தமிழ்த் தேசியர்களே! தோளோடு தோள் இணைவோம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2014 13:52

தமிழர் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பேரழிவு நம்மை எதிர்நோக்கி நிற்கிறது. 2009-ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழத்தின் கடற்கரையில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட நம்முடைய உடன்பிறப்புக்கள் பதைக்கப்பதைக்க படுகொலை செய்யப்பட்டார்கள். அதே கடலின் மறுகரையில் தமிழகத்தில் ஏழரைக்கோடி தமிழ் மக்கள் வாழ்ந்தும், அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாமல் பெட்டைப்புலம்பல் புலம்பி நின்றோம். சிங்களரைவிடப் பன்மடங்கு அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் கொதித்துக் கிளம்பினால் நம்முடைய நிலைமை என்னவாகும் என்ற அச்சமே கொடிய சிங்களவர்களுக்கு இல்லை. அந்த அச்சம் அவர்களுக்கு ஏற்படாததற்கு யார் காரணம்?

சிங்களருக்கு முட்டுக்கொடுத்துத் துணையாக நின்ற இந்திய அரசும், அதற்கு பக்கபலமாக நி;ன்ற திராவிட கட்சிகள் மட்டும் அல்ல இதற்குக் காரணம். தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபட்டு நிற்காததே முக்கியக் காரணம் ஆகும்.

இலங்கை என்னும் சின்னஞ்சிறிய நாட்டில் பெரும்பான்மையரான சிங்களர்கள் சிறுபான்மையரான தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டார்கள் என்ற செய்தி உலகமெல்லாம் பரவியிருக்கிறது. நாளை மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பல நூற்றாண்டுக் காலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களை அந்தந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையினரும் இதேபோல ஒடுக்குவதற்கு ஒரு தூண்டுதலாக இது அமைந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது அவர்களுக்கு மிக அருகில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களைக் காக்கவா தமிழ்நாட்டுத் தமிழர்கள் வரப்போகிறார்கள் என்ற அலட்சிய மனோபாவம் அந்நாடுகளில் உருவானால் அங்கு வாழும் தமிழர்களின் நிலை என்ன?

இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதும், அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குதலும் அந்த நாடு தன்னைத்தானே காத்துக்கொள்வதற்காக அல்ல, ஏனென்றால் இலங்கைக்கு அருகே இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் கிடையாது. இந்தியாவோ நட்பு நாடு. அப்படியானால் இந்தப் பயிற்சியும், ஆயுதங்களும் இலங்கையிலே வாழும் தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்காக என்பது நன்கு தெரிந்திருந்தும் இந்திய அரசு தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்வது ஏன்?

சார்க் நாடுகளில் ஒன்றான இலங்கைக்குப் பயிற்சியும், ஆயுதங்களும் கொடுப்பது இந்தியாவின் கடமை என நீட்டி முழங்கும் இந்திய தேசியவாதிகள் மற்றொரு சார்க் நாடான பாகிஸ்தானுக்கு அத்தகைய உதவிகளை அளிக்க மறுப்பது ஏன்? - என்பதற்கு விளக்கம் தருவது இல்லை. பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராக மட்டுமே திருப்பப்படும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கிற டில்லி அரசு இலங்கைப் பிரச்சனையில் மட்டும் அந்த நியாயத்தை எண்ணிப்பார்க்க மறுப்பது ஏன்?

தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்வாதாரம் இன்றைக்குச் சிங்கள அரசினால் சிதைக்கப்பட்டிருக்கிறது. சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து வேட்டையாடுகிறது. 600-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் தினமும் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டு கொடுமை செய்யப்படுகிறார்கள். தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான பல நூறுகோடி ரூபாய் பெறுமான படகுகளும், வலைகளும் சிங்களக் கடற்படையால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையான இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்குப் பதில் அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. காங்கிரசுக் கட்சி மட்டுமல்ல பெரும்பாலான அகில இந்தியக் கட்சிகளும் தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களின் ஓர் அங்கம் என எண்ணிப்பார்க்க மறுக்கிறார்கள். இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனக் குரல் எழுப்பத் தயங்குகிறார்கள். ஈழத் தமிழர் பிரச்சனையில் மட்டுமல்ல தமிழக மீனவர்கள் பிரச்சனையிலும் நம்மை அலட்சியம் செய்யும் போக்கு அகில இந்தியக் கட்சிகளுக்கு உள்ளது. அதற்கு முழுமையான காரணம் தமிழ்த் தேசியர்களிடையே ஒற்றுமை இல்லாததே ஆகும்.

