தமிழ்த் திருநாட்டைக் காக்க - தமிழ்த் தேசியர்களே போராடுவோம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 14:48

தொல்காப்பியர் காலம் முதல் 1956ஆம் ஆண்டு வரை தமிழகம் தனித்தொரு நாடாக திகழ்ந்ததேயில்லை. சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளாக தமிழகம் பிரிந்து கிடந்தது. வேளிர்களும், குறுநில மன்னர்களும் ஆங்காங்கே சிறுபகுதிகளை ஆண்டார்கள்.

கி.பி. 850 முதல் 1250 வரை நடைபெற்ற பிற்காலச் சோழர் ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடைக்குள் கொண்டுவருவதற்கு சோழப் பெருமன்னர்கள் முயற்சி செய்தனர். ஆனால், பாண்டியர்கள் அதற்கு குறுக்கே நின்று தொடர்ந்து எதிர்த்துப் போராடினார்கள். எனவே, சோழர்கள் கண்ட கனவு முழுமையாக நிறைவேறவில்லை.

கி.பி. 1251இல் பிற்காலப் பாண்டியர்கள் தலைதூக்கி சோழப்பேரரசைத் தாக்கிச் சிதைத்தார்கள். சோழர்கள், பாண்டியர்கள் ஆகியவர்களுக்கிடையே 300 ஆண்டுகளுக்கு மேலாக மூண்டெழுந்த பகைமையும் போரும் இரு அரசுகளையும் பலவீனப்படுத்திவிட்டன. இதைப் பயன்படுத்திக்கொண்டு விஜயநகர நாயக்கர்கள் மதுரையையும் தஞ்சையையும் கைப்பற்றி தங்கள் அரசை நிறுவினார்கள். அவர்களைத் தொடர்ந்து முகமதியர்கள் , மராட்டியர்கள் படையெடுப்புகள் நடந்தன. தமிழகம் முழுவதிலும் பாளையக்காரர்கள் ஆட்சி தலைதூக்கியது. இதன் விளைவாக அந்நியர்களான ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும், தமிழகத்தைக் கைப்பற்றுவதில் முனைந்தனர். ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றனர். புதுச்சேரியை மட்டும் பிரெஞ்சுக்காரர்கள் தக்க வைத்துக்கொண்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகம் சென்னை மாகாணம் என்ற கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. தமிழ்நாடு, ஐதராபாத் சமஸ்தானம் நீங்கலான ஆந்திரப் பகுதி, மலபார் மாவட்டம், தென் கன்னட மாவட்டங்கள் உள்ளிட்டவை ஒன்றுபடுத்தப்பட்டு சென்னை மாகாணம் என்று பெயரிடப்பட்டது.

நாடு விடுதலைப் பெற்ற பிறகு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி மக்கள் போராடியதன் விளைவாக மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

1956ஆம் ஆண்டு தமிழகம் உருவானபோது தேவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை நகரம் ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை தாலுகா, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு கிழக்குப்பகுதி, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு தாலுகா, கொள்ளேகாலம் தாலுகாவில் தென் பகுதி, கொல்லங்கோடு வனப்பகுதி, கோலார் தங்கவயல் பகுதி, திருப்பதியை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் ஆகிய தமிழருக்குரிய பகுதிகளை ஆந்திரமும், கேரளமும் பறித்துக்கொண்டன.

இராசேந்திர சோழன் காலத்திலிருந்து தமிழர்களுக்குச் சொந்தமான, மாநக்கவரம் தீவுகள் என்ற அந்தமான் நிக்கோபார் தீவுகள் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டு மத்திய ஆட்சிக்கு உட்பட்டவையாக மாற்றப்பட்டன.

இந்திய-இலங்கை அரசுகளின் உடன்பாட்டிற்கிணங்க கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது.

யானை வாயில் கொடுக்கப்பட்ட கரும்பைத் திரும்ப கைப்பற்றியதைப் போல ஆந்திராவுக்குக் கொடுக்கப்பட்ட சித்தூர் மாவட்டத்தை திரும்பப்பெறமுடியாவிட்டாலும், திருத்தணியை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் தனது இடைவிடாத போராட்டத்தின் மூலம் மீட்டுத் தந்தார்.

அதைப்போல தென் எல்லையில் இருந்த நாஞ்சில் நாட்டில் பல பகுதிகளை நாம் இழந்த போதிலும் குமரி மாவட்டம் என்ற பெயரில் அமைந்த பகுதியை நேசமணி அவர்கள் தலைமையில் போராடிப் பெற்றோம். கிட்டத்தட்ட எல்லைப் பகுதியில் நமக்கு உரிமையான 2000 சதுர மைல் பரப்பில் 600 சதுர மைல் பரப்பை மட்டுமே மீட்க முடிந்தது. அதற்கு வட எல்லையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் தலைமையிலும், தென் எல்லையில் நேசமணி அவர்கள் தலைமையிலும் உணர்வுள்ள தமிழர்கள் நடத்திய போராட்டங்களே காரணமாகும்.

