பெருத்தெழுகாதலோடும் பெருந்திருத்தொண்டு - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:37

"தமிழ்மொழித் தலைவர்' என சேக்கிழாரால் போற்றப்பட்ட திருநாவுக்கரசர் தனது தூயத் தொண்டினால் மக்கள் மனம் கவர்ந்தவர். உழவாரம் என்னும் கருவியைத் தோளில் தாங்கி ஊர் ஊராகச் சென்று அங்கிருந்த கோயிலின் மதிற்சுவரிலும், மண்டபங்களிலும், பிரகாரத்திலும் முளைத்துக் கிடந்த செடிகொடிகளையும், புதர்களையும் உழவாரத்தினால் செதுக்கிக் கோயில்களைத் தூய்மைப்படுத்தியவர் திருநாவுக்கரசர். அவரின் எளிய இந்தத் திருத்தொண்டு மக்களைக் கவர்ந்தது. அவர்களும் அவரது தொண்டிற்குத் துணையாக நின்றார்கள்.

தமிழகத்தில் அண்மைக் காலத்தில் ஏராளமான திருத்தொண்டர்கள் தோன்றி தன்னலமில்லாமல் மக்கள் தொண்டு புரிவதைப் பார்க்கும்போது "மானுடம் வென்றதம்மா' என்ற கம்பனின் சொற்கள் நம்முன் நடனமாடுகின்றன.

தமிழகத்தின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கடந்த சூன் 28ஆம் தேதி சென்னை போரூரை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் 11மாடிக் கட்டிடம் இடிந்து தகர்ந்து விழுந்தபோது, அந்த இடிபாடுகளுக்குள் ஏராளமான கட்டிடத் தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். ஒடிசா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் அவர்கள் ஆவார்கள். இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கிக்கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், சில நிமிட நேரங்களில் காவல்துறை, தீயணைப்புப் படை, ஆம்புலன்சு, அரசு மருத்துவர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட அனைவரும் அங்கு திரண்டார்கள். கொட்டும் மழையைக்கூட பொருட்படுத்தாமல், இரவு- பகல் பாராமல் அவர்கள் மனிதநேயத்துடன் ஆற்றிய தொண்டு எல்லோரையும் நெகிழ வைத்தது.

27 பேரை உயிருடன் மீட்டனர். 61 உயிரற்ற உடல்களையும் மீட்டனர். இந்த மனிதநேயத் தொண்டில் மனிதர்கள் மட்டுமல்ல, மோப்ப நாய்களும் ஈடுபட்டு அருந்தொண்டாற்றின. இதில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் இராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்களும் தாதிகளும் ஊழியர்களும் ஆற்றிய பணி அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள கடைகளை ஒருவார காலத்திற்கு மேலாக வணிகர்கள் அடைத்து மீட்புப் பணிக்கு உதவினார்கள். அதுமட்டுமல்ல, மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், மோர் மற்றும் பிஸ்கட் அனைவருக்கும் வழங்கினார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்த உறவினர்களுக்கும் தேவையான உணவு, படுக்கை விரிப்புகள், சோப்புகள் போன்றவற்றையும் சிலர் வழங்கினார்கள். அரசு சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் முதலிய எல்லாவற்றையும் வழங்கினார்கள். இறந்தவர்களின் உடல்களை அவரவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்கள் இரவு, பகலாக வேலை செய்தன.
இடிபாடுகள் 400க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் அகற்றப்பட்டது என்பதே இந்த பணி எத்தகைய சவால்மிக்க பணியாகத் திகழ்ந்தது என்பது புரிகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கு 6 நாட்கள் அதாவது 135 மணி நேரம் மீட்புப் பணி இரவு - பகல் பாராது நடைபெற்றது.

பீகாரைச் சேர்ந்த மீட்புப்படை வீரர் ஒருவர் கூறும்போது "பல மாநிலங்களில் நாங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக மக்கள் காட்டிய அன்பும், அரவணைப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை'' என்றார்.

இயற்கைப் பேரிடர்கள் நேரிடுவது எதிர்பாராததாகும். ஆனால், அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழக மக்களும், இப்பணியில் ஈடுபட்டவர்களும் எழுந்து நின்று தொண்டாற்றிய விதம் அற்புதமானது. அனைவருமே பாராட்டிற்குரியவர்கள்.
கங்கையைத் தூய்மை செய்ய மத்திய அரசு பல நூறுகோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. அரசு ரீதியில் இப்பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், தமிழகத்தின் வற்றாத ஒரே ஜீவநதியான தாமிரபரணி நதியை தூய்மைசெய்யும் பணியை திருத்தொண்டர்கள் பலர் ஏற்று செய்தனர்.

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் கிறிஸ்துவ துறவி ஜான்சன் மற்றும் அய்கோ உட்பட பலர் ஒன்றுசேர்ந்து தாமிரபரணி ஆற்றில் வளர்ந்துள்ள உடை மரங்களையும், அமலைச் செடிகளையும் அகற்றினர். பாபநாசத்தில் ஆற்றுக்குள் குவிந்துகிடந்த குப்பைகளையும் துணிகளையும் அகற்றினர். இந்த பணியில் அந்தந்தப் பணிகளைச் சேர்ந்த நகரசபை பேரூராட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

அதைப்போலவே குற்றாலத்தில் இளைஞர்கள் பலர் கூடி குற்றாலப் பேரருவிக் கரையில் அமைந்திருந்த பூங்காவைத் தூய்மை செய்தனர். குற்றால அருவிகளின் அருகே உள்ள இடங்களையும் அவர்கள் தூய்மைப் படுத்தினர். இந்த தூய பணியில் கல்லூரி ஆசிரியர்கள் முதல், பள்ளி மாணவர்கள் வரை பங்கேற்றது மனித நேயம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஏதோ ஒரு கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் தனது மனைவியை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்ற ஒருவரின் 9 வயதான சிறுவன் தன்னுடைய தம்பிகள் இருவரையும் காப்பாற்ற வழியில்லாமல் திண்டாடினான். வயதான அவனது பாட்டியினால் இவர்களுக்கு உணவளிக்கக்கூட முடியவில்லை.