1938-ஆம் ஆண்டிலிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகம் போராடி வருகிறது. பல தமிழர்கள் தங்களுடைய இன்னுயிரை இந்தப் போராட்டத்தில் அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழர்கள் தங்கள் மொழியைக் காக்க நடத்திய போராட்டத்தை இந்திய அரசும், இந்திய தேசியம் பேசுகிற பல கட்சிகளும் சிறிதும் மதிக்கவில்லை. இந்தி தொடர்ந்து திணிக்கப்படுகிறது. 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திப் போராட்டத்தில் எண்ணற்றவர்கள் செய்த உயிர்த் தியாகத்தின் விளைவாக தி.மு.க. ஆட்சிபீடம் ஏறியது. ஆனால், இந்தித் திணிப்புக்குக் காரணமான காங்கிரசு கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து மத்திய ஆட்சியில் சில அமைச்சர் பதவிகளைப் பெற்ற தி.மு.க. இந்தித் திணிப்பைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர் அதிகாரத்தில் இருந்தபோதே தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள கற்களில் இந்தி வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கேவலமும் நிகழ்ந்தது.

சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து காவிரி நதியை தமிழர்கள் தங்களது உயிர்நாடியாகக் கருதி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் பொறித்து வைத்தார்கள். ஆனால், அந்த காவிரி மீது நமக்கு உரிமை இல்லை என்று சொல்லி நமக்கு வரவேண்டிய நியாயமான நீரைத் தடுத்து நிறுத்தி கர்நாடகம் அடாவடித்தனம் செய்தபோது நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தலையிட்டு நமக்கு நீதி வழங்கின. ஆனால், அதை கர்நாடகம் ஏற்க மறுத்தது. கர்நாடகத்தில் உள்ள இந்திய தேசியம் பேசும் கட்சிகளில் கன்னட வெறி மேலோங்கி நின்றது. இந்திய தேசியக் கட்சிகளின் அனைத்திந்திய தலைமை இதைக் கண்டிக்க முன்வரவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க மறுப்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் என அவர்களை இன்று வரையிலும் எச்சரிக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள இந்திய தேசியக் கட்சிகளின் கிளைகள் கர்நாடகத்தில் உள்ள தங்கள் கட்சியின் தலைமை செய்யும் இந்தத் தவறை இன்றுவரை கண்டிக்கவில்லை.

அதைப்போல முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சனைகளிலும் இதைப்போல இந்திய தேசியக் கட்சிகள் தமிழகத்தை வஞ்சித்தன. ஆனாலும், இந்திய அரசு இந்த தகாத போக்குகளைத் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கு நியாயம் வழங்க மறுக்கிறது.

உலக நாடுகள் அணு உலைகளின் அபாயத்தை உணர்ந்து அவற்றை மூடி வருகிற நேரத்தில் அந்த அணு உலைகளை தமிழகத்தின் மீது மத்திய அரசு திணிக்கிறது. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அணு உலையை வேண்டாம் என மறுத்த பிறகு தமிழகத்தில் கூடங்குளத்தில் தமிழர்களின் எதிர்ப்பிற்கு இடையே அதைப் பிடிவாதமாக நிறுவி அதனால் ஏற்படும் அழிவிற்குத் தமிழக மக்களை ஆளாக்கத் துணிந்துவிட்டது மத்திய அரசு. கூடங்குளம் மக்கள் உதயகுமார் தலைமையில் அதை எதிர்த்துப் போராடியபோது தமிழ்த் தேசிய அமைப்புகள் அதற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கினார்கள். ஆனால், இந்தியத் தேசியக் கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு எதிராக நின்றனர். தி,மு.க., அ.தி.மு.க. கட்சிகள் எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஆதரவும் தெரிவிக்காமல் பதுங்கின.

