பாசறைகள் அமைகின்றன - படைகள் உருவாகின்றன PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:29

தமிழர் தேசிய முன்னணியின் தோற்றம் தமிழக அரசியலில் ஒரு பரபரப்பையும், பெரும் எதிர்பார்ப்பையும் தோற்றுவித்துள்ளது. தமிழ்த் தேசியர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ், ஒரு கொடியின் கீழ் திரட்டவேண்டும் என்ற ஆவல் பன்னெடுங்காலமாக தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்தது.

தமிழக அரசியலில் ஒரு மாற்று அணி உருவாகவேண்டும் என பலரும் விரும்பினார்கள். மாறிமாறி திராவிடக் கட்சிகளே தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து அரசு நிர்வாகத்தை சீர்குலைத்தன. மக்களிடமிருந்து ஜனநாயக உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டன. இலஞ்சமும், ஊழலும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி முடை நாற்றம் எடுத்தது. எடுக்கிறது. காசை விட்டெறிந்தால் தமிழ்நாட்டில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நிலைமை பிறந்து இந்தியப் பெரு முதலாளிகளும், பன்னாட்டுப் பெரு முதலாளிகளும் தமிழகத்தில் படைபடையாகப் புகுந்தனர். தமிழ்நாட்டு வளங்கள் சூறையாடப்படுகின்றன. ஆனால், இவற்றை குறித்த கவலை ஆட்சிக் கட்டிலில் வீற்றிருந்தவர்களுக்கும், இப்போது வீற்றிருப்பவர்களுக்கும் கொஞ்சமும் இல்லை. தங்களது கல்லாப்பெட்டி நிரம்பினால் போதும் என இருந்தனர். இப்போது இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில்தான் முக்கிய தேசியப் பிரச்சனைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்சனைகளும், தமிழக மீனவர்கள் பிரச்சனையும், ஈழத் தமிழர் பிரச்சனையும் பெரும் வடிவெடுத்தன. ஆனால், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழியும் தெரியாமல் வகையும் புரியாமல் செயல்பட்டுத் தமிழினத்திற்குப் பெரும் துன்பத்தை இழைத்தனர்.

தில்லியில் ஆட்சியில் உள்ள கட்சி எதுவானாலும் அதனுடன் கூட்டுச்சேர்ந்து பதவிகளைப் பெற்றார்களே தவிர, தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க அந்தப் பதவிகளைப் பயன்படுத்தவில்லை. அங்கேயும் தங்களின் ஊழல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழினத்திற்கு மாறாத அவமானத்தைத் தேடித் தந்தார்கள்.

இந்நிலையில், இவர்களுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க வேண்டுமானால் அது தமிழ்த் தேசிய உணர்வாளர்களைக்கொண்ட அமைப்பாகத்தான் இருக்க முடியும். மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றவே "தமிழர் தேசிய முன்னணி' உருவாக்கப்பட்டது.

எந்த இயக்கத்திற்கும் அல்லது அமைப்பிற்கும் கட்டுக்கோப்பான கிளை அமைப்புகளே வலிமை சேர்க்கும். மாவட்ட அமைப்பு முதல் சிற்றூர் அமைப்பு வரை தமிழகம் முழுவதிலும் அமைப்புகள் உருவாக்கப்படுவதன் மூலமே முன்னணி வலுவான அமைப்பாகத் திகழ முடியும். தமிழகத்தில் நமது முன்னோர் வானளாவிய கோபுரங்களைக் கட்டினார்கள். ஆயிரம் ஆண்டுகாலத்திற்கு மேலாக அவை இன்றளவும் நின்று நிலவி தமிழகப் பெருந் தச்சர்களின் திறமைக்குச் சான்றாக நிமிர்ந்து நிற்கின்றன. அதைப்போல தமிழர் தேசிய முன்னணியும் தமிழர்களின் பேராதரவுடன் தலைநிமிர்ந்து நிற்க கட்டுக்கோப்பான ஒரு அமைப்பாகத் திகழ வேண்டும்.

