துஞ்சும் புலி இடறிய சிதடன்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014 13:40

முதலில் இந்தியையும் படிப்படியாக சமஸ்கிருதத்தையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்கி இந்தியாவின் பிற தேசிய மொழிகளை அடிமைப்படுத்தும் முயற்சியை பா.ஜ.க. அரசு தொடங்கி வைத்துள்ளது.


மத்திய அரசின் சமூக வலைத்தளங்களில் அலுவல் ரீதியான ஆணைகளை தெரிவிக்கும் போது ஆங்கிலத்தோடு இந்தியையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு வெளியிடப்பட்டது.
இப்போது அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பட்டப்படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தியும் முக்கியப் பாடமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தொடர் வண்டித்துறை, பொதுக் காப்பீட்டுத் துறை போன்றவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்தி கற்றாக வேண்டும். இத்துறைகளின் சார்பில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் ஆகியவை இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த செப்டம்பர் 14ஆம் தேதியன்று "இந்தி நாள்' விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது உரையில் பின்வருமாறு கூறியுள்ளார்:

"இந்திய மக்கள் தொகையில் 55 சதவிகிதம் பேர் இந்தி பேசுகின்றனர். 85 முதல் 90 சதம் பேர் இந்தியைப் புரிந்துகொள்கின்றனர். தங்கள் தாய்மொழி வேறாக இருந்தாலும் கூட அவர்கள் இந்தியை சுலபமாகப் புரிந்துகொள்கின்றனர். இந்தி இந்த நாட்டின் பொதுமொழியாகும் அனைத்து இந்திய மொழிகளின் தாய் சமஸ்கிருதம். மற்ற மொழிகள் அதிலிருந்து தோன்றியவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே விழாவில் பேசிய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி " நாட்டில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள 21 மொழிகளிலும் இந்திக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து இந்திய மொழிகளும் ஆறுகள் என்றால் இந்தி கடல் போன்றது'' என்று கூறியுள்ளார். வங்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிரணாப் முகர்ஜி அவர்கள் வங்கத்தின் தலைசிறந்த கவிஞரும், நோபல் பரிசு பெற்றவரும், சிறந்த இலக்கியவாதியுமான மறைந்த இரவீந்திரநாத் தாகூர் கூறிய கருத்துக்கு எதிர்மாறாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்திய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்திலேயே இரவீந்திரநாத் தாகூர் "எனது தாய்மொழியான வங்க மொழியே இந்தியாவின் ஆட்சி மொழியாக விளங்க தகுதி படைத்தது'' என்று கூறியுள்ளார். வங்காளியான பிரணாப் இதை மறந்தது ஏன்?

ராஜ்நாத்சிங் இந்தி மொழி பற்றி கூறியதில் கொஞ்சமும் உண்மையில்லை.

இந்திய மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அதிலும் இந்தி என்ற பெயரில் பிற வட்டார மொழிகளையும் சேர்த்தே இந்தக் கணக்கு கூறப்படுகிறது.

இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி 2003ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

"இராஜஸ்தானி, மைதிலி, போஜ்புரி மற்றும் சில மொழிகள் தனித் தனி மொழிகளாகும். எனவே அரசியல் சட்டத்தின் 8வது தொகுப்பில் இந்த மொழிகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வற்புறுத்தப்படுகிறது. அவ்வாறு இந்த 35 மொழிகளை நாம் 8வது தொகுப்பில் சேர்ப்போமானால் இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போகும். எனவே அவ்வாறு செய்வது இயலாது'' என்று கூறியுள்ளார். அத்வானி ஒப்புக்கொண்டபடி பார்த்தால் 35 மொழிகள் தவறாகவும், வேண்டுமென்றும் இந்தியுடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டு இந்தி பேசுவோரின் எண்ணிக்கைக் கூட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்தி - திடுக்கிடும் உண்மைகள்

இந்தி என்ற சொல்லே பாரசீக சொல்லாகும். இந்தியாவுக்கு முகலாயர்கள் வந்தபிறகே இந்தியின் வரலாறு தொடங்குகிறது. அதாவது நவீன இந்தி மொழியின் வயது 500 ஆண்டுகள் மட்டுமே.
முகலாயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியபோது வட இந்தியாவில் கரிபோலி, பிரஜ்பாசா, பண்டேலி, கனொவுஜி, அவாதி, மகதி, மைதிலி, போஜ்புரி, பாகேலி, சட்டீஷ்காரி மற்றும் பல வட்டார மொழிகள் வழங்கிவந்தன.

