"காலத்தை வென்ற காவிய நட்பு' நெடுமாறன் எழுத்துப் பணியில் இந்நூல் மகுடமாகும்! மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு பாராட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 15:49

தஞ்சை, மதுரை, திருச்சியில் அறிமுக விழாக்கள்!

இந்த நூலுக்கு பழ. நெடுமாறன் "காலத்தை வென்ற காவிய நட்பு' என்று தலைப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் இந்திய-ரஷ்ய நட்பு என்பது இரண்டு அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட நட்பு அன்று. இரண்டு நாட்டு மக்களின் இதயங்களால் இணைக்கப்பட்ட நட்பாகும். இந்த நட்பு இன்று நேற்றுத் தோன்றியதல்ல. பன்னெடுங் காலத்திற்கு முன்பே இந்திய - ரஷ்ய நட்பு அரும்பிவிட்டது. அதுவும் வியாபார நோக்கமின்றி மலர்ந்தது இந்திய - ரஷ்ய நட்பாகும். சோவியத் ஒன்றியம் இன்று சின்னாபின்னமாகிச் சிதறி விட்டாலும், இந்திய மக்களுக்கும் ரஷ்ய மக்களுக்கும் இடையே இருக்கும் நட்புணர்வு சிந்தாமல் சிதறாமல் இன்றும் தொடர்வதற்கு இருநாட்டு மக்களின் நட்புணர்வும் புரிதலும் காரணமாகும்.

தன்னுடைய முன்னுரையில் பழ. நெடுமாறன் சுமார் 30 ஆண்டுகளாக இந்த நூலை எழுதும் முயற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கால இடைவெளி தவிர்க்க இயலாததுதான் என்பதை இந்த நூலை ஆழ்ந்து கற்பவர் அறிவர். ஏனெனில் இந்த நூலுக்கு அவர் பயின்ற நூல்கள், சேகரித்த செய்திகள் அனைத்தையும் ஆதாரத்தன்மையுடன் ஒப்புநோக்கி எழுதுவது அதுவும் எளிய நடையில் அனைவரும் படிக்கும் வகையில் எழுதுவதென்பது எளிதானதன்று.ஆனால் இந்த முயற்சியில் பழ. நெடுமாறன் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்.

போர்த்துக்கீசியரான வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்ததைத்தான் இன்றும் நாம் பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறோம். பாடப் புத்தகங்களிலும் வரலாற்று நூல்களிலும் வாஸ்கோடகாமாவின் இந்தியப் பயணம்தான் விதந்து எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு மாறாக, 15-ஆம் நூற்றாண்டிலிருந்து பல ரஷ்யர்கள் தங்கள் சொந்த முறையில் இந்தியாவிற்கு வருகை தந்து இந்தியாவைப் பற்றிய சுவையான குறிப்புகளையும், நூல்களையும் எழுதி ரஷ்ய மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அவர்களில் முதன்மையானவர் அபனாசி நிகிதன் என்பவர் ஆவார். கி.பி. 1469-ஆம் ஆண்டில் நிகிதன் தன் பயணத்தைத் தொடங்கினார். வோல்கா நதியின் வழியாக காஸ்பியன் கடலை அடைந்து, ஈரான் வழியாகப் பயணம் செய்து அரபிக் கடல் மூலமாக இந்தியாவை அடைந்தார். கி.பி. 1469-ஆம் ஆண்டு முதல் 1472-ஆம் ஆண்டு வரை சுமார் மூன்றாண்டு காலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த முதலாவது ரஷ்யர் இவரே. துணிவுமிக்க வணிகரான நிகிதன் தனது தாய்நாட்டுக்குத் திரும்பியபோது தங்கத்தையும், வைர, வைடூரியங்களையும் திரட்டிக் கொண்டு வரவில்லை. எனினும், தம் சந்ததிகளுக்கு மட்டுமல்ல, தனது நாட்டு மக்களுக்கும் அரிய கருவூலம் ஒன்றை விட்டுச் சென்றுள்ளார். இந்தியாவைப் பற்றி இவர் எழுதிய "முக்கடல்களுக்கு அப்பால் பயணம்' என்னும் நூல் புகழ் பெற்றதாகும் - என்று குறிப்பிடும் பழ. நெடுமாறன் இதற்குச் சான்றாகச் சொல்லியிருக்கும் செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். அந்தச் செய்தி :

"ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு முதன்முதலாகப் பயணம் செய்து அந்நாட்டைப் பற்றி விரிவாக எழுதிய பெருமை ஒரு ரஷ்யருக்குத்தான் கிடைத்திருக்கிறது என்பது இதுவரையிலும் பூகோள இயலாளர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியாவிற்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடிப்பது குறித்து போர்த்துக்கீசியரான வாஸ்கோடகாமா சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், ரஷ்யாவைச் சேர்ந்த நிகிதன் இந்தியாவிலுள்ள மலபார் கடற்கரையில் பயணம் செய்துகொண்டிருந்தார்''

- என்று வரலாற்று அறிஞர் என்.எம். கராம்ஜியின் கருத்தை எடுத்தாண்டு தம் கருத்திற்கு வலுசேர்க்கிறார் பழ. நெடுமாறன்.
சோவியத் யூனியன் ஒன்றுபட்டிருந்த போது அதன் ஒரு பகுதியாக அர்மினியக் குடியரசும் இருந்தது. அர்மினியர்களுக்கும் இந்தியாவுக்கும் இருந்த தொடர்பு பற்றி,

" வட இந்திய நகரங்களில் மட்டுமல்ல தெற்கே சென்னையிலும் அர்மினியர் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தனர். ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே சென்னையில் அர்மினியர் குடியேறிச் செழித்தோங்கியிருந்தனர். 1666-ஆம் ஆண்டில் அர்மினியர் தமக்கென்று ஒரு குடியிருப்பைச் சென்னையில் அமைத்துக்கொண்டு 200 ஆண்டுகளுக்கும் மேலாகச் செல்வமும், செல்வாக்கும் பெற்று விளங்கினர்''

- என்ற அரிய செய்தியைத் தரும் பழ. நெடுமாறன்,

"அர்மினியாவின் தலைநகரமான எரவான் நகரிலுள்ள எரவான் பல்கலைக்கழகத்தில் 1054 தமிழ்ச் சுவடிகள் உள்ளன' என்ற தகவலையும் தருகிறார். இந்தச் செய்தி எரவான் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 1054 தமிழ்ச் சுவடிகளில் என்னென்ன செய்திகள் இருக்கின்றனவோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழர்களின் கலையும், மருத்துவமும், விஞ்ஞானக் கருத்துகளும் கொண்ட சுவடிகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இந்த நாட்டை ஆள வந்தவர்களும், காண வந்தவர்களும் தமிழர்களின் சுவடிகளைக் கொண்டு சென்று பாதுகாத்து வருகிற வேளையில், தமிழர்களாகிய நாம் நமக்குக் கிடைத்த சுவடிகளையாவது முழுமையாகப் பாதுகாக்கவில்லையே என்ற கவலை ஏற்படுகிறது.

இந்து சமய ஆய்வில் ஈடுபட்ட ரஷ்ய அறிஞர்கள் பற்றி எழுதும் பழ. நெடுமாறன், விவேகானந்தருக்கும் ரஷ்ய இளவரசர் செர்கி வோல்கோன்ஸிக்கும் ஏற்பட்ட தொடர்பை விவரிக்கும் பகுதி குறிப்பிடத்தக்கதாகும்.

சிகாகோவில் நடந்த உலக மதங்களின் மாநாட்டில் கலந்துகொண்ட விவேகானந்தர் அனைத்துப் பேச்சாளர்களிலிருந்தும் வேறுபட்டு தன்னுடைய சொற்பொழிவை,“சகோதரி சகோதரர்களே! என்று தொடங்கியதும், தொடர்ந்து சொல்லிய செய்திகளும் அனைவரையும் அவர்மீது கவனம் பதிக்க வைத்தது. அத்தகையோரில் ஒருவர்தான் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய இளவரசர் செர்கி வோல்கோன்ஸ்கி, இந்த மாநாட்டில்தான் விவேகாநந்தருக்கும் செர்கி வோல்கோன்ஸ்கிக்கும் தொடர்பும் நட்பும் ஏற்பட்டிருக்கிறது. இதன்பின் கடிதங்கள் வழியாக இவர்களுடைய தொடர்பு தொடர்ந்திருக்கிறது. கிறித்தவரான செர்கி வோல்கோன்ஸ்கி விவேகானந்தரின் கருத்துகளும் போதனைகளும் ரஷ்யாவில் பரவுவதற்கு உதவியிருக்கிறார்.

