தமிழர்க்குத் தமிழ்த் தேசியம் இன்றியமையாதது - பேரா. ம.இலெ. தங்கப்பா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 05 நவம்பர் 2014 15:10

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினம் தன் சொந்த மண்ணில் தன் தமிழையே முதன்மையாகக் கொண்டு, வழிவழி வந்த தன் பண்பாட்டின் சிறப்புக் கூறுகள் விளங்கும்படியாகத் தனக்குரிய எல்லா உரிமைகளையும் பெற்றுப் புறவாழ்விலும் அகவாழ்விலும் முழுமையான மலர்ச்சி பெற்று வாழ்தல் என்பது யாராலும் மறுக்கமுடியாத ஓரியற்கை மலர்ச்சி நிலையாகும். மாந்த இனத்தின் ஒட்டுமொத்த மலர்ச்சியின் ஒரு கூறுதான் தமிழினத்தின் மலர்ச்சி.

நம் சொந்தத் தமிழ் மண்ணில் நம் சொந்தத் தமிழை முதன்மைப்படுத்தி, நமக்கு இயல்பாக அமைய வேண்டிய எல்லா உரிமைகளுக்காகவும் போராடுதல் என்பது குறுகிய நோக்கமுடையது என்றும், வெள்ளைக்காரன் போனபின் நாமே விரும்பி ஏற்றுக்கொண்ட இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்றும் சிலர் பிதற்றித் திரிகின்றனர்.

மாந்தன் எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருப்பினும் அவனுக்கு அவன் மலர்ச்சி இன்றியமையாதது. மலர்ச்சி என்பது இயற்கை நிலை. உயிர்களின் நோக்கம் யாவும் அவற்றின் மலர்ச்சியே ஆயினும் மலர்ச்சி வேறு. மேலாண்மை வேறு. இன்று மலர்ச்சியின் பெயரால் சில தேசிய இனங்கள் பிற இனங்களை அழித்துத் தங்களை நிலைநாட்டிக் கொள்ள முனைந்து நிற்கின்றன. இந்த இனமேலான்மைவெறி மலர்ச்சி ஆகாது. ஏனெனில் மாந்த இனத்தின் ஒட்டுமொத்த மலர்ச்சியின் கூறாக இது அமைவதில்லை. பிற இனங்களின் அழிவில் தன்னை நிலை நாட்டிக் கொள்ள முனையும் ஓர் இனம் அல்லது ஒரு நாடு மலர்ச்சி எனற அழகிய, தீமையற்ற சொல்லைப் பயன்படுத்தவும் தகுதியற்று நிற்கின்றது. இந்த இன வெறித் தேசியத்தையே தம் அரசியல் நிலைப்பாட்டின் அடிதளமாகக் கொண்டு, பிற இனங்களின் அரசியல், பொருளியல், வாழ்வியல் உரிமைகளை அழித்தொழிப்பதில் முனைந்து நிற்பவையே உலகின் வல்லரசு நாடுகள். தன் மேலாண்மைக்காகப் பிற இனங்களை அழிப்பதில் அல்லது ஒடுக்குவதில் தன் அதிகாரத்தையும் படை வலிமையையும் பயன்படுத்தும் இனவெறி அல்லது போலித் தேசியப் படை கொண்ட நாடுகளில் நம்மைச் சுற்றி நமக்கு மிக அருகில் இருப்பவை இந்தியா, இலங்கை, சீனம் ஆகியவை ஆகும். இவ்வுண்மையை மெய்ப்பிக்க அண்மைக் கால வரலாறு ஒன்றே சான்றாக நிற்கும். இந்நாடுகள் நடத்திவந்திருக்கும், தொடர்ந்து நடத்திக் கொண்டுமிருக்கும் அட்டூழியங்களை அண்மைக்கால வரலாற்றில் படிப்பவர்கள் மாந்தஇன மலர்ச்சிக்கு இவை எவ்வளவு கொடும் பகையாக இருந்து வருகின்றன என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டுத் தமிழ்மக்களை இந்திய மக்களாக இந்திய அரசு கருதியிருக்குமானால், அம்மக்களின் இன, மொழி, பண்பாட்டுவழி உடன் பிறப்புகளான ஈழத்தமிழரை சற்றும் ஈவிரக்கமின்றி இலட்சக் கணக்கில் கொன்று குவித்திருக்குமா? தமிழ் மீனவர்களைச் சாகவிட்டுக் கொண்டு சும்மா இருக்குமா?

இந்திய ஒருமைப்பாடு என்பது மிகப்பெரிய புனிதம் போலவும், அதற்கு உடன்படாதவர்கள் குறுகிய நோக்கமுடையவர்கள் என்பது போலவும் நடிப்புக்காட்டுபவர்கள் பொய்யரும் போலியருமாவார் என்பதற்கு மேற்கோள் காட்ட இவ்வரலாறுதான் நமக்குத்துணை ஆகும்.

தன்னுள் இணைந்திருக்கும் எல்லா மொழி மக்கட்கும், அவர்களின் மொழிகட்கும் சமஉரிமை வழங்கி அவற்றின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள நாடு என்று இந்தியாவைக் கூறமுடியுமா?

