வென்றாக வேண்டும் தமிழ்த்தேசியம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:24

நம் எதிரிகள் நம்மைவிட வலிமையானவர்கள் அல்ல. ஆனாலும், நாம் தோற்றுக் கொண்டே இருக்கிறோம். காரணம், நாம் பிரிந்து கிடக்கிறோம். இந்திய தேசியத்தை எதிர்த்தும், நம்மீது திணிக்கப்பட்ட திராவிட தேசியத்தை எதிர்த்தும், தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். ஆனாலும், சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலையிலேயே நம் அரசியல் பயணங்கள் தொடர்கின்றன.

கடந்த 40 ஆண்டுகாலமாக தமிழ் மண்ணை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளாலும் தமிழர்களின் மொழியுரிமை, மண்ணுரிமை பறிக்கப்பட்டு தங்கு தடையற்ற பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளாகி தமிழகம் இன்று கதவில்லாத வீடாக காட்சியளிக்கின்றது.

தமிழர்களின் வாக்கை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான வேலையையே முதலில் செய்யத் தொடங்குகின்றனர். சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை தமிழ் மக்களின் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. தங்களின் வாழ்வாதாரங்களை தற்காத்து கொள்ளவே ஆயுளுக்கும் போராடவேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளனர். இந்த இழிநிலை எப்போது மாறும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

இந்திய தேசியத்திற்கு கடைசி வரை அடங்க மறுத்துவரும் தமிழினத்தை அடக்கியாள நவீன சிற்றரசர்களும் பேரரசர்களும் படாதபாடு பட்டுவருகின்றனர். இதனால் தான் தமிழினத்திற்கு பேரழிவை உண்டாக்கும் கூடங்குளம் அணுஉலை திட்டம், மேற்குதொடர்ச்சி மலையையும், காடுகளையும் அழிக்கும் நியூட்ரினோ ஆய்வகம், டெல்டா விவசாயிகளை விரட்டியடிக்க மீத்தேன் எடுப்புக்கான திட்டம், கொங்கு மண்டல விவசாயிகளை வெளியேற்ற கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, திருவண்ணாமலை கவுத்திலிவேடியப்பன் மலைகளை விழுங்கத் துடிக்கும் ஜிண்டால் குழுமம் என ஒட்டுமொத்த தமிழகத்தையே சூறையாடத் துடிக்கின்றனர்.

இந்த நாசகார திட்டங்களால் நேரிடையாகப் பாதிக்கும் மக்கள் அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இம்மக்களுக்குத் துணையாகவும், போராட்டங்களுக்கு ஆதரவாகவும் கடைசிவரை இணைந்து நிற்பவர்கள் தமிழ்த்தேசியர்கள் தான். எடுத்துக்காட்டாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தினை சில அரசியல் கட்சியினர் ஆதரித்தாலும், உண்மையான ஈடுபாட்டை இதில் அவர்கள் செலுத்தவில்லை. இம்மக்களின் போராட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியல் விழிப்புணர்வு பெற்ற போராட்டங்களாக முகிழ்ந்து வருவதைக் கண்டு இவர்கள் உள்ளூர அச்சம் கொண்டுள்ளனர். அதிகாரத்தில் இருந்தவர்களோ இப்போராட்டத்தினை கண்டும் காணாமல் இருக்கின்றனர். தமிழ் தேசிய உணர்வாளர்கள் மட்டுமே இவ்வகை போராட்டங்களுக்கு கடைசிவரை துணை நின்று வருகின்றனர். காரணம், தமிழ்த் தேசியர்கள் மட்டுமே உண்மையான மக்கள் தொண்டர்களாக, மண், மொழி காப்புப் போராளிகளாக உள்ளனர். இது பலருக்கு கசந்தாலும் உண்மை இது தான்.

