தமிழர் தேசிய முன்னணி செய்திகள்: சேலம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014 14:44

29-08-2014 அன்று காலை 11 மணியளவில் சேலம் மாநகர் நான்கு சாலையில் அமைந்துள்ள சாமுண்டி வணிக வளாகத்தில் சேலம் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட தலைவர் திரு. முத்துசாமி தலைமை ஏற்க, மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் திரு. செந்தில்குமார், திரு. அருநீரன், துணைத் தலைவர்கள் திரு. சிவப்பிரியன், திரு. தமிழமுதன், பொருளாளர் திரு. சிறீதர், இளைஞரணி பொறுப்பாளர்கள் திரு. இராசேசு மற்றும் தோழர்கள் திரு. தம்பி பழனிசாமி, திரு. மும்முடி முத்துக்குமார், திரு. இராசேந்திரன், தனராசு, குணசேகரன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


சேலம் தமிழர் தேசிய முன்னணியின் தீர்மானங்கள்:

1. தமிழ்நாட்டில் தாய்மொழியாம் தமிழே ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், தமிழ் வழியில் படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

2. வசிக்க வீடு இல்லாமல் தமிழ்நாட்டின் சாலை ஓரங்களிலும், வெட்ட வெளியிலும், மரத்தடியிலும் வாழும் மக்களுக்கு உடனடியாக இருக்க இடமும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதியையும் வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

3. தமிழ்நாட்டில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான இலங்கைத் தமிழர்கள், ஏதிலி முகாம்களில் வருந்துகின்றனர். ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் முகாம் அமைக்கப்பட்டு திபேத்தியர்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றனர். அதே வசதிகளை தமிழ்நாட்டில் முகாமில் வாழும் இலங்கை ஏதிலிகளுக்கும் இந்திய - தமிழக அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

4. தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடைபெறும் பொய்ப் பரப்புரை செய்பவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

5. சேலம் மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை சுரண்டுவதையும், கடத்தல் செய்வதையும் மாவட்ட அரசு நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

6. மத்திய தொடர் வண்டித் துறை சேலம் கோட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சேலத்திலிருந்து பிற மாவட்டம் மற்றும் மாநிலத்திற்கும் செல்லும் வகையில் தொடர்வண்டி விட வேண்டும் என மத்திய தொடர்வண்டி நிர்வாகத்துறையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

7. கேரள மாநில முதல்வரை முன்மாதிரியாக கொண்டு நமது தமிழ்நாட்டிலும் முழு மது ஒழிப்பு செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

8. அரசு அலுவலர்கள், தமிழ்த்துறை சார்ந்தவர்களுக்கு ஊக்குவிப்பு, மற்றும் தமிழ்த்துறை வளர்ச்சி நிதியை முறைபடுத்தி ஒதுக்கி தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு தரவேண்டி அரசுக்கு வலியுறுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

9. தமிழர் தேசிய முன்னணியினர் மாநிலத் தலைமை எடுக்கும் முடிவிற்கிணங்க மாவட்ட அமைப்பு சிறப்புடன் செயல்பட வேண்டும் என உறுதி கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.