இந்த கடமையை நிறைவேற்றுவதற்காகத் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைமை நிர்வாகிகள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டோம். துணைத் தலைவர்களான வி. சேகர், அரு.கோ., கி.த. பச்சையப்பன், பொதுச்செயலாளர்கள் க.பரந்தாமன், சி. முருகேசன், சா. குப்பன், இனியன் சம்பத், ஜோசப் கென்னடி, முத்தமிழ் மணி, வ. கெளதமன், பொருளாளர் சாத்தப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருத்தணி

தமிழகத்தின் வட எல்லையும், வேலவன் குன்றமுமான திருத்தணியில் திருவள்ளூர் மாவட்டக்குழு அமைத்த கூட்டத்திற்காக 02-08-14 சனிக்கிழமை அன்று நாங்கள் சென்ற போது, நகர எல்லையிலேயே பொதுச் செயலாளர்கள் பா. குப்பன், முத்தமிழ் மணி ஆகியோர் தலைமையில் திரளான தோழர்கள் கூடி உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அங்கிருந்து ஊர்வலமாகக் கூட்டம் நடைபெறும் இடத்திற்குத் தலைவரும், இதர நிர்வாகிகளும் அழைத்துச் செல்லப்பட்டனர். இளைஞர்கள் பலர் தமிழ்த் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி முழக்கமிட்ட வண்ணம் இருசக்கர ஊர்திகளில் சென்றபோது வழிநெடுக மக்கள் கூடி வரவேற்றனர்.

திருத்தணி வன்னியர் சத்திரம் ஒரு போர்ப் பாசறையாகத் திகழ்ந்த இடம். வட எல்லைப் போராட்டத்தில் இந்த இடம்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மங்கலம் கிழார், ரசீத், தளபதி விநாயகம் மற்றும் எல்லைப் போராட்ட வீரர்கள் இங்கு தங்கி பின்னர் களம் புகுந்து போராடிச் சிறை சென்றார்கள். அய்யா ம.பொ.சி சிலையின் அருகே தமிழ்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபோது எனது நெஞ்சம் நெகிழ்ந்தது. வட எல்லைப் போராட்டக் களத்தில் முதன்முதலாக தமிழ்த் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் பேறு எனக்குக் கிடைத்ததை எண்ணி எனது நெஞ்சம் பெருமிதம் கொண்டது.

"தமிழராய் ஒன்றிணைவோம்! தமிழர் தேசிய முன்னணி வெல்க!' என்ற உற்சாகமான முழக்கங்களுக்கிடையே வன்னியர் சத்திரத்தில் நாங்கள் நுழைந்தபோது, ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு சிலம்புச் செல்வர் தலைமையில் எல்லைப்போரில் சிறை புகுந்தும், தியாகத் தழும்புகள் ஏற்றும் பெருந்தொண்டு புரிந்த தியாகச் சீலர்கள் தணிகைச் சிலம்பன் என்ற சிவசுப்ரமணியன், வங்கனூர், க.பு. ஜானகிராமன் மற்றும் வடக்கெல்லைப் போராட்ட வீரர்கள் வரவேற்றபோது எனது கண்கள் பனித்தன.

தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட அமைப்புக் கூட்டத்தை முதன் முதலாகத் திருத்தணியில் தொடங்கும்போது எல்லைப் போராட்ட தியாகச் சீலர்கள் வரவேற்றது நல்ல அறிகுறியாக எனக்குப்பட்டது. தமிழர் தேசிய முன்னணி எதிர்காலத்தில் நேர்கொள்ளவேண்டிய போராட்டங்களுக்கு வாழ்த்துக் கூறவே அவர்கள் வந்ததாகக் கருதி மகிழ்ந்தேன்.

போர்ப் பாசறையாகத் திகழ்ந்த அந்த மண்ணில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் திரளாகக் கூடி இருந்தனர். இளைஞர்கள் பலரும் உற்சாகமாக அமர்ந்திருந்தனர். தமிழர் தேசிய முன்னணி கொள்கைப் பட்டயம் குறித்தும், இன்னும் இணையாமல் இருக்கிற தமிழ்த் தேசியர்களை வந்து சேருமாறு அழைத்தும் உரையாற்றினேன். அதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் பலரும் பேசினர். பிறகு வந்திருந்தோர் அனைவருடனும் கலந்து ஆலோசனை செய்து மாவட்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழ்த் தேசியப் பிரச்சனைகளில் ஈடுபட்டுச் செயல்பட்டு வருகிற இளைஞர்கள் மாவட்ட நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் தலைவராக செள. சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர்களாக கே. சண்முகசுந்தரம், இராஜேந்திரன், செயலாளர்களாக வெங்கடேசுவரன், எம். இராமச்சந்திரன், பொருளாளராக க.ப. சீனிவாசன் ஆகியோரும், மகளிர் அணி அமைப்பாளராக கு. விசயா, இளைஞர் அணி அமைப்பாளராக பெ. சுந்தரசேகர், மாணவர் அணி அமைப்பாளராக பா. நவீன்குமார் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளை மேடைக்கு அழைத்து அவர்களைக் கூடி இருந்தோர்க்கு அறிமுகப்படுத்தியபோது கையொலியால் அந்த மண்டபமே அதிர்ந்தது.