பாளையங்கோட்டை சிறையில் இதைப்போல 468 சிறைவாசிகளின் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களின் நல்வாழ்விற்காக ராஜா மற்றும் சுந்தர் என்னும் இரண்டு இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு எத்தகைய விளம்பரமும் தேடாமல் தொண்டாற்றி வருகிறார்கள். இந்தச் சிறுவர்களைப் படிக்கவைக்கவும் அவர்களை விடுதிகளில் சேர்க்கவும் தங்களைப் போன்றவர்களிடமிருந்து நிதிதிரட்டி உதவும் திருத்தொண்டில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் இளைஞர்களும் இளம் பெண்களும் இணைந்து மற்றொரு திருத்தொண்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். கை நிறைய ஊதியம் பெற்று தான் உண்டு தனது குடும்பம் உண்டு என்று இருக்காமல் தங்களது ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி ஏதிலார்க்கு உதவும் திருத்தொண்டில் சில இளைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறீதேவி, பழனிராஜா, அரிகிருட்டிணன், இளமதி போன்ற இளைஞர்கள் ஒன்றுகூடி உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு பணியகம் என்ற பேரில் ஒரு அமைப்பை நிறுவி முகநூல் ஊடாக தொண்டாற்றுகிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழ் அகதிகளின் குழந்தைகள் மற்றும் தமிழ்நாட்டில் வாழும் ஏழை - எளிய மக்களின் குழந்தைகள் ஆகியோரின் கல்விக்கு உதவும் திருத்தொண்டினை ஆரவாரமில்லாமல் செய்துவரும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பழங்குடி இன மக்களின் பிள்ளைகளைப் பட்டதாரிகளாக உருவாக்கும் மாபெரும் தொண்டில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கருப்புசாமியும் அவரது நண்பர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கருப்புசாமியும் அவரது நண்பர்களும் சேர்ந்து "கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் என்ற அமைப்பை கடந்த 13 ஆண்டுகாலமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் குழந்தைகளுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். இந்தக் குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்கு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்களை அழைத்து வந்து வகுப்புகள் நடத்துகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 327 பழங்குடிச் சிறுவர்களை கல்லூரிகளில் சேர்த்திருக்கிறார்கள். இவர்களின் முயற்சியின் விளைவாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த நால்வருக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. அமைதியாக எத்தகைய விளம்பரமும் தேடாமல் இவர்கள் ஆற்றிவருகிற திருத்தொண்டின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

வாழையடி வாழையாக தமிழர்களின் அறம் சார்ந்த கொள்கையாக மது விலக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இதனை சற்றும் மதியாமல் தமிழகத்தில் புகுத்தப்பட்டுள்ள மதுவினால் இளைஞர்களும் தொழிலாளர்களும் சீரழிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சீரழிவிலிருந்து இவர்களை மீட்பதற்காக மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் போராட்டத்தில் அரசியல் கட்சிகள் பல ஈடுபட்டுள்ளன. ஆனால், தன்னந்தனியாக சட்டக்கல்லூரியைச் சேர்ந்த மாணவியான நந்தினி இத்தீமைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம், மறியல் போன்ற பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி சிறையும் சென்று திரும்பியிருக்கிறார். இவருடன் செந்தில், ஆறுமுகம் போன்ற படித்த இளைஞர்களும் இப்போராட்டத்திற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். எந்த இளைய சமுதாயம் மதுவினால் சீர்கேடு அடைந்துள்ளதோ, அதே சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மதுவை எதிர்த்து உறுதியோடு போராடுவது பாராட்டத்தக்கதாகும்.

இன்னும் பல துறைகளிலும் ஏராளமான இளைஞர்கள் சமுதாயத் தொண்டு புரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு உள்நோக்கம் எதுவும் கிடையாது. இளைஞர்களுக்கு இத்தகைய சமுதாயச் சிந்தனை பிறந்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.

1500 ஆண்டுகளுக்கு முன்னால் திருநாவுக்கரசர் எதையும் எதிர்பார்க்காமல் திருத்தொண்டு செய்து மக்களுக்கு வழிகாட்டினார். அதனால்தான் அவர் "பெருத்தெழுகாதலோடும் பெருந்திருத்தொண்டு'' புரிந்த பெருந்தகை என பாராட்டப்பெற்றார். அதாவது "பெருத்த விருப்பத்தோடு பெரும் திருத்தொண்டு புரிந்தவர்''ளுளு என மக்களால் மதிக்கப்பட்டார். போற்றப்பட்டார். இன்றைக்கு அதைப்போலவே பெரும் திருத்தொண்டு புரிந்துவரும் இளைஞர்கள் அனைவரும் தமிழக மக்களின் பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாவார்கள்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.