பெரியாறு அணை நிரம்பியது - பொய்மை தோற்றது! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014 15:47

35 ஆண்டு காலத்திற்கு மேலாக பொய்யான ஒன்றை மெய்போல சாதித்து மத்திய அரசு, உச்சநீதிமன்றம் ஆகிய எல்லாவற்றையும் ஏமாற்றி கேரள அரசியல்வாதிகள் நடத்திய நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது.

பெரியாறு அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மிகப் பழமையான இந்த அணை எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். அவ்வாறு நேர்ந்தால் கேரளத்தில் உள்ள 5 மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். பல இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என 1963ஆம் ஆண்டில் மலையாள மனோரமா இதழ் முற்றிலும் பொய்யான செய்தியைப் பரப்பியது. இதற்குப் பின்னணியில் கேரள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருந்தார்கள்.

கேரள அரசின் முறையீட்டிற்குச் செவிசாய்த்த இந்திய அரசு மத்திய நீர்ப்பாசன ஆணையத் தலைவர் தலைமையில் கேரள - தமிழகத் தலைமைப் பொறியாளர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி அணையின் நிலைமையை ஆராயச் செய்தது. இக்குழுவினர் அணையை முற்றிலுமாக சோதித்துப் பார்த்த பிறகு, அணை நல்ல நிலைமையில் இருப்பதாக அறிக்கை அளித்தனர்.

ஆனால் மீண்டும் 1978ஆம் ஆண்டு கேரள அரசு இதே பொய்யான புகாரை எழுப்பியது. இந்திய அரசு மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் அதிகாரியை அணையைப் பரிசோதிக்க அனுப்பியது. அந்த அதிகாரி திருவனந்தபுரத்திலிருந்து இடுக்கி மாவட்டத்தின் வழியாக பெரியாறு அணையை நோக்கிச் சென்ற வழிநெடுகிலும் ஆங்காங்கே பெண்கள் திரண்டு வந்து, அழுது புலம்பி தங்களைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டனர். இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதை உணராத அந்த அதிகாரி அணை நல்ல நிலைமையில் இருந்த போதிலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர் மட்டத்தை 152 அடி உயரத்திலிருந்து 145 அடியாக குறைக்கும்படி கூறினார். அதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு அவ்வாறே செய்தது.

1979ஆம் ஆண்டு மீண்டும் இதே பொய்மைக் கூப்பாட்டை கேரளம் எழுப்பியது. மத்திய பாசன ஆணையத்தின் தலைவர் டாக்டர் கே.சி. தாமஸ் பெரியாறு அணைக்கு வந்து அதைப் பரிசோதித்தார். அணை உறுதியாக இருந்தபோதிலும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையை மேலும் வலுப்படுத்த சில யோசனைகளை கூறினார். அணையை வலுப்படுத்தும் வேலைகள் முடியும் வரை அணையின் நீர்மட்டத்தை 136அடியாக குறைக்க வேண்டும் என அவர் கூறிய அறிவுரையை ஏற்று தமிழக அரசும் அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தது.

ரூ.12.5 கோடி செலவில் அணையை வலுப்படுத்த தமிழக அரசு செய்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து கேரள அரசு பலவகையிலும் முட்டுக்கட்டை போட்டது. எனவே வேறு வழியில்லாமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு "அணையை பலப்படுத்தும் வேலையைத் தடுக்கக்கூடாது. கேரளம் அதைத் தடுப்பதற்கு எத்தகைய காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை. மத்திய நீர்வள ஆணையம் அளித்த பரிந்துரையில் அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதியை அளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என ஆணை பிறப்பித்தது. பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தமிழக அரசு 10 ஆண்டு காலத்திற்கு மேலாக வேலை செய்து அணையை வலுப்படுத்தியது.

கேரள அரசியல்வாதிகள் வேறு ஒரு புதிய சரடு திரித்தனர். பெரியாறு அணைப் பகுதியில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை பயன்படுத்தி, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை தகர்ந்து எந்த நேரமும் பேரழிவு ஏற்படலாம் என்ற அச்சத்தை மக்களிடையே பரப்பினர். அதுமட்டுமல்ல, நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் விளைவாக அணை இடிந்து வெள்ளப் பெருக்கில் இலட்சக்கணக்கான மக்கள் செத்து மிதப்பது போன்ற பொய்யான குறும்படம் ஒன்றைத் தயார் செய்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தார்கள்.

உச்சநீதி மன்றத்திலும் முறையிட்டார்கள். உச்சநீதிமன்றம் அமைத்த குழு மீண்டும் அணைப்பகுதியை பரிசோதனை செய்து 12-12-2000 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவு பெரியாறு அணையிலோ அங்குள்ள மற்ற கட்டிடங்களிலோ உணரப்படவில்லை என்ற உண்மையை குழு உணர்ந்தபோது, கேரள அரசின் பித்தலாட்டத்தை அறிந்துகொண்டு கண்டித்தது.

மேற்கண்ட பொய்கள் தவிடுபொடியானதைக் கண்ட கேரள அரசியல்வாதிகள் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை ஒன்றை கட்டுவதுதான் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என கூற ஆரம்பித்தார்கள். தமிழகத்திற்கு அளிக்கப்படும் தண்ணீரை கொஞ்சம்கூட குறைக்காமல் அப்படியே அளிப்பதாகவும் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்கள். 999 ஆண்டுகளுக்கு செய்யப்பட்ட உடன்பாட்டையே மதிக்க மறுத்தவர்கள், அந்த உடன்பாட்டைச் செல்லாததாக்க இந்த குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள். புதிய அணை கட்டுவது என்றால் புதிய உடன்பாடு செய்ய வேண்டும். அதுவும் கேரளத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த உடன்பாடு அமையும். இந்தியப் பிரதமரை கேரள அனைத்துக் கட்சித் தூதுக்குழு சந்தித்து புதிய அணை குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக கூறினர். அதை ஏற்று அவரும் பேச்சு நடத்துமாறு தமிழகத்திற்கு கூறினார்.

