புலிக்குட்டியின் பார்வை! - கென்னடி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013 15:54
தம்பீ!
ரத்தவெறி பிடித்த
ஓநாய்களின் மத்தியில்
புலிக்குட்டி நீ - உன்
இறுதி உணவை உண்டாய்.
சிதைந்த உடல்கள்...
கரிந்த பிணங்கள்
கறுப்பு மையினால்
உறுப்புகள் மறைக்கப்பட்டு
சிதறிக் கிடக்கும் சகோதரிகளின் சடலங்கள்...
பார்த்துப் பார்த்து... பார்த்துப் பார்த்து
மரத்துப்போன மனிதர்களின்
மனதையும் அசைத்திருக்கின்றது... உன் பார்வை.
முதுகினில் புண் எனில்
முட்டிப் பால் குடித்த
முலை அறுப்பேன் என்று முழங்கி
மார்பில் புண் கண்டு
மன அமைதி கொண்ட
வீரமரபின் தொடர்ச்சி நீ... முற்றுப்புள்ளி அல்ல.
வீட்டுக்கு ஒரு பிள்ளை கேட்டு
பலி கொடுத்தான் - தன் பிள்ளைகள்
தப்பிக்க வழி கொடுத்தான் - எனும்
பழி நேராமல் பார்த்துக் கொண்டவன் நீ
கலங்கி நிற்கவும்
கண்ணீர் சிந்தவும்
நேரமில்லை, தம்பி!
கனத்த தூரம் இன்னும் நடந்து செல்ல
வேண்டியிருக்கிறது.
எனவே - உன் பார்வையை
கடந்து செல்ல வேண்டியிருக்கிறது
ஆனால் தம்பி!
நாங்கள் கணக்கு வைத்திருக்கிறோம்.
உன் நெஞ்சினில் பாய்ந்த
குண்டுகள் ஐந்தும்
தமிழினம் பட்ட கடன்.
பட்ட கடன் தீர்க்காமல்
விட்டதில்லை தமிழினம்.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.