மோடி இன்னொரு இராசபக்சே - பசில் இராசபக்சே கருத்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 06 ஜூன் 2014 13:12

இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி ஆசியாவின் இன்னொரு மகிந்த ராஜபக்சே என்று கருத்து தெரிவித்துள்ளார். மகிந்தவின் சகோதரரான பசில் இராசபக்சே நரேந்திரமோடியின் வெற்றி குறித்து பசில் இராஜபக்சே கூறியுள்ளதாவது: ஆசியாவில் இன்னொரு ராஜபக்சேவாக மோடி உருவாகி உள்ளார்.

இருவருக்கும் இடையே ஒத்த சிந்தனை இருக்கிறது. குஜராத்தில் மோடி எத்தகைய வாக்குறுதிகளைக் கொடுத்து நிறைவேற்றினார். அதையேதான் மகிந்த ராஜபக்சேவும் நாட்டு மக்களுக்கு அளித்து நிறைவேற்றினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்தான் என்று இலங்கையின் அரசியல் விமர்சகரான தயான் ஜயதிலக கூறியுள்ளார். இது தொடர்பாக பி.பி.சி. தமிழோசைக்கு அவர் அளித்த பேட்டி:

"இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கப்போகும் நரேந்திர மோடியும் ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித் துண்டுகளே.

நரேந்திர மோடியே வெற்றி பெறுவார் என்பதை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார். அதுவும் தமிழ்நாட்டு கட்சிகளை நம்பாமல் நிச்சயம் மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இலங்கையை ஆளும் ராஜபக்சேவின் கட்சிக்கும் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே பெரிய அளவில் நடைமுறை சித்தாந்தங்களில் வேறுபாடுகள் இருக்காது. ஒத்த எண்ணம் கொண்ட தேசியவாத, வெகுஜன மக்களை வசப்படுத்தும் கொள்கை கொண்ட ஒருவர் முக்கிய அண்டை நாடான இந்தியாவின் பிரதமராவதை மகிந்த ராஜபக்சே வரவேற்கவே செய்வார்.''

குஜராத்தில் மோடி எதை நிறைவேற்றினாரோ அதேதான் மகிந்தஇராசபக்சேயும் இலங்கையில் நிறைவேற்றியிருக்கிறார் என பசில் இராசபக்சே கூறியிருப்பதும் மோடியும் இராசபக்சேயும் ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித்துண்டுகளே என ஜெயதிலக கூறியிருப்பதன் பொருளென்ன?

குஜராத்தில் சிறுபான்மையினரான முஸ்லிம்களை மோடி கொடூரமாக ஒடுக்கினார். அதைப்போல இராசபக்சேயும் இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களை ஒடுக்கினார். ஆகவேதான் இருவரையும் இவர்கள் ஒப்பிடுகிறார்களா?

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.