இலங்கையில் சீன ஆதிக்கத்தைத் தடுக்க தமிழீழம் மலர்வதே வழி! பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் பழ. நெடுமாறன் முழக்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014 16:05

தொன்மையும் பெருமையுமிக்க தமிழர் வரலாற்றில் முதன் முதலாக புரட்சியைப் பூக்கச் செய்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் பூண்ட வீரத் திலகம் அவர். அடிமை இருளில் சிக்கித் தவிக்கிற தமிழினத்திற்கான விடியலை அளிக்கப்போகிற விடிவெள்ளி அவர்.

தனது தாயகத்தின் விடுதலைக்காக தன்னையே ஈகம் செய்ய எவன் முன் வருகிறானோ அவனே உண்மையான போராளி என்னும் அர்ப்பணிப்பு உணர்வைத் தனது நாட்டு இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஊட்டி புலிகளையும், கரும்புலிகளையும் உருவாக்கியவர் அவர்.

அடிமைச் சேற்றில் புழுக்களாக நெளிந்தவர்களை புலிகளாக்கித் தமிழ்ப் பகைவர்களை நடுநடுங்க வைத்தவர் பிரபாகரன்.

அன்னிய நாடுகளுக்கு மந்தை மந்தையாக ஓட்டிச் செல்லப்பட்ட தமிழர்களைக் கூலிகள் என இழிவாக உலக நாடுகள் அழைத்தன. விடுதலைப் புலிகளின் வீரத்தினாலும், தியாகத்தினாலும் அந்த இழிவைத் துடைத்து வீரமரபினர் என்ற பெருமையைத் தமிழருக்குத் தேடித்தந்தவர் பிரபாகரன் ஆவார்.

சந்தர்ப்பக் கோளாறால் டில்லியின் ஆட்சிப் பீடத்தில் அமர நேர்ந்த ராஜீவ்காந்தி அவசரத்தில் அள்ளித் தெளித்தக் கோலமாக ஜெயவர்த்தனாவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை ஏற்பதற்கு பிரபாகரன் மறுத்தபோது அவரை தனது எதிரியாகக் கருதி இந்தியப் படைகளை ஏவி அவரை ஒழிக்க முயன்று படுதோல்வி அடைந்தார். மூக்குடைப்பட்டு அவமானகரமான முறையில் இந்தியப் படை வெளியேற நேர்ந்தது.

தோற்றுப்போன இராஜீவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றிய பிரதமர் மன்மோகன்சிங்கின் அரசு யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டதைப்போல இந்தியாவுக்கு அபாயத்தை வரவழைத்துக் கொண்டது.

இந்தியாவின் மீதுள்ள தனது பகையைத் தீர்த்துக் கொள்ள காத்திருந்த சீனாவின் நட்பை தேடிப்பெற்றார் இலங்கை அதிபர் இராசபட்சே. எதற்காக இந்தக் கள்ளஉறவு என்பதைக்கூட எண்ணிப் பார்க்காமலும், வரப்போகும் ஆபத்தை உணராமலும் இராசபட்சேவுடன் இந்தியாவும் கைகோர்த்து நின்று புலிகளை ஒழிக்க உதவியது.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை இலங்கையில் காலூன்ற எந்த அன்னிய வல்லரசாலும் முடியவில்லை. புலிகள் தங்கள் மண்ணின் பெரும் பகுதியை மீட்டுத் தனி அரசு நடத்திய போது, இந்தியா முன் வந்து அதை அங்கீகரித்திருக்குமானால் சீனாவோ, பாகிஸ்தானோ இலங்கையில் காலூன்றியிருக்க முடியாது.

சீனாவோ பாகிஸ்தானோ இந்தியாவின் எதிரி எதுவாக இருந்தாலும் அவற்றுடன் உறவு கொள்ளவோ, உதவி பெறவோ பிரபாகரன் உறுதியாக மறுத்தார். ஆனால், இந்தியாவின் பகை நாடுகள் என்று தெரிந்தும் சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நட்புறவு கொள்ளவும், ஆயுத உதவிகள் பெறவும் இராசபட்சே தயங்கவில்லை. பிரபாகரனின் இந்நிலைப் பாட்டிற்கும், இராசபட்சேவின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியாத இந்திய அரசு இழைத்த தவறின் விளைவாக இந்தியாவின் தென்வாயிலில் அபாயம் காத்து நிற்கிறது.