தமிழர் தேசிய முன்னணியின் முதல் கூட்டமே மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைந்ததற்கு பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான பா. குப்பன் அவர்களும், மற்றொரு பொதுச் செயலாளர் முத்தமிழ் மணி அவர்களும் மற்றும் தோழர்களும் அயராது ஆற்றிய தொண்டே காரணமாகும். அவரின் தொண்டுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் அவரது துணைவியார் விசயா அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி அளித்தார்.

வட சென்னை

03-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு சென்னை வியாசர்பாடியில் மீனாம்பாள் சாலையில் உள்ள திடலில் அமைக்கப்பட்டிருந்த ஈ.வெ.கி. சம்பத் அரங்கத்தில் வடசென்னை மாவட்ட தமிழர் தேசிய முன்னணித் தோழர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்பாக வியாசர்பாடிக்கு நானும் மற்ற நிர்வாகிகளும் வந்தபோது பொதுச்செயலாளர் ஜான் கென்னடி அவர்கள் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் கூடி நின்று உற்சாகமான வரவேற்பு அளித்து எங்களை ஊர்வலமாகக் கூட்டம் நடத்தும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

"திராவிடத் தேசியம் என்பது ஒரு மாயை. தமிழ் தேசியமே உண்மை'' என 1960-ஆம் ஆண்டு முதன்முதலாக முழங்கி தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் ஆவார். இவ்வாறு அவர் கூறும் போது தி.மு.கழகத்தின் அவைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திராவிட இயக்கத்தில் பெரும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பிற்கு உரியவராகத் திகழ்ந்தார். தன் மனதிற்குட்பட்ட உண்மையைத் துணிவாக எடுத்துக்கூறினார். இதன் விளைவாக கழகத்தில் பெரும் சர்ச்சை மூண்டது. நெஞ்சறிந்த உண்மையை ஒப்புக்கொள்ள தி.மு.க. தலைவர்கள் பலரும் தயங்கினர். ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் ஆணித்தரமான வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்மீது வன்முறையை ஏவினர். ஆனால், அவர் எதற்கும் அஞ்சாமல் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடித்தார். மாணவனாக இருந்த என் போன்றவர்கள் அவருக்கு ஆதரவாக அணி திரண்டோம். தொலைநோக்குடன் அவர் கூறியதை ஏற்க மறுத்து "திண்ணையில் படுத்துக்கொண்டாவது திராவிட நாடு கேட்பேன்'' என வாய்வீரம் பேசியவர்கள் பிரிவினை கேட்பதைத் தடைசெய்யும் சட்டம் வந்தபோது, திராவிட நாடு கோரிக்கையைக் குழித்தோண்டிப் புதைத்தார்கள்.

அதற்குப் பின்னர் சென்னை ஒற்றைவாடை அரங்கில் 1961 ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று ஈ.வெ.கி. சம்பத் தமிழ்த் தேசியக் கட்சியை அமைத்ததும், தமிழகமெங்கும் அதன் கிளைகளைப் பரப்பியதும், ஏராளமான இளைஞர்கள் அதில் இணைந்ததும் வரலாற்று ஏடுகளில் பதியப்பெற்றிருக்கின்றன.

அதே ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் பெரியார் திடலில் முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பெரியார் ஈ.வெ. இராமசாமி, குன்றக்குடி அடிகளார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஜீவா, கே. பாலதண்டாயுதம், கவியரசர் கண்ணதாசன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டோம். அம்மாநாட்டில்தான் ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் "இந்தியத் தேசியமா? திராவிடத் தேசியமா? தமிழ்த் தேசியமா? என்பது குறித்து தமிழர்கள் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தே தீரவேண்டும்'' என தனது பேருரையில் முழங்கினார். 53 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த முழக்கம் இன்றளவும் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.

தமிழக வரலாற்றில் திராவிட நாடு என்ற மாயையை தனது தொலைநோக்கினாலும், வாதத் திறமையாலும் ஒழித்துக்கட்டிய அண்ணன்; ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் பெயரை அந்தத் திடலுக்குச் சூட்டியிருந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். நேற்றைய தினம் திருத்தணியில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் கால்தடம் பதிந்த இடத்திலும், இன்று ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் பெயரால் அமைந்த திடலிலும் தமிழர் தேசிய முன்னணியின் அமைப்புகளை உருவாக்கியிருப்பது அந்த இரு தலைவர்களின் கனவை நனவாக்கியதாகும்.