46 ஆண்டு காலத்திற்கு மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழர்களின் உரிமைகள் பறிபோயின. தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சிபீடம் ஏறியவர்கள் தமிழை ஆட்சிமொழியாகவோ, பயிற்சி மொழியாகவோ ஆக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டைவிட்டு வெளியேறி 66 ஆண்டுகள் ஆன பிறகும் ஆங்கிலமே அரசோச்சுகிறது. ஆங்கில வழிக் கல்வி அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பரவி நிற்கிறது. இந்தி கூடாது என முழங்கியவர்கள் என்றென்றும் ஆங்கிலமே என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்கள்.

தமிழ்த் தேசியர்கள் தமிழைப் பயிற்சி மொழியாக்கவும், ஆட்சி மொழியாக்கவும் தனித்தனியாகப் போராடியதும், போராடுவதும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தை நடத்தியிருந்தால் திராவிடக் கட்சிகளின் சதியை முறியடித்திருக்க முடியும்.
வள்ளுவரிலிருந்து வள்ளலார் வரையிலும் மற்றும் பல்வேறு தமிழ்ச் சான்றோர்களும் மது என்னும் தீமையிலிருந்து மக்களைக் காத்து வைத்திருந்த நிலைமையில் தமிழ் மண்ணில் மதுவை ஆறாக ஓடச் செய்து சில தலைமுறையினரை அதற்கு அடிமையாக்கி குடும்பங்களைச் சீரழித்தவர்கள் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே.

சகல துறைகளிலும் தமிழ்ப் பண்பாட்டைச் சீரழித்தவர்களும் திராவிடக் கட்சியினரே. தமிழகத்தில் லஞ்சமும், ஊழலும் பரவி நிற்கின்றன. மல்லிகைத் தோட்டமாக விளங்கிய தமிழகத்தை கள்ளிக்காடாக மாற்றியவர்கள் திராவிடக் கட்சியினரே. விரிப்பின் பெருகும்.

வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வாரி வழங்கியும், ஊழல் மூலம் திரட்டிய பணத்தின் ஒரு சிறு பகுதியை அள்ளி வீசி தமிழ் மக்களை தன்மான மற்றவர்களாகவும், இரு கை ஏந்தி இரந்து நிற்பவர்களாகவும் மாற்றியவர்கள் திராவிடக் கட்சியினரே என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் ஜனநாயகத்தை அழித்துப் பண நாயகம் தலைதூக்கச் செய்தவர்களும் இவர்களே.

திராவிடக் கட்சிகள் உருவாக்கியிருக்கிற கள்ளிக்காட்டை வெட்டி எறிந்து தமிழ் மண்ணைப் பண்படுத்த வேண்டிய கடமை தமிழ்த் தேசியர்களுக்கு உண்டு. நம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும். வேறு யாரும் செய்ய முடியாது. ஆனால், நம்மிடையே ஒற்றுமை இருந்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.

ராஜீவ் கொலை வழக்கில் 13 தமிழகத் தமிழர்களுக்கும், 13 தமிழீழத் தமிழர்களுக்கும் ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னணியில் ஆழமான சதி இருந்தது. அப்பாவிகளான 26 தமிழர்களைக் கொலைகாரர்களாகச் சித்தரித்து அதன்மூலம் தமிழ்த் தேசியர்களை அச்சுறுத்தி ஆமைகளாக, ஊமைகளாக ஒடுக்கி வைக்கும் திட்டத்துடன் இத்தண்டனை விதிக்கப்பட்டது. தமிழ்த் தேசியர்கள் கொஞ்சமும் அஞ்சாமல் இந்த அறைகூவலை ஏற்றோம். 26 தமிழர்கள் உயிர்க்காப்புக் குழுவை உருவாக்கி ஒன்றுபட்டுப் போராடினோம். எந்தத் தொழில் அதிபரையும், அல்லது பெரு வணிகரையும் நாம் அணுகவில்லை. மாறாக, எளிய மக்களிடம் நிதி திரட்டி உச்சநீதிமன்றம் சென்று 26 பேர்களின் வழக்கை நடத்தி 19 பேரை விடுவிக்கச் செய்தோம். மீதம் இருந்த மூவருக்கு ஆயுள் தண்டனையும், நால்வருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டபோது அதற்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டினோம். மரண தண்டனை ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டினோம். தொடர்ந்து நாம் போராடியதன் விளைவாக அந்த ஏழு பேரின் வாழ்விலும் இப்போது விடியல் பிறந்திருக்கிறது. இந்தியத் தேசியக் கட்சிகளோ, திராவிடக் கட்சிகளோ இதற்கு எள்ளளவும் காரணமல்ல. 19 தமிழர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் பெறுகிற வரையில் இவர்களில் யாரும் வாயைத் திறக்கவில்லை. அஞ்சி நடுங்கி ஒடுங்கியிருந்தனர்.