ரஷ்ய நாட்டில் புத்த சமயம் பரவிய விதம், அதற்காக உழைத்தவர்கள், அதுபற்றி எழுதியவர்கள், இன்றும் ரஷ்யாவில் உள்ள புத்தமதச் சான்றுகள் ஆகியவற்றைக் குறிப்பிடும் பழ. நெடுமாறன் பியோதர் செர்பாத்ஸ்கோய் என்பவர் பற்றி விரிவாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

"இந்தியாவின் தொன்மை வாய்ந்த சிந்தனையாளர்களது அறிவுக் கருவூலத்தைத் தனது நாட்டு மக்களுக்கு விளக்கமுறக் கூறியவர்'

- என்ற வாசகங்கள் பியோதர் செர்பாத்ஸ்கோய் கல்லறையில் பொறிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் பழ. நெடுமாறன்,

இந்தியத் தத்துவமானது கிரேக்கத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என ஐரோப்பியக் கீழ்த்திசை அறிஞர்கள் செய்துள்ள மதிப்பீட்டை மறுத்துள்ளார். இந்தியத் தத்துவமும் தர்க்க சாஸ்திரமும் இந்திய மண்ணிலேயே தோன்றி வளர்ந்தவை. அவை இந்தியச் சிந்தனையின் சுயேச்சையான படைப்புகள் என்பதை மெய்ப்பித்துள்ளார்'
என்று பியோதர் செர்பாத்ஸ்கோயின் இந்தியத் தத்துவத்தைப் பற்றிய மதிப்பீட்டையும் தனித்துவத்தையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

பியோதர் செர்பாத்ஸ்கோய் எழுதிய "பவுத்த சமயத் தத்துவம்'' என்ற நூல் பற்றிய இந்திய அறிஞர் டி.என். சாஸ்திரியின் கருத்தை இந்த நூலில் பழ. நெடுமாறன்

பதிவு செய்திருப்பதோடு பண்டிட் ஜவஹர்லால் நேரு தன்னுடைய "இந்திய தரிசனம்' என்ற நூலில்,

இந்தியத் தத்துவ ஆராய்ச்சியில் தனிச் சிறப்புடையவர் என உலகம் முழுவதும் ஏற்றுப் பாராட்டிய அறிஞர்'
என்று பியோதர் செர்பாத்ஸ்கோய் பற்றிச் சொல்லியிருப்பதையும் பதிவு செய்திருக்கிறார். நேருவின் பாராட்டு பியோதரின் அறிவாற்றலுக்கும் ஆய்வுக்கும் கிடைத்த மிகச் சிறந்த நற்சான்றாகும்.

புரட்சித் துறவியாகத் திகழ்ந்த விவேகானந்தரை இன்னும் சிலர் ஒரு மதச் சிமிழுக்குள் அடைக்க முயல்கின்றனர். தங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் விவேகானந்தர் படைப்புகளிலிருந்து எடுத்தாண்டு அவரை ஒரு இந்துமதத் துறவியாகக் காட்டும் காட்சிகள் ஏராளம். இத்தகைய போக்குகளுக்குப் பதில் சொல்லும் வகையிலும். விவேகானந்தரின் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தும் முறையிலும் அமைந்திருக்கிறது இந்த நூலில் உள்ள "சோசலிசத் துறவி விவேகானந்தர்''’என்ற கட்டுரை. தனி நூலாகக் கொண்டு வரும் அளவிற்கு இந்தக் கட்டுரை தனிச்சிறப்புக் கொண்டதாகும்.

