அருமைத் தோழர் அழகிரிசாமி! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2013 14:07

1957-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்பு வகுப்பில் சேர்ந்த போது முதன்முதலாக நண்பர் அழகிரிசாமியை சந்தித்தேன். அன்று தொடங்கிய எங்கள் நட்பு 56 ஆண்டு காலமாக வளர்ந்து கனிந்தது. வகுப்புத் தோழராக மட்டும் அல்லாமல்,

நான் மேற்கொண்ட செயல்கள் அத்தனைக்கும் தோள் கொடுத்துத் துணை நின்றார். மாணவர் விடுதியின் பொதுச் செயலாளராக நான் பொறுப்பேற்றபோது விடுதியின் உணவகம் ஒன்றின் பொறுப்பை அவர் ஏற்றார். நானும் அவரும் மற்ற மாணவ நண்பர்களின் ஒத்துழைப்போடு, விழாக்கள் பலவற்றை பல்கலைக்கழக வரலாறு அது வரை காணாத வகையில் மிகச் சிறப்பாக நடத்தினோம்.
முதலாம் ஆண்டில் எங்களுக்குப் பேராசிரியராக இருந்த முனைவர் அ. சிதம்பரநாதனார் தலைமையில் மாணவர்கள் சுற்றுலாப் பயணம் சென்றபோது நண்பர் அழகிரிசாமி சிறந்த சொற்பொழிவாளர் என்பது வெளிப்பட்டது. சுற்றுலாவின் போது ஓய்வு நேரங்களில் அழகிரிசாமியை அழைத்து "ஏதாவது பேசு'' என பேராசிரியர் கேட்க, மனோகரா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் பேசிய வசனத்தைத் துளி கூட பிசகாமல் அவர் அப்படியே அதே உச்சரிப்போடு சொல்லியபோது, மாணவர்கள் மட்டுமல்ல பேராசிரியரும் கைதட்டிப் பாராட்டினார்.

azhagirisamy
கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப் போட்டியை ஆண்டு தோறும் குடந்தை அரசினர் கல்லூரி நடத்துவது வழக்கம். அந்தப் போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அழகிரிசாமி கலந்து கொண்டு முதல் பரிசாக தங்கப் பதக்கம் பெற்று வந்த போது அவருக்கு சிதம்பரம் இரயில்வே நிலையத்தில் மாணவர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளித்தோம். அவர் தொடர்ந்து பல கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பல பெற்று தானொரு சிறந்த சொற்பொழிவாளர் என்பதை நிலைநாட்டினார். பிற்காலத்தில் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராக அவர் திகழுவதற்கு மாணவப் பருவத்தில் அவரிடம் வெளிப்பட்ட பேச்சுக் கலையே காரணமாகும்.

alagiri-prabha
1945-ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணா பேசுவதற்கு நிருவாகம் தடை விதித்திருந்தது. அந்தத் தடையை உடைத்தெறிய வேண்டுமென மாணவர்களாகிய நாங்கள் உறுதி பூண்டோம். மாணவர்கள் விடுதி விழாவிற்கு அறிஞர் அண்ணாவை அழைப்பதென்றும், நிருவாகம் அனுமதி தர மறுக்குமானால் போராடுவது எனவும் முடிவு செய்தோம். இதற்காக அப்போது துணை வேந்தராக இருந்த திரு. தி. மூ. நாராயணசாமி பிள்ளை அவர்களை நண்பர் அழகிரியும் நானும் சந்தித்துப் பேசினோம். மறுநாள் காலை 9 மணிக்குச் சந்திக்கும்படி அவர் கூறினார். துணை வேந்தரின் இல்லத்தை விட்டுப் புறப்பட்டு வெளியே வந்த போது அங்கே இருந்த உதவியாளர் எங்களிடம் ஓர் இரகசியத்தைத் தெரிவித்தார். துணை வேந்தர் அன்று இரவே இரயிலில் சென்னைக்குப் புறப்படுகிறார் என்பதே அந்த இரகசியம் ஆகும். எங்களுக்குப் போக்குக் காட்டவே துணை வேந்தர் முயல்கிறார் என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது.

