காமராசர் இல்லையேல் சோனியா ஏது? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 நவம்பர் 2014 12:19

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தூக்குக் கயிற்றில் தொங்கியும், சிறைக்கொடுமைகளை அனுபவித்தும், எண்ணற்றத் தியாகம் செய்த தலைமுறை காமராசரோடு முடிந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து வரும் சில முதிய தியாகிகள் "நாட்டின் நிலைமையைப் பார்த்து இதற்காகவோ போராடினோம். தியாகம் செய்தோம்?'' என மனம் வெதும்பி கிடக்கின்றனர். அவர்களைத் தேடுவாருமில்லை மதிப்பாருமில்லை.

காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைமை இதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. காந்தியடிகள் முதல் காமராசர் வரை அலங்கரித்த தலைமை நாற்காலியில் சுதந்திரப் போராட்டம் குறித்து எதுவும் தெரியாதவரும், எண்ணற்றத் தியாகம் செய்த தலைவர்களை மதிக்கத் தெரியாதவருமான ஒருவர் அமர்ந்திருக்கும் துர்பாக்கியம். ஆனால் காங்கிரஸ் தலைமைப் பதவியை ஏற்றபிறகாவது காங்கிரஸ் வரலாற்றைப் படித்துத் தெரிந்திருக்க வேண்டும். எதுவும் தெரியாமலும் தியாகத் தலைவர்களை மதிக்கத் தெரியாமலும் இருப்பது பெரிய குற்றமாகும்.

காமராசர் கட்டிய சத்தியமூர்த்தி பவனத்தில் அவர் உயிரோடு இருந்தவரை அவரின் சிலை வைக்க அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் காமராசர் சிலையை சத்தியமூர்த்தி பவனத்தில் முகப்பில் நிறுவி அதை திறந்துவைக்க சோனியா, இராகுல் ஆகியோரை அழைத்தபோது அலட்சியப்படுத்தி மறுத்துவிட்டனர்.

உறுப்பினர் சேர்ப்பது சம்பந்தமாக அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் இராகுல் தலைமையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர் அட்டையில் சோனியா இராகுல் ஆகியோரின் படங்களைத் தவிர வேறு யாரின் படமும் இடம்பெறக்கூடாது என அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் காமராசர், சோனியா, இராகுல், மூப்பனார் ஆகியோர் படங்களை அச்சிட்ட உறுப்பினர் சீட்டுக்கள் வெளியிடப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டியபோது அதை அங்கீகரிப்பதற்கு இராகுல் மறுத்துவிட்டார். தமிழகப் பொறுப்பாளராக இருக்கும் முகுல்வாசுனிக் என்பவர் காமராசர் குறித்தே விமர்சனம் செய்திருக்கிறார். இதன் விளைவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தனது பதவியைவிட்டு விலகியிருக்கிறார்.

இராசீவ் பிரதமராக இருந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா மும்பையில் நடைபெற்றபோது வெளியிடப்பட்ட மலரில் பட்டாபி சீதாராமையாவின் படத்தை அச்சடித்து அதற்குகீழ் காமராசர் எனக் குறிப்பிட்டார்கள். பட்டாபியையும் அவர்களுக்குத் தெரியவில்லை. காமராசரையும் தெரியவில்லை என்பது அம்பலமாயிற்று. சோனியாவின் காலத்தில் உறுப்பினர் அட்டையில்கூட, காமராசரின் படம் பொறிக்கப்படக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

1955ஆம் ஆண்டில் காமராசர் முன்னின்று நடத்திய ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் வரலாற்றில் மிக முக்கியமானத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டில்தான் "சோசலிச மாதிரி சமுதாயத்தை அமைப்பதே காங்கிரசின் குறிக்கோள்' என்ற தீர்மானத்தை நேரு முன்மொழிய காமராசர் வழிமொழிந்தார். அம்மாநாட்டில் கூடிய பெரும் மக்கள் திரளைப் பார்த்தபோதுதான் காமராசர் மக்கள் தலைவர் என்பதை நேருவும் மற்ற தலைவர்களும் உணர்ந்து அவரிடம் பெருமதிப்பு கொண்டார்கள்.

ஒன்பது ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக இருந்து அவர் புரிந்த சாதனைகள் தமிழகத்தின் பொற்காலம் என இன்றுவரை அனைவராலும் பாராட்டப்படுகின்றன.