விவேகானந்தரின் புரட்சிகர உணர்வுகளுக்கு ஆதாரமாக ஆர்.சி. மஜூம்தார், நிவேதிதா தேவி தன்னுடைய தோழி ஹராமண்டுக்கு எழுதிய கடிதம், ரெளலட் குழுவின் அறிக்கை ஆகியவற்றை பழ. நெடுமாறன் எடுத்துக் காட்டியிருப்பது விவேகானந்தரின் புரட்சிகர உணர்வுகளையும் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ள பெரிதும் பயன்படும்.

விவேகானந்தரின் இளைய சகோதரர் டாக்டர் பூபேந்திரநாத் தத்தா புரட்சியாளர்களின் ‘யுகாந்தர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் 1921-ஆகஸ்டு 23 அன்று லெனினுக்கு ஒரு கட்டுரை அனுப்பியிருக்கிறார். அதற்கு 1921 ஆகஸ்டு 26 அன்று லெனின், "உங்களுடைய கட்டுரையை நான் முழுமையாகப் படித்தேன். சமூகப் பிரிவுகள் பற்றி நாம் விவாதிக்க வேண்டியதில்லை. குடியேற்ற நாடுகளின் பிரச்சினைகள் குறித்து என்னுடைய கட்டுரையைப் பின்பற்றினால் நல்லது. இந்தியாவில் விவசாயிகளின் சங்கங்கள் இருக்குமானால் அவற்றைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரித்து அனுப்புங்கள்'
- என்று பதில் எழுதியிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் பழ. நெடுமாறன்,

"விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர் - விவசாயிகளை ஒன்றிணைத்து ஈடுபடுத்த வேண்டும். அதே நேரத்தில் கார்ல் மார்க்ஸ் நூல்களைப் பயின்று மக்கள் இயக்கங்களைக் கட்டவேண்டும் என்று 1922-இல் நடந்த நாகபுரி இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் டாக்டர் தத்தா விண்ணப்பித்தார்.' என்று குறிப்பிடும் செய்தி தத்தாவின் இடதுசாரிச் சிந்தனை வெளிப்பாட்டிற்கு உதாரணமாகும்.

கார்ல் மார்க்ஸ் முயற்சியினால் 1871 ஆகஸ்டு 15 அன்று இலண்டனில் முதலாவது அகிலத்தின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பேரவையில் கலந்துகொள்ள இந்தியர் ஒருவர் கல்கத்தாவிலிருந்து கடிதம் அனுப்பியதாகவும், அகிலத்தின் பேரவைக் கிளையை இந்தியாவில் அமைப்பதற்கு அனுமதி கேட்டதாகவும், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஆடம்பர வாழ்க்கை பற்றியும், வரிச் சுமையால் ஆட்சியாளர்கள் மீது இந்திய மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக இந்த நூலில் குறிப்பிட்டிருக்கும் செய்தி கவனத்திற்குரியதாகும்.

இந்தக் கடிதத்தை முதலாவது அகிலத்தின் பேரவை பரிசீலித்து,

"இந்தியக் கிளையில் ஏராளமான சுதேசி மக்களைச் சேர்க்க வேண்டும். தன்னுடைய சுயபலத்திலேயே அது செயல்படவேண்டும்' - என்று அறிவுறுத்திய செய்தியும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சோவியத் நாட்டில் இந்தியப் புரட்சியாளர்கள்’ என்ற தலைப்பில் இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரையில், வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, அபானி முகர்ஜி, இராஜா மகேந்திர பிரதாப் குழுவினர், எம்.பி.டி. ஆச்சாரியா ஆகியோர் பற்றி விரிவாக புதிய புதிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் சிகரமாக செஞ்சேனையில் சேர்ந்து போராடிய இந்தியர்கள் என்ற கட்டுரை திகழ்கிறது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஹிட்லரின் நாஜிப்படை ரஷ்யாவுக்குள் நுழைந்தது. ரஷ்யாவைக் கைப்பற்றி உலகுக்கு தன் பராக்கிரமத்தை அறிவிப்பதே ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. ஆயத பலம், படைபலம் ஆகியவற்றின் துணை கொண்டு எளிதாக ரஷ்யாவைக் கைப்பற்றி விடலாம் என்று ஹிட்லர் எண்ணினான். அதற்கு அவனுடைய ஆரம்பகால வெற்றிகளும் உதவின. உலக மக்கள் பலரும் இந்த யுத்தத்தில் ரஷ்யா தோற்றுவிடும் என்றுதான் எண்ணினர். ஆனால் ரஷ்ய இராணுவ வீரர்களுடன் செஞ்சேனையும், ரஷ்ய கம்யூனிஸ்டுகளும், ரஷ்ய மக்களும் போர்க்களத்தில் இறங்கி ஹிட்லரின் நாஜிப் படைகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து இறுதி வெற்றியைப் பெற்றனர். இந்த வெற்றியைக் காண பல இலட்சம் பேரை ரஷ்யா பலி கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் இந்தியர்களின் பங்கும் இணைந்திருந்தது என்பதை ஆதாரத்துடன் இந்த நூலில் பழ. நெடுமாறன் பதிவு செய்திருக்கிறார்.