தமிழராகிய நாம் நாடற்றவர்களோ, அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நாடோடிகளோ அல்லோம். உயிர் பிழைப்பதற்காக இந்தியா என்ற செயற்கை நாட்டில் ஒட்டிக் கொண்டும் தொங்கிக் கொண்டும் கிடக்கும் தேவை நமக்கில்லை. இன்று இந்தியா என்ற போலிப் பெயர் பெற்றிருக்கும் நாவலம் பகுதி முழுமையும் ஒரு காலத்தில் தமிழகமாகவே இருந்து வந்திருந்தது என்பதை மக்களின் வரலாறும் மொழிவரலாறும் உலகுக்கு எடுத்து உரைக்கும்.

பிற்காலத்தில் இப்பகுதி பிரிந்து பல்வேறு நாடுகள் ஆனமையும் வரலாற்று உண்மையே. இப் பல்வேறு நாடுகளே வெள்ளைக்காரனால் ஒரே வல்லாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்தியா விடுதலை பெற்ற தொடக்கத்தில் கூட்டாட்சி நாடாகவே அமைந்தது. எல்லா மொழிகட்கும் எல்லா மொழியினருக்கும் சமஉரிமை அமைந்த அத்தகைய அமைப்பு முறையில் தான் இந்தியா நீடித்திருக்க வேண்டும். அப்படியின்றி எல்லா முதன்மையான உரிமைகளையும் தன்மீது குவித்து வைத்திருக்கும் ஒரு நடுவணரசைக் கொண்ட ஒன்றியமாக அதனை உருவாக்க முனைந்தவர்கள் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளாமல் வெறும் அரசியல் ஆரவாரங்களிலும் அதிகாரக் குவிப்பிலுமே கவனம் செலுத்தத் தொடங்கினர்.

இதற்கிடையில் ஆளும் அதிகாரம் பெற்று அரியணை ஏறியோரிடமிருந்து எல்லா நல்லுணர்வுகளும், தொண்டுணர்வும் முற்றும் அழிந்துபோயின. பொருளீட்டுவது ஒன்றே குறியாயிற்று. ஆள்வோர் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை, நேர்மை, ஒழுங்கு, நடுநிலையுணர்வு முதலியவற்றை முற்றும் புறந்தள்ளி, கட்சி அடிப்படையிலும், சாதி, இன, மதக் குழுக்களின் அடிப்படையிலும் தங்களை நிலைநாட்டிக் கொள்வதையே முதல் வேலையாக மேற்கொள்ளலாயினர் இந்த ஆளுங் கூட்டத்தினர்.

இன்றும் இந்திய அரசு ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு என்று பேசி வருகின்றது. ஆனால் அவ்வொருமைப்பாட்டை நிநைாட்டுவதற்கான எந்தவொரு நடுநிலையான செயலையும் அது மேற்கொள்வதில்லை.

ஒரே ஓர் எடுத்துக்காட்டு போதும், இந்திய அரசு எவ்வளவு போலியானது, எவ்வளவு நடுநிலையற்றது என்பதைக் காட்டுவதற்கு.

இந்தியா ஒரு நாடு, ஒரு நாடு என்று இவர்கள் அடித்துக் கொள்கின்றார்களே, அந்த ஒரு நாட்டின் மாநிலங்களிடையே ஆற்று நீர்ப் பங்கீடு முறைப்படி அமைய இந்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? காவிரி நீர், பாலாற்று நீர், முல்லைப் பெரியாறு நீர், மூன்றின் தொடர்பிலும் எந்த நடுநிலையுணர்வுமில்லாமல், நீர்ப்பங்கீடு பற்றிய உலக ஒழுங்குமுறைகளைக் கடுகளவும் மதிக்காமல் புறக்கணித்து முழுக்க முழுக்கத் தன்னலத்துடன் செயற்பட்டு வரும் கருநாடகம், ஆந்திரா, கேரளம் ஆகிய மூன்றினையும் கடிந்துரைத்துத் தமிழர்க்குரிய பங்கினைப் பெற்றுக்கொடுக்க முயலாது நடுவன் அரசுக்கு இந்திய ஒருமைப்பாடு பற்றிப் பேச என்ன தகுதியிருக்கின்றது? இது ஒரே ஒரு எடுத்துக்காட்டுத்தான். இதுபோல் நடுவணரசு நடுநிலை பிறழ்ந்தும் தமிழர் நலன்கட்கெதிராகவும், வேண்டுமென்றே தமிழகத்துக்குத் தீங்கு செய்யும் நயவஞ்சகச் சூழ்ச்சி உணர்வுடனும் மேற்கொண்டிருக்கும் செயல்கள் இன்னும் பல. எல்லாவற்றின் சாரமும் ஒன்றுதான், இந்திய ஒருமைப்பாடு உண்மையான ஒருமைப்பாடு அன்று. தமிழனின் அடிப்படை உரிமைகளிலேயே கைவைத்து அவனை ஒழித்துக்கட்டும் போலி ஒருமைப்பாடு என்பதே அது.