தமிழக அரசியல் சந்தர்ப்பவாத, சுயநல, மேனாமினுக்கி, ஊழல் மயமான அரசியலாக திராவிடக் கட்சிகளால் மாற்றப்பட்டுவிட்டது. இந்த தீமைகளைச் சுட்டெரிக்க தியாகத் தீயை மூட்டுவதற்கு தமிழ்த் தேசியர்களால் மட்டுமே முடியும்.

தொண்டு, துன்பம், தியாகம் ஆகிய அடித்தளங்களின் மீது தமிழ்த் தேசியம் கட்டப்படவேண்டும். தமிழக அரசியலில் இந்த உயர்ந்த நோக்கங்கள் காணாமல் போய்விட்டன. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பணம், பதவி, சுயநல நோக்கங்களை மட்டுமே மனதில் கொண்டு வருகிறார்கள். இதன் விளைவாக தமிழகப் பொது வாழ்க்கை மக்களிடம் மதிப்பிழந்துவிட்டது. பொது வாழ்க்கைக்கு வரும் எல்லோரையுமே மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை மாற்றவேண்டும் என்று சொன்னால் எத்தகைய தியாகமும் செய்ய தமிழ்த் தேசியர்கள் தயாராக இருக்கிறோம் என்பதை நாம் செயல் வடிவில் காட்டினால்தான் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை பிறக்கும். அத்தகைய தியாக வாழ்விற்குத் தயாராகும்படி தமிழ்த் தேசியர்களை வேண்டிக்கொள்கிறேன்.

நமது ஒரே அடையாளம் தமிழ்த் தேசியமே. தமிழர்களுக்கு அணிவிக்கப்பட்டிருக்கிற இந்தியம், திராவிடம் ஆகிய முகமூடிகளைக் கிழித்தெறியவேண்டும். இதைச் செய்ய நம்மால் மட்டுமே முடியும். முகமூடியை மாட்டியவர்கள் இதை ஒருபோதும் செய்யமாட்டார்கள். முகமூடிகளை மாட்டித் தமிழர்களை அடையாளம் தெரியாமல் செய்வது அவர்களின் நோக்கமாகும். இந்த தீய நோக்கத்தை மக்களிடையே நாம் அம்பலப்படுத்தவேண்டும்.

அகில இந்தியக் கட்சிகள் வலிமை குன்றியதோடு மட்டுமல்ல சிதறி வருகின்றன. திராவிடக் கட்சிகள் பதவி, பணம் ஆகியவற்றை மட்டுமே நம்பி வாழ்கின்றன. நம்முடைய எதிரிகள் பலவீனம் அடைந்துவருகிற இந்தக் காலகட்டத்தில் நாம் ஒன்றுபடவேண்டியது மிகமிக இன்றியமையாதது மட்டுமல்ல. இப்போது ஒன்றுபடாவிட்டால் இனி எப்போதும் ஒன்றுபடப் போவதில்லை என்பதைத் தமிழ்த் தேசியர்கள் உணர வேண்டும். நமது வலிமையை ஒன்றுதிரட்டி எதிரிகளை வெற்றி கொள்ளவேண்டிய காலம் பிறந்தாகிவிட்டது. என்னுடைய காலத்திலேயே இதைச் செய்து முடிக்க விரும்புகிறேன்.

எனக்கு முன் இங்கு பேசிய தோழர் மணியரசன் உட்பட தமிழ்த் தேசியத்திற்குத் தங்களை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டிருக்கிற தோழர்கள் இந்த மாபெரும் பணிக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ்த் தேசியர்களே! தோளோடு தோள் இணைவோம். நம்மையும் காப்போம். நம்மை நம்பியிருக்கிற உலகத் தமிழர்களையும் காப்போம்.

(25-02-2013 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய நாள் விழாக் கூட்டத்தில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை)

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.