இலங்கை அதிபர் இராசபட்சேவிடம் ஏமாந்தது இந்தியா. இதன் விளைவாக சீனா, இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்துமாக்கடல் ஆதிக்கத்தையும் தன்வசம் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

தன்னையும், தனது நாட்டையும் இந்த அபாயத்திலிருந்து மீட்கும் வழி பிரபாகரனுக்குத் தெரியும். நிச்சயமாக அவர் மீட்பார்.

இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கக்கூடாது என்பது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் நோக்கமாகும்.

இந்து மாக்கடலில் சீனாவின்ஆதிக்கத்தையும், இலங்கையில் சீனா காலூன்றி இருப்பதால் இந்தியா எதிர் நோக்கி இருக்கும் அபாயத்தையும் தடுத்து நிறுத்த ஒரே வழி தமிழீழம் அமைவதே தான். தமிழீழம் அமையவும்,அதற்கு உறுதுணையாக நிற்கவும், இந்தியாவும், பிற நாடுகளும் முன்வந்தாலொழிய சீன அபாயத்திலிருந்து இந்தியா தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாது, இந்து மாக்கடல் ஆதிக்கத்தை சீனாவிடமிருந்து பறிக்க இந்தியாவினாலும், மேற்கு நாடுகளாலும் முடியாது.

கடந்த காலத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தன. பொருளாதார உதவிகளைச் செய்தன. இது எவ்வளவு தவறானது என்பதை அந்நாடுகள் இப்போது உணர்ந்துவிட்டன. ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அந்நாடுகள் கொண்டு வந்ததற்கும், இராசபட்சேயின் மீதுள்ள போர்க் குற்றங்கள் இனப் படுகொலைகள், மனித உரிமையின் மீறல்கள் ஆகியவற்றைக் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைக்க முன்வந்ததற்கும் இதுவே காரணமாகும்.

கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு ஐ.நா. விசாரணைக் கமிசன் அமைக்கப்படுவதையே எதிர்த்தது. இந்தியாவில் விசாரணை நடத்த அந்தக் கமிசனை அனுமதிக்கவும் மறுத்தது. காங்கிரஸ் அரசு செய்த இந்தத் தவறைத் திருத்துவதற்கு பிரதமர் மோடி முன்வரவேண்டும். ஐ.நா. விசாரணைக்குழு தமிழகத்தில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்.

ஐரோப்பாவில் இருந்த சிறிய நாடுகளை இட்லர் ஆக்கிரமித்தபோது, பிரிட்டிஷ் அரசு அதைக் கண்டிக்க முன்வரவில்லை. இட்லரை தாஜா செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. அதே தவறை காங்கிரஸ் அரசு இப்போது செய்தது. தென்னாசியாவின் இட்லராக உருவாகியிருக்கும் இராசபட்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிப்பதன் மூலம் மட்டுமே இந்தியா எதிர் நோக்கியிருக்கும் அபாயத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும். பிரதமர் மோடி அரசு இதை எவ்வளவு விரைவாக உணருகிறதோ அந்த அளவுக்கு நல்லது.

எம்,கே. நாராயணன்களையும், சிவசங்கர மேனன்களையும் நம்பிச் செயல்பட்ட காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட கதி, சுப்ரமணிய சுவாமிகளையும், சேஷாத்திரி சாரிகளையும் நம்பினால், பா.ச.க. அரசுக்கும் ஏற்படும். இதை பிரதமர் மோடி உணரவேண்டும்.

சுப்ரமணிய சுவாமி ஒரு சாவுக் குருவி. தொட்ட இடம் துலங்காது. அவரை நம்பியவர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள்.

(தஞ்சை விழாவில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை)

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.