தமிழீழம் கனவல்ல; தமிழர்களின் தாயகம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014 14:40

தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காக நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்களை விதையாக்கியிருக்கின்றார்கள். இரண்டு இலட்சம் மக்கள் தங்கள் வாழ்வை இந்த விடியலுக்காக அர்ப்பணித்திருக்கின்றார்கள். 30 வருட அமைதிவழிப் போராட்டமும், அர்ப்பணிப்பு மிகுந்த 30 வருட ஆயுதப் போராட்டமும் நிகழ்ந்தது இன்னொரு நாட்டவரை விரட்டிவிட்டு, புதிய நாடொன்றை அமைப்பதற்காக அல்ல. இழந்துபோன தமிழர்களின் தாயகத்தை மீட்டெடுப்பதற்காக. அப்பன், பாட்டன், பூட்டன், கொப்பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்த தாய் நாட்டை மீட்டெடுப்பதற்காக.

ஆனால், தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடுவதுடன், ஒருங்கிணைந்த இலங்கையை ஏற்றுக் கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சிறீலங்கா உச்சநீதிமன்றத்தில் சிங்களப் பேரினவாத அமைப்புகள் சார்பில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இலங்கையை இரண்டாகப் பிரித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நோக்கம் என்றும், இதனைத் தேர்தல் அறிக்கையாக கடந்த ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண தேர்தலின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைத்திருந்தது என்றும் அதில் குற்றம்சாட்டியிருந்தார்கள்.

இந்த மனு மீதான விசாரணை சிறீலங்கா உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எழுத்துப்பூர்வமான உறுதிச்சான்று ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இலங்கையை ஒற்றையாட்சியுடைய நாடாக ஏற்றுக் கொள்வதாகவும், இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லை’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் ஒத்தி வைப்பதாக சிறீலங்கா நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தச் செயல் தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்குள் இருந்து தமிழர் தேசத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்புள்ள கூட்டமைப்பு, தமிழர்களின் உரிமைகளை வேண்டாம் என்று மறுத்துப் புறந்தள்ளிய ஒரு நிகழ்வாகவே இதனைப் பார்க்கின்றனர்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்குள், தங்கள் காலனித்துவ நாடுகளை ஆட்சி செய்யமுடியாமல் பிரித்தானியா கைவிட்டோடும் நிலைக்கு வந்தபோது, இந்தியாவை விட்டுவிலகிய சில மாதங்களிலேயே இலங்கைத் தீவையும் அது கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டு தேசங்களாக இருந்த இலங்கைத் தீவை தங்கள் நிர்வாக வசதிக்காக ஒரே தேசமாக்கி ஆட்சிபுரிந்த பிரித்தானியா, தாங்கள் கைவிட்டுப் போகும்போது அந்தத் தீவை இரு தரப்பினரிடமும் தனித்தனியாக அல்லது இரு தரப்பும் சமமாக ஆட்சி செய்யும் வகையில் கையளித்துவிட்டுப் போகவே எண்ணியிருந்தார்கள். ஆனால், அன்றைய சிங்களப் பேரினவாதத்தின் சூட்சி வலைக்குள் சிக்குண்டுகிடந்த மெத்தப்படித்த தமிழ்த் தலைமைகள், தங்கள் எஜமானர்களாக சிங்களத் தலைமைகளை ஏற்றுக்கொள்ளும் தூரநோக்கற்ற சிந்தனையின் முடிவுதான் 65 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றது. அன்றைய தமிழ்த் தலைமைகள் தீர்க்கதரிசனமான முடிவை அப்போதே எடுத்திருந்தால் இன்று தமிழர்கள் இத்தனை இழப்புக்களையும், வேதனைகளையும், அவலங்களையும் சந்தித்திருக்கமாட்டார்கள்.

ஆனால் எத்தனையோ பாடங்களைத் தமிழர்கள் இதுவரை கற்றுக்கொண்ட பின்னரும், சிங்களப் பேரினவாதத்துடன் சேர்ந்து நல்லிணக்கத்துடன் வாழமுடியும் என்று மீண்டும் அதே மெத்தப்படித்த மேதாவித் தமிழ்த் தலைமைகள் எண்ணுவதுதான் வேடிக்கையானது, வேதனையானது. தமிழ் மக்கள் தங்களுக்கு எதற்காக வாக்களித்தார்கள் என்பதைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உணர்ந்துகொள்ள முடியவில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. "தமிழீழ விடுதலை' என்ற ஒரே இலக்கைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள், தமிழத் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்தார்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகத்தான், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அற்றுப்போன இன்றைய நிலையிலும் தமிழ் மக்கள் அதனை ஆதரிக்கின்றார்கள். தமிழர் தாயகத்தின் விடியலுக்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழீழம் என்பது தமிழ் மக்களின் கனவல்ல. அது தமிழர்களின் தாயகம். அதனை மீட்டெடுப்பதுதான் அவர்களின் ஒரே இலட்சியம். இதனை ‘எங்களுக்கு வேண்டாம்’ என்று சொல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவித அருகதையும் கிடையாது. தமிழீழம் வேண்டாம் என்று கூட்டமைப்பு சொல்லுமாயின் அது சிங்களப் பேரினவாதிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் கூட்டமைப்பிற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