சேகுவேரா பணியைப் போன்றதுதான் அக்பர் ஜான், அப்துல் அஜீஸ், அப்துல் அஜாங் ஆகியோர் தலைமையில் 70 இந்தியர்களும், சவுகத் உஸ்மானியுடன் இணைந்து 36 இந்திய இளைஞர்களும், ரஃபிக் அகமது தலைமையில் 87 இந்தியப் புரட்சியாளர்களும் செஞ்சேனையில் இணைந்து நாஜிகளை ரஷ்யாவிலிருந்து விரட்டியடிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டதாகும். இந்த யுத்தத்தில் 27 இந்தியர்கள் வீர மரணம் அடைந்திருக்கின்றனர். தியாகத்தை மதிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் அரசு 1967-இல் நடந்த அக்டோபர் புரட்சியின் 50-வது ஆண்டு விழாவின் போது யுத்தத்தில் கலந்துகொண்ட இந்திய வீரர்களின் சார்பில் ரஃபிக் அகமதுக்கு போரில் வீர சாதனை புரிந்தோருக்கான பதக்கத்தை அளித்துச் சிறப்பித்திருக்கிறது.

இந்தியாவில் பிறந்து சோவியத் ஒன்றியத்தைக் காப்பாற்றப் போராடிய அந்த மகத்தான மனிதர்களை இந்திய தேசம் இதுவரை கண்டு கொள்ளவில்லை! இந்திய விடுதலைக்குப் போராடிய இந்திய புரட்சியாளர்களையே மக்களுக்குச் சரியாக அறிமுகம் செய்யாத இந்திய அரசு, சோவியத் ஒன்றியத்தைக் காப்பாற்றக் களமிறங்கிய இந்தியப் புரட்சியாளர்களை எப்படி நினைவில் கொள்ளும்?

1919 ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் டிராட்ஸ்கி, "30,000 முதல் 40,000 வீரர்கள் அடங்கிய குதிரைப்படை ஒன்றினை அமைத்து இந்தியா மீது படை எடுக்க வேண்டும்' - என்ற திட்டத்தைச் சமர்ப்பித்தார். இதை லெனினும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவும் நிராகரித்தனர். அதே போன்று சீனா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும் செஞ்சேனை தங்கள் நாட்டின் மீது படையெடுத்து புதிய ஆட்சியை அமைக்கவேண்டும் என்று லெனினிடம் பலமுறை வலியுறுத்தியும் அதற்கு அவர் இணங்கவில்லை.

ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பொருளல்ல புரட்சி! அந்தந்த நாட்டு மக்கள் அந்தந்த நாட்டின் சூழல் அறிந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிதான் புரட்சியாகும் என்பதில் தெளிவாக இருந்தார் லெனின். அவருடைய இந்தத் தெளிவுதான் ரஷ்யக் கம்யூனிஸ்டுத் தலைவர்களிடமிருந்தும் உலக கம்யூனிஸ்டுத் தலைவர்களிடமிருந்தும் லெனினை தனித்துவமிக்கவராகக் காட்டியது இப்போதும் வரலாறு லெனினை அப்படித்தான் இனம் காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெண்மணிகளில் முதன்மையானவர் மேடம் காமா. இவர் அனுப்பிய துப்பாக்கியைக் கொண்டுதான் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றான். இந்தியாவுக்கு பரிபூரண சுதந்திரம் வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் இவர்தான். இந்தியாவுக்கான தேசியக் கொடியை முதன் முதலில் வடிவமைத்ததும் இவர்தான். இவை அனைத்தையும் விட மேடம் காமாவின் சொற்பொழிவு லெனினையும் கவர்ந்தது என்ற தகவலையும் பழ. நெடுமாறன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

