சாத்தான் வேதம் ஓதுகிறது - கவிஞர் செவ்வியன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 16:01

"தமிழ் வழிக்கல்வியை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்'' இந்த வேண்டுகோள் தமிழை அழிக்கும் பணியில் தீவிரம் காட்டிய தீவிரவாதி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை. அவரது கோரிக்கை, "பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்கள் மருத்துவ நூல்களை இனிமேல் ஆங்கிலத்தில் படிக்கத் தேவையில்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபி மொழியிலேயே மருத்துவ நூல்களை மொழி மாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.


தாய்மொழியில் படித்தால்தான் மாணவர்களுக்குப் புரிந்து கொள்ளும் திறன் அதிகமாகி அவர்களின் அறிவு தொடர்ந்து கூர்மையாகும் என்பதை பஞ்சாப் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்காக பஞ்சாப் அரசு பிறப்பித்த உத்தரவின்பேரில், பாபா பரீத் பல்கலைக் கழகத்தின் சுகாதார அறிவியல் துறை, மருத்துவ நூல்களைத் தங்களது சொந்த மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் இறங்கி உள்ளது. இப்பணியில் 60 மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல தி.மு.க. ஆட்சியிலும் 2010ஆம் ஆண்டு அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இந்தியாவிலேயே முதன் முறையாக மாணவர்கள் தாய்மொழியில் கற்க வகை செய்யப்பட்டது.'' (தினமணி 14-11-2014).

இவரது வேண்டுகோள், தமிழ்வழிக் கல்வியை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுதானே தவிர, தமிழ் பயிற்றுமொழியாக்கப்படவேண்டும் என்பதல்ல.

"நம் தாய்மொழியாம் தமிழ் என்னும் உயிரைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிற்சி மொழியாக்குவதற்கு ஏனோ தமிழக அரசு தயங்குகிறது. இந்த அரசியல் நிலைகண்டு நாம் வியப்படைவதா? அழுவதா? அல்லது சிரிக்கத்தான் முடியுமா எம்மால்'' (30-09-1962ல் திராவிட நாளேட்டில் அண்ணா).

"அய்ந்தாண்டுகளுக்குள் தமிழகத்தின் எல்லா கல்லூரிகளிலும் தமிழைப் பாட மொழியாகவும் பயிற்சி மொழியாகவும் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, அடுத்த ஆண்டிலேயே சர்க்கார் கல்லூரிகள் அனைத்திலும் தமிழ் பாடமொழியாகும்'' (23-01- 1968இல் அண்ணா தமிழக சட்டமன்றத்தில்).

"பயிற்றுமொழி வட்டார மொழி அல்லது தாய்மொழி. இரண்டாவது பயிற்று மொழி ஆங்கிலம்.'' இவை அரசாணை எண். 105, கல்வி நாள் 24-01 -1968 தெரிவிப்பன. முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா.

அந்த ஆணையில் தமிழே பயிற்றுமொழி, ஆங்கிலம் ஒரு மொழிப்பாடம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் நாம் கடந்த 46 ஆண்டுகளாக மொழிகாக்கப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இந்த மொழிகாக்கும் போராட்டம் காலவரையறை இல்லாமல்
நீடிக்கும்போல் தெரிகிறது.

அண்ணாவுக்குப் பின்னர், "முத்தமிழ் வித்தகர். சங்கத்தமிழ், குறளோவியம், தமிழினத் தலைவர்'' என்றெல்லாம் ஒரு சார்புடையப் பச்சோந்திகளால் அல்லது அறக்கழிவு மாந்தர்களால் பாராட்டப்படும் மு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தை 19 ஆண்டுகள் அரசாண்டார்.

தமிழினத் தலைவரும் தமிழ்ப் பேராசிரியர் க. அன்பழகனும் ஆங்கில வழிப்பள்ளிகளைக் கூறுகட்டி விற்றனர். அவர்களால் விற்கப்பட்ட ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் 3500, மெட்ரிகுலேசன் பள்ளிகள் 2000. இவை தி.மு.க. அரசின் மாபெரும் சாதனைகள் ஆகும்.

முத்தமிழ் வித்தகர் ஆட்சிக்காலத்தில்தான் 11-07-1998-இல், தமிழகம் மற்றும் பெங்களூரில் இயங்கும் தமிழ் மன்றங்கள் உட்பட 25 தமிழ் மன்றங்களைச் சேர்ந்த 5000 பேர் தமிழுக்கு நீதிகேட்டுத் தலைநகரில் ஒரு மாபெரும் ஊர்வலம் நடத்தினர்.

