முன்னாள் அமைச்சர் வி.வே. சுவாமிநாதன் வேண்டுகோள் - திரு. பழ.நெடுமாறன், PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014 14:27

தலைவர், தமிழர் தேசிய முன்னணி, சென்னை.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்த போது சுற்றுலாத் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை ஆகியவற்றின் அமைச்சர் என்ற முறையில் நான் தேனி மாவட்டம் சென்றேன். அங்கு சேரன் செங்குட்டுவன் எழுப்பிய பத்தினித் தெய்வம் கண்ணகியின் கோயிலை பார்வையிட்டேன். மலை உச்சியில் அந்தக் கோயில் இடிந்தும், தகர்ந்தும் பாழடைந்தும் கிடந்தது. கண்ணகியின் சிலை இல்லாத வெறும் கோயிலாக அது காட்சி தந்தது.

மலை உச்சியில் இருந்த அந்தக் கோயிலுக்கு நேர் கீழே மலைச் சரிவில், அதாவது கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்ணகிக்கு ஓர் ஆலயம் எழுப்புவது குறித்து முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கலந்து பேசினேன். அதைப் போல சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களிடமும் கலந்து பேசி இருவரின் ஒப்புதலையும் பெற்றேன்.

மத்திய அரசின் சுற்றுலாத் துறை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசி இத்திட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும்படி வேண்டிக்கொண்டேன். வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டும் இல்லாமல் இந்திய அளவிலும் உலக அளவிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்திலும் தமிழ்நாட்டுக்கே உரிய சிற்ப பண்பாட்டின் அடிப்படையில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக வடிவமைக்கும்படி அவர் ஆலோசனை கூறினார்.

இலங்கை, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள கண்ணகி சிலைகள் மற்றும் மதுரையில் உள்ள செல்லத்தம்மன் என அழைக்கப்படும் கண்ணகி கோயிலில் உள்ள சிலை இவற்றின் வடிவங்களை, மாதிரிகளைக் கொண்டு சுவாமி மலையில் சிற்பி தேவசேனாபதி மூலம் மாதிரி சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆரும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யும் அந்தச் சிலையைப் பார்த்து சில திருத்தங்களைச் கூறினார்கள். பிறகு அந்தச் சிலை ஐம்பொன்னால் அழகுற வார்க்கப்பட்டது.

அரைவட்ட வடிவில் நடுவில் கண்ணகி கோயிலும், கோயிலின் இருபுறங்களில் சிலப்பதிகார காவியத்தை சித்தரிக்கும் சிற்பங்களையும் செதுக்குவது என முடிவு செய்தோம். இத் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியது.

நான் மீண்டும் கம்பம் பள்ளத்தாக்கிற்குச் சென்று அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து மலையுச்சியில் உள்ள கண்ணகி கோயிலுக்கு நேர் கீழே பரந்த புல்வெளித் திடலைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மறைந்துவிட்டார். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. புதிதாக பதவியேற்ற தி.மு.க. அரசு இத்திட்டத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டது.

இன்னும் சுவாமிமலையில் சிற்பி தேவசேனாபதியின் கூடத்தில் ஒரு மூலையில் கேட்பாரில்லாமல் சிலையாய் சிறையில் இருக்கிறாள் கண்ணகி. எனவே, கண்ணகி கோயில் கட்டும் திட்டத்தை நிறைவேற்ற மக்கள் ஆதரவு திரட்டப்பட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள
வி.வே. சுவாமிநாதன்
சென்னை.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.