மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை! ஐ.நா. மனித உரிமைக் குழு அறிக்கை. PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 மார்ச் 2013 10:42
இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வர இருக்கிற நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமே இலங்கை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. "மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமை கவுன்சில் கண்டனம்
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டுவர இருக்கிற நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலே இலங்கைக்கு எதிராக ஒரு அறிக்கையை தயாரித்துள்ள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. 38 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், தற்போது இலங்கை செயல்படுத்தி வரும் திட்டங்கள் உள்பட அதில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான விவரங்கள் வருமாறு:
ஆள் கடத்தல் தொடருகிறது
இலங்கையில் போர் நடந்த சமயத்தில் பெரியவர்களும் சிறுமிகளுமாக பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை சரியாக செயல்படுத்தவில்லை.
இந்த நிலையில், அங்கு போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
பாலியல் பலாத்கார அச்சம்
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் இராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஏன் திரும்பப் பெறப்படவில்லை? அதிகாரிகளும் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நிரந்தரமாக இருப்பார்களா அல்லது வெளியேறி விடுவார்களா என்று அறிவிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் அங்கு நிர்வாகத்திலும் பங்கெடுத்து வருகிறார்கள். சிறுபான்மைத் தமிழர்கள் நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இராணுவம் வாபஸ் பெறப்படாததுடன், மேலும் மேலும் இராணுவம் குவிக்கப்படுவதாலும், அதிகாரிகள் நிர்வாகத்தில் ஈடுபடுவதாலும் அங்கு வசிக்கும் தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்கார அச்சம் நிலவுகிறது. பொது மக்களும் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்துடன் உள்ளனர்.
தீர்வு எட்டப்படவில்லை
உள்நாட்டுப் போருக்குப்பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்துதல் போன்றவை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல் திட்டத்திலும் அவை புறக்கணிக்கப்பட்டு உள்ளன. சிறுபான்மை தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
சிறுபான்மை தமிழர்களின் பல போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. நிறைய சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
ஐ.நா. பரிந்துரைகள்
மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாக சொன்ன இலங்கை அரசு அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தவில்லை. புலம் பெயர்ந்தவர்களை குடியமர்த்தும் பணியை முழுமையாக செயல்படுத்தவில்லை. இலங்கை அரசு நியமித்த குழு சமர்ப்பித்த (கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே இலங்கை அரசு நிறைவேற்றி உள்ளது.
ஆகவே, சில பரிந்துரைகளை செயல்படுத்தும்படி இந்த கவுன்சில் இலங்கைக்கு வலியுறுத்துகிறது.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு
2006-ல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். சிறுபான்மையினரான தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.
சர்வதேச விசாரணை
தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம்.
போருக்குப் பின்னால் காணாமல் போனவர்கள் தேவை. இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல முக்கிய குற்றச்சாட்டுகள், பல முக்கிய பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.