போர்க் குற்றம்-இனப்படுகொலை ஐ.நா. கூறுவதென்ன? PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013 15:52
ஐ.நா. பட்டயம் பிரிவு யஒஒ இன்படி அனைத்துலக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என கருதினால் எந்த நாட்டிலும் ஐ.நா. தலையிட முடியும். ஐ.நா. பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுக்க முடியாமல் ரத்து அதிகாரத்தை வல்லரசு ஏதேனும் பயன்படுத்துமானால் ஐ.நா. பேரவை தலையிட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றதாகும்.
1966ஆம் ஆண்டில் ஐ.நா. ரொடிசியா நாட்டுக் கெதிராகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. அதைப் போல தென்னாப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையை கைவிட மறுத்தபோது அதற்கெதிராகவும் நடவடிக்கை எடுத்தது. குவைத் நாட்டை ஈராக் ஆக்கிரமித்தபோது அதற்கெதிராகவும் ஐ.நா. நடவடிக்கை எடுத்தது.
ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டு அதைத் தடுப்பதற்கும் அதற்குப் பரிகாரம் காண்பதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காதபோது மனித நேய அடிப்படையில் அதில் தலையிட ஐ.நா.வுக்கு உரிமை உண்டு என சர்வதேச நீதிபதிகளின் ஆயம் கூறியுள்ளது.

போர் குற்றம்

ஒரு படைவீரர் அல்லது குடிமகன் கடுமையான குற்றங்கள் புரிந்து பிடிபட்டால் அவர்கள் மீது போர்க் குற்றப்படி நடவடிக்கை எடுக்கலாம். போர்க் குற்றங்கள் என்பது போர் மரபுகளையும் சட்டங்களையும் மீறுவதாகும். ஒரு போர் வீரர் தனது மேலதிகாரிகளின் ஆணைப்படி குற்றம் புரிந்திருந்தாலும் அது போர்க் குற்றமே ஆகும்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதியன்று பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், பிரான்சு ஆகிய நேச நாடுகள் கூடி ஐரோப்பிய அச்சு நாடுகளைச் சேர்ந்த முக்கிய போர்க் குற்றவாளிகளை விசாரித்துத் தண்டிப்பது குறித்து உடன்பாடு செய்தனர். இந்த உடன்பாட்டின்படி சர்வதேச இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு போர்க் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தியது. இந்த உடன்பாட்டோடு இணைக்கப்பட்ட பட்டயத்தின் 6ஆவது பிரிவில் கீழ்க்கண்டவை போர்க் குற்றங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

அ. ஆக்கிரமிப்புப் போர் நடத்தத் திட்டமிடுதல், தயாரித்தல், முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் அமைதிக்கெதிரான குற்றங்கள் இழைத்தலும், சர்வதேச உடன்பாடுகளையும், வாக்குறுதிகளையும் மீறி போர்த் தொடுத்தலும், அதற்கான சதியில் ஈடுபடுதலும்.

ஆ. கொலை, மனிதர்களைக் கொடுமையாக நடத்துதல், அடிமையாகக் கடத்துதல், கைப்பற்றிய பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கெதிராக அட்டூழியங்கள் புரிதல், போர்க் கைதிகளாக உள்ளவர்களைக் கொலை செய்தல், சித்திரவதை செய்தல், அடைக்கலம் புகுந்தவர்களைக் கொல்லுதல், பொது சொத்துக்களைச் சூறையாடுதல், நகரங்களையும் கிராமங்களையும் தேவையில்லாமல் அழித்தல் ஆகியவை போர்க் குற்றங்களாகும்.

இ. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களான கொலை, பூண்டோடு கருவறுத்தல், அடிமையாக்குதல், கடத்துதல் போன்றவையும், குடிமக்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித நேயமற்ற நடவடிக்கைகளும் குறிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன்னாலோ போருக்குப் பின்னாலோ அரசியல், இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளில் இந்தக் கொடுமைகள் இழைக்கப்பட்டிருந்தாலும் அவையும் போர்க் குற்றங்களின் கீழேயே வரும்.

இனப்படுகொலை

பல்வேறு நாடுகளில் வாழும் சிறுபான்மை இன மக்களை பெரும்பான்மை இனம் ஒடுக்குமானால் ஐ.நா. அதில் தலையிட்டு சிறுபான்மை இன மக்களைப் பாதுகாத்து அவர்களது உரிமைகளையும் நிலைநாட்டியுள்ளது.
யூகோஸ்லாவிய ஒன்றியம் உடைந்து சிதறியபோது அதிலிருந்து பிரிந்து தனிக்குடியரசான கொசவோவாவில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர் அல்பேனிய இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள். எனவே, அவர்களை ஒடுக்குவதற்கு யூகோஸ்லாவிய அதிபராக இருந்த மிலோசேவிக் இராணுவத்தை அனுப்பி அல்பேனிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தார். அப்போது ஐ.நா. தலையிட்டது. ஐ.நா.வின் சார்பில் நேட்டோ இராணுவம் அங்கு அனுப்பப்பட்டு கொசாவா மக்களைப் பாதுகாத்தது. அதிபரான மிலோசேவிக் கைது செய்யப்பட்டு இனப்படுகொலைக்காகவும், போர்க் குற்றங்களுக்காகவும் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். ஆனால் சிறையிலேயே அவர் மரணமடைந்தார்.
எத்தியோப்பியா நாட்டில் வாழ்ந்த சிறுபான்மை இனத்தவரான எரித்தியர் இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆளானபோது ஐ.நா. தலையிட்டு எரித்திய மக்களைப் பாதுகாத்து அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தி எரித்திரியா தனிநாடாக விளங்கச் செய்தது.

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடான சூடான் நாட்டின் தென் பகுதி கிறிஸ்துவ மக்கள் வாழும் பகுதியாகும். அங்கு அந்த மக்கள் சூடான் படைகளால் ஒடுக்கப்பட்டபோது ஐ.நா. தலையிட்டு அவர்களைப் பாதுகாத்தது. அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தச் செய்து தென் சூடான் தன்னாட்சி உரிமை பெற வழிவகுத்தது.

இந்தோனேசியாவிலிருந்து தைமூர் மக்கள் பிரிந்து செல்ல கிளர்ச்சி நடத்தியபோது அவர்களை ஒடுக்குவதற்கு இந்தோனேசிய இராணுவம் பெரும் முயற்சி செய்தது. தைமூர் மக்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். எனவே. அவர்களுக்கெதிராக இந்தோனேசிய இராணுவம் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அப்போது ஐ.நா தலையிட்டு பொது வாக்கெடுப்பு நடத்தி, தைமூர் பிரிந்துபோக வழிவகுத்தது.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.