சிறியன சிந்தியாதான் - தி.க.சி. - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014 12:15

தமிழ் எழுத்துலகில் முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் இடையே பாலமாக நின்று இணைப்பவர் மூத்த எழுத்தாளர் தி.க.சி. ஆவார்.

மணிக்கொடி யுக படைப்பாளிகளில் இருந்து இன்றைய இளம் படைப்பாளிகள் வரை அவர் அறியாதவர்கள் இல்லை. அவரது பேனா முனையின் விருப்பு- வெறுப்பற்ற திறனாய்விற்கு ஆளாவதைப் பெரும் பேறாகக் கருதும் எழுத்தாளர்கள் பலர் உண்டு.

சிறந்த விமர்சகனாகத் திகழ வேண்டுமானால் பல படிக்கட்டுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும். சிறந்த வாசிப்பாளனாகத் தொடங்கி கவிஞனாக, சிறுகதையாளனாக, மொழியாக்கக்காரனாக, கட்டுரையாளனாக விளங்கித் தேர்ச்சி பெற்ற பிறகே நல்ல திறனாய்வாளனாகப் பிறப்பெடுக்க முடியும்.

தமிழ் எழுத்துலகில் சிறந்து விளங்கிய புதுமைப் பித்தன், கல்கி ஆகியோர் குறித்து அவருடைய திறனாய்வு ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும்.

"என்னைப் பொறுத்தவரையில் நமக்குக் கல்கியும் வேண்டும், புதுமைப் பித்தனும் வேண்டும். ஏனெனில் இருவரும் மகாகாவி பாரதியாரின் பெருமைக் குரிய வழித்தோன்றல்கள்; அவரது குறிக்கோள்களை தமிழ் மக்களின் இதயங்களிலும் வாழ்விலும் தமது படைப்புகளின் வாயிலாக விதைத்தவர்கள். அவர்களது படைப்புகளின் இலக்கியத்திறன் வெவ்வேறானது. அதே வேளையில் தமிழில் மறுமலர்ச்சி இலக்கியம் படைத்தவர்கள்; அதற்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள்; இடையறாது உழைத்தவர்கள். இது உண்மை'' என அவர் கூறும்போது செழுமையான தமிழ் மரபில் ஊறித் திளைத்தவர் அவர் என்பது நமக்குப் புலப்படுகிறது.

மற்றொரு இடத்தில் குறிப்பிடும் போது "மகாகவி பாரதி என்னும் கதிரவனின் பொற்கிரணங்களில் இரண்டுதான் புதுமைப்பித்தனும் கல்கியும். இவர்களைத் தவிர தமிழ் இலக்கியப் பூமியில் மகாகவியின் மகத்தான கதிர்வீச்சுக்கள் எத்தனை எத்தனையோ. அவை ஒரு தொடர் நிகழ்வுகள். தமிழ் உள்ளவரை பாரதி எனும் ஞானசூரியனின் ஒளி வெள்ளம் இவ்வுலகில் பாய்ந்து கொண்டே இருக்கும்'' என்று அவர் குறிப்பிடும்போது பாரதியின் பொற்கிரணங்களில் தி.க.சி.யும் ஒருவர் என்பது நமக்குத் தெளிவாகப் புலனாகிறது.

எந்த நிலையிலும் தி.க.சி. பாரதி கிழித்த அறக்கோட்பாட்டை ஒருபோதும் தாண்டியறியாதவர். எனவே அவருடைய திறனாய்வுகளிலும் பாரதியின் தடத்தையே அவர் பின்பற்றினார். பின்பற்றுகிறார்.

