ஒரு பேயை எதிர்த்து ஐந்து பேயை ஆதரிக்கிறார்கள்! - கவிஞர் காசி. ஆனந்தன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015 11:28

இலங்கையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலும் - முடிவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இருண்ட காலம் ஒன்றினுள் தள்ளியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தவறான நிலைப்பாட்டின் அணுகுமுறையின் விளைவே இது.

நிகழ்ந்து முடிந்த இலங்கைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து நின்றவர்கள் யார்?

மைத்திரிபால சிறீசேன யார்? முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த கடைசி நான்கு நாட்கள் மகிந்தாவின் குறுங்காலப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். பொன்சேக யார்? ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறிப்படைத் தளபதி. சந்திரிகா குமாரதுங்கா யார்? சிங்களப் படைவெறியர்கள் கிரிசாந்தியைப் படுகொலை செய்த காலத்தில் கோனேஸ்வரியின் பெண் குறியில் வெடிகுண்டைச் செருகி வெடிக்கச் செய்தபோது சிங்கள அரசியாக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்கே யார்? சிங்களர் குடியேற்றத்தைத் தொடங்கிய இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் கட்சிக்காரர். சிங்களச் சிறைக் காவலர்களைக் கொண்டு குட்டிமணியின் கண்களைப் பிடுங்கி எடுத்த ஜெயவர்த்தனாவின் வழி வந்தவர். ஜனதா விமுக்தி பெரமுனாவினர் யார்? வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தமிழீழத் தாயகத்தை இரண்டாக உடைத்தவர்கள் இவர்களைத்தான் ஆதரித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஒரு பேயை எதிர்த்து ஐந்து பேய்களை ஆதரித்தார்கள்.

தேர்தல் பரப்புரையில் தமிழர்களுக்குக் கூட்டாட்சி (சமஷ்டி) தரமாட்டேன் என்றார் சிறீசேன. அண்மையில் சென்னை வந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரன், "ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் சிக்கலைத் தீர்க்க முடியாது'' என்றார். அப்படியானால், எந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகச் சிறிசேனாவை ஆதரித்தீர்கள்? தமிழீழத்தில் குடி கொண்டுள்ள சிங்களப் படைகளைத் திரும்பப் பெறமாட்டேன் என்று பரப்புரை செய்தவர் சிறீசேன சிங்களப் படையின் பிடியில் தமிழீழ மக்கள் அன்றாடம் கொடிய வதைக்குள்ளாகிறார்கள் என்று சென்னை வந்த விக்னேசுவரன் சொன்னார். அப்படியானால், எதற்காக சிறீசேனாவை ஆதரித்தீர்கள்? சிறீசேனாவை ஆதரிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேர்தல் காலத்தில் சொன்ன விளக்கம் இன்னும் சினமூட்டுவதாய் இருக்கிறது. "மகிந்த இராஜபக்சே சர்வாதிகாரி, ஒரு ஜனநாயக சூழலில்தான் தமிழர் சிக்கலைத் தீர்க்க முடியும் எனவேதான் சிறீசேன மைத்திரிபாலாவை ஆதரிக்கின்றோம் என்றார் சம்பந்தர்.

ஆங்கிலேயன் இலங்கையை விட்டு வெளியேறிய பின்பு, கடந்த 60 ஆண்டுகளாய் குடியரசுத் தலைவர்களாகவும் பிரதமர்களாகவும் வந்த அத்தனை சிங்களவர்களும் தங்களை ஜனநாயகவாதிகள் என்றுதான் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் நடந்தது என்ன? இதே ஜனநாயகவாதிகள்தான் 3 இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்தார்கள். 13 இலட்சம் தமிழர்களை இலங்கைக்கு வெளியே ஏதிலிகளாக விரட்டி அடித்தார்கள். ஒரு இலட்சம் தமிழ்ப் பெண்களை விதவைகளாக்கினார்கள். 20 ஆயிரம் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வதைக்கு உள்ளாக்கினார்கள். 2 இலட்சம் தமிழர்கள் வீடுகளை இடித்துத் தள்ளினார்கள். 2,076 இந்துக் கோயில்களைக் குண்டுவீசித் தகர்த்தார்கள். 66 ஆண்டுகளாக ஈழத்தில் நடைபெறும் சிங்கள ஜனநாயகம் பற்றி அறியமாட்டீர்களா என்ன? சிறீசேன மைத்திரிபாலாவை எப்படி நீங்கள் சனநாயகவாதி ஆக்கிக்கொண்டீர்கள்?

முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரில் மாவீரர்களான 10,000 விடுதலைப்புலிகளும் இன்னுயிர் நீத்த ஒன்றரை இலட்சம் தமிழர்களும் தங்கள் உயிரீகத்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணையம் வரை கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

நீங்கள் இவ்வாறு செய்திருப்பது என்ன? ஒரு புதிய அரசு வந்திருக்கிறது. பொறுத்திருந்துதான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா - பிரிட்டன் போன்ற நாடுகள் கருதும் நிலையை உருவாக்கியிருக்றீர்கள். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் "மார்ச் மாதத் தீர்ப்பு' என்ன ஆகுமோ என்ற கவலை உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தலைவர் வைகோ பிரெசில்ஸில் முதல் தடவையாக முன்வைத்த பின்னால் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையாரால் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட, உலகத் தமிழீழ மக்களிடையேயான தமிழீழ விடுதலைக் கருத்துக் கணிப்புக் கோரிக்கை என்னாகுமோ என்னும் தளர்வுநிலை தோன்றியுள்ளது.

இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்கும் இடையே சீனா குறித்து நிலவிவந்த முறுகல் நிலையைச் சிறீசேனா அரசு குறுகிய காலத்துக்குத் தளர்த்துவதுபோல நடித்தால், மறைமுக சீன உதறலை வைத்துக்கொண்டு நாடகமாடினால், தமிழீழ மக்களைவிட்டு இன்னும் கூடுதலாக இந்திய அரசு விலகி நிற்க நேருமோ என்ற கவலை வேறு தமிழீழ உணர்வாளர்களிடையே குடி கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக முள்ளிவாய்க்காலில் மூண்டு ஈழத்தமிழர் நெஞ்சங்களில் எரிந்துகொண்டிருந்த விடுதலைக் கனல் "மகிந்த ராஜபக்சேவைத் தண்டித்தாயிற்று' என்ற நிறைவோடு தணிந்து போகுமோ என்னும் ஏக்கத்தையும் இந்தத் தேர்தல் முடிவு உருவாக்கி இருக்கிறது. நீட்டி நிமிர்த்தாமல் சுருக்கமாகச் சொல்வதானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அணுகுமுறை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது.

தமிழீழ விடுதலை கேட்பது இலங்கை அரசியல் அமைப்புக்கு எதிரானதாக தேசத் துரோகமாக இருக்கலாம். ஆனால் தமிழீழத் தாயகத்தை இலங்கை அரசியல் அமைப்பில் இடம்பெறச் செய்வதைத் தேர்தலின்போது தமிழீழ மக்களின் கோரிக்கையாக முன்வைத்துத் தேர்தலில் தனியாகக் களம் இறங்கியிருந்தால் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு கூறாக, தொடர்ச்சியாக இருந்திருக்கும். தமிழர்களை வடக்கு கிழக்கு என ஓரிரு மாகாணங்களாகப் பார்க்கும் கொடுமைக்கு எதிராக மாகாணங்கள் அல்ல. அவர்கள் ஒரு "தாயகம்' என்னும் உண்மையை நிலைநாட்ட உலகறியச் செய்யும் வாய்ப்பாக அது அமைந்திருக்கும்.
இனி என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோடு பேச்சு வார்த்தை உடன்படிக்கை என்று காலம் இழுத்தடிக்கப்படலாம். அப்படி ஏதேனும் ஓர் உடன்படிக்கை ஏற்படுமானால் அந்த உடன்படிக்கையை ஒரு குப்பைக்கூடை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கலாம். உப்புச் சப்பில்லாத ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கையை 27 ஆண்டுகளாக இழுபடுவதையும் சிங்கள இனவெறி அரசின் கால்களில் மிதிபடுவதையும்தானே பார்க்கிறோம்.

எது எவ்வாறாயினும் இந்தத் தளர்வுநிலை தமிழர்களே தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டதன் விளைவாக இந்தத் தொய்வுநிலை, தமிழர்களின் ஏக்கப் பெருமூச்சு இவை எதுவும் நிலையானவை அல்ல. எங்கோ ஒரு மூலையில் தமிழீழ விடுதலை நெருப்பு இன்னும்தான் எரிந்துகொண்டிருக்கிறது என்பதை உறுதியாக நம்புங்கள்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்பு பிரபாகரனைத் தலைவர் என்று ஏற்றுக்கொண்ட சம்பந்தர் இன்று பிரபாகரனைச் சர்வாதிகாரி (ஆதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் 31-12-2014) என்று வர்ணிக்கிறார்.

எல்லாம் முடிந்ததென அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எதுவும் முடிந்துவிடவில்லை.

நன்றி : ஜூனியர் விகடன் (25-1-2015)

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.