நிகரற்ற மனித உரிமைப் போராளி கிருஷ்ணய்யர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 13:23

அண்மையில் தனது 100-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த செய்தி உலகம் முழுவதிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு அளவற்றத் துயரத்தை அளித்துள்ளது.


சிறந்த மனித உரிமைப் போராளியாகவும், முன்மாதிரியான தீர்ப்புகள் பலவற்றை வழங்கிய நீதியரசராகவும் எல்லாவற்றுக்கும் மேலாக அனைவராலும் மதித்துப் போற்றப்பட்ட ஒருவராகவும் அவர் விளங்கினார்.
1958-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்களும் செய்துகொண்ட பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட உடன்பாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மேற்கு நோக்கிப் பாய்ந்தோடும் ஆற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி தமிழகத்தின் கோவை, ஈரோடு மாவட்டங்களின் வறண்ட பகுதிக்குப் பாசன வசதி அளிக்கும் இத்திட்டத்திற்குக் காரணமாக இருந்தவர் கேரளப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களே ஆவார். இதற்காக பிரதமர் நேருவின் பாராட்டுதலை அவர் பெற்றார். ஆனால், கேரளத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் இத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால் தமிழகத்திற்கு நீர் கொடுக்க முயல்கிறார் என்று குறுகிய மனப்பான்மையோடு குற்றம்சாட்டினார்கள். காங்கிரஸ்காரர்களின் மனிதாபிமானமற்ற இச்செயல் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கும் என கருதிய கிருஷ்ணய்யர் தமிழக முதலமைச்சர் காமராசருடன் தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்தார். காமராசரின் தலையீட்டால் கேரளக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் எதிர்ப்பை நிறுத்திக்கொண்டார்கள். கேரளப் பொதுப்பணித்துறை அமைச்சராக வி.ஆர். கிருஷ்ணய்யர் தொடர்ந்து நீடித்திருந்தால் மேற்கு நோக்கிப் பாயும் பல நதிகளின் நீர் தமிழகத்திற்குத் திருப்பப்பட நல்வாய்ப்பு இருந்திருக்கும். உச்சநீதிமன்ற நீதியரசராக அவர் இருந்த போது வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை அளித்தார். பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் என்னும் நூலின் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிபெயர்ப்பு நூல்களை உத்திரப்பிரதேச அரசு தடை செய்தது.
அதை எதிர்த்து அம்மாநில உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் இத்தடை செல்லாது என்றத் தீர்ப்பே வழங்கப்பட்டது. ஆயினும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் அளித்தத் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"தனி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை பறிக்கப்படுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 99-ஏயைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. தேச நலனைப் பாதுகாப்பதற்கு தனிமனித உரிமையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அய்யமில்லை. ஆனால் அதே நேரத்தில் தனிமனித சுதந்திரம் குறித்து அரசியல் சட்டம் அளித்துள்ள விளக்கத்தில் அதற்கான கட்டுப்பாடுகள் உரிய காரணங்களோடு கூறப்பட்டுள்ளன. குற்றமுறை பிரிவு 99ஏவை உருவாக்கியபோது அரசியல் அமைப்பை கருத்தில் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. கண்மூடித் தனமான, மூடத்தனமான கொள்கைகள் கண்டிக்கப்படும்போதும், வெளியிடும்போதும் எந்தஒரு முற்போக்கான மாநில அரசும் அதை தடை செய்யக்கூடாது என்பதே குற்றமுறை 99ஏ பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கும் செய்தியாகும்.'' என்று கூறி பெரியார் அவர்களின் நூலுக்கு விதிக்கப்பட்டத் தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உறுதிசெய்தார்.