அவரைச் செதுக்கிய சிற்பிகளாக பாரதி, பாரதிதாசன், வ.ரா., ப. ஜீவானந்தம், மார்க்சிம் கார்க்கி, டி.கே.சி., புதுமைப் பித்தன், நா. வானமாமலை, வல்லிக் கண்ணன் ஆகியோர் என குறிப்பிட்டிருக்கிறார். சித்தாந்த ரீதியில் ஏகாதி பத்தியம், முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவை முற்போக்கு கலை- இலக்கியத்தின் மூன்று எதிரிகள் என அவர் கருதுகிறார். எழுத்தாளர்கள் மனிதர்களை நேசிக்க வேண்டும். மானுடத்தின் வெற்றியை வரவேற்க வேண்டும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று நிரம்பியவனாய் அன்பு, அறம், ஆண்மை உளம் பூண்டவனாய் இருக்க வேண்டும். இடையில் நிறுத்தாது தனது பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என எழுத்தாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

1942ஆம் ஆண்டிலிருந்து தனது கருத்துக்களை ஆழமாகவும் அழுத்த மாகவும் பிறர் மனதைப் புண்படுத்தாமலும் எழுதி வந்திருக்கிறார். யாராக இருந்தாலும் அவருடைய குறைகளை மூடி மறைக்காமலும், நிறைகளை மனம் திறந்து பாராட்டியும் நேர்மை உணர்வோடும் துணிவாகவும் திறனாய்ந்தே வந்திருக்கிறார். அது மட்டுமல்ல, தன்னை நேர்மையின்றி விமர்சித்தவர் களிடம்கூட அவர் பகைமை பாராட்டிய தில்லை. "சிறியன சிந்தியாதான்' என்ற கம்பனின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து வருபவர் தி.க.சி. ஆவார்

எழுத்தாளர்களுக்கு சமூக நோக்கம், சமூக முன்னேற்றம், சமூக நீதி ஆகியவை குறிக்கோள்களாக அமைய வேண்டும் என்பதை தமது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வருபவர் தி.க.சி. ஆவார்.

அது மட்டுமல்ல, புதிதாக விடுதலை பெற்ற ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்ட அணிசாரா நாடுகளின் அமைப்பிற்கு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் பஞ்சசீலக் கொள்கைகளை வகுத்து வழிகாட்டினார்.

அதைப்போல, தமிழகப் படைப்பாளிகளுக்கு தி.க.சி. அவர்களும் பஞ்சசீலக் கொள்கை ஒன்றை வகுத்தளித்திருக்கிறார். தனிமைப்படுத்தப் பட்டுப் போகும் குழு மனப்பான்மைக்கும் குருட்டுத்தனமான பழமை வழிபாட்டுக்கும் இரையாக மறுத்ததன் காரணமாகவே இக்கொள்கையை அறிமுகப்படுத்த நேர்ந்ததாக அவரே கூறியுள்ளார்.

1. தமிழியம், 2. பெண்ணியம், 3. தலித்தியம்
4. சுற்றுச்சூழலியம், 5. மார்க்சியம்

மூத்த படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, இளம் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, மேற்கண்ட ஐந்தையும் படைப்பிலக்கிய நெறிகளாகக் கொண்டு அவர்கள் தங்கள் ஆக்கங்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். அதிலும் இன்றைய உலக மயமாக்கல் மற்றும் சந்தைக் கலாச்சார சூழ்நிலையில் மேற்கண்ட பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் படைப்புகள் ஒரு புதிய உலக மயமாக்கல் நுகர்வு மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்கப் பெரிதும் துணைபுரியும் எனக் கூறுகிறார்.

மேற்கூறப்பட்ட பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையில் எழுது பவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும் அவர்களை நட்புறவுடன் பாராட்டி ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுப்பது முற்போக்கு கலை - இலக்கியப் படைப்பாளிகள் மற்றும் அமைப்புகளின் நீங்காத கடமையாகும் எனவும் தி.க.சி. வலியுறுத்துகிறார்.

"தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் தங்களை முதலில் தமிழன் என்று சொல்லிகொள்வதில் வெட்கப்படத் தேவையில்லை. நமது தமிழ் மொழியை - தமிழ் இலக்கியத்தை நேசிப்பதில் என்ன தவறு? நமது 3000 ஆண்டுகால இலக்கிய மரபை விட்டுவிடத் தேவையில்லை. பாரதி, பாரதிதாசனையும் அவசியம் படியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருக்கும் படைப்புகளைப் பட்டியலிட்டுப் படி யுங்கள். தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள். தொடர்ந்து படிக்கவில்லை என்றால் எதிர்கருத்துக்களைக் கொண்டவர்களை எதிர்கொள்வது கடினம்'' என அவர் இளம் எழுத்தாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

"பூகோள அமைப்பில் மொழி, தேசியத் தன்மைகள் மாறிவிட்டன. ஆனால், தமிழ்த் தேசியம் உயிருடன் இருக்கிறது. என்னைப் போன்ற ஒவ்வொரு பொது உடைமைவாதியும் தமிழ்த்தேசியவாதிதான். தமிழ்தான் எங்களுக்கு உயிர்'' என உரத்த குரலில் கூவ அவர் தயங்கவில்லை.

தமிழக எல்லை கடந்தும் எழுத்தாளர்களை நேசித்தவர் அவர். மலை யாள எழுத்தாளரான தகழி சிவசங்கரன் பிள்ளை அவருடைய உள்ளத்தில் அழியாத இடத்தைப் பெற்றிருக்கிறார். மலையாள இலக்கியத்திற்கு உலக இலக்கிய அளவில் பெருமை சேர்த்ததில் தகழிக்கு கணிசமான பங்கு உண்டு என அவர் பெருமிதம் கொள்கிறார். மேலும், மலையாள எழுத்தாளர்களான பொன் குன்னம் வர்கி, வைக்கம் மகமது பஷிர், கேசவ தேவ் ஆகியோரின் படைப்புகளையும் பாராட்ட அவர் தயங்க வில்லை. அது மட்டுமல்ல, வட மாநில எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்து, கே.ஏ. அப்பாஸ், கிருஷ்ன் சந்தர், தாராசங்கர் பானர்ஜி, அலிசந்தார் ஜாப்ரி ஆகியோர் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியுள்ளதை நன்றியுணர்வோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு நினைவூட்டுகிறார்.

நமது படைப்புகள் உலகத் தரத்திற்கு இணையாகத் திகழ வேண்டு மானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எழுத்தாளர்களுக்கு அற்புதமான அறிவுரை வழங்கியுள்ளார்.

"மரபில்லாமல் புதுமையில்லை. நமது தொன்மையான மரபின் சிறந்த அம்சங்களை சுவிகரித்துக்கொண்டு வரலாற்று உணர்வுடனும் உத்வேகத்துடனும் புதுமைப் படைப்புகளைப் படைக்க முயற்சி செய்ய வேண்டும். இலக்கண அடிப்படை அறிவும் இருத்தல் வேண்டும். மரபு நமது பூர்வீகச் சொத்து. தலைசிறந்த உலக இலக்கியங்களை அவற்றின் மூலங்கள் அல்லது மொழி பெயர்ப்புகளின் வாயிலாக கற்று அறிந்து இலக்கிய ஞானத்தைப் பெறுவது படைப்பாளிகளின் முக்கிய கடமையாகும். தமது படைப்புகள் தேசிய, சர்வதேசிய தரத்திற்கு இணையாகத் திகழவேண்டும் என்ற இலட்சியம் வளர்ந்து வரும் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் நிச்சயம் இருக்க வேண்டும். அதற்கு விடா முயற்சியும் கடின உழைப்பும் தேவை. படைப்புகளின் எண்ணிக்கைகளைவிட அவற்றின் தரத்தில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். உயர்ந்த படைப் பாற்றலும் தத்துவ நோக்கும் புதுமையும் தனித் தன்மையும் கொண்டவர்களாக இருந்தால்தான் நம்மால் வெற்றிபெற முடியும்'' என்று கூறுகிற அவர் ஒவ்வொரு படைப்பிலும் கீழ்க்கண்ட மூன்று முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

1. கலை அழகு, 2. உலகளாவிய மனித குல நேயம், 3. சமூக நோக்கு.