அத்துடன் லெனினுடன் ஏற்பட்ட தொடர்பு மேடம் காமாவை மெல்ல மெல்ல கம்யூனிஸ்ட்டாக மாற்றி இருக்கிறது. இறுதியில் மேடம் காமா ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்துதான் மறைந்திருக்கிறார். இதற்குச் சான்றாக ரஷ்யப் புரட்சியும் - வெளிநாடுகளிலிருந்த இந்தியப் புரட்சி வீரர்களும் என்ற தலைப்பில் சிங்மோகன் செபினாவிச் என்பவர் எழுதிய நூலை பழ. நெடுமாறன் காட்டுகிறார்.

ரஷ்யப் புரட்சியும் - காந்தியடிகளும், அக்டோபர் புரட்சியும் - நேருவும் ஆகிய கட்டுரைகளில் டால்ஸ்டாய் - காந்திஜி தொடர்பு - காந்திஜியைப் பற்றிய லெனின் பார்வை, காந்திஜியைப் பற்றிய ரஷ்யர்களின் கருத்து; லெனினைப் பற்றிய நேருவின் கருத்து; நேருவின் முதல் சோவியத் பயணம்; பாசிச எதிர்ப்பில் நேருவின் பங்கு; தேசபக்தப் போரில் நேருவின் நிலை, இந்திய - சோவியத் உறவுக்கு நேரு அமைத்த அடித்தளம்; நேருவின் உலகப் பார்வை ஆகியவை பற்றி பழ. நெடுமாறன் விரிவாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறார்.

நேதாஜி பற்றி பல செய்திகள் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பினும், அவர் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தை பிரிட்டனுக்கு எதிராகப் போராட அனுமதித்தாரே தவிர, சோவியத் நாட்டிற்கு எதிராகப் போராட அனுமதிக்கவில்லை என்ற செய்தி குறிப்பிடத்தக்க செய்தியாகும். மாவீரன் பகத்சிங்கின் கம்யூனிசச் சிந்தனை, கம்யூனிச வாழ்க்கை, இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் ஆகியவற்றை இந்த நூலில் விவரிப்பதுடன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பற்றி காந்திஜி கொண்டிருந்த கருத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ரஷ்யப் புரட்சியும் - தமிழகத் தலைவர்களும்’ என்ற கட்டுரையில் வ.உ.சிதம்பரனார், சிங்காரவேலர், பெரியார், திரு.வி.க., பி. வரதராஜூலு நாயுடு, நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்ரமணிய சிவா, சீனிவாச அய்யங்கார். ஜீவா ஆகியோரின் வாழ்க்கைச் சுருக்கமும் பணிகளும் கொடுத்திருப்பதுடன் ராஜாஜியின் அபேதவாதம் பற்றிய செய்தியும் நூலுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்று அழைக்கப்பட்ட சிங்காரவேலர்தான் இந்தியாவில் முதன்முதலாக மே தினவிழாவை சென்னையில் கொண்டாடினார். லெனினைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறாமலிருந்தும் தன் எழுத்து, பணிகளின் வழியாக லெனினால் நேசிக்கப்பட்டவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர்.

சிங்காரவேலர் தொடர்பு ஏற்பட்ட பின்புதான் பெரியார் சிந்தனைப் போக்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ரஷ்யாவிற்குச் சென்று வந்தபின் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழாக்கம் செய்து தமிழர்களின் கரங்களில் தவழ செய்தார். குழந்தைகளுக்கு பெரியார்,‘மாஸ்கோ, ரஷ்யா’என்று பெயரிட்டபோது சிலர்,“குழந்தைகளுக்கு ஊர்ப் பெயர்களை எதற்கு வைக்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு,“குழந்தைகளுக்கு விருத்தாசலம், தனுஷ்கோடி, சிதம்பரம் என்று பெயர் வைக்கும் போது ரஷ்யா, மாஸ்கோ என்று பெயர் வைப்பதில் என்ன தப்பு?' என்று கேட்டவர் பெரியார்.

