கவிதை : பாருக்குள்ளே நல்ல நாடு - கவிக்கோ அப்துல் ரகுமான் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:29

அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
"என்ன குற்றம் செய்தீர்கள்? "
என்று கேட்டேன்
ஒவ்வொருவராகச் சொன்னார்கள் :

"எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான். "திருடன், திருடன்"
என்று கத்தினேன். அமைதிக்குப்
பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்துவிட்டார்கள்."
"என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.
பிரிவினைவாதி என்று பிடித்துக்கொண்டு வந்து
விட்டார்கள். "
"அதிகாரி லஞ்சம் வாங்கினான், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்யவிடாமல் தடுத்ததாகத் தண்டித்துவிட்டார்கள். "
"அலிபாபாவும் நாற்பது திருடர்களும்ீ படச்
சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக்கொண்டு வந்து
விட்டார்கள். "
"சுதந்திர தின விழாவில் 'ஜன கண மண' பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க
முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்து விட்டார்கள். "

எப்போதோ கவிக்கோ எழுதிய கவிதை
இப்போது பொடாவில் பொருந்துகின்றது

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.