அதைப்போல ஈழத் தமிழர் பிரச்சினையிலும் தீவிரமான ஈடுபாடு காட்டினார். மனித உரிமை ஆர்வலர்களை இணைத்து "இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பதற்கான அமைப்பு'' என்ற அமைப்பை 1984இல் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் தலைவராக கிருஷ்ணய்யர், செயலாளராக இலங்கை வழக்கறிஞர் ருத்ரமூர்த்தி மற்றும் உறுப்பினர்களாக டில்லிப் பல்கலைக் கழக துணைவேந்தர் உபேந்திர பக்சி, மெயின்ஸ்டீரிம் பத்திரிகை ஆசிரியர் சக்கரவர்த்தி, கல்கத்தா முதுபெரும் வழக்கறிஞர் சுப்பிராட்டா ராய் சவுத்திரி, நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா பல்கலைக் கழகத்தின் இயக்குநர் என்.ஆர். மாதவ மேனன், சென்னைப்
பல்கலைக் கழகப் பேராசிரியர் டி.எஸ். இராமராவ், நியூஸ் டுடே ஆங்கில நாளிதழின் ஆசிரியர் டி.ஆர். இராமசாமி, டில்லிப் பல்கலைக் கழக சட்டப் பேராசிரியர் ஜே.என். சக்சேனா, இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி ஜே. சொராப்ஜி, மூத்த வழக்கறிஞர் என்.டி. வானமாமலை ஆகியோர் செயல்பட்டார்கள்.
இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிராக மிகக்கொடூரமாக நடைபெற்றுவந்த மனித உரிமை மீறல்களைக் கண்டு அளவற்ற மனவேதனை அடைந்த கிருஷ்ணய்யர் 1984-ஆம் ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்றையப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார். "யாழ்ப்பாணம் கொலைக் களமாகி படுகொலைகள் நிகழ்வது இந்தியாவிற்கு மிகுந்த துயரத்தைத் தரும் செயலாகும்.
இன்று சர்வதேசச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள உயர்ந்த மனித நேயப் பண்புகளை ஜவஹர்லால் நேரு அவர்களும் மகாத்மா காந்தி அவர்களும் விட்டுச் சென்றுள்ளார்கள். எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவருக்கு இழைக்கப்படும் தீங்காயினும் எல்லோருக்கும் எல்லா இடத்திலும் இழைக்கப்படும் தீங்காகக் கருதப்படும். உலக அமைதியின்பால் அக்கறைக் கொண்ட அணிசாரா நாடுகளின் தலைவராகவும் உலக அரசியலில் மதிக்கப்படக்கூடியவராகவும் மனித நேயத்தை வலியுறுத்துகிற அரசியல் சாசனப்பபடி நடக்கிற பாரதப்பிரதமராகவும் உலக நாடுகள் முழுவதிலும் மனித உரிமைகள் போற்றிப் பாதுகாக்கப்படுகிற
வலியுறுத்தப்படுகிற ஐ.நா. பேரவையில் முக்கியமானவராகவும் விளங்கும் தாங்கள் இப்பிரச்சினையில் உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட கொள்கைகள் அடிப்படையில் சர்வதேசச் சட்டத்தின்படி அமைதியான மனிதாபிமான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும்'' என்று எழுதினார்.
1995-ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் 16 வரை ஹாங்காங்கில் அவர் தலைமையில் கூடிய சர்வதேச குழுவினர் சமரசத் திட்டம் ஒன்றை உருவாக்கி இலங்கை அதிபராக இருந்த சந்திரிகா மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தான் வருவதாகத் தெரிவித்தார்.பிரபாகரன் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தை எனக்கு அனுப்பி அதை உரியவருக்கு அனுப்பி வைத்துப் பதில் பெற்றுத் தரும்படி சொல்லியனுப்பினார். அதன்படியே அந்தக் கடிதத்தை பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பினேன். கிருஷ்ணய்யர் அவர்களது வருகை தங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும்அவரை முழுமனதுடன் வரவேற்றுப் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் பிரபாகரன் தெரிவித்தார். ஆனால், இலங்கை அரசிடமிருந்து எத்தகையப் பதிலும் இல்லை.
