டனைக்குள்ளானவர்களும் தமிழ்க் குழந்தைகள். சோழனுக்கு அறிவுரை கூறிய புலவர் பெருமகனும் தமிழன். எனவே அவரது அறிவுரையை ஏற்று சோழன் அந்தக் குழந்தைகளை விடுவித்தான். காரணம் தமிழர்கள் பொறுத்தருளும் பெருங்குணம் கொண்டவர்கள்.
சோழன் கிள்ளிவளவனுக்கு அறிவுரைகூறி திருத்திய கோவூர் கிழாரைப் போன்ற புலவர் பெருமகன் யாரும் இராசபக்சேவுக்கு அருகில் இல்லை. இனவெறிகொண்ட இராசபக்சேவுக்கு அவரைவிட கோணல் புத்தி படைத்த கோத்தபாய இராசபக்சேதான். அறிவுரை சொல்லும் அதிமேதாவி.
சிங்களவர்களோ பண்பட்ட மரபில் உதித்தவர்கள் அல்லர். பழிவாங்கும் போக்கும் அடங்கா வெறித்தனமும் நிறைந்தவர்கள். சிங்கள வெறியர்கள் தங்களிடம் சிக்கிய மழலை பேசும் சிறுவனான பாலச்சந்திரனின் மார்பில் ஐந்து குண்டுகளைப் பாய்ச்சிக் கொன்று குவித்த கொடூர மனம் படைத்தவர்கள்.
பிரபாகரனின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக எந்தக் குற்றமும் செய்யாத பாலச்சந்திரன் பதைபதைக்கப் படுகொலைக்கு ஆளானான். அவன் மட்டுமா? பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகள் ஈவுஇரக்கமில்லாமல் சிங்கள வெறியரால் கொல்லப்பட்டனர். கருவில் இருக்கும் சிசுவைக்கூட அவர்கள் விட்டுவைக்க வில்லை. பாலச்சந்திரனின் மரணம் உலகம் முழுவதிலுமுள்ள மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. இராசபக்சேயின் உண்மை உருவத்தை உலகம் உணரத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் குமுறும் உள்ளத்துடன் தங்களின் கொந்தளிப்பைப் பலவிதங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள். பாலச் சந்திரனின் மரணம் மன்னிக்கமுடியாதது மட்டுமல்ல. அதற்குக் காரணமான கொலைகாரப் பாவிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
"வீட்டுக்கொரு பிள்ளையைக் கொடுங்கள் நாட்டுக்கு விடுதலையை நான் பெற்றுத் தருகிறேன்'' என தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் கூறினார். அதை ஏற்ற தமிழீழத் தாய்மார்கள் மனமகிழ்வோடு தாங்கள் பெற்ற பிள்ளைகளை அனுப்பிவைத்தார்கள். அந்தப் பிள்ளைகள் களத்தில் வீரத்தை நிலைநிறுத்தி மாவீரர்களாக மறைந்தபோது கொஞ்சமும் கலங்காமல் அடுத்த பிள்ளையை அனுப்பினார்கள். இந்த வீரமிக்க மக்களின் தலைவரான பிரபாகரன் தனது மூத்த மகன் சார்லசையும், இளைய மகன் பாலச்சந்திரனையும் களத்திலே சாவை அரவணைக்கக் கொடுத்தார். தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளை வாரிசுகளாக்கி அரியணையில் அமர வைத்து அழகுபார்க்கத் துடிக்கும் தலைவர்கள் வாழும் இந்தக் காலத்தில், தான் பெற்ற பிள்ளைகளை மண்ணின் மீட்சிக்காக மரணத்தைத் தழுவ அனுமதித்த பிரபாகரனுக்கு இணையான ஒரு தலைவன் உலகத்தில் இல்லை.
