மாநாட்டுத் தீர்மானங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015 11:30

மாநாட்டுத் தீர்மானங்கள்

1. இந்தியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் தாங்கள் நாடு திரும்பும் முடிவை அவர்களே விருப்பப்பட்டு எடுக்கவேண்டுமே தவிர அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றக்கூடாது என இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

2. தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நடுவண் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உடனே அறிவிக்க வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது.

3. அண்டை மாநிலங்களால் ஏற்க மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட கூடங்குளம் அணு உலைகளை உடனடியாக மூடவேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.

4. இதுவரை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்ப் பெண்களின் தாலிகளை அறுத்து பல குடும்பங்களைச் சீரழித்த மதுவை ஒழித்து, மது விலக்கை நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

5. மேட்டூர் அணைக்கு மேற்புறத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை உடனே தடுத்து நிறுத்த முன்வருமாறுநடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை நடுவண் அரசு உடனடியாக அமைத்திட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7. எழுத்துரிமையை மதிக்காமல் எழுத்தாளர் பெருமாள்முருகனுடைய இலக்கிய படைப்புகளுக்கு எதிராகக் கலகம் செய்த சாதி, மத சக்திகளையும் அதற்கு, ஒத்துழைத்த அரசு அதிகாரவர்க்கத்தையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. தமிழ் மண்ணில் பிறந்து உலகத்துக்கே மாந்த நேயத்தை எடுத்துரைத்த, வள்ளலார் வாழ்ந்த சென்னை இல்லத்தை தமிழக அரசு உடனடியாக அரசுடைமையாக்கி நினைவகம் அமைக்குமாறு இம்மாநாடு வேண்டுகிறது.

9. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் கொள்கையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

10. 1965ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி காக்கும் போரில் தீக்குளித்தும், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகியும் பலர் உயிர்த்தியாகம் செய்தனர். எண்ணற்றோர்கள் சிறைச்சாலைகளில் வாடி வதங்கினர். இவர்களின் ஒப்பில்லாத ஈகத்தைப் பயன்படுத்தி 1967ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய தி.மு.க.வும்., அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வும் நாற்பது ஆண்டுகளுக்குமேல் தமிழகத்தில் நடத்திய ஆட்சியில் ஆங்கிலம் சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையை உருவாக்கிவிட்டன. தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது. தமிழ்மொழி-தமிழ் நாட்டிலேயே இவ்வாறு ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பது மொழிப்போர் ஈகிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும் என்பதைச் சுட்டிக்காட்டி இம்மாநாடு திராவிடக் கட்சிகளை வன்மையாக கண்டிப்பதோடு தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழ் ஆக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

11. தமிழ்நாடு-பன்னாட்டு நிறுவனங்கள், மார்வாடி, குசராத்தி, மலையாளி, பெருமுதலாளிகள், ஆகிய வந்தேறிகளின் வேட்டைக்காடாகிவிட்டது. தமிழர்களின் தொழில் வணிகம் ஆகியவை பாதிக்கப்பட்டுவிட்டன. சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் தமிழர்கள் பிற நாடுகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் பிழைப்புத் தேடி செல்ல வேண்டிய அவல நிலை உருவாகிவிட்டது. மேலும் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு கட்டிடங்கள் போன்றவற்றைக் கட்டும் ஒப்பந்தம் பிற மாநில நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவதால் அவர்கள் தங்கள் மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களைத் தமிழ்நாட்டிற்கு வரவழைப்பதின்மூலம் தமிழர்களின் வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை அடியோடு மாற்றுவதற்கு தமிழ்த் தேசியர்கள் ஒன்றுபட்டுப்போராட முன்வரவேண்டும் என இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

12. இந்தியாவிலுள்ள மொழிகள் அனைத்திற்கும் சமக்கிருதமே தாய்மொழி என்றும், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆகிய அனைவரும் இந்துக்கள் என்றும், கோட்சேவிற்கு சிலை வைக்க முற்பட்டும், தீவிரமான இந்துத்துவாவைப் பரப்பும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.