மோடி பதவியேற்பு - இராசபக்சே வருகை - தமிழ்த் தேசிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 06 ஜூன் 2014 13:10

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இலங்கை அதிபர் இராசபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பல்வேறு தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Modi

ஆர்ப்பாட்டத்தின் போது பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஈழத்தமிழர் பிரச்சினை என்பது தமிழர்களின் உயிர்நாடி பிரச்சினை இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தியும் குரல் எழுப்பியும் மதிப்பளிக்காத காங்கிரஸ் கட்சியையும் அதற்குத் துணை போன தி.மு.க.வும் தமிழகத்தில் ஒரு இடத்தில் வெற்றிபெற இதே நிலையை பா.ஜ.க.வும் தொடர்ந்தால் தமிழகத்தில் பா.ஜ.க.வும் துடைத்து எறியப்படும்.

தமிழக முதல்வர் பிரதமர் பதவியேற்வு விழாவில் கலந்து கொள்ளாதது வரவேற்கத்தக்கது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு அழுத்தம் கொடுப்பதோடு நிற்காமல், டெல்லிக்கு சென்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இலங்கை பிரச்சினை ஒரு மனித உரிமை பிரச்சினை என்பதை விளக்கி கூறி அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் 8 அமைப்புகள் சார்பில் திங்கள் கிழமை கண்டனப் போராட்டங்கள் நடந்தன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சேவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், சென்னை காயிதே மில்லத் மணி மண்டபம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஜெயராம், ஜே.பிரபாகர் மற்றும் வசீகரன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று பேசும்போது, இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். ராஜபட்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டிய நிலையில், அவரை அரசு மரியாதையுடன் பாஜக வரவேற்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதுஎன்றார்.

மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும் சாஸ்திரி பவன் முன்பு, பாலச்சந்திரன் மாணவர்கள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தலைமையிலும், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர் மாநிலச் செயலாளர் திருமலை தலைமையிலும் அனுமதி மீறி போராட்டம் நடத்தினர்.

அப்போது இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் திருமலை பேசும்போது, ’இலங்கை அதிபர் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை வாங்கித் தர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவரை அரசு மரியாதையுடன் வரவேற்பது கடும் கண்டனத்துக்குரியது’ என்றார். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் 7 சிறுவர்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதேபோல் புரட்சிகர மாணவர் முன்னணியினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் வள்ளுவர் கோட்டம் முன்பு போராட்டம் நடத்தினர்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.