அரசியல் அழுத்தம் காரணமாகவே 7 பேரின் தூக்கு வழக்கில் திருப்பம் : - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 மே 2014 16:25

அரசியல் அழுத்தம் காரணமாகவே, 7 பேர் தூக்கு ரத்து விவகாரம் தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

இதுகுறித்து தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் குறித்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதியுடன் அமர்ந்துதான் இந்த வழக்கை விசாரித்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் போடப்பட்ட இரண்டு மனுக்களில் ஒன்றில் தீர்ப்பு கூறிவிட்டனர். அடுத்த மனு மீது தீர்ப்பு சொல்வதற்கு பதில், அதை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது என்று எடுத்த முடிவு, அரசியல் அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாகக் கருதுகிறேன்.

இந்தவகை அரசியல் அழுத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் பணியுமேயானால், அதன் விளைவாக மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும். ஆகவே, இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு சரியானது அல்ல. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கில் ஒரு மனுவின் மீது தீர்ப்புக் கொடுத்த அன்றே, 2ஆவது மனுவின் மீதும் தீர்ப்பு சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால், வழக்கை வேண்டுமென்றே ஒத்திவைத்து, ஓய்வுபெறும் நாளில் இப்படி தீர்ப்பளித்தது தவறானது.

ஒவ்வொரு நீதிபதியின் மனநிலையைப் பொருத்துத்தான் தீர்ப்பு என்றாகி விட்டது. ஆகையால், அடுத்து வரும் அமர்வுக்கு 5 நீதிபதிகள் யார் இருப்பார்கள், அவர்களின் மனநிலை என்ன என்பதைப் பொருத்துத்தான் வழக்கின் தீர்ப்பு அமையும் என்றார் பழ.நெடுமாறன்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.