வட்டார மொழியாக இருந்த கரிபோலியுடன் சமஸ்கிருதக் கலப்பு ஏற்பட்டபோது பிறந்த மொழி இந்தியாகும். அதே கரிபோலி மொழியுடன் பாரசீக கலப்பு ஏற்பட்டபோது பிறந்த மொழி உருதுவாகும்.
1800ஆம் ஆண்டு வாக்கில்தான் இந்தி மொழியில் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. இந்த உண்மையை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஒப்புக்கொண்டிருக்கிறார். 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசும்போது "இந்தியாவின் மற்ற மொழிகளைவிட இந்தி சிறந்தது என நான் ஒருபோதும் கூறமாட்டேன். இந்தி மொழியில் இருப்பதைவிட சிறந்த இலக்கிய வளம் நிறைந்த இந்திய மொழிகள் பல உண்டு. தமிழ், வங்காளி, மராட்டி போன்ற மொழிகளைவிட இந்தி உயர்ந்தது என்ற நிலையில் நாம் இந்தியை அணுகவில்லை'' என்று கூறினார்.

1961ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவின் 1552 மொழிகள் பேசப்படுவதாக கண்டறியப்பட்டது. இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் மட்டுமே.

ராஜ்நாத் சிங் கூறியுள்ளபடி 55 சதவிகித மக்கள் இந்தி பேசுபவர்களாக இருப்பதை ஒப்புக்கொண்டாலும்கூட, இந்தியா முழுவதிலும் பரவலாக இம்மொழி பேசும் மக்கள் இருக்கவில்லை. உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய நான்கு மாநிலங்களோடு இம்மொழி பேசும் மக்கள் அடங்கியுள்ளனர். அதிலும் போஜ்புரி, மைதிலி, இராஜஸ்தானி போன்ற மொழிகளையும் இந்தியோடு சேர்த்துத்தான் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிற 29 மாநிலங்களில் இந்தி பேசுவோர் இல்லை. இந்தியைவிட இலக்கிய வளம் நிறைந்த மொழிகளை அவர்கள் பேசுகிறார்கள். எனவே இந்தியாவின் பொது மொழியாக இந்தியை ஏற்க வேண்டுமெனக் கூறுவது ஏற்க முடியாததாகும்.

இந்த உண்மையை இந்திய சுதந்திரப் போராட்டக் காலத் தலைவர்களில் ஒருவரும், இந்தியாவின் கவர்னர் -ஜெனரலாக இருந்தவருமான இராஜாஜி "இந்தி மொழி பேசுபவர்கள் வடக்கே உள்ள 3 அல்லது 4 மாநிலங்களில் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், 5இல் 3 பகுதி இந்திய மக்கள் இந்தி பேசாத மக்களாகும்'' என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் துணைப் பிரதமராகப் பதவி வகித்த தேவிலால் நாடாளுமன்றத்தில் இந்தியில் பதில் கூறுமாறு வற்புறுத்தப்பட்டபோது "தன்னால் இந்தியில் பேச இயலாது, ஆனால் என்னுடைய தாய்மொழியான ஹரியான்வியில் மட்டுமே பேச முடியும்'' என்று கூறினார்.

எனவே, பெரும்பான்மையோர் பேசும் மொழி என்று கூறி இந்தியை மற்ற மொழியினர் மீது திணிக்கும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்தித் திணிப்புப் போராட்டத்திற்குத் தமிழகம் வழிகாட்டியுள்ளது.

1937ஆம் ஆண்டில் இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி சென்னை மாகாணத்தில் ஏற்பட்டிருந்தபோது இந்தியை எதிர்த்து தமிழறிஞர்களும், தமிழர் தலைவர்களும் பெரியார் ஈ.வே.இராமசாமி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இப்போராட்டத்தில் கைதான நடராஜன், தாளமுத்து ஆகியோர் சிறையில் உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக கட்டாய இந்தி ஆணை திரும்பப் பெறப்பட்டது.

26-11-1965ஆம் நாளிலிருந்து இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியே இருக்கும் என்னும் அரசியல் சட்டத்தின் 243ஆம் விதியை திருத்த வலியுறுத்தி தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் இந்தி எதிர்ப்புப் போர் மூண்டது.

இந்த மொழிப்போருக்குத் தான் முதன்முறையாக இராணுவம் வரவழைக்கப்பட்டு, கொந்தளித்த மாணவர்களும் மக்களும் சுட்டு வீழ்த்தப்பட்டகொடுமை நிகழ்ந்தது. கோவை, குமாரபாளையம், வெள்ளக்கோயில், திருப்பூர், கரூர், மணப்பாறை முதலிய 40 ஊர்களுக்கு மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சிவகங்கை இராசேந்திரன் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார். கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோர் தீக்குளித்து தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். விராலிமலை சண்முகம், கோவை பூளைமேடு தண்டபாணி ஆகியோர் நஞ்சுண்டு உயிர்நீத்தனர்.

தமிழகம் இன்னும் இந்திக்கு எதிராக தகித்துக் கொண்டிருக்கிறது. எரிமலை தூங்குகிறது என நினைப்பது மடமை. எரிமலை பொங்கி எழுந்து வெடித்தால் இந்தி ஆதிக்கம் பொசுங்கிப்போகும்.
ராஜ்நாத்சிங் போன்றவர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். இல்லையேல் தூங்கும்புலியை இடறிய குருடனின் கதியே ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.