தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபடவேண்டியது ஏன்? PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:18

29-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய அமைப்புகள், உணர்வாளர்கள் கூட்டத்தில் பேசிய பழ.நெடுமாறன் தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசியபோது கீழ்க்கண்ட 10 காரணங்களைக் குறிப்பிட்டார் :


1. உலக மயமாக்கலின் விளைவாக பல மொழிகளும் அம்மொழிகள் பேசிய தேசிய இனங்களும் அழிந்து வருவதை யுனெஸ்கோ அமைப்பின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உலக அளவில் இன்னும் நூறாண்டுகளில் அழிந்து விடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் 8ஆம் இடத்தில் உள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

மொழி அழிவுக்குக் கீழ்க்கண்டவற்றைக் காரணங்களாகக் காட்டியுள்ளது.

அ. வேற்றுமொழி சொற்கள் கலப்பு

ஆ. தாய்மொழியைப் புறந்தள்ளி பிறமொழியில் கல்வி

மேற்கண்ட இரண்டு காரணங்களும் தமிழுக்கும் முற்றாகப் பொருந்தி வருகின்றன. தமிழில் வடசொல் கலப்பினால்தான் அது தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளாகத் திரிந்தன. இப்போது ஆங்கிலம் கலந்து பேசுகிறோம். இதன் விளைவாகவும் தமிழ் திரியும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழைப் புறந்தள்ளிவிட்டு அயல்மொழியான ஆங்கிலத்தை நாம் கல்விமொழியாக ஏற்றிருக்கிறோம். இதன் விளைவாக எதிர்காலத்தில் நமது குழந்தைகள் தமிழே தெரியாமல் வளரும் சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

2. 2009ஆம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய அளவுக்கு தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். இதன் விளைவாக மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ் மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழர்களிடையே அச்சம் பரவியிருக்கிறது. இந்நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்களை அங்கு பெரும்பான்மையின மக்கள் விரட்டுவது என முடிவு செய்தால் அவர்களைக் காக்கும் சக்தி தாய்த் தமிழகத்திற்கு உண்டா என்பதில் ஐயப்பாடு இருக்கிறது.

"தமிழ்நாட்டுக்கு மிக அருகில் இருக்கக்கூடிய இலங்கையில் வாழும் தமிழர்களையே காப்பாற்ற முடியாத தாயகத் தமிழர்கள் நம்மை எப்படிக் காப்பாற்றுவார்கள்?' என்ற அவர்களின் நியாயமான அச்சத்திற்கு நமது பதில் என்ன?

3. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவது உலகத் தமிழர்களின் கரங்களிலேயே உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் எந்த அளவுக்கு ஒன்றுபட்டு நிற்கிறார்களோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படும்.

4. தமிழ்நாடு வலிமையாவது தமிழ்த் தேசியர்களின் கரங்களிலேயே உள்ளது. இதற்கு அவர்கள் தம்முள் இணைந்தாக வேண்டும்.

5. தமிழகம் இன்று வந்தேறிகளின் வேட்டைக்காடாகத் திகழ்கிறது. மார்வாடி, குஜராத்தி, பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் ஆகியவற்றின் சுரண்டல் காடாக தமிழகம் மாறிவிட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் தொழில் வணிகம் ஆகியவை தமிழரிடம் இல்லை. வந்தேறிகளின் வேட்டைக்காடாக தமிழகம் திகழ்வதைத் தடுத்து நமது பொருளாதாரத்தை மீட்கும் வலிமை தமிழ்த் தேசியர்களிடமே உண்டு. இதை உணர்ந்து நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.

6. தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சூறையாடப் படுகின்றன. வன வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. தங்குதடையின்றி நடைபெறும் இந்தச் சூறையாடலும் கொள்ளையடிப்பும் தொடர்ந்து நீடிக்குமானால், எதிர்கால நமது தலைமுறை வளமற்ற தமிழகத்தில் வாழ நேரிடும். இந்த அபாயத்தை தடுத்து நிறுத்துவதும் எஞ்சிய நமது வளங்களை காப்பதும் தமிழ்த் தேசியர்களின் நீங்காத கடமையாகும்.

7. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்சினைகளில் அண்டை மாநிலங்கள் நம்மை வஞ்சிக்கின்றன. மத்திய ஆட்சியோ நம்மை அலட்சியம் செய்கிறது. உச்சநீதிமன்றம் நமக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பைக்கூட செயல்படுத்த முடியாதவர்களாக நாம் உள்ளோம். தமிழகத்தின் தேசியப் பிரச்சினைகளான இப்பிரச்சினைகளில் தீர்வு காணவும் நமது உரிமையை நிலைநிறுத்தவும் தமிழ்த் தேசியர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே இயலும்.

8. கல்வி, மருத்துவம் ஆகியவை இன்று வாணிபப் பொருளாகிவிட்டன. பணம் படைத்தோர்க்கே இவை கிட்டுகின்றன. ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் இவை உள்ளன. காற்றும் நீரும் எப்படி அனைவருக்கும் பொதுவானதோ அதைப்போல கல்வியும், மருத்துவமும் இருக்க வேண்டும்.

9. தமிழகத்தில் ஆட்சிமொழி, கல்விமொழி, நீதிமன்றமொழி, வழிபாட்டுமொழி ஆகியவையாக தமிழ் இல்லை. நமது மொழிக்குரிய முதன்மை கிடைக்க தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபட்டாக வேண்டும்.

10. கூடங்குளம் அணு உலை, தஞ்சை மீத்தேன் வாயு திட்டம், தேனி மாவட்டத்தில் நியூட்ரான் திட்டம் போன்ற மக்களுக்கு அபாயகரமான திட்டங்களை முறியடித்து மக்களைக் காப்பது தமிழ்த் தேசியர்களின் கடமை. அதற்காக அவர்கள் ஒன்றுபட்டாக வேண்டும்.

நமது பகைவர்கள் வலிமை குன்றிவருவது உண்மையென்றாலும், மொழிவழித் தேசிய உணர்வு கொண்டோரை ஒடுக்குவதில் அவர்கள் ஒன்றிணைந்து கொள்வார்கள். எனவே நாம் ஒன்றுபட்டு நின்றால் ஒழிய அவர்களை எதிர்க்க நம்மால் இயலாமல் போகும்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.