சிறந்த எழுத்தாளரும், மக்கள் தொண்டரும், நமது பொதுச் செயலாளர்களில் ஒருவருமான ஜான் கென்னடி அவர்கள் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகவே செய்திருந்தார். இளைஞர் பெரும் படை ஒன்று அவருக்கு என்றும் துணையாக உள்ளது. நானும், நமது நிர்வாகிகள் பலரும் பேசிய பிறகு வடசென்னை மாவட்டத்திற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. இங்கும் வந்திருந்தோரை கலந்து ஆலோசித்து அவர்களின் ஒப்புதலுடன் நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து மக்கள் முன் அறிமுகப்படுத்தி வைத்தேன்.

தலைவராக செயல் வீரர் ச. இலாரன்ஸ், துணைத் தலைவராக சத்தியமூர்த்தி, செயலாளர்களாக எஸ்.எம். கான் முகம்மது, மூர்த்தி, பொருளாளராக தமீம் அன்சாரி ஆகியோரும், மகளிர் அணி அமைப்பாளராக வில்லி மேரி, இளைஞர் அணி அமைப்பாளராக ஜோ. திலீபன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதுச்சேரி

04-08-14 திங்கட்கிழமை அன்று புதுச்சேரி மாநிலக் குழு அமைக்கும் பணிக்காக நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் செல்வதற்கு சற்று தாமதம் ஆனாலும் நம்முடைய துணைத் தலைவர் அருகோ, பொதுச்செயலாளர் குப்பன் ஆகியோர் குறித்த நேரத்தில் கூட்டத்தைத் தொடக்கி நடத்திய பாங்கு பாராட்டத்தக்கதாகும். நானும் மற்ற நிர்வாகிகளும் பேசியபிறகு மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி தொடங்கியது.

சிறந்த தமிழ்த் தொண்டரும், உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர்களில் ஒருவருமான ந.மு.தமிழ்மணி அவர்கள் அனைவர்களுடனும் கலந்து பேசி மாநில நிர்வாகிகளை ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க உதவினார். அந்தப் பட்டியலை அவர்கள் கொடுத்தபோது நான் வியப்படைந்தேன். எந்தப் பொறுப்பிலும் அவரது பெயர் இல்லை. என்னவென்று நான் கேட்ட போது, மற்றவர்களுக்கு இந்தப் பொறுப்புகளை வழங்கி அவர்களுக்குத் துணையாக நான் என்றும் தொண்டாற்றுவேன்'' என்று அவர் கூறியபோது எனது நெஞ்சம் நெகிழ்ந்தது. பதவிப் பொறுப்பைத் தான் ஏற்பதைவிட, மற்றவர்களை ஏற்க வைத்து மகிழ்ச்சியடையும் பண்பு தமிழ்த் தேசியப் பண்புகளில் சிறந்ததாகும். அந்தப் பண்பினை நண்பர் தமிழ்மணி நிறையவே பெற்றிருக்கிறார்.

புதுச்சேரி மாநிலக் குழுவின் தலைவராக முனைவர் ம.இலெ. தங்கப்பா, துணைத் தலைவராக பெ. பராங்குசம், செயலாளராக கோ. தமிழுலகன், துணைச் செயலாளராக இரா. இளமுருகன், பொருளாளராக துரை. மாலிறையன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ம.இலெ. தங்கப்பா அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகச்சிறந்த அறிஞர். சாகித்திய அகாடமி விருதினை இருமுறை பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் இணைந்து பணியாற்றியவர். புதுவை அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட மறுத்ததால், புதுவை அரசு வழங்கிய கலைமாமணி பட்டத்தை அரசுக்கே திரும்ப அளித்தவர். இத்தகைய சிறந்த அறிஞர் தமிழர் தேசிய முன்னணியில் இணைந்து புதுவை மாநிலத் தலைவர் பொறுப்பையும் ஏற்று செயல்பட முன் வந்தது கண்டு நான் பெருமிதம் அடைந்தேன். இந்தப் பதவியால் அவருக்குப் பெருமை என்பதைவிட அவரால் இந்த பதவிக்கு மிகவும் பெருமை என்பதுதான் உண்மையாகும்.

துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் பெ. பராங்குசம் அவர்கள் பெருமைமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். புதுவை அரசியலில் முக்கிய தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் விளங்கிய புதுவை சிவம் அவர்களின் திருமகளை மணந்துகொண்ட மருமகன் ஆவார். புதுவையில் நடைபெறும் தமிழ்த் தொண்டுகள் அனைத்திலும் தொடர்ந்து பங்கேற்று தொண்டாற்றி வருபவர்.
மற்றும் செயலாளர்களாக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிற கோ. தமிழுலகன், இரா. இளமுருகன், பொருளாளர்களாக பொறுப்பேற்றிருக்கும் துரை. மாலிறையன் ஆகியோரும் தங்கள் தொண்டினால் புதுவை மக்களின் மதிப்பிற்கு உரியவராகத் திகழ்பவர்கள்.

இந்தக் கூட்டத்தில் திரளான தமிழறிஞர்கள் பலரும் கூடியிருந்ததைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். பாவலர் இரா. செம்பியன், "தூய தமிழ்' இதழாசிரியர் முனைவர் க. தமிழ்மல்லன், புதுவை தமிழ் நெஞ்சன், புலவர் வி. திருவேங்கடம், சி.நாகலிங்கம், புலவர். சி. பெருந்தேவன், வீ. கண்ணையன், முல்லைத் தமிழன், காலையூர் நெய்தல் நாடன், பாவலர் அரச. மணிமாறன், புலவர் அரங்க சேசாசலம் மற்றும் தமிழறிஞர்களும் கூட்டத்தில் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன். திரளான இளைஞர்கள் கூடியிருந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் தமிழர் தேசிய முன்னணியின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் பிறந்தது.

விழுப்புரம்

05-08-14 செவ்வாய்க்கிழமை அன்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. நானும் மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டோம்.

விழுப்புரம் மாவட்டம் செயல் வீரர்களைக்கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள இளைஞர்களின் செயல்வேகத்தைக் கண்டு பொறுக்க முடியாத ஆளுங்கட்சி காவல்துறையின் துணையுடன் இவர்கள் மீது பல பொய் வழக்குகளை தொடுத்தது. ஆனாலும், எதைக்கண்டும் கலங்காமல் தமிழ்த் தேசியத் தொண்டினைப் புரியும் இளைஞர்களைக் கொண்டது இம்மாவட்ட அணி. அவர்களுக்குத் துணையாகப் பெரியவர்களும் நின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்தபோது அதில் மாவீரர் மண்டபத்தில் ஓவியங்களையும், முத்தமிழ் மண்டபத்தில் தமிழறிஞர்கள் படங்களையும் அழகுற அமைத்தவர்கள் பாபு, ஜோதி, பிரபு மற்றும் விழுப்புரம் தோழர்களே.

தமிழ்த் தேசிய முன்னணியின் மாநில இளைஞர் அணி அமைப்பாளரான தமிழ்வேங்கை இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தார். நானும் நிர்வாகிகளும் உரையாற்றிய பிறகு இரு மாவட்டங்களின் நிர்வாகிகளை கூட்டத்தினர் ஒரே மனதுடன் தேர்ந்தெடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டத் தலைவராக எழில். இளங்கோ, துணைத் தலைவர்களாக கோ. பாபு, கோ. கணேசன், செயலாளர்களாக பா. ஜோதி நரசிம்மன், க.லலித்குமார், வி. பிரபு, பொருளாளர்களாக கோ.ப. சிவராமன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக வி. தீனதயாளன், பதி. கார்த்தி, ஆ. குணாநிதி, த. அருண்குமார், நா. வரதன், சு. பத்ரி, இர. கருணாநிதி, கி. பாலாஜி, பா. பாஸ்கரன் ஆகியோரும். மகளிர் அணி அமைப்பாளராக த. மங்கையர்க்கரசி, இளைஞர் அணி அமைப்பாளராக அ. அகிலன், மாணவர் அணி அமைப்பாளராக அ. தினகர் ஆகியோரும் ஒரே மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதிலும், அதற்காகப் போராடி தியாகத் தழும்புகளை ஏற்ற பல தோழர்கள் பன்னெடுங்காலமாக எனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றவர்கள். கடலூர் மாவட்டத் தலைவராக கி.செ. பழமலை, துணைத் தலைவர்களாக ச. பழனிச்சாமி, புலவர் பொன்னையன், செயலாளர்களாக வை. இரா. பாலசுப்ரமணியன், வீ. கமலக்கண்ணன், செ. சுப்பையா, பொருளாளராக சி. சோமசுந்தரன் ஆகியோரும், மகளிர் அணி அமைப்பாளராக சா. இந்திராணி, இளைஞர் அணி அமைப்பாளர்களாக இர. இலக்குவன்,
ஏ. வினோத்குமார், மாணவர் அணி அமைப்பாளர்களாக பா. பாரதிதாசன்,
க. சுரேஷ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடரும்..

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.