நீதித் துறையின் குழப்பம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 மார்ச் 2014 12:21

மரண தண்டனை விதிப்பதற்குரிய வழக்குகள் அல்லது குற்றங்கள் எவை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக இதுவரை வரையறுத்ததில்லை. ஒடிசாவில் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும் அவருடைய இரண்டு சிறு குழந்தைகளையும் எரித்துக் கொன்ற ரவீந்திர பாலுக்கு ஆயுள் தண்டனைதான் வழங்கப்பட்டது. மதமாற்ற நடவடிக்கைகளில் ஸ்டெயின்ஸ் ஈடுபட்டதால், நடந்த கொலை என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது.

மரண தண்டனை விதிப்பதில் நிலையான வரைமுறையை உச்ச நீதிமன்றம் கடைப்பிடித்ததே இல்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி அஜீத் ஷா உள்ளிட்டவர்கள் வாதிட்டுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், முன்னுதாரணம் எது என்பதைப் புரிந்துகொள்வதிலும் தவறுகள் இருந்துள்ளன.

நீதித் துறையின் இந்தக் குழப்பம், மிகப் பெரிய சமூகப் பிரச்சினையைத் திரையிட்டு மூடி மறைத்துவிட்டது அதாவது, மரண தண்டனை குறித்து தேசிய அளவில் பொது விவாதம் நடைபெறவேயில்லை என்பதுதான் அது.

சமூக அறிவியலால் இந்த விவாதத்துக்குத் தீர்வு காண முடியாது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மரண தண்டனையால் கொலைக் குற்றங்கள் குறைகின்றனவா அதிகரிக்கின்றனவா, அல்லது எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லையா என்று கணிக்கவே முடிவதில்லை என்று அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி’ சில ஆய்வுகளை மேற்கொண்டு, கருத்துத் தெரிவித்துள்ளது.

இதற்குச் சமூக அறிவியல் ஆய்வில் காணப்படும் குறைபாடுகளே காரணம். மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட பிறகு, அவர்களுடைய குணநலன்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய, ஒரே விதமான இருவேறு குற்ற சமூகக் குழுக்களை அருகிலிருந்து கவனித்துவர வேண்டும்.

ஆனால், நாம் ஆராய்ந்தவரையில் ஒன்று நிச்சயம், மரண தண்டனைக்கும் வன்முறை சார்ந்த குற்றச் செயல்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அதாவது, தண்டனை கடுமையாக இருப்பதால், அவ்வகைக் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று காட்ட எதுவுமில்லை.

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள வெவ்வேறு மாகாணங்களில் குற்றச் செயல்களையும் அவற்றுக்குத் தரப்படும் வெவ்வேறுவித தண்டனைகளையும் கணக்கிலெடுத்து ஒப்பிட்டு நோக்கினால், தண்டனைகள் எப்படியாக இருந்தாலும், குற்றச் செயல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன என்பது புலனாகிறது.

இதிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது - மரண தண்டனைகள், கொலைக் குற்றவாளிகளை எந்த விதத்திலும் அச்சுறுத்துவதில்லை.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகளில், மரண தண்டனைகள் அவசியம் விதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணங்களிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். நாஜி போர்க் கைதி அடால்ஃப் ஈச்மேன் என்பவரை 1962-ல் தூக்கில் போட்டதற்குப் பிறகு, இஸ்ரேல் அரசு யாரையும் மரண தண்டனைக்கு உள்ளாக்கியதில்லை. 1948-ல் தேசத் துரோக வழக்கில் மெய்ர் தோபியான்ஸ்கி என்ற ராணுவ வீரரை மரண தண்டனைக்கு உள்ளாக்கியது இஸ்ரேல். ஓராண்டு கழித்து அவர் நிரபராதி என்று தெரியவந்தது!
ஒவ்வொரு சமூகமும் மரண தண்டனைகள் விஷயத்தில் வெவ்வேறு விதமான வழிகளைக் கையாள்கின்றன. ரஷ்யாவில் மரண தண்டனைகளுக்குத் தடை இருக்கிறது. ஜப்பானும் அந்த வழியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ள அதே வேளையில், 58 நாடுகள் மரண தண்டனை வேண்டும் என்று வைத்திருக்கின்றன. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளில் மரண தண்டனை இன்னமும் சட்டப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதனாலேயே மரண தண்டனை நியாயமானது என்று கூறிவிட முடியாது.

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம், மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்ற கொள்கை முடிவு எடுப்பதில் தங்கள் செல்வாக்கைச் செலுத்திவிடக் கூடாது என்கிறது அறிவியல் அகாடமி.

அறம் சார்ந்த கேள்விகள்

1939 முதல் அமெரிக்காவில் 143 கைதிகள் தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - அவர்களுடைய வழக்கில் அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிப்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்ததால். அதே சமயம், தவறான சாட்சிகள், விசாரணைகள் அடிப்படையில் 10 அப்பாவிகள் மரணமும் அடைந்துள்ளனர்.