அன்றைக்கு இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பிறதலைவர்களும் கட்சிகளும் இணைந்து போராடியிருப்பார்களானால் நாம் இழந்த பகுதிகளை இழந்திருக்கவே மாட்டோம். ஆந்திர, கேரள, கன்னடப் பகுதிகள் பிரிந்து சென்ற பிறகும் எஞ்சியிருந்த தமிழ்நாட்டிற்கு சென்னை மாகாணம் என்ற பெயரே தொடர்ந்து நீடித்தது. தமிழில் தமிழ்நாடென்றும் ஆங்கிலத்தில் சென்னை மாகாணம் என்றும் வழங்கப்பட்டது. தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரைத் தியாகம் செய்த பிறகு தமிழக சட்டமன்றத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக அன்றைய முதல்வர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

தொல்காப்பியர் காலம் முதல் 1956ஆம் ஆண்டு வரை தமிழகம் ஒன்றாக இருந்தது இல்லை. 1956ஆம் ஆண்டில்தான் ஒன்றுபட்ட தமிழகம் பிறந்தது. எல்லைப் பகுதிகள் பலவற்றை நாம் இழந்த போதிலும் எஞ்சியிருந்த தமிழர் வாழும் பகுதிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டன. நெடிய தமிழர் வரலாற்றில் இது ஒரு திருப்பமே.

இழந்ததை மீட்போம்! இருப்பதைக் காப்போம்! என்ற முழக்கம் இப்போது தமிழர்களால் எழுப்பப்படுகிறது. இழந்ததை மீட்பது ஒருபுறம் இருக்கட்டும். இருப்பதைக் காப்பதற்கான விழிப்புணர்வு தமிழர்களுக்கு இல்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகு நம்முடன் இணைக்கப்பட்ட குமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத்துடன் சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கேரள உறுப்பினர்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்புகிறார்கள்.

மைசூரில் ஹைதர் அலியின் ஆட்சி ஏற்பட்ட போது அங்கிருந்து ஓடிவந்து நீலகிரி மாவட்டத்தில் குடியேறிய படுகர்கள் தாங்கள் வந்தேறிகள் என்பதை மறைத்து அம்மாவட்டத்திற்கு படுகர் நாடு என்று பெயரிட வேண்டும், அதை மத்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் குரல் கொடுக்கத் துணிந்துள்ளனர். அம்மாவட்டத்தில் குடியேறியுள்ள மார்வாடிகள், மலையாளிகள், படுகர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளனர்.

நமக்குச் சொந்தமாக இருந்த அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வங்க அகதிகள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களைக் குடியேற்றுவது இந்தியப் பாதுகாப்புக்கு ஊறுவிளைக்கும் என்று கூறி மறுக்கிறார்கள்.

எல்லையோரப் பகுதிகள் பறிபோனதைவிட தமிழர்களின் தாய் நிலமே கொஞ்சம் கொஞ்சமாக மார்வாடிகளாலும் மலையாளிகளாலும் பிற அந்நியர்களாலும் விலைக்கு வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலை தொடருமேயானால் தமிழர்கள் சொந்த மண்ணில் அந்நியர்களாகும் அபாயம் உருவாகும்.
தமிழக ஆறுகளில் உள்ள மணல் சுரண்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச்செல்லப்படுகிறது. தமிழகத்தின் கனிம வளங்கள் அந்நியரால் சுரண்டப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழகம் மாற்றப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் சிறிது எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்ளை இலாபம் அடிப்பதற்கு கொக்கோகோலா போன்ற அந்நிய நிறுவனங்களுக்கு தாராளமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வனப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. பகிரங்கமாக நடத்தப்படும் இந்த கொள்ளையைத் தடுத்து நிறுத்த நாம் வகையற்றுப் போனோம்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் காசை வீசியெறிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலை நீடிக்கிறது. இதன் விளைவாக தாய் நிலம், கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன.

எனக்கு எதிரில் வயது முதிர்ந்த எல்லைப் போராட்ட தியாக வீரர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் தலைமையில் போராடி, சிறை சென்று சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளானபோதிலும் இந்த முதியவயதிலும் உணர்வோடு இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இவர்களுக்கு இருக்கும் தமிழ்த்தேசிய உணர்வும் தியாக உணர்வும் துணிவும் நமக்கிருக்க வேண்டும்.

தமிழ்நாடெங்கும் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபடவும் தொடர்ந்து போராடவும் தயாராக வேண்டும். நமது மண்ணைக் காக்க, இயற்கைக் கனிம வளங்களைக் காக்க, வனவளத்தை, நிலத்தடி நீரைக்காக்க உறுதியுடன் போராட ஆயிரக்கணக்கான ம.பொ.சி.கள் இன்று நமக்குத் தேவை. சிலம்புச் செல்வரின் தலைமையில் நடைபெற்ற எல்லைப் போராட்டத்தில் தளபதிகளாகத் திகழ்ந்த கவிஞர் கா.மு. ஷெரிப், கவிஞர். கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த்தேசியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூளுரை இதுவேயாகும். தமிழ்த்தேசியர்கள் ஒன்றுபட்டு தொடர்ந்து போராட உறுதிபூணுவதுதான் சிலம்புச் செல்வருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான மதிப்பாகும்.

(1-4-2014 அன்று திருத்தணியில் ம.பொ.சி. மாதவி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பழ.நெடுமாறன் ஆற்றிய உரை)

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.