காமராசரின் தியாகமும் காங்கிரஸ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியத் தொண்டும், எத்தகையது என்பது அறியாதவர்கள் தற்போது காங்கிரஸ் தலைமையில் இருக்கிறார்கள்.

நீண்ட காலமாக பலர் அமைச்சர்களாக இருந்தக் காரணத்தினால் அலட்சியப்போக்கும், ஊழலும் வளர்ந்து வருவதை கண்ட நேரு மிக வருந்தினார். எனவே அது குறித்து காமராசரிடம் மட்டுமே கலந்தாலோசித்தார். அத்தகையவர்களைப் பதவி பொறுப்புகளில் இருந்து அகற்றுவதற்கு காமராசர் கூறிய யோசனை நேருவைக் கவர்ந்தது. மத்திய, மாநில அமைச்சர்கள் அனைவரும் கட்சிப் பணிக்குத் திரும்பவேண்டும் என்பதற்காக அனைவரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களைப் பெறவேண்டும் என்று கூறிய காமராசர் அதற்கு முன்மாதிரியாக தானே விலக முன்வந்தார்.

ஊழலற்ற ஆட்சி நடத்தி மாபெரும் சாதனைகள் புரிந்த காமராசர் விலக முன்வந்ததைக் கண்டு பிரதமர் நேரு வியந்துபோனார். நாடு முழுவதும் இதை நடைமுறைப்படுத்த முடிவுசெய்து அதற்கு காமராசர் திட்டம் என்று பெயரிட்டார். அதனுடைய விளைவுகள் காங்கிரஸ் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பொறித்தன.

இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் காமராசரே என நேரு கருதினார். மற்ற மேலிடத் தலைவர்களும் அதை ஆமோதித்தனர். இதன் விளைவாக காமராசர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனக்குப் பிறகு காங்கிரசையும் நாட்டையும் சிறிதளவும் தன்னலமின்றி வழிநடத்திச் செல்லும் திறமை வாய்ந்தவர் காமராசரே என்பதை நேரு நன்கு உணர்ந்திருந்தார். அவர் செய்த இந்த முடிவு எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் கூடியது என்பதை அவருடைய மறைவுக்குப் பிறகு நடைபெற்ற செயல்கள் நிரூபித்தன என்பது மறைக்கமுடியாத வரலாறாகும்.

இராகுலின் முப்பட்டானார் நேருவுக்கே காங்கிரஸ் தலைவராக விளங்கியவர் காமராசரே. நேருவின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பதவிச் சண்டையால் சிதறிவிடும். இந்தியாவின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்றெல்லாம் உலக நாடுகள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் நேருவிற்குப் பிறகு லால்பகதூரை சனநாயக முறைப்படி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வழிசெய்த பெருமை காமராசருக்கு உண்டு.

லால்பகதூரின் மறைவிற்குப் பிறகு பிரதமர் பதவிக்குப் போட்டியிட முனைந்த பலரும் குறிப்பாக மொரார்ஜி தேசாய் உட்பட அனைவரும் காமராசர் பிரதமர் பொறுப்பை ஏற்றால் தாங்கள் போட்டியிடவில்லை என அறிவித்தார்கள். தனது காலடியில் வைக்கப்பட்ட மகுடத்தை சூட்டிக்கொள்ள காமராசர் மறுத்தார். இந்திய அரசியலில் தன்னைத் தேடிவந்த பிரதமர் பதவியை உதறித்தள்ளியவர் காமராசர் ஒருவரே. அவருக்கு முன்னும் பின்னும் அத்தகையவர் இருந்ததே இல்லை. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் வரலாற்றில் பல தலைவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் தலைமைப் பொறுப்பை வகித்திருக்கிறார்கள். ஆனால், இருமுறை தொடர்ந்து தலைமைப் பதவியை வகித்தவர் காமராசர் ஒருவரே. அவர் விரும்பியிருந்தால் மூன்றாம் முறையும் தலைவராக தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. நிஜலிங்கப்பாவை தலைவராக்கிவிட்டு விலகிக்கொண்டார்.