1979ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 50 தடவைகளுக்கு மேல் கேரளத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணாத நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழகம் முன்வந்தது. ஆனாலும், காலங்கடத்தும் தந்திரத்தை கேரளம் கையாண்டதே தவிர பயன் எதுவும் விளையவில்லை. எனவே உச்சநீதிமன்றம் தலையிட்டு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் அவர்கள் தலைமையில் மூவர் குழு ஒன்றை அமைத்தது. இதில் கேரளத்தைச் சேர்ந்த நீதிபதி கே.டி. தாமஸ் என்பவரும் அங்கம் வகித்தார்.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த உயரதிகார குழு பெரியார் அணைக்கு 5-1-11 அன்று சென்று பார்வையிட்டது. பிறகு, இக்குழு மத்திய மண் விசை இயல் ஆராய்ச்சியின் மூலம் பெரியாறு அணையில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளையும் நன்கு ஆராய்ந்து ஏற்றுக்கொண்டது.

எல்லா வகையிலும் பெரியாறு அணை வலிமை மிக்கதாக இருப்பதாகவும் எனவே அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் எனவும் இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள ஆணை வழங்கியது.

இந்தச் சூழ்நிலையில் நீர்மட்டத்தை நாம் உயர்த்தி அது 142அடியை நெருங்கியபோது அதைத் தடுக்க கேரளம் மறுபடியும் உச்சநீதிமன்றத்தையும் இந்திய அரசையும் ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியது.

1. பெரியார் அணையின் நீர் மட்டம் 142 அடி உயரத்தை எட்டிவிட்டால் மிகைநீரின் அழுத்தம் காரணமாக பலவீனமான அணை உடைந்துவிடும் என இதுவரை கேரளம் கூறிய காரணம் பொய்த்துப் போகும். எனவே இதைத் தடுப்பதற்காக உச்சநீதி மன்றத்தில் முறையிட கேரளம் முடிவு செய்துள்ளது.

2. அணை உறுதியாக இருக்கிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்து 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம், என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிடும்.

3. 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டபோது, அணையின் உட்பக்கத்தில் தங்கும் விடுதிகளையும், கேளிக்கை விடுதிகளையும் அமைத்துக்கொள்ளுமாறு கேரள தொழிலதிபர்களைத் தூண்டி அவர்களும் அவ்வாறே அமைத்தார்கள். இப்போது 142 அடியாக நீர்மட்டம் உயர்ந்துவிட்டபிறகு அந்தக் கட்டிடங்கள் நீரில் மூழ்கத் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால் அவைகளெல்லாம் அணையின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை என்பது நிரூபணமாகிவிடும். உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு இது கொண்டுசெல்லப்பட்டுவிட்டால் கடும் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்று கேரளம் அஞ்சுகிறது.

இதற்கிடையில் 17-11-2014 பெரியாறு அணைப் பகுதிக்குள் கேரள சட்டமன்ற பெண் உறுப்பினரான பிஜுமோள் என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் புகுந்து தமிழக அதிகாரிகளைத் தாக்கிவிட்டு பேபி அணையை சேதப்படுத்த முயன்றுள்ளனர். கேரளப் போலீசார் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். கேரள அரசியல்வாதிகள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாகும்.

இந்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக மத்திய காவல்படையை பெரியாறு அணைப் பகுதிக்கு அனுப்பி அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கச் செய்ய வேண்டும்.

35 ஆண்டு காலமாக தமிழகம் பொறுமையுடன் சட்டரீதியான முறையிடல்களில் தனது உரிமையை நிலைநாட்ட முயற்சி செய்து உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வெற்றிப் பெற்றிருக்கிறது. பெற்ற வெற்றியை காலித் தனத்தின் மூலம் தட்டிப்பறிக்க கேரள அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். பெரியாறு அணைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு கேரள அரசியல்வாதிகளே பொறுப்பாவார்கள்.

தமிழகத்தின் இழப்பு

கடந்த 35 ஆண்டு காலமாக தமிழகம் பேரிழப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்ட பிறகு பாசனத்திற்கு நீரில்லாமல் தரிசாக மாறிய நிலப்பரப்பு 38ஆயிரம் ஏக்கர்.

இருபோகமாக இருந்து ஒருபோக சாகுபடியான நிலப்பரப்பு 26 ஆயிரம் ஹெக்டேர்.

ஆழ்துளைப் பாசனத்திற்கு மாறிய பாசனப் பரப்பு 53ஆயிரம் ஏக்கர்.

விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூ.55 கோடி

மின்னுற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடி.

பயன்படுத்தாத நிலப்பரப்புக்கு கூடுதல் குத்தகைப் பணம், கேரளப் போலீசாருக்கு ஊதியம், வழக்குச் செலவிற்கு ஆன பணம் இவை எல்லாவற்றையும் சேர்த்தால் கடந்த 35 ஆண்டு காலத்தில் தமிழகம் ஏறத்தாழ 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்திருக்கிறது. இந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டிய பொறுப்பு கேரளத்திற்கு உண்டு. அதை இந்திய அரசு தலையிட்டு பெற்றுக்கொடுக்க வேண்டும். அது இந்திய அரசின் நீங்காத கடமையாகும்.

இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இத்தகைய மோசடி நாடகத்தை இதுவரை நடத்தியது இல்லை. கேரளத்தில் உள்ள எந்தக் கட்சி அரசியல்வாதியும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.