ஹாங்காங்கில் கூடி வகுத்த சமரசத் திட்டம் குறித்து இந்திய மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வி.ஆர் கிருஷ்ணய்யர் 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் வெளியான ஆங்கில இந்து பத்திரிகையில் விரிவான கட்டுரைகளை எழுதினார். 1997-ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி டில்லியில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தலைமையில் கூடிய ஈழத் தமிழர் ஆதரவு சர்வதேச மாநாட்டில் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களைத் தலைவராகவும் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களை அமைப்பாளராகவும் கொண்ட ஈழ ஆதரவு தேசியக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் சார்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி இந்தியாவிலிருந்து வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்ட முதலாவது விண்ணப்பம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அவர் ஈழத் தமிழர் பிரச்சினையில் முழுமையான ஈடுபாடு காட்டி வந்தார்.
இலங்கைத் தமிழர் காங்கிரஸ் தலைவராக இருந்த திருச்செல்வம் அவர்களின் மகன் நீலன் திருச்செல்வம், மிகச்சிறந்த வழக்கறிஞர். சிறந்த நாடாளுமன்ற உறுப்
பினராகத் திகழ்ந்தவர். 1995ஆம் ஆண்டு ஜனவரியில் என்னுடன் அவர் தொலைப்பேசி மூலம் பேசினார். அப்போது சமரசத் திட்டம் ஒன்றைதான் தயாரித்திருப்பதாகவும் அதை திருமதி கன்னியா சாம்பியன் என்பவர் மூலம் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அதன்படி அவரும் என்னை வந்து சந்தித்து
அந்த ஆவணத்தை அளித்தார். அதுகுறித்து இருவருமாக விவாதித்தோம். என்னுடைய கருத்தையும் அவரிடம் தெரிவித்தேன். பிறகு அவர் கிருஷ்ணய்யர் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.
தொலைப்பேசி மூலம் கிருஷ்ணய்யருக்கு இதைத் தெரிவித்தபோது திருமதி கன்னியாவை சந்திக்க ஒப்புக்கொண்டார். அதற்கிணங்க அவர் கொச்சிக்குச் சென்று அவரைச் சந்தித்து அந்த ஆவணங்களைக் கொடுத்தபோது அதை ஏறிட்டுப் பார்க்கக்கூட மறுத்து பின்வருமாறு கூறினார்:
"இருநாடுகள்-இரு அரசுகள் - இரு நாடாளுமன்றங்கள் - இரு இராணுவங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புக்கொண்டால் தளர்வான கூட்டாட்சி ஒன்றை ஒன்றை அமைப்பது குறித்துப் பேசலாம். அதற்குக் குறைந்த எதையும் தான் பேசத் தயாராக இல்லை என திட்டவட்டமாகக் கூறி அவரை அனுப்பிவைத்தார்.
மரண தண்டனையை முற்றிலுமாக சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கருதினார். அதற்காக இடைவிடாமல் குரல் கொடுத்தார்.
இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேர்களில் 19 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. மூவருக்கு ஆயுள் தண்டனையும் நால்வருக்குத் தூக்குத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டன. அந்த நால்வரின் சார்பில் ஆளுநருக்கு நாங்கள் அனுப்பிய கருணை மனு ஏற்க மறுக்கப்பட்டது. உடனடியாக நான் கொச்சியிலிருந்த கிருஷ்ணய்யர் அவர்களுடன் தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக மூத்த வழக்கறிஞர் திரு. சந்துரு அவர்கள் மூலம் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்குமாறு அறிவுரை கூறினார்.
அவ்வாறே நாங்கள் செய்தோம். திரு. சந்துரு அவர்கள் உயர்நீதிமன்றத்தில் திறமையுடன் வாதாடி ஆளுநரின் உத்தரவு செல்லாது. அமைச்சரவையின் பரிந்துரையின் பேரிலேயே ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ ஆணைப் பிறப்பிக்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக பிறப்பிக்க முடியாது என்ற உன்னதமான தீர்ப்பினைப் பெற்றுத் தந்தார். இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட மிகமிக முக்கியமானத் தீர்ப்பு இதுவாகும். அதுவரை ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் தன்னிச்சையாக முடிவெடுத்து வந்ததற்கு இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது.
கிருஷ்ணய்யர் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. உலகம் முழுவதும் உள்ள சட்ட நிபுணர்களுக்கும், மனித உரிமை போராளிகளுக்கும் இன்றும் என்றும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வார். காலமெல்லாம் போற்றப்படுவார்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.