இராகுலின் பாட்டி இந்திராகாந்தியை பிரதமராக்க காமராசர் செய்த முயற்சிகளை நாடறியும். இந்திராவை எதிர்த்து மொரார்ஜி போட்டியிட்டபோது பணத் திமிங்கலங்கள் அத்தேர்தலில் தலையிட வரிந்துகட்டியபோது. அவர்களுக்கு காமராசர் விடுத்த கடும் எச்சரிக்கை வேலை செய்தது. இல்லையென்றால் இந்தியாவின் பிரதமர் தேர்தலில் பணம் வேலை செய்தது என்பது உலக அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும். மாநில முதலமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட அனைவரையும் காமராசர் இந்திராவுக்கு ஆதரவாகத் திரட்டிய காரணத்தினால் இந்திரா வெற்றிபெற்றார் என்பது சோனியாவுக்கும் இராகுலுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரலாற்றுப் பூர்வமான உண்மை இது.

அன்றைக்கு காமராசர் உதவியோடு இந்திரா பிரதமராகாமல் இருந்திருந்தால் பிற்காலத்தில் இராசீவ் பிரதமராகி இருக்க முடியாது. சோனியாவும் காங்கிரஸ் தலைமை பதவிக்கு வந்திருக்க முடியாது. இன்றைக்கு இராகுலின் நாட்டாண்மைக்கும் வழி இருந்திருக்காது.

1965ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டபோது அமெரிக்கா தலையிட்டு இந்தியாவை எச்சரித்தது. உடனடியாகப் போரை நிறுத்தாவிட்டால் இந்தியாவிற்கு செய்துவரும் உணவு தானிய உதவியை நிறுத்தப்போவதாக மிரட்டியது. தலைவர் காமராசர் பின்வரும் பதிலடியைக் கொடுத்தார்:
"அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம். உணவு தானிய உற்பத்தியை பெருக்குவோம். மானத்தோடு வாழ்வோமே தவிர யாருக்கும் அடிபணிய மாட்டோம்'' என உறுதிபட கூறினார்.

ஆனால், உலக மயமாக்கல் கொள்கை, அமெரிக்காவோடு செய்யப்பட்ட அணுஉலை உடன்பாடு ஆகியவை காங்கிரசின் சோசலிச கொள்கைக்கு எதிரானது என்பதை உணர்ந்திருந்தபோதிலும் மன்மோகன் சிங் அரசு அதை ஏற்றுக்கொண்டது. ஏற்க வைத்தவர் காங்கிரஸ் தலைவர் சோனியா.

பிரதமர் பதவியை ஏற்க முடியாத நிலையில் பிரதமராக ஒருவரை உட்காரவைத்துவிட்டு பிரதமருக்கு மேலான பிரதமராக அனைவரையும் ஆட்டிப்படைத்தார். இந்த பத்தாண்டு காலத்தில்தான் நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள் நடந்தேறின. ஊழலில் ஈடுபட்ட தனது அமைச்சர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் பிரதமர் மன்மோகன் சிங் தவித்தார். உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் ஆளானார். அவருடைய கைகளை கட்டிப்போட்டக் கரங்கள் யாருடைய கரங்கள்? எதற்காகக் கட்டிப் போட்டன?

ஈழத் தமிழர் பிரச்சினையில் இராசீவ் கையாண்ட தவறான கொள்கையைத் தொடர்ந்து கையாண்டதின் விளைவாக ஈழத் தமிழினம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தது. சோனியா அதைத் தடுத்து நிறுத்த முன்வராததோடு அந்த அழிவிற்குக் காரணமான சிங்கள அரசுக்குத் துணை நின்றார்.

அதன் விளைவாக தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரைச் சந்திக்காத படுதோல்வியை அடைந்தது. போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் பொறுப்புத் தொகைகளைப் பறிகொடுத்ததன் மூலம் என்றும் அழியாத அவமானத்தை காங்கிரஸ் தேடிக்கொண்டது.

இந்திய அரசியலில் ஒரு தமிழன் எட்டாத உயரத்தை தன்னுடைய தொண்டினாலும் தியாகத்தினாலும் எட்டிய தியாகத் தலைவர் காமராசரை புறந்தள்ளத் துணிந்தவர்களை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி சோனியாவின் காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாகக்கூட வரமுடியாத நிலையை அடைந்திருக்கிறது. இது ஏன் என்பதைச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும்.

1885ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை ஐரோப்பியரான ஹியூம் என்பவர் தொடங்கினார். ஆனால் மற்றொரு ஐரோப்பிய பெண்மணியான சோனியாவின் காலத்தில் காங்கிரசுக்கு மூடுவிழா நடத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் காமராசர் புறக்கணிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.

நன்றி : தினமணி 04-11-14

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.