தி.மு.கவின் மீதுள்ள வெறுப்பு, அ.தி.மு.க.வுக்கு வாழ்வளிக்கிறது. காங்கிரஸ் தலைமையின் மீதான கோபம், பா.ஜ.க.வை அதிகாரத்தில் உட்காரவைத்துள்ளது. இதுதான் உண்மை. ஆனால் மக்கள் செல்வாக்கு தங்களுக்கே உண்டு என அதிகாரத்திற்கு வருபவர்கள் மார்தட்டுகிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் இவர்களை எதிர்ப்பதற்கு வலிமையான இயக்கங்கள் இல்லாததால் இவர்களையே மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுக்கும் அவலநிலைக்கு மக்கள் ஆளாகிறார்கள்.

தேசிய இன விடுதலைக்காக போராடும் கட்சிகள் மாநிலங்களில் வலுப்பெறும்போது மத்தியில் உண்மையான கூட்டாட்சிக்கு வழிபிறக்கும். இது ஒன்றும் அவ்வளவு சீக்கிரத்தில் சாத்தியமாகிவிடாது. அய்யா பழ.நெடுமாறன் கூறுவது போல தொண்டு, துன்பம், தியாகம் ஆகிய அடித்தளங்களின் மீது தமிழ்த் தேசியம் கட்டப்படவேண்டும். இம்மூன்று சொற்களையும் மந்திரச் சொற்களாக ஏற்றுக்கொண்டு களம் காண ஒவ்வொரு தமிழ்த்தேசிய இளைஞனும் முன்வரவேண்டும்.

தலைக்கு ஒரு தத்துவமும் தலைக்கு ஒரு கொடியும் நீடிக்கும் வரை தமிழ்த்தேசியம் சாத்தியமில்லை என்ற உண்மையை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

உலகத்தமிழர்களின் நம்பிக்கை ஒளியாகவும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் தனிப்பெரும் தலைமையாகவும் விளங்கிவரும் அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் பெரும் முயற்சியால் 29.06.2014 அன்று தோற்றுவிக்கப்பட்ட தமிழர் தேசிய முன்னணியின் ஒரே நோக்கம் "வென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம்' என்பதுதான்.

தமிழீழ விடுதலைப் போரில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உதயமான தமிழர் தேசிய முன்னணியை அனைத்து தமிழர்களும் தாங்கிப்பிடிக்கவேண்டும். முன்னணியின் லட்சியத்தை முழங்கவேண்டும். இதை இங்கே நான் பதிவு செய்வதற்குக் காரணம் இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 400-க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கூடிய அரங்கில் காலை முதல் இரவு 7 மணிவரை நீடித்த கலந்துரையாடலின் விளைவாக "தமிழர் தேசிய முன்னணி' உருவானது.

அன்று இரவு சுமார் 11 மணியளவில் தலைவர் நெடுமாறனுடன் முற்றத்தில் உள்ள அவரது அறையில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, மனவேதனையுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

"எனக்குப் பிறகு இந்த பணியை முன்னெடுத்துச் செல்ல உங்களை போன்ற இளைஞர்கள் முன்வரவேண்டும். காலாகாலத்திற்கும் நானே தலைவராக நீடிப்பதென்பது எனக்கு சலிப்பை தருகிறது. என் உடலும், உள்ளமும் இதை ஏற்க மறுக்கிறது. இன்று இருக்கும் நான், நாளையே இல்லாமல் போகலாம். என்னிடமும் சங்கரநாராயணன் என்பவரிடமும் (பிற்காலத்தில் மராட்டிய மாநிலத்தின் கவர்னராக இவர் இருந்தார்) பெரியவர் (காமராசர்) அடிக்கடி ஒன்று கூறுவார். "திடீரென நான் இல்லாமல் போய்விடலாம். எனவே அரசியல் பயணத்தை தனித்து தொடரும் அளவுக்கு உங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்' என்பார். பெரியவர் சொன்னது போலவே நடந்தது. திடீரென அவர் மறைந்தார். நாங்கள் எல்லாம் பெரியவர் சொன்னதைச் செய்து பழக்கப்பட்டதால் எங்களால் சுயமாக இயங்க முடியவில்லை. பிறகு எப்படியோ, தட்டுத்தடுமாறி இன்று இந்தளவுக்குத்தான் வரமுடிந்தது. என்னைப் போல நீங்களும் இருந்துவிடக்கூடாது. நாளைக்கே நான் இல்லாமல் போய்விட்டால் உங்களை போன்ற இளைஞர்களின் நிலை என்ன? "தனக்கடுத்து அரசியலில் யாரையுமே உருவாக்காமல் போய்விட்டான் நெடுமாறன்' என்ற தீராப்பழி எனக்கு வந்துசேரும். உங்களைப் போன்ற இளைஞர்கள் நான் இருக்கும்போதே அடுத்த நிலைக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இப்படி ஒரு பத்துப் பேராவது உருவானால்தான் என் பொது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்'' என்றார்.