alagiri-anna

நானும் நண்பர் அழகிரியும் விடுதி நிருவாகக் குழுவில் உள்ள மற்றவர்களுடன் கலந்தாலோசித்தோம். துணைவேந்தர் கூறியபடி மறுநாள் காலையில் அவரை சென்னையிலேயே சந்திப்பது என முடிவெடுத்தோம். அதற்கிணங்க நானும் நண்பர் அழகிரியும் சென்னை புறப்பட்டுச் சென்றோம். காஸ்மோபாலிடன் கிளப்பில் துணை வேந்தர் தங்குவது வழக்கமாதலின் அங்கு சென்று சரியாக 9 மணிக்கு அவரின் அறைக் கதவைத் தட்டினோம். உள்ளே வருமாறு அவர் குரல் கொடுத்தார். நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் திடுக்கிட்டுப் போனார். மறுகணம் கோபக்கணைகளை எங்கள் மீது வீசினார். அதைக் கண்டு நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் கருமமே கண்ணாயிருந்தோம். அறிஞர் அண்ணாவை விடுதி விழாவுக்கு அழைக்க வேண்டும் என வற்புறுத்தினோம். மதிய உணவு வரை எங்களுக்கிடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. என்னதான் கோபமாகப் பேசினாலும் எங்கள் துணை வேந்தர் சிறந்த பண்பாளர். அவருடன் உணவருந்தும்படி எங்களை வற்புறுத்தி சாப்பிடச் செய்தார். மீண்டும் அவர் அறைக்குத் திரும்பிய போது எங்கள் கோரிக் கையை வற்புறுத்துவதில் நான் முனைந்தேன். ஆனால் நண்பர் அழகிரியோ விசித்திரமான செயல் ஒன்றைப் புரிந்தார். மேசை மீதிருந்த ஆரஞ்சுப் பழம் ஒன்றை எடுத்து தொலி உரித்து, சுளை எடுத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு ஒரு தட்டில் வைத்து துணை வேந்தரிடம் நீட்டினார். அழகிரிசாமியின் இந்தச் செயல் துணை வேந்தரின் முகத்தை மலரச் செய்தது.

aaagiri-they-po-me
"டேய்! நீ நல்ல பையனாக இருக்கிறாயே! இவனுடன் ஏன் சேர்ந்தாய்?' என்று கேட்டுவிட்டு அழகிரிசாமியின் ஊர், பெயர், குடும்பம் ஆகியவற்றை விசாரித்தறிந்தார். அழகிரிசாமியின் தாய் மாமன் ஒருவர் துணை வேந்தருக்கு மிக வேண்டியவர் என்பதை அறிந்து கொண்ட போது துணை வேந்தருக்கும் அழகிரிசாமிக்கும் நெருக்கம் அதிகமானது. இருவரின் குலாவலைப் பார்த்து நான் மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாகத் துணை வேந்தர் எங்கள் கோரிக்கைக்கு இணங்கினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு நாங்கள் விடைபெற்று வெளியே வந்தவுடன் நண்பர் அழகிரியின் மீது நான் பாய்ந்தேன்.
"துணை வேந்தரிடம் நான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்குத் துணையாகப் பேசுவதற்கு பதில் அவருக்கு ஆரஞ்சுப் பழம் உரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்குதான் என்னுடன் வந்தீர்களா?'' எனக் கோபித்தேன்.
ஆனால் அவருக்கே உரிய நிதானத்துடன் நண்பர் அழகிரி "நீங்கள் சரியான முறையில் வாதங்களை முன் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். எனக்கு ஒரு வேலையும் இல்லை. துணை வேந்தரின் கோபத்தைத் தணிவிக்க என்ன செய்வது என யோசித்து அதைச் செய்தேன். அதனால் அவர் குளிர்ந்து போனார். உங்கள் வாதங்களினால் மட்டும் நமது கோரிக்கை நிறைவேறவில்லை. அதற்கு என்னுடைய சிறிய பங்களிப்பும் இருந்தது'' எனச் சொல்லிவிட்டு சிரித்தார். எனது கோபம் போன இடம் தெரியவில்லை.
விடுதி விழாவில் அறிஞர் அண்ணா கலந்து கொண்டதும், சிறப்பாகப் பேசியதும் பிறகு எங்கள் விடுதிக்கே வந்து மாணவர்களுடன் விருந்துண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும்.
அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "ஹோம்லாண்ட்' ஆங்கில வார இதழ் நிதிக்காக அண்ணாவின் நாடகம் ஒன்றை நாங்கள் நடத்தியது மறக்க முடியாத மற்றொரு நிகழ்ச்சியாகும். அண்ணா எழுதிய 'சந்திரமோகன்" நாடகத்தில் நடிக்க நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி அவர்களையும் மற்றொரு நடிகையையும் மட்டும் தம்முடன் அண்ணா அழைத்து வந்திருந்தார். பிற நடிகர்களை சென்னையிலிருந்து அழைத்து வருவதென்றால் அதிக செலவாகும் என்பதனால் இவ்வாறு செய்தார். சபைக் கூச்சம் இல்லாத, பேசத் தெரிந்த பத்து மாணவர்களை மட்டும் அழைத்து வந்து நடிகர் கே. ஆர். இராமசாமியிடம் ஒப்படைக்கும்படி அண்ணா கூறினார். அதன்படி நண்பர் அழகிரிசாமி உட்பட பத்து மாணவர்களுக்கு நடிகர் கே. ஆர். இராமசாமி அவசரம் அவசரமாக பயிற்சி அளித்து நாடகத்தில் நடிக்கச் செய்தார். நாடகம் நெடுகிலும் மாணவர்கள் தட்டுத் தடுமாறியதையும் அவைகளை அண்ணா அவர்கள் சாமர்த்தியமாக சமாளித்த விதத்தையும் இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. ஆனால் அழகிரிசாமி வசனங்களை உச்சரித்த விதத்தை அண்ணா அவர்கள் மிகவும் மகிழ்ந்து பாராட்டினார். நாடக முடிவில் மாணவர்கள் சார்பில் அண்ணா அவர்களுக்கு ரூ.10,000/- நிதியாக அளித்தோம். 1960-இல் இது மிகப் பெரிய தொகை. இவ்வளவு பெரிய தொகையைக் கொடுப்போம் என்று அண்ணா அவர்களே எதிர்பார்க்கவில்லை.
தமிழறிஞர் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர்களுக்கு மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டுமென எங்கள் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் விரும்பினார்கள். அதற்கிணங்க அந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினோம். குறள் கண்காட்சி ஒன்றினையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். இவ்வாறு பல்கலைக்கழகத்தில் நாங்கள் நடத்திய அத்தனை விழாக்களிலும் எனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றவர் நண்பர் அழகிரிசாமி ஆவார்.
எங்களுடன் படித்த நண்பர்கள் பலரும் ஆசிரியர் பணிக்குச் சென்றார்கள். ஆனால் நாங்கள் இருவரும் ஆசிரியப் பணிக்குச் செல்ல விரும்பவில்லை. அரசியல் நாட்டம் எங்களை ஆட் கொண்டது. எங்கள் படிப்பு முடிவடையும் தறுவாயில்
தி. மு. க. வில் கொள்கை மோதல் மூண்டது. கட்சியில் தலைதூக்கியிருந்த நடிகர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும் என்றும் அடைய முடியாத திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுமாறு வற்புறுத்தியும் ஈ. வெ. கி. சம்பத் அவர்கள் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். அவரது பேச்சும் எழுத்தும் நண்பர் அழகிரியையும் என்னையும் கவர்ந்தன. எனவே தமிழ்த் தேசியக் கட்சியை அவர் தொடங்கிய போது அதில் எங்களையும் இணைத்துக் கொண்டோம். மதுரை மாவட்டப் பொறுப்பாளராக நானும் திண்டுக்கல் வட்டப் பொறுப்பாளராக அழகிரியும் பொறுப்பேற்றோம்.
அகில இந்திய காங்கிரசுத் தலைவராக காமராசர் பதவியேற்ற போது அவரது அழைப்பினை ஏற்று ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் தலைமையில் நாங்கள் அனைவரும் காங்கிரசுக் கட்சியில் இணைந்தோம்.
1969-ஆம் ஆண்டில் காங்கிரசு தொண்டர்கள் மீது தி. மு. க அரசு பொய் வழக்குத் தொடுத்தது. அதை தட்டிக் கேட்டேன் என்பதற்காக என்னையும் அந்த வழக்கில் சேர்த்தார்கள். அதற்குரிய சம்மனைப் பெற்றுக் கொள்ள நான் மறுத்த போது என்னைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். ஆறு மாதத்திற்கு நன்னடக்கை உத்தரவாதம் அளித்துவிட்டுப் போகலாம் என்று நீதிபதி தீர்ப்புக் கூறினார். செய்யாத குற்றத்திற்கு எழுதித் தர மறுத்த போது ஆறு மாத சிறைவாசம் செய்ய நேரிட்டது. அப்போது மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளராக இருந்த அழகிரிசாமி அவர்கள் வெளியில் எனக்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டார். கவியரசர் கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோரைக் கொண்டு பல கூட்டங்களை நடத்தினார். சிறையிலிருந்து நான் வெளியே வரும்வரை அவர் ஓய்வில்லாமல் உழைத்தார்.
