காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமமானது PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014 12:09

"தமிழீழ விடுதலைப் புலிகள் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டும். அவ்வியக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாது'’ என இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்து, குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது, சர்வதேச பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் எனச்சாட்டி தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் சிலரைக் கடந்த 2008 சூன் மாதம் கைது செய்து இத்தாலி அரசு வழக்குத் தொடர்ந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய நிர்வாகத்திற்காகவும் ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால், இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும், இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாதெனவும், அந்த வகையில் இத்தாலி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பின் அவற்றிற்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்கத் தகுதியானதெனவும் குறிப்பிட்டு 23.06.2011 அன்று நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனக்கூறி விடுவிக்கப்பட்டனர். ஆனால், அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து இத்தாலி அரச தரப்பினர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வழக்கு விசாரணை 27.02.2014 மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர், முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை (2011ம் ஆண்டுத் தீர்ப்பு) தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என அந்த ஒன்பது நீதிபதிகளும் தெரிவித்து அவர்களுக்கு விடுதலையளித்தனர்.
***
தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்து அவர்களைப் பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் 2006ம் ஆண்டு இணைத்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை நீக்குவதற்கு தமிழ் மக்கள் முன்னெடுத்த அனைத்து அறவழிப் போராட்டங்களும் தோற்றுப்போன நிலையில், தடை நீக்கப்பட வேண்டும் என நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் ஊடாக ஐரோப்பிய நீதிமன்றில் மனுவொன்றை 2011ம் ஆண்டு தாக்கல் செய்தனர். பல்வேறு காரணங்களைக் காட்டி, அந்த வழக்கை நடத்த காலங்கடத்திவந்த நீதிமன்றம், கடந்த 26ம் திகதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. லக்ஸ்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

ஐரோப்பிய பேரவை ஐரோப்பிய ஆணைக்குழு நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நீடிக்கவேண்டுமென வாதிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் கடுமையாக வாதிட்டார்.

இந்த ஆரம்ப விசாரணைகளின்போது, ‘2006ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய ஐரோப்பிய ஒன்றியத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த மூல ஆதாரங்களில் மோசமான குறைபாடுகள் இருந்தமையை நீதிபதிகள் கண்டறிந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடைவிதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒரு பொருத்தமான முன்னோடியாகக் கொண்டு செயற்பட்டமை தொடர்பில் நீதிபதிகள் தமது கவலையை வெளிப்படுத்தியதோடு, இந்தியாவில் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு நேர்மையான விசாரணைகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்தமைக்கான ஆதாரம் ஒன்றும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாதத் தடையை அமுல்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் (எவர் வேண்டுமானாலும் பதிவு செய்யக்கூடிய தளமான) விக்கிப்பீடியாவின் தகவல்களை நம்பகமான ஆதாரங்களாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நீதிமன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடையானது ஒரு நிச்சயம் அற்ற தன்மையை எட்டியுள்ளது. இதனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் சாதகமான தீர்ப்புக் கிடைக்கும் என்று தடையை நீக்குவதற்காக வாதிட்ட சட்டத்தரணிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

"சிறீலங்கா மீதான சர்வதேச சமூகமாகிய, இலங்கை சமாதான கண்காணிப்புக் குழுவாகிய நாம், வேறு தூதரகங்கள் மற்றும் ஐ.நா. ஆகியன விடுதலைப் புலிகளைத் தடை விதிக்கவேண்டாம் என அறிவுறுத்தினோம். பேச்சுவார்த்தை மேசைக்கு அவர்களை வருமாறு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப் புலிகளைத் தடைசெய்வது மிகவும் அவசர முடிவு என்பதை நாங்கள் எடுத்துக் கூறினோம். ஒவ்வொருத்தரும் சிறீலங்காவுக்காக வேலைசெய்தார்கள். அத்துடன், சிறீலங்காவுக்காக வேலை செய்த இராஜதந்திரிகள் கூறிய வார்த்தையை நாங்கள் கேட்டோம். சரி, நாங்கள் காத்திருப்போம் என்றார்கள்.