குறளோவியர் காலத்தில்தான் 25,04,1999-ஆம் நாளன்று, சென்னை திருவள்ளுவர் கோட்டம் அருகில் "தமிழைக் காப்பாற்றுவோம். உயிரைத் தருகிறோம். தமிழைத் தா'' என்ற முழக்கங்களோடு 102 தமிழ்ச்சான்றோர் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

19 ஆண்டுகள் தமிழகத்தில் பேராட்சி செலுத்திய தமிழினத் தலைவர் அவர்தம் ஆட்சிக்காலத்தில் தமிழ்மொழி அல்லது தாய்மொழி பயிற்று மொழி, ஆங்கிலம் ஆறாம் வகுப்பிலிருந்து மொழிப்பாடமாகக் கற்பிக்கப்படும் என்று ஓர் அரசாணை பிறப்பிக்க இயலாத அல்லது மறுத்த மு. கருணாநிதி அவர்கள் தற்பொழுது தமிழ்வழிக் கல்வியை அரசு ஊக்கப்படுத்த வேண்டுமென்று ஓலமிடுகிறார். மு. கருணாநிதி அவர்களுக்கு, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதெல்லாம் அறிவொளி தோன்றும் அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் பணவொளி தோன்றும்.

தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தவர்கள் - துரோகம் இழைப்பவர்கள் தமிழைக் கூறித் தலைவரான அறக்கழிவு மாந்தர் ஆவர். அந்த வரிசையில் முதல் இடம் பெறுபவர், சங்கத்தமிழ் மு. கருணாநிதி அவர்கள். மால்கம் ஆதிசேஷய்யா கல்விக்குழுவின் பரிந்துரையான "முதல் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படவேண்டும்' என்ற பரிந்துரையைச் செயற்படுத்திய சிறுமைக்குரியவர் ஆவார் மு. கருணாநிதி அவர்கள். இவரது ஆட்சிக் காலத்தில்தான் மருத்துவப் பாடநூல்களை (1) மருத்தவர் சு. நரேந்திரன், (2) மருத்துவர் சிவசுப்பிரமணியன் ஜே. சேகர், (3) மருத்துவர் மோகன்தாசு, (4) நெய்வேலி குழந்தைவேலு, முன்னாள் எம்.பி. (5) சென்னை பெரம்பூர் அன்பழகன் தமிழில் மொழி பெயர்த்தனர். மருத்துவர் சிவசுப்பிரமணியன், ஜே. சேகர், எம்.டி., தேர்வைத் தமிழில் எழுதினார். அவருக்கு இதுவரை பட்டமளிக்கப்படவில்லை.

அது மட்டுமன்று, 31.01.1971இல் டாக்டர் ஏ.எல். முதலியார் தலைமையிலான கல்விக்குழுவின் பரிந்துரையான "பயிற்று மொழியினைப் பெற்றோர் விருப்பத்திற்கு விடுதல் வேண்டும்'', என்பதைச் சிறிது மாற்றமின்றிச் செயற்படுத்திய செயல் வீரர் தமிழினத் தலைவர் மு. கருணாநிதி அவர்கள்.

ஓர் இனத்தின் உயிர்த்துடிப்பு மொழியுணர்வு, பண்பாடு, ஒழுக்கம் ஆகியவைகள், எனினும் இவைகளுக்கு உருவமாகவும், உடம்பாகவும் இருப்பது பொருளாதாரக் கட்டமைப்பாகும். உயிரின்றி உடலும், உடலின்றி உயிரும் இயங்க முடியாது. இவைகளைப் பகுத்தறிய அறிவும் அவசியம். எனவே, மொழியுணர்வும் பண்பாடும் ஒழுக்கமும் பொருளாதாரக் கட்டமைப்பும், இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தும் பகுத்தறிவும் சமுதாய மேம்பாட்டுக்கு மிகமிக இன்றியமையாதவை. இவை மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள் என்பதை அறியாதவர்கள் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் என்று கூறுவதில் முரண்பாடு இருக்க முடியாது.

தமிழ்மொழிக்கும் தமிழர்க்கும் பகைவர் யார் எனில் 1967 முதல் இன்றுவரை தமிழகத்தை ஆட்சி புரிவோர் மட்டுமே. இலவசங்களில் மகிழ்ச்சியடையும் தமிழினத்துக்கு விடியல் என்பது பகற்கனவே ஆகும்.

தமிழகம் மேய்ச்சல் காடுமல்ல, தமிழர்கள் அறிவுகெட்ட மூடங்களுமல்லர். தமிழன் விழிப்பான்; தமிழை மீட்டெடுப்பான்; தமிழனாகவே வாழ்வான். இவற்றில் வெற்றிபெற திருவள்ளுவர் காட்டும்,

"சொல்லப் பயன்படுபவர்சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும்கீழ்''.

"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர்அல்லா தவர்க்கு''.

என்ற இரண்டு அறிவாயுதத்தை நெஞ்சில் நிறுத்துவதோடு கற்றபடி செயல்படவும் வேண்டும்.!

துணிவோமா தமிழர்களே!

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.