வரலாறு தெரியாத சிங்கள வெறியர்கள் ஒன்றை உணரவேண்டும். கல்லாக் களிமகன்களாக மாறி தாங்கள் செய்த இந்தப் படுகொலைக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டிய நாள் அதிதூரத்தில் இல்லை.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது பஞ்சாப் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ-டயர் படுகொலை புரிந்த ஜெனரல் டயருக்கு பாராட்டுத் தெரிவித்தான். ஆனால் அந்தப் படுகொலை நடந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்த்த உத்தம் சிங் என்ற இளைஞர் மனித வேட்டையாடிய ஜெனரல் டயரையும் அவரை ஏவிவிட்ட கவர்னர் மைக்கேல் ஓ டயரையும் பழிக்குப் பழி வாங்க சபதம் பூண்டான். பெரும் சிரமங்களுக்கிடையே இலண்டன் சென்று தகுந்த சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தபோது ஜெனரல் டயர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கை,கால் செயல்படாமல் படுத்த படுக்கையிலேயே கிடந்து மடிந்துபோனதை அறிந்த உத்தம்சிங் மனங்கொதித்தான். நம் கையால் சாகவேண்டியவன் நோய்க்கு இரையாகி மாண்டொழிந் தானே என்று வருந்தினான். ஆனாலும் மற்றொருவரான மைக்கேல் ஓ டயரை எப்படியும் தீர்த்துக்கட்டத் தீர்மானித்தான்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 21 ஆண்டுகள் கழித்து, அதா வது 13-3-1940 அன்று இலண்டனில் ஒரு கூட்டத்தில் மைக்கேல் ஓ டயர் பேசுவதை அறிந்து உத்தம்சிங் அங்கு சென்றான். அவன் பேச எழுந்தபோது மேடைக்குத் தாவிச்சென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆறுமுறை சுட்டான். ஓ டயர் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தான். தனது பணி முடிந்தவுடன் உத்தம்சிங் ஓடவில்லை. மாறாக காவலர்கள் அவனைக் கைது செய்யும்வரை அங்கேயே நின்றான்.
"ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான எங்கள் மக்களை குழந்தைகளை சுட்டுத் தள்ளிய ஜெனரல் டயரை ஏவிவிட்ட மைக்கேல் ஓ டயரை சுட்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன். எனது மக்களுக்கு யார் தீங் கிழைத்தாலும் பழிக்குப் பழிவாங்குவேன்'' என்று நீதிமன்றத்தில் நெஞ்சு நிமிர்த்தி னான் உத்தம்சிங். அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த மாவீரன் உத்தம்சிங்கைப் போல தமிழ்கூறும் நல்லுலகில் ஏராள மான இளைஞர்கள் இன்னமும் உண்டு. பாலச்சந்திரன் படுகொலைக்கும் முள்ளி வாய்க்கால் படுகொலைக்கும் பழிவாங் காமல் அவர்கள் ஒருபோதும் ஓயப்போ வதில்லை. இராசபக்சேக்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும். தமிழன் பரம் பரை மானங்கெட்ட பரம்பரை அல்ல.

அதிக பாசம் கொண்ட இளைய மகன்!

சில நேரங்களில் பணிச்சுமையின் காரணமாகப் பிரபாகரன் வீடு வர முடியாமல் போய்விடும். மாதக் கணக்கில் அவ்வாறு வராமல் அவர் இருந்ததுண்டு. அவர் மீது அதிகப் பாசம் கொண்ட இளைய மகன் பாலச்சந்திரனால் அப்பாவைப் பார்க்காமல் இருக்க முடியாது. எனவே அவன் அவரது அலுவலகத்திற்குத் தேடிவருவான். அவரது அலுவலகம் மிகப் பாதுகாப்பானது. 3 வேலிகள் கொண்டதாக அமைந்திருக்கும் வெளிவேலியின் கதவு பூட்டப்பட்டு இருந்து உள்வேலியின் இரண்டு கதவுகளும் திறந்திருக்குமானால் அவர் வெளியே போய்விட்டார் என்று பொருள். பாலச்சந்திரன் வந்து பார்த்துவிட்டு அப்பா இல்லை என்று ஏக்கமுடன் திரும்பிச் செல்வான். வேலை அதிகமாக இருந்தால் பிரபாகரன் வந்து வெளிக் கதவைப் பூட்டச் சொல்லிவிடுவார். அப்போது அவரது மனைவி மதிவதனி வந்தாலும் இதேகதிதான்.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.