தலையங்கம் : பொடாவைப் புறங்காண்போம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:34
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act – POTA) என்னும் கொடிய புதிய சட்டம் 26-05-2002 அன்று, நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற மேலவையின் கூட்டுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, ஓரிரு நாட்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று நடைமுறைக்கு வந்துவிட்டது. அச்சட்டத்திற்குத் தமிழகத்திலும் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.

வெள்ளைக்காரர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட ரெளலட்-சாஸ்திரி சட்டமும், பிறகு இந்திய அரசு கொண்டு வந்த டி.ஐ.ஆர்., தடா ஆகிய சட்டங்களும், இந்தப் பொடா சட்டத்தின் முற்பிறவிகள் என்று கூறலாம்.

தடா சட்டம் 1985 முதல் 10 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. ஏறத்தாழ 70,000 பேர் அந்தச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டனர். குசராத்தில் மட்டும் 19,000 பேர் கைது. அவர்களுள் 16,000 பேர் தொழிலாளர்கள். அன்று குசராத்தில் தொழிலாளர்கள் பயங்கரவாதிகளாகத் தெரிந்தனர். இன்று தமிழகத்தில் தமிழின உணர்வாளர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளாகத் தெரிகின்றனர்.

தடாவில் கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்கள் மீது மட்டுமே, நீதிமன்றத்தில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டது. இது, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 2 விழுக்காட்டிற்கும் குறைவானது.

பழைய தடாவின் கதை இது. இப்போது புதிய பொடா புறப்பட்டுள்ளது.

பொடா சட்டத்தின் கீழ் பாபர் கால்சா இண்டர்நேசனல் என்னும் அமைப்புத் தொடங்கி, தீன்தார் அஞ்சுமன் என்னும் அமைப்பு ஈறாக மொத்தம் 23 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 21-ஆவது இடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தைத் தவிர மற்ற அனைத்தும், இந்தியாவில் இயங்கும் அமைப்புகள். விடுதலைப்புலிகள் மட்டுமே வெளிநாட்டில் இயங்குபவர்கள். இன்னொரு செய்தியும் இங்கு எண்ணத்தக்கதாக உள்ளது. மற்ற 22 அமைப்புகளும் இப்போது தான் தடை செய்யப்படுகின்றன. புலிகள் இயக்கமோ, சட்டப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 (Unlawful Activities Prevention Act - 1967) - இன் கீழ், 1992, மே 14-ஆம் தேதியே தடை செய்யப்பட்டுவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தடை நீட்டிக்கப்பட்டு, இன்று வரை அத்தடை நடைமுறையில் உள்ளது. எனவே, ஏற்கனவே தடை செய்யப்பட்டுவிட்ட அமைப்பை மீண்டும் தடை செய்வது ஏன் என்பதும், ஒரே அமைப்பை இரண்டு சட்டங்களின் கீழ்த் தடை செய்யவேண்டிய தேவை என்ன என்பதும் புதிராக உள்ளன.

ஓர் இயக்கத்தைத் தடை செய்வதற்கான நீதிமன்ற வரைமுறைகள் பொடா சட்டத்தில் மிக எளிதாக ஆக்கப்பட்டிருக்கின்றன. பழைய சட்டங்களின் கீழ் ஓர் அமைப்பைத் தடை செய்வதற்கு நீதிமன்ற ஆணை தேவை என்பதோடு மட்டுமல்லாமல், அதை ஒரு குழு ஏற்பளித்தப் பின்பே (subject to the approval) அந்தத் தடை நடைமுறைக்கு வரும். ஆனால் பொடா சட்டத்தின் கீழ் அரசு இயந்திரமே அதனைச் செய்துவிட முடியும் என்பதும், அந்தத் தடையை ஏற்பதற்காக அல்லாமல் ஆராய்வதற்காக மட்டுமே (subject to the review) ஒரு குழு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அரசு ஓர் இயக்கத்திற்குத் தடை விதித்து அறிவிக்கும் அந்த நிமிடமே அது நடைமுறைக்கு வந்து விடுகிறது. இந்த நடைமுறை இயக்கங்களுக்கான அடிப்படை நியாயத்தையும், சட்ட நீதியையும் மறுப்பதாக உள்ளது.

இந்தச் சட்டம் எத்தனை கொடூரமானது என்பதற்கு இச்சட்டத்தில் உள்ள பல பிரிவுகளை எடுத்துக்காட்டலாம். எனினும் ஒன்றை மட்டும் இங்குப் பார்க்கலாம்.

இச்சட்டத்தின் 21(4)-ஆம் பிரிவு கூட்டம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது. இதோ அவ்விளக்கம். “...meeting means, a meeting of 3 or more persons whether or not the public are admitted” அதாவது, பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்களோ இல்லையோ, ஓரிடத்தில் 3 பேரோ, அல்லது அதற்கு கூடுதலானவர்களோ சேர்ந்து பேசிக்கொண்டிருந்தால் அது கூட்டம் என்றழைக்கப்படும். ஆக, ஒரு தனி வீடு அல்லது அறையில் 3 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் கூட, அவர்கள் ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் என்று குற்றம் சாட்டி அவர்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்துவிடலாம்.

இப்படிப்பட்ட பலப் பகுதிகளைக் கொண்டுள்ள பொடா சட்டம் மனித உரிமைக்கு எதிரானது. தமிழ் மொழி, இன உணர்வை அறவே அழித்து விடுவதற்கு இன எதிரிகள் இதனை எளிதில் பயன்படுத்த முடியும்.எனவே இச்சட்டத்தை எதிர்க்க வேண்டிய, எதிர்த்து விரட்ட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.