நீதிக்கான நெடிய போராட்டம் - என். சந்திரசேகரன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 மார்ச் 2014 12:10

உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அதிர்ச்சித் தரத்தக்க தீர்ப்பு ஒன்றினை தடா சிறப்பு நீதிமன்றம் 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி அளித்தது. அதாவது இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை கேள்விப்பட்ட சர்வதேச மன்னிப்புச் சபை இதை நீதிமன்றப் படுகொலை என வருணித்தது.

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இதைக் கண்டு மிரளவில்லை. மாறாக தீர்ப்பு வந்த 10 நாட்களில்கூடி 26 தமிழர்கள் உயிர்காப்புக் குழு ஒன்றை அமைத்தார்கள். இக்குழுவிற்கு தலைவராக பழ. நெடுமாறனும், துணைத் தலைவர்களாக கரூர் பி.ஆர். குப்புசாமி, கார்முகில், ச. மெல்கியோர், ப.சண்முகசுந்தரம், ஆனூர் ஜெகதீசன், நாத்திகம் பி. இராமசாமி, நெல்லிக்குப்பம் வி. கிருஷ்ணமூர்த்தி, புதுவை அழகிரி, நாமக்கல் என்.பி. இராமசாமி ஆகியோரும் செயலாளர்களாக பெ. மணியரசன், தியாகு, பேரா. கல்யாணி ஆகியோரும் பொருளாளராக முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்களும் தேர்ந் தெடுக்கப்பட்டார்கள்.

தமிழ்த்தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட பேரவை ஒன்றும் அமைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்காக மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் வேண்டிக்கொள்ளப்பட்டார். அவருக்குத் துணையாக வழக்கறிஞர்கள் என். சந்திரசேகரன், எஸ். துரைசாமி, இராமதாசு, ஜெயசீலன், இளங்கோ, கோபி, மோகன், பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். இக்குழுவினர் உச்சநீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச்சென்றனர். அதற்காக தில்லியிலேயே தங்கினார்கள்.

1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி 26 தமிழர்களின் தூக்குத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கிட்டத்தட்ட 16 மாத காலம் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. 26 தமிழர்களின் உயிர்காப்புக் குழுவின் சார்பில் அதன் நிர்வாகிகள் மாறி மாறி தில்லி சென்று வழக்கின் போக்கை அறிந்தனர்.

1999ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்களின் வாதத் திறமையின் விளைவாக தடாச் சட்டத்தின் கீழ் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டது செல்லாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது.

19 தமிழர்களைக் குற்ற மற்றவர்கள் என விடுதலை செய்தது. மூன்று தமிழர்களின் மரண தண்டனை ஆயுள் தண் டனையாகக் குறைக்கப்பட்டது. நால்வருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இந்த நான்கு தமிழர்களின் சீராய்வுமனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் 26 தமிழர்களின் மரண தண்டனைக்கு எதிராக மக்களைத் திரட்டும் பணியில் குழு ஈடுபட்டது.

07-02-1999 அன்று புதுவையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு.

07-03-1999 மதுரையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு.

30-11-99 அன்று சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேல் திரண்ட மரண தண்டனை ஒழிப்புப் பேரணி நடத்தப்பட்டது.

பல ஊர்களில் கருத்தரங்குகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானவுடன் விடுதலை செய்யப்பட்ட 19 தமிழர்களை உடன் அழைத்துக்கொண்டு குழுவின் நிர்வாகிகள் பழ. நெடுமாறன் தலைமையில் மரண தண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தை 1999ஆம் ஆண்டு சூன் மாதம் 22ஆம் தேதி தொடங்கினார்கள். ஆனால் அன்றைய தினமே அதற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது.

எனவே, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் சந்துரு அவர்கள் வாதாடி தடையைத் தகர்த்தெறியும் தீர்ப்பினைப் பெற்றுத் தந்தார். எனவே சூலை 28ஆம் தேதி மீண்டும் பிரச்சாரப் பயணம் தொடங்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வெற்றிகரமாக பரப்புரை செய்யப்பட்டது.

ஆளுநரிடம் கருணை மனு

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களும் ஆளுநர் பாத்திமா பீவி அவர்களுக்கு கருணை மனு அளித்தனர். ஆனால், அவர் 10 நாட்களில் 27-10-1999 அன்று இம்மனுக்களை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார். எனவே அவரின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நால்வருக்காக மூத்த வழக்கறிஞர் சந்துரு வாதாடி வெற்றி தேடித் தந்தார். ஆளுநரின் ஆணை செல்லாது என்ற தீர்ப்பினை மட்டுமல்ல, கருணை மனுக்கள் மீது ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சரவைகள் கூடி அளிக்கிற பரிந்துரையை மட்டுமே ஏற்று ஆளுநர்களோ குடியரசுத் தலைவரோ ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் ஏறத்தாழ 49 ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழக்கத்திற்கு இத்தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமைச்சரவைகளுக்கு அதிகாரம் பெற்றுத் தரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தந்த பிறகும் நளினிக்கு மட்டும் தண்டனையைக் குறைத்தார்.