ஆனால், அப்போது ஒவ்வொன்றும் மிக வேகமாக நடந்தது. நிச்சயமாக சிறீலங்கா அரசாங்கத்திடமிருந்து தடையை ஏற்படுத்துவதற்காக பெருமளவு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அத்துடன் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளும் அழுத்தத்தை பிரயோகித்தன. பின்னர், முல்லைத்தீவுக்கு வெளியே நடைபெற்ற கடற் சம்பவத்தை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசு சொல்வதை செவிமடுத்தது. என்ன நடந்தது என்பதைக் கேட்பதற்கு அவர்கள் எங்களை அழைக்கவில்லை. ஏனெனில் அது குறித்து எங்களிடம் இருந்து வேறுவிதமான பதில் கிடைக்கும் என்பதால். அது வெறும் சவாலாக இருந்தது. பின்னர் அவர்கள் தடையை விதித்தார்கள். பின்னர், அதிகளவிலோ அல்லது குறைந்த அளவிலோ செயலாற்றக் கூடிய துருப்புச் சீட்டை அவர்கள் அரசாங்கத்துக்கு வழங்கினார்கள் - ஏனெனில் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தபடியால். அது பயங்கரவாதத்துக்கு எதிராக உலகெங்கும் மிகப்பெரிய போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது உலகளாவிய ரீதியில் அப்போது பெரும் வல்லரசுகளின் வெறியாக இருந்தது. இதனால், விடுதலைப் புலிகளும் அந்த கெடுவுக்குள் அகப்பட்டனர். ஆனால், என்னைப் பொறுத்தவரை அது ஒரு தவறு. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதானால், பின் சிறீலங்கா அரசையும் அந்தப்பட்டியலில் இணைத்துவிடுமாறு நான் கூறினேன்.

ஏனெனில், சிறீலங்கா அரசும் அதே வழிமுறைகளைத் தான் பயன்படுத்தியது. அது வெளிப்படையாகவே தெரிந்த விடயம். ஆகவே, அது ஒரு மிகப்பெரிய தவறு என்றே நான் கூறுவேன், ஏனெனில் அது பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தீர்வை எட்டுவதற்கான சாத்தியப்பாட்டை தடுத்து நிறுத்தியது. சமாதானத் தீர்வை அரசு விரும்பவில்லை என்றே நான் கூறுவேன். இந்த நிலைமையில் விடுதலைப் புலிகள் மிகவும் திறமையாகச் செயற்படவில்லை. அத்துடன், அவர்கள் அதிகம் பிடிவாதமாக இருந்தார்கள்.’

2006ம் ஆண்டு இலங்கை கண்காணிப்புக் குழுவுக்கு தலைவராக இருந்தவர் உல்ஃப் ஹென்றிக்சன். மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு வலிந்த போர் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மீது மேற்கொண்டபோது, அதில் இருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக தற்காப்புச் சமரை முன்னெடுத்தபோது, இரண்டு தரப்பையுமே குற்றஞ்சாட்டி அறிக்கைவிடுத்தது கண்காணிப்புக் குழு. அது வெளியிட்ட அறிக்கைகளும் விடுதலைப் புலிகள் மீது சர்வதேச நாடுகள் தடைகளைக் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தன. ஆனால், "தமிழ்நெட்'டுக்கு கடந்த வாரம் உல்ஃப் ஹென்றிக்சன் வழங்கிய செவ்வியில் பல்வேறு உண்மைகளைப் போட்டுடைத்துள்ளார். அதில் மேற்கூறப்பட்ட விடுதலைப் புலிகள் மீது தடைபோட வேண்டாம் என வலியுறுத்தியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
***
தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இன அழிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டபோது, அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய பலம் பொருந்திய விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஓய்வின்றிப் போராடினார்கள்.

தமிழின அழிப்புக்கு இந்த உலகம் வழங்கும் ஒத்துழைப்பே விடுதலைப் புலிகள் மீதான தடை என அவர்கள் சுட்டிக்காட்டிக் கதறினார்கள். ஆனால், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் என அனைத்தும் சேர்ந்து விடுதலைப் புலிகளை அழிக்கவேண்டும் எனக் கங்கணம்கட்டி தமிழின அழிப்பிற்குத் துணைபோனார்கள்.

தமிழர்களின் பலம் முற்றாக அழிக்கப்பட்டு, இன்று சொந்த மண்ணில் கூட நிம்மதியாக வாழமுடியாத நிலையைத் தமிழர்கள் அடைந்திருக்கின்றார்கள். கண்கெட்ட பின்னர் சூரிய வணக்கம் செய்வதுபோல, தமிழினம் அழிந்து எல்லாம் முடிந்ததன் பின்னர் இப்போதுதான் விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல என்ற உண்மையை இந்த உலகம் உணரத்தொடங்கியுள்ளது.

ஈழத்துக்காக எரிந்த ஈகைப்பேரொளி முத்துக்குமார் எழுதி வைத்ததுபோல் "காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமமானது' என்ற வரிதான் நினைவுக்கு வருகின்றது.
- நன்றி: ஈழமுரசு 04-10 மார்ச் 2014

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.