மதுரை மாவட்ட காங்கிரசுத் தலைவராக நானும் செயலாளராக அவரும் பொறுப்பேற்றோம். மாவட்டம் முழுவதிலும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்த்தோம். 1972-ஆம் ஆண்டு, விவசாயிகள் போராட்டம் நடந்த போது அவரும் நானும் ஏராளமான தோழர்களுடன் சிறை புகுந்தோம். தமிழ்நாடு முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான காங்கிரசுத் தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாண்டு நடைபெறவிருந்த தனது பிறந்தநாளை பெருந்தலைவர் காமராசர் ரத்து செய்தார். சிறையிலிருந்து நாங்கள் விடுதலையான பிறகு தலைவர் காமராசரின் பிறந்த நாளையும் காந்தியடிகளின் பிறந்த நாளையும் இணைத்து அவ்வாண்டு அக்டோபர் 1, 2 தேதிகளில் மதுரையில் தேசியத் திருவிழாவை நடத்தினோம். பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டார்கள். காங்கிரசுக் கட்சியின் பெயரால் அதற்கு முன்னாலேயோ அல்லது பின்னாலேயோ அவ்வளவுப் பெரிய மக்கள் திரள் இன்று வரை கூடியதே இல்லை. இந்த சாதனை புரிந்ததில் நண்பர் அழகிரிக்குப் பெரும் பங்கு உண்டு. பெருந்தலைவர் காமராசரின் பாராட்டுக்கு நாங்கள் உரியவர்களானோம். காமராசர் தலைமையில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய அந்த நாட்கள் பசுமையானவை.

alagiri-sampath
1973-ஆம் ஆண்டு குமரி மாவட்டச் சுற்றுப்பயணத்திற்கு காமராசர் சென்ற போது அவருடன் நானும் அழகிரியும் சென்றோம். அன்றிரவு தங்கும் விடுதியில் தலைவர் காமராசர் எங்களை அழைத்துப் பேசினார். தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவராக என்னை நியமிப்பதற்கு தலைவர் காமராசர் விரும்பிய போது அதை ஏற்கத் தயங்கினேன். வெளியில் வந்த பிறகு நண்பர் அழகிரிக்கு பெரும் ஆதங்கம். தலைவர் கூறியதை உடனடியாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறினார். அவருடைய அந்த ஆதங்கம் நீண்ட நாட்கள் நீடித்தது.
தலைவர் காமராசரின் மறைவு எங்களை இடி போல தாக்கியது. நடுக்கடலில் மாலுமியை இழந்த கப்பல் போல நாங்கள் தடுமாறினோம். கடைசிக் காலத்தில் காமராசர் இரு காங்கிரசையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அவரது விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் நாங்கள் அன்னை இந்திராவின் தலை மையிலிருந்த காங்கிரசில் இணைந்தோம்.
1978-ஆம் ஆண்டில் அன்னை இந்திரா காந்தி அவர்கள் மதுரைக்கு வந்த போது கருப்புக் கொடிக் காட்டுவது என்ற பெயரில்
தி. மு. க. வினர் அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினார்கள். அன்னை இந்திராவை காக்கும் முயற்சியில் நான் பலத்த காயமடைந்தேன். நண்பர் அழகிரி துடித்துப் போனார். 1979-ஆம் ஆண்டு தி. மு. க. வுடன் கூட்டு சேர அன்னை இந்திரா முடிவு செய்த போது அதை ஏற்பதற்கு எங்கள் மனம் ஒப்பவில்லை. தமிழ்நாடு காங்கிரசுத் தொண்டர்களின் மனநிலையை மதிக்காமல் இந்திரா காந்தி அவர்கள் எடுத்த முடிவின் விளைவாக தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சியின் எதிர்காலம் இருள் சூழ்ந்துவிடும் என எச்சரித்தோம். செல்வாக்கற்றுப் போன தி. மு. கழகத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டாமென வேண்டிக் கொண்டோம். அதை இந்திரா ஏற்காத காரணத்தினால் நாங்கள் காங்கிரசிலிருந்து விலகி தமிழ்நாடு காமராஜ் காங்கிரசு என்ற பெயரில் புதியக் கட்சியைத் தொடங்கினோம். நண்பர் அழகிரி அதன் உருவாக்கத்தில் எனக்கு பெருந்துணையாக இருந்தார்.
