சர்வாதிகார நாடாகும் இலங்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2013 15:05

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு அளிக்கப்படும் எனவும், தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் எனவும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் சொன்ன வார்த்தைகளின் சூடுகூட இன்னும்தணியவில்லை. அதற்கிடையில், தமிழ் மக்களுக்கு எதுவுமே இனிமேல்

இல்லையென்று சொல்லும் அளவிற்கு இலங்கையின் புதிய சட்டங்கள் அமையப் போகின்றன.
தமிழீழ தேசத்திற்கான தமிழ் மக்களின் கனவை, அதற்காக அந்த மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களையும் புறம்தள்ளி இலங்கையுடன் இணைந்து சர்வதேசம் அதனைச் சிதைத்து அழித்தது. ஒரு நாட்டிற்கு இணையாக அனைத்து கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த தமிழ் மக்களின் நிழல் அரசாங்கமாக இருந்த தமிழீழ அரசாங்கம் அழிக்கப்பட்டது.
பட்டு வேட்டிக்கு ஆசைப்பட கட்டியிருந்த கோவணமும் பறிபோன நிலைக்கு தமிழ் மக்களைக் கொண்டுவந்துவிட்டது இலங்கையுடன் இணைந்ததான சர்வதேசத்தின் இந்த நடவடிக்கை, எதுவுமற்று ஒரு நிர்வாண நிலைக்கு வந்துள்ள மக்களை இப்போது நடைப்பிணமாக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது இலங்கையின் புதிய சட்டத்திருத்த மூலம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கொண்டு வந்ததன் பின்னரேயே தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கான பல்வேறு புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. அன்றைக்கு நடைமுறைக்கு வந்த அவசரகாலச் சட்டம் கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றுவரை தொடர்கின்றது. இந்த அவசரகாலச் சட்டத்தால் அழிந்துபோன தமிழர்கள் பல ஆயிரம். இன்றும் இதே அவசர காலச்சட்டத்தால் வெளியே வரமுடியாமல் சிறை வைக்கப்பட்டுள்ளவர்களும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும், காணாமல் போய்க் கொண்டிருப்பவர்களும் எண்ணிக்கையில் அடங்காதவர்கள். கடந்த வாரமும் நாடாளுமன்றத்தில் வாக்களிப்பின்றியே அவசரகாலச் சட்டத்தை நீடித்திருக்கின்றது இலங்கை அரசு.
இப்போது புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள 18வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ் பேசும் மக்கள் இன்னொரு மெளனப் படுகொலைகளுக்குள் தள்ளப்பட்டு அழிக்கப்படப்போகின்றார்கள் என்பது மட்டும் உண்மை. எதனையும் தட்டிக்கேட்கும் உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள், இப்புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் அவலங்களும், சவால்களும் பெரிதாக இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.
ஒற்றையாட்சிக்குள் வரப்போகும் ஒரு சர்வாதிகார நாடாகவே இலங்கை இருக்கப்போகின்றது. ஒற்றையாட்சி என்பது சர்வாதிகார ஆட்சி என்பதற்கு வரலாறுகள் பல நாடுகளை உதாரணமாக விட்டு வைத்துள்ளன. இன்றும் ஒற்றையாட்சியில் இயங்கிக்கொண்டிருக்கும் நாடுகளை உற்றுநோக்கினால் உள்ளுக்குள் நடக்கும் சர்வாதிகாரங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் எதிர்க்கட்சி எதுவுமற்ற மகிந்த குடும்பத்தின் நிரந்தர ஆட்சிக்குள் கொண்டு வரப்போகும் இலங்கையில், இந்த புதிய சட்ட நடைமுறை தமிழ் மக்களுக்கான எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்கும் என்பது உறுதி.
தமிழ் மக்களுக்கு நீதியான தீர்ப்பொன்று விடுதலைப் பு­கள் அழிக்கப்பட்டுவிட்டால் கிடைத்துவிடும் என்று கருத்து வெளியிட்ட, இலங்கைக்கு ஆதரவு வழங்கிய இந்த உலக நாடுகள் இப்போது சர்வாதிகார நாடாக மாறும் இலங்கையிடம் இருந்து எவ்வாறான நீதியைப் பெற்றுத் தந்துவிடப் போகின்றார்கள் என்பதே இன்றுள்ள பிரதான கேள்வியாகவுள்ளது.
ஏனெனில், தமிழ் மக்களுக்கு பாதுகாப்புக் கவசங்களாக இருந்த விடுதலைப் பு­களை அழிப்பதற்கு உதவியதன் மூலம் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை இல்லாமல் செய்துள்ள இவர்களே இப்போது அந்த மக்களுக்கான பாதுகாப்பையும், நீதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பிற்கு உரியவர்கள்
நன்றி : ஈழமுரசு

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.