சிங்களப் பேரினவாதிகள் வழக்குப் போட்டுவிட்டார்கள் என்றால் அதனை எதிர்த்து, கூட்டமைப்பு தமிழ் மக்களின் பக்கமுள்ள நியாயத்தை வைத்து வாதிட்டிருக்க வேண்டும். தமிழீழத்திற்கான நியாயத்தை சிங்கள நீதிமன்றம் ஊடாகவே கூட்டமைப்பு வெளியுலகிற்கு கொண்டுவந்திருக்கக்கூடிய அரியவாய்ப்பு இது. தமிழீழத்திற்கான நியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்துவைத்து அதில் கூட்டமைப்பு தோற்றுப்போயிருக்கலாம். ஏனென்றால் விவாதம் நடக்கப்போவது சிங்கள நீதிமன்றத்தில். அங்கு தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், உண்மைகளை இந்த உலகம் அறிய அதுவொரு வாய்ப்பாகியிருக்கும்.

தனக்குக் கிடைத்த ஒரேயொரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கியூபாவின் விடுதலைக்கு அத்திவாரம் இட்டவர் பிடல் கஸ்ரோ. கியூபா, மான்கடா இராணுவ முகாம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஃபிடல் கஸ்ரோ அவர்கள் 1953ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டபோது, தனக்கு மிகப்பெரிய தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் "வரலாறு என்னை விடுவிக்கும்' (ஐண்ள்ற்ர்ழ்ஹ் ரண்ப்ப் ஆbள்ர்ப்ஸ்ங் ஙங்) என்று அவர் துணிவோடு ஆற்றிய உரைதான், பின்நாட்களில் அவரது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவுப் பலத்தைக் கட்டியெழுப்பிக் கொடுத்தது.

ஆனால், இன்றைய தமிழ்த் தலைமைகள் அடிபணிவு அரசியல் செய்வது எப்படி என்பதிலேயே கவனத்தைச் செலுத்துகின்றன. சிங்களப் பேரினவாதத்திற்கும், வல்லாதிக்க சக்திகளுக்கும் கொஞ்சமும் வலிக்காமல் எப்படி ஆசனங்களைத் தக்கவைக்கலாம் என்பதிலேயே கவனத்தைச் செலுத்துகின்றன. நீதிமன்றத்தில் விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழீழம் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கின்றன. தமிழர்களுக்காகப் போராடவேண்டிய (அரசியல் ரீதியாகத்தான்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உடனடியாக காலில் விழுந்து தப்பிக்க முயல்கின்றது என்றால், நாளை சிங்களப் பேரினவாத அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு என்ன உரிமையை வாதாடிப் பெற்றுக்கொடுக்கப்போகின்றது?

கூட்டமைப்பு எழுதிக் கொடுத்துவிட்டது என்பதற்காக தமிழீழம் இல்லையென்றாகிவிடாது. தமிழீழத்திற்கான விடியல் தாமதமாகிக் கொண்டிருக்கின்றதே தவிர, உண்மையில் தமிழீழம் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. சிங்கள தேசத்துடன் தமிழினம் இனி என்றுமே ஒன்றிணைந்து வாழமுடியாது என்பதை முள்ளிவாய்க்காற் பேரழிப்பும் அதனைச் சிங்கள தேசம் வெற்றிக்கொண்டாட்டமாகக் கொண்டாடியதும் உறுதிப்படுத்திவிட்டன.

1990களுக்குப் பின்னர் மட்டும் உலகில் 27 புதிய நாடுகள் தோற்றம் பெற்றுவிட்டன என்கிறது வரலாற்றுப் புள்ளிவிபர ஆய்வுகள். 21ம் நூற்றாண்டில் இன்னொரு புதிய தேசமாக தமிழீழம் மலர்வதையும் யாரும் தடுக்க முடியாமல் போகலாம். எதிர்ப்பவர்களே அதனை அங்கீகரிக்கும் நிலை தோன்றும். ஏனெனில் தமிழீழத்தின் விடியல் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, பிராந்திய நலன்களுக்கும் தேவையானதொன்றாகவே மாறிவருகின்றது.
ஆசிரியர் தலையங்கம், நன்றி: ஈழமுரசு

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.