1980-ஆம் ஆண்டில் அ. தி. மு. க. வுடன் கூட்டுச் சேர்ந்து நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். மதுரை மத்தியத் தொகுதியில் நானும், நத்தம் தொகுதியில் அழகிரியும் நின்றோம். நான் வெற்றிப் பெற்றேன். ஆனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நண்பர் அழகிரி வெற்றி வாய்ப்பை இழந்தார். அழகிரியின் தோல்வி என்னை வாட்டியது. ஆனாலும் அவரோ தனது தோல்வியைக் கூட பொருட்படுத்தாமல் எனது வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். அந்தப் பேருள்ளம் அவருக்கு எப்போதும் இருந்தது.
1983-ஆம் ஆண்டு சூலை மாதத்தில் கொழும்புவில் தமிழர்களுக்கு எதிராக பெரும் இனக்கலவரம் நடைபெற்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடுமை கண்டு தமிழகம் கொதித்தது. அப்போது நானும் அழகிரியும் மற்ற தோழர்களும் உட்கார்ந்து பேசி தமிழர் தியாகப் பயணம் ஒன்றை நடத்துவது என முடிவு செய்தோம். மதுரையிலிருந்து இராமேசுவரம் வரை வழி நெடுக பிரச்சாரம் செய்து கொண்டே செல்வது என்றும், இராமேசுவரத்தில் படகுகளில் ஏறி இலங்கையை நோக்கிச் செல்வது எனவும் முடிவெடுத்தோம். இதற்கு "தமிழர் தியாகப் பயணம்' என்ற பெயரைச் சூட்டினோம். நாங்களே சற்றும் எதிர்பாராத வகையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். அவ்வளவு பேருக்கும் வழி நெடுக உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்ய வேண்டும். வறண்ட பகுதியான இராமநாதபுரம் மாவட்ட மக்கள் அதைச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தபோது தோழர் அழகிரி எதைப் பற்றியும் கவலை கொள்ளாது நடைப் பயணத்திற்கு தலைமை தாங்கிச் செல்லுமாறும் மற்றவற்றை தான் பார்த்துக் கொள்வதாகவும் உறுதி அளித்தார். அதன்படியே நிதி திரட்டி வசதி இல்லாத கிராமங்களுக்கு அளித்து, எங்களுடைய உணவு மற்றும் பிற தேவைகளை நிறைவு செய்தார். தியாகப் பயணத்தை வெளியிலிருந்து வழி நடத்தியவர் அவரே என்று சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல, நடைப் பயணம் செல்லும் தொண்டர்கள் பாடுவதற்காக வழிநடைப் பாடல் ஒன்றையும் எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடலை பாடியவாறே தொண்டர்கள் நடந்து வந்த காட்சி மறக்க முடியாத காட்சியாகும்.
1984-ஆம் ஆண்டில் இயக்கத் தோழர்களுக்கு பயிற்சி அளிக்க தனியான தொரு இடம் தேவையென பிரபாகரன் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அது குறித்து நண்பர் அழகிரியுடன் நான் கலந்தாலோசித்தபோது சிறுமலையில் உள்ள தனது தோட்டத்தையே கொடுக்க அவர் முன் வந்தார். அங்கேதான் பிரபாகரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் பயிற்சி பெற்றுத் தாயகம் திரும்பி களத்தில் இறங்கிப் போராடினார்கள். நண்பர் அழகிரிக்கு பிரபாகரன் மிகுந்த நன்றியைத் தெரிவித்தார்.

alagir-veeramani
தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதரவு திரட்டியதில் பெரும் பங்கு வகித்த அவர் வெளிநாடுகளுக்கும் சென்று புலிகளுக்கு ஆதரவு திரட்டினார். தன்னுடைய சொல்லாற்றலையும் செயலாற்றலையும் முழுவதுமாக அதற்கே பயன்படுத்தினார். அவரை பின்பற்றி அவருடைய மகன் மருத்துவர். தாயப்பன் அவர்களும் வெளிநாடு சென்று ஈழ விடுதலைக்கு ஆதரவு திரட்டியதைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டவர் அவர்.