எனவே, இந்த விவாதம் சமூக அறிவியல் கருதுகோள்கள் தொடர்பானவை அல்ல. மரபியல் விஞ்ஞானம் வளரவளர, தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிய கைதிகளின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டே வருகிறது. குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப் பட்டவர்கள் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதையே கூடுதல் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. இந்தியாவைவிட, குற்றவியல் வழக்கு நடைமுறைகள் அங்கு பலமாக இருப்பதால் இது சாத்தியமாகிறது.

சில வழக்குகளில் குற்றவாளி யார், அவர் செய்த குற்றம் என்ன என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டதாகவே தோன்றும். உதாரணங்கள் - மும்பையில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்ற பாகிஸ்தானிய பயங்கரவாதி கஸாப் மற்றும் டெல்லி மருத்துவ மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள்.

இருந்தாலும், நமக்குத் தெரியும் எந்த சாட்சியமுமே குற்றங்குறை இல்லாதது என்று கூறிவிட முடியாது. கண்ணால் கண்ட சாட்சியத்தின் பேரிலேயே பல வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்படுகின்றன ஆனால், கண்ணால் பார்ப்பதும் பொய் என்று நம்முடைய உள்மனங்களுக்குத் தெரியும். நம்முடைய மூளை நம்மைத் தொடர்ந்து ஏமாற்றும் என்று தடயவியல் துறை உளவியல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள்.
வயது, நிறம், குற்றம் நிகழ்ந்த இடத்தில் நிலவிய வெளிச்சம் உள்பட பல விஷயங்கள் தவறான புரிதலுக்கும் சாட்சியத்துக்கும் வழி வகுத்துவிடும் என்று தடயவியல் துறை நிபுணர்கள் கேரி வெல்ஸ், எலிசபெத் ஆல்சன் தெரிவிக்கின்றனர். இரட்டைக் குருடு சோதனை என்பது, கண்ணால் பார்த்த சாட்சியங்களின் ஆய்வுகளில் பயன் படுத்தப்படுவதே இல்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு விதமான நீதி வழங்கலும் ஒரு தவறைச் சரி செய்வதற்காகவே என்பதை உணர வேண்டும்.

குற்றவாளியைக் கொல்லக் கூடாது என்று சொல்வதிலும் தார்மிகரீதியாகத் தவறு இல்லாமல் இல்லை. தூக்கில் போடப்படுகிறவரின் மனித உரிமையை நினைத்துப் பரிந்துபேசும் அதே வேளையில், கொலைகாரர்களை விடுதலை செய்து சமூகத்தில் நடமாட விடுவதால் அப்பாவிகளுக்கு ஏற்படக்கூடிய துயரங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில், 18 வயதை எட்டாதவன் என்ற காரணத்தால், சிறார் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, சிறைத் தண்டனை முடிந்து டெல்லி நகரில் நடமாடவிருக்கும் அவனை - எதிர்காலத்தில் பின்னிரவில் தன்னுடைய மகள் சந்திக்க நேர்வதை - எந்த ஆணும் அல்லது பெண்ணும் நிச்சயம் விரும்பவே மாட்டார்.

குற்றத்துக்கு ஏற்ப தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும் என்று பலர் கோருகின்றனர். தண்டனை எது என்பதைத் தன்னிச்சையாக முடிவு செய்யக் கூடாது என்று கூறப்படுவதைப் பலர் விரும்பவில்லை. சூனியக்காரர்களை உயிரோடு புதைக்க வேண்டும் என்று சில சமூகங்களில் வலியுறுத்துகிறார்கள். அவர்களை அவர்களுடைய தவறுகளிலிருந்து திருத்தப் பார்க்க வேண்டும் என்று வேறு சில சமூகத்தவர் கருதுகின்றனர். மரண தண்டனைக்கு ஆதரவாகப் பேசுவோர் கூறும் விளைவுகளை ஆயுள் தண்டனைகள் மூலமும் ஏற்படுத்த முடியும்.

திருடுகிறவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்பதை விடுத்து, கைகளை வெட்ட வேண்டும் என்று ஏன் கோருகிறோம்? கொலை செய்தவர்களைத் தூக்கில் போடுவதைவிட உயிரோடு கொளுத்திவிட வேண்டும் என்று ஏன் கேட்கிறோம்? குற்றம்செய்த ஒருவருக்கு அதிக அளவுக்கு உடல் துன்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறோம்? பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற துடிப்பில் அப்பாவிகளும் தண்டிக்கப்படும் அபாயத்தை நாம் எந்த அளவுக்கு ஏற்கத் தயாராக இருக்கிறோம்?
- நன்றி : பிரவீண் சுவாமி, "தி இந்து' பத்திரிகை 19-2-14.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.