எழுத்தாளர்கள் தங்களுடைய வயிற்றை மட்டும் நிரப்புவதற்காகவோ அல்லது காகிதத்தில் ஏதோஒன்றை கிறுக்கி மன நிறைவு காண்பதற்காகவோ எழுதக்கூடாது. எழுத்தாளனின் பேனா சமுதாய விரோதிகளுக்கு எதிரான வாளாகவும் மக்களைக் காக்கும் கேடயமாகவும் விளங்க வேண்டும் என அறுதியிட்டுக் கூறுகிறார்.

தமிழன்னை மலடியல்ல என ஒரு கட்டுரையையே தீட்டியிருக்கிறார். பாரதி, பாரதிதாசன், கு. அழகிரிசாமி, தி. சானகிராமன் போன்ற அருமையான கலைஞர்களை ஈன்றெடுத்த தமிழின் வளம் வறண்டுபோய் எதிர்காலம் இருளடைந்து கிடப்பதாக அவர் ஒருபோதும் கருதியதில்லை. தமிழனின் படைப்பாற்றல், கடுமையான உழைப்பு, சர்வதேச இலக்கியத்தைப் புரிந்து கொள்வது, உலக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் படைப்பு முயற்சிகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் தேவை. தமிழ் எழுத்தாளனின் படைப்புச் சக்தி பெருக வேண்டும். தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை வேண்டும். சர்வதேசப் பார்வை வேண்டும். "விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய கருதியிருக்கின்றாயடா'' என்று பாரதி உருகினானே அப்படியொரு உருக்கம் தமிழ் எழுத்தாளர்களின் உள்ளங்களில் உருவாகவேண்டும். பசியும் பட்டினியு மாக வாழ்க்கை நடத்திய இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன் சிந்தித்தது எல்லாம் உலக அளவில். அடிப்படையில் அப்படியொரு தொலை நோக்கு இல்லாதுபோனால் முன்னேற்றம் சாத்தியமில்லை என அவர் தமிழின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையோடு கவலை தெரிவித்திருக்கிறார்.

வறுமை, அடக்குமுறை, ஒடுக்கு முறை, இலஞ்சம், ஊழல், நேர்மையற்ற அரசியல், பச்சைச் சந்தர்ப்பவாதம் போன்ற சமுதாயச் சீர்கேடுகள் மலிந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் இவற்றுக் கெதிராகப் பண்பாட்டுப் புரட்சி ஒன்று உடனடியாகத் தேவை எனவும் அவர் கருதுகிறார். இந்தப் பண்பாட்டுப் புரட்சியை முன்னின்று நடத்துவதற்கு இளம் படைப்பாளிகள் முன்வர வேண்டும். தங்களின் பேனா என்னும் ஆயுதத்தினால் இந்தக் கொடுமைகளை எதிர்த்து எதற்கும் அஞ்சாது அயராது போரிடும் போராளியாக இருக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என்பது அவரது திடமான நம்பிக்கையாகும்.

90 வயதில் அடியெடுத்து வைத்துள்ள முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி. அவர்கள் நம்மிடையே வாழ்ந்து இன்றும் சற்றும் அயராமல் இளம் படைப் பாளிகளை ஊக்குவித்தும் சிற்றிதழ்களில் வெளிவரும் கட்டுரைகளைப் பாராட்டி யும் கடிதங்கள் எழுதுவதன்மூலம் இந்தப் பண்பாட்டுப் புரட்சியைப் பரப்புவதற்குத் தன்னால் ஆன முயற்சிகளை செய்து கொண்டேயிருக்கிறார்.

இந்தப் பண்பாட்டுப் புரட்சியைத் தமிழகத்தில் உருவாக்க படைப்பாளிகள் அனைவரும் முன்வர வேண்டும். அத்தகைய புரட்சியின் மூலம் மட்டுமே இன்றைய தமிழ்ச் சமுதாயத்தை இழிவுநிலையிலிருந்து மீட்க முடியும். அவ்வாறு செய்வோமானால் அதுதான் தி.க.சியின் 70 ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட எழுத்துத் தொண்டிற்கு அளிக்கப்படும் சிறந்த பரிசாகும்.
(2013 ஏப்ரல் 16-30 இதழில் வெளியான கட்டுரையை மீண்டும் இங்கே வெளியிட்டுள்ளோம்.)

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.