1984-ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துக் கொள்ள இருவரும் சென்றிருந்தோம். திருமண வீட்டிற்குச் சென்று வந்து பிற்பகலில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். நண்பர் அழகிரி அவசரம் அவசரமாக தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு விழித்தேன். கண்ணீரும் கம்பலையுமாக அழகிரி பேசினார். அன்னை இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார். இருவரும் உடனடியாக சென்னை புறப்பட்டோம். அதற்குள் இந்தச் செய்திப் பரவி தமிழகமெங்கும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தார்கள். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு வழி நெடுக சாலைத் தடைகளை ஏற்படுத்தினார்கள். எங்கள் வண்டி முன்னேற முடியாமல் தவித்தது. ஒவ்வொரு முறையும் அழகிரி கீழிறங்கிப் போய் அந்த ஊர் மக்களிடம் வண்டியில் இருப்பது இன்னார் என்பதை தெரிவித்தபோது உடனடியாக தடைகளை மக்கள் நீக்கியதோடு எனது காரை சூழ்ந்து கொண்டு அழுது புலம்பினார்கள். இப்படியாக சென்னை வந்து சேர்ந்தோம். விமானப் பயணச் சீட்டு ஒருவருக்கு மட்டுமே கிடைத்தது. நண்பர் அழகிரியை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் நான் தவித்தேன். அதைக் கண்ட அவர் "நான் டில்லி வருவது அவசியமில்லை. ஆனால் நீங்கள் கட்டாயமாகச் செல்ல வேண்டும்.'' என்று வற்புறுத்தி என்னை அனுப்பி வைத்தார்.
1985-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களால் அனுப்பப்பட்டு ஈழத்தில் இரகசிய சுற்றுப்பயணம் செய்தேன். நான் மீண்டும் வந்தபோது நண்பர் அழகிரி என்னைக் கட்டியணைத்துக் கண்ணீர் பெருக்கினார். நான் பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் என்பதற்காக பழநி முருகனிடம் வேண்டியிருப்பதாகவும் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்ற தன்னுடன் வர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி என்னை அழைத்துச் சென்று அந்த நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்தார். என் மீது அவர் கொண்டிருந்த அன்பு அளப்பரியதாகும்.
1987-ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தியினால் இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு புலிகள் இயக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இனிமேல் காங்கிரசு என்ற பெயரே வேண்டாம் என்று முடிவு செய்து எங்கள் கட்சியின் பெயரை தமிழர் தேசிய இயக்கம் என்று மாற்றினோம். இந்தப் பெயர் மாற்றத்திலும் அழகிரிக்கு முக்கியப் பங்கு உண்டு.
2002-ஆம் ஆண்டு பொடாச் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அது குறித்து நான் கவலைப்படவில்லை. சிறைவாசம் எனக்குப் புதிதல்ல. ஆனால் நான் பேசிய கூட்டத்தில் தொகுப்புரை வழங்கினார் என்பதற்காக நண்பர் அழகிரியின் மகன் மருத்துவர். தாயப்பன் அவர்களையும் பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்தது எனக்கு அளவற்ற வேதனையை அளித்தது. நீதிமன்ற வாய்தாவுக்காக நான் வந்தபோது நண்பர் அழகிரியிடம் எனது வேதனையை வெளிப்படுத்தினேன். ஆனால் அவரோ தனது மகன் கைது செய்யப்பட்டதைக் குறித்து கவலைப்படாமல் என்னைத் தேற்றுவதில் ஈடுபட்டார். "நான்தான் உங்களுடன் சிறைக்கு வர முடியவில்லை. எனது மகன் வந்ததைக் குறித்துப் பெருமைப் படுகிறேன்'' என்று கூறுகிற பேருள்ளம் அவருக்கு இருந்தது.

alagiri-kasi
படிக்கும் போது ஆகட்டும், அரசியலில் ஈடுபாடு கொள்ளும் போதும் ஆகட்டும், நான் மேற்கொண்ட செயற்பாடுகள் அத்தனையிலும் முக்கிய பங்கு அவருக்கு இருந்தது. ஆனால் ஒருபோதும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. என்னை முன்னிறுத்தி எனது நிழலாகவே அவர் செயற்பட்டார்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
"நட்புக்குச் சிறந்த நிலை எதுவென்றால் எப்போதும் வேறுபடுதல் இல்லாமல் துணை நின்று தாங்குவதேயாகும்' என வள்ளுவப் பெருந்தகை கூறிய குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் நண்பர் அழகிரிசாமி ஆவார். அவரின் திடீர் மறைவு என் உள்ளத்தில் வேதனையை ஆழமாகப் பதித்து விட்டது.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.