நான்கு, ஐந்து குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்வார்களானால் உறுப்பினரிடையே ஒத்த உரிமையும் ஒத்த மதிப்பும் இருந்தே தீர வேண்டும். பொது நலன் கருதித் தனிநலன்கள் சிலவற்றை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் விட்டுக் கொடுக்கும் தனிநலன்கட்கு ஈடுசெய்யும் வகையில் பெறுகின்ற பொதுநலன்கள் அமைய வேண்டுமே. அப்பொழுதுதான் சமநிலை அல்லது நடுநிலை பெறப்படும். விட்டுக் கொடுப்பவை மிகுதி, பெறுபவை ஒன்றுமில்லை என்றால், அப்புறம் எதற்கு அந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை? இந்தியாவோடு இணைந்திருக்கும் வாழ்க்கையில் தமிழ்நாட்டுக்குப் புதிய பயன்கள் எவையும் கிடைக்காமல் போயினும், ஏற்கெனவே இருந்து வரும் உரிமைகளாவது பறிபோகாமல் இருக்க வேண்டுமே! இப்போதாவது இது நடக்கின்றது? இல்லையே. இருக்கும் உரிமைகளும் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றனவே! ஒருமைப்பாட்டின் பெயரால் தமிழ் நாட்டில் வேற்று மாநிலத்தவர்களால் மிகப்பெரிய பொருளியல் சுரண்டல் நடந்துகொண்டு வருகின்றது. பொருளியல் மட்டுமன்று, அரசியல், பண்பாட்டில், வாழ்வியல் யாவிலுமே தமிழரின் கைகளைவிட அயலவர்களின் கைகளே ஓங்கியிருக்கின்றன. மழலை வகுப்பு முதல் ஆங்கிலம் பயிற்றுமொழியாகத் திணிக்கப்படுவது தமிழர்க்கெதிராக இழைக்கப்படும் மிகப் பெரிய முறைகேடு ஆகும்.

இவற்றையெல்லாம் புறங்கண்டு தமிழ், தமிழ்ப்பண்பாடு, தமிழனின் வாழ்வியல் யாவும் உரிய மலர்ச்சிபெறத் தக்கதொரு சூழல் இந்தியத் தேசியத்துக்குள் உருவாக வழியில்லை என்பது நூற்றுக்கு நூறு உறுதி.

முதலாளிகளும் பெருந்தொழில் முனைவர்களும் ஏழை, எளிய மக்களை உறிஞ்சிக் கொழுப்பதற்கும், பன்னாட்டு வாணிக நிறுவனங்கள் தடை ஏதுமின்றித் தங்கள் நாடளாவிய சுரண்டலை நடத்திக் கொள்வதற்கும், மேல் தட்டுக் கும்பல் நாடு முழுவதிலும், பின் நாட்டைத் தாண்டி உலக முழுவதிலும் சென்று உயரலுவல் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும், வல்லரசு நாடுகளின் சந்தைக்களமாக இருப்பதற்கும், இந்தியா ஒரே அதிகாரத்தின்கீழ் இருமுக்கும் மிகப்பெரியதொரு நாடாக ஆளப்படுவது மிகமிக ஏற்றதாக இருக்கின்றது என்பதைத் தவிர இந்தியா வேறு எந்தவகையிலும் மக்களின் வாழ்வியல் பண்பாட்டு மலர்ச்சிக்குத் துணைபுரியும் சிறந்ததொரு நாடாக இல்லை; இருக்கவும் போவதில்லை.

புறத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், படித்த கூலிகளாக வெளிநாடுகளில் வேலை பார்க்கவும் இளைஞர்க்கு வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுப்பதே கல்வி என நம் அரசுகள் நினைக்கின்றன. வாழ்வியற் கல்வி மூலம் மக்களை மக்கட் பண்புடையவர்களாகவும் குமுகாய விழிப்புணர்வு உடையவர்களாகவும், ஆக்கவழியில் நாட்டின் மலர்சிக்குப் பங்களிப்பவர்களாவும் ஆக்குவது பற்றி இவர்கட்குக் கடுகளவும் கவலையில்லை. தங்களை எதிர்க்காத அளவுக்கு மக்களின் மூளையை மழுங்கடித்து வைத்திருப்பதே இவர்களின் நோக்கம்.

இப்படி எல்லாவற்றின் நன்மை - தீமைகளையும் நடுவு நிலையோடு பார்த்து வருவோமானால் மாந்த இனத்தின் ஒரு கூறாகிய தமிழினத்தின் அக, புற மலர்ச்சிகட்கு இந்திய அரசின்கீழ் எந்த வாய்ப்பும் உருவாக வழியில்லை. தமிழர்கள் இந்திய தேசியத்தினின்று முற்றும் வேறுபட்ட தங்கள் தேசியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தித் தமிழ் மக்கட்கு விழிப்புணர்வூட்டி அவர்களை அவ்வழிப்படுத்து தலைத் தவிர வேறு வழியில்லை. இல்லை.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.