19-04-2000 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் "நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும் மற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களது கருணை மனுக்களை ஏற்க மறுக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

டில்லிப் பயணம்

மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க வேண்டும் என பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் வேண்டிக்கொள்வதற்காக குழுவைச் சேர்ந்த பழ.நெடுமாறன், பெ. மணியரசன், கார்முகில், தியாகு ஆகியோர் டில்லி சென்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் உதவியோடு பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், சட்டத்துறை அமைச்சர் ராம்ஜெத்மலானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் உள்ளிட்ட பலரையும் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களைத் திரட்டுதல்

மீண்டும் மக்களைத் திரட்டும் பணி தொடங்கப்பட்டது.

05-01-2000 சென்னையில் மரண தண்டனை ஒழிப்பு மாணவர் மாநாடு.

11-01-2000 சென்னையிலும் தமிழகமெங்கும் மனிதச் சங்கிலி

01-04-2000 திருச்செந்தூர் பேரணி

08-04-2000 இராணிப்பேட்டை மாநாடு

28-04-2000ஆம் அன்று குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசினால் அனுப்பப்பட்டிருந்த கருணை மனுக்களின் மீது 11 ஆண்டு காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் 12-08-2011 அன்று குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை ஏற்க மறுத்து ஆணை பிறப்பித்தார்

மூன்று தமிழர் உயிர்காப்புக் குழு

18-08-11 அன்று தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட 40 பேர் கூடி மூன்று தமிழர் உயிர் காப்புக் குழு ஒன்றினை அமைத்தனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பழ. நெடுமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

22-08-11 அன்று மூவரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் திரள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

செங்கொடி உயிர்த் தியாகம்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடி என்னும் இளம்பெண் மூன்று தமிழர்களுக்காகத் தீக்குளித்து தன் உயிரைத் தியாகம் செய்தார்.

30-08-11 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மூன்று தமிழர்களின் மரண தண்டனைக்கு தடைவிதிக்க வேண்டும் என வைகோ அவர்களின் ஏற்பாட்டின்படி மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதமிட்டார். உயர்நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு 8 வார காலம் தடைவிதித்தது.

22-09-11 மூவர் விடுதலை தொடர்பாக தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தை நல்லகண்ணு, பழ.நெடுமாறன் தொடங்கிவைத்தனர்.

01-11-11 மூன்று தமிழர்களுக்காக சென்னையில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை வைகோ தொடக்கி வைத்தார். தா. பாண்டியன் முடித்து வைத்தார்.

08-11-11 மூவருக்காக ஓவியர் சந்தானம் தலைமையில் ஓவியர்களும் எழுத்தாளர்களும் ஈடுபட்ட உண்ணாநிைைலப் போராட்டத்தை பழ. நெடுமாறன் தொடக்கி வைத்தார்.

10-11-11 மூவருக்காக விழியிழந்தவர்களின் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது.

29-11-11 மரண தண்டனை குறித்த இயக்குநர் சேரன் அவர்களின் குறும்படம் வெளியிடப்பட்டது.

26-11-11 குடந்தையில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

27-11-11 செங்கொடி நினைவு இல்லத் திறப்பு விழா.

14-12-11 மூவர் மரண தண்டனையைக் குறைக்க இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் நிஜாமுதின் தலைமையில் உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கருணை மனு

28-04-11 மூவர் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பியது.

12-08-2011 மூவர் கருணை மனுக்களை ஏற்க மறுத்து குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார்.

19-02-11 மூவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவரை வேண்டிக்கொள்ளும் தீர்மானம் தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டுகாலமாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

18-02-14 உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. குற்றவிசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433ஏ பிரிவுகளின்படி தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் ஆகியன அரசு நடவடிக்கைகளுக்கு உட்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

19-02-14 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 23 ஆண்டு காலமாக சிறையில் இருந்துவரும் மூவரையும் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்று சிறையில் இருக்கும் நால்வரையும் குற்றவிசாரணை முறைச் சட்டம் 432ன்கீழ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 435ன்படி தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே இதற்கிணங்க தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் குற்ற விசாரணைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் இந்த 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.

ராகுல் எதிர்ப்பு

தமிழக அரசு எடுத்த முடிவு தனக்கு வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் புதன்கிழமை அறிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானபோது எவ்விதமான கருத்தையும் வெளியிடாமல் இருந்த மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர்களும் ராகுல் காந்தியின் அறிவிப்புக்குப் பிறகு கூப்பாடுபோடத் தொடங்கினார்கள்.

மத்திய அரசும் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடைவிதிக்க வேண்டும் என 20-2-14 அன்று முறையிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் தடை தர மறுத்துவிட்டது. தமிழக அரசுக்கும் மூன்று தமிழர்களுக்கும் முன்னறிவிப்பு அனுப்பி அவர்களின் பதிலைப் பெறுவதற்காக இரண்டு வார காலத்திற்கு இப்போது இருக்கும் நிலையே நீடிக்கும் என ஆணையிட்டது.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.