புலிப்பார்வை படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 11:50

புலிப்பார்வை படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும்!

"புலிப்பார்வை படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும்'' என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் 24-8-14 அன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது இலங்கைத் தமிழர்களின் இன, கலாசார அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்கள். அதற்கு "இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கூறியுள்ளார்.

அது எத்தகைய அரசியல் தீர்வு என்று அவர் விளக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்களிடையே எந்த வகையான அரசியல் தீர்வு காண வேண்டும் என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்? இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் போர்க் குற்றங்கள் நடைபெற்றது குறித்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. அந்த குழுவுக்கு இந்தியாவும், இலங்கையும் அனுமதி மறுத்து உள்ளன. எனவே 2009 ஆம் ஆண்டு முதல் இந்தியா வந்த இலங்கைத் தமிழர்கள், அகதிகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், தமிழர்கள் மீது இலங்கை நடத்திய தாக்குதல் குறித்த தகவல்கள், ஆவணங்களை இங்கிலாந்தில் உள்ள ஐ.நா. விசாரணைக்குழுவின் தலைமையகத்துக்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ வருகிற அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் கடிதங்கள் வாயிலாக அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கு தமிழர் தேசிய முன்னணியினர் உதவ வேண்டும்.

உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா.வில் பேச அழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து ஐ.நா. சபைக்கு கடிதங்கள் எழுத வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

புலிப்பார்வை படத்தின் இயக்குனர் கேட்டுக் கொண்டதின் பேரில் நான் அந்த படத்தை பார்த்தேன். அதில் சில ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருந்தன. அவற்றை நீக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் அந்த காட்சிகளை நீக்காமல் அப்படியே படத்தின் பாடல்களை வெளியிட்ட நிகழ்ச்சியில் திரையிட்டுக் காட்டியுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

எனவே நான் சொன்ன திருத்தங்களை செய்து அந்த படத்தை வெளியிட வேண்டும். எந்த மாணவர்கள் தாக்கப்பட்டார்களோ அந்த மாணவர்கள் புலிப்பார்வை படத்தை பார்த்து அவர்களின் இசைவு பெற்ற பின்னர்தான் படத்தை வெளியிட வேண்டும். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.