எதற்காகவும் தலைவர் நெடுமாறன் முன் கண் கலங்கக்கூடாது என்ற என் மனவுறுதியை அவரது கவலை தோய்ந்த பேச்சு உருக்குலைத்தது. உடைந்து வெளியேறிய என் விழி நீரை அவருக்கு தெரியாமல் துடைக்க முயன்று தோற்றுப்போனேன்.

"எதுக்குப்பா கண் கலங்குற? நெருப்பு என்றால் வாய் வெந்து போகுமா? அவ்வளவு சீக்கிரத்தில் நான் போய்விடமாட்டேன். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய எழுச்சியையும், தமிழீழத்தில் அடுத்தக்கட்ட விடுதலைப் போரையும் பார்க்காமல் நான் கண்ணை மூடமாட்டேன். என் உடல் ஒத்துழைக்காமல் இருந்தாலும், இப்போது செய்யும் வேலையை அப்போதும் உறுதியாகச் செய்வேன். போய் நிம்மதியாக தூங்கு'' என்றார்.

தூக்கம் மென்மையானது என்பதை நான் அறிவேன். ஆனால் அன்று இரவு தூக்கம் என்னைவிட்டு நெடுந்தூரம் விலகிச் சென்றது. தன் சக்திக்கு மீறிய சுமையை இந்த 81 வயதிலும் அய்யா நெடுமாறன் அவர்கள் சுமந்து கொண்டிருக்கிறாரே என்ற கவலையை விட "அந்த சுமையில் எனக்கான பங்கு எவ்வளவு?' என்று என் மனசாட்சி என்னை தூங்கவிடாமல் துளைத்துக்கொண்டேயிருந்தது.

21.10.1873ம் ஆண்டு வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் சன்மார்க்கக் கொடிகட்டி மக்களிடம் பேருபதேசம் செய்த வள்ளலார் அவர்கள் "இங்குள்ள நீங்கள் அனைவரும் இதுவரைக்கும் இருந்ததுபோல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள். இனிவரும் காலம் சன்மார்க்க காலம்'' என்றார். இன்று நம்மிடையே வாழும் வள்ளலாராக திகழும் அய்யா நெடுமாறன் அவர்களும், இனிவரும் காலம் தமிழ்த்தேசியத்தின் காலமென்று தமிழர் தேசிய முன்னணியின் கொடியை உயர்த்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

வள்ளலாரின் பேருபதேசத்தை மதிக்காத நம் முன்னோர்கள் செய்த பிழையை நாம் திருத்தியாகவேண்டும். வள்ளலார் உபதேசித்து 150 ஆண்டுகள் கழித்து, மீண்டும் தமிழ்த் தேசியத்திற்கான பேருபதேசம் அய்யா. நெடுமாறன் மூலம் வெளிப்பட்டுள்ளது. வென்றாக வேண்டும் தமிழ்த்தேசியம். இதை செயல்படுத்த நாம் ஒன்றாவதைத் தவிர வேறுவழியில்லை.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.