ஆரம்ப காலங்களில் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற ராஜாஜி, தன்னுடன் சிறையில் வாழ்ந்த சக தியாகிகளுக்கு சோசலிசத்தையும், புரட்சியையும், மார்க்சிய தத்துவத்தையும் விளக்கி உரையாற்றினார். ராஜாஜியின் இந்த உரை அபேதவாதம் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. காலப்போக்கில் கம்யூனிஸ்டுகளை முதல் எதிரியாகக் கொண்ட ராஜாஜி அபேதவாதம் நூலை வெளியிடுவதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதுபோன்ற அரிய செய்திகளையும் இந்த நூலில் பழ. நெடுமாறன் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

அக்டோபர் விடியலில் பாடிய குயில்கள் என்ற கட்டுரையில் மிர்ஜா காலிப், தாகூர், இக்பால், வள்ளத்தோல், நூருல் இஸ்லாம் ஆகியோர் பற்றி எழுதியிருக்கும் பழ. நெடுமாறன். தென்கிழக்கு ஆசியாவின் முதல் கவிஞர் என்ற கட்டுரையில், "ரஷ்யாவில் நடைபெற்ற மூன்று புரட்சிகளையும் முழுமையாகக் கண்டறிந்து இறுதியில் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றபோது மகிழ்ந்து பாடியவர் பாரதி. லெனின் தலைமையில் அமைந்த சோவியத் ஆட்சியை வீழ்த்தவும், தவறான கருத்தக்களைப் பரப்பவும் முனைந்த ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்தவர் பாரதி. இந்தச் சக்திகளின் பொய்மைப் பிரச்சாரத்தை முறியடித்தவர் பாரதி. இந்திய நாட்டின் பல கவிஞர்களும், தென்கிழக்கு ஆசியாவின் பல கவிஞர்களும் அக்டோபர் புரட்சி குறித்துப் பாடியுள்ளார்கள். ஆனால். அவர்கள் அனைவரையும் விட இப்புரட்சியின் தன்மையை முதன் முதலில் கண்டுணர்ந்து பாடியவர் பாரதிப் புலவரே' - என்றும்,

யுகப் புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன் என்ற கட்டுரையில்,

பல தொடர் மாற்றங்களை உலக நாடுகளில் ஏற்படுத்தப் போகும் புரட்சியாக அக்டோபர் புரட்சியை தனது தொலை நோக்கால் இனங்கண்ட பாரதி அதை யுகப் புரட்சி எனப் பாடியுள்ளார். கல்லின் மீது பொறிக்கப்பட்ட சொல் போல பாரதியின் யுகப் புரட்சி என்ற சொல் உலகத்தார் உள்ளங்களில் பதிந்து விட்டது. நேற்றும் இன்றும் நாளையும் என்றென்றும் உலகம் உள்ளளவும் மறையாது; புரட்சி உணர்வை ஊட்டிக் கொண்டே இருக்கும்'

- என்று பழ. நெடுமாறன் முடித்திருப்பது பாரதி மீது கொண்ட அளவற்ற அன்பினால் மட்டும் அன்று; ஆய்வுக்கண் கொண்டு அலசி ஆராய்ந்து மகாகவி பாரதியைப் பற்றி பழ. நெடுமாறன் பதிவு செய்திருப்பது மிகச் சரியான பதிவாகும்.

பொதுவுடைமை, புரட்சி என்ற சொற்களை முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்த மகாகவி பாரதிதான் ரஷ்யாவில் நடந்த புரட்சியை முதன் முதலில் இனம் கண்டு வரவேற்று வாழ்த்தியவர்.

இந்த நூலின் இறுதிக் கட்டுரையாக பொதுவுடைமையைப் பாடிய புரட்சிக் கவிஞர்’ என்ற கட்டுரை இடம் பெற்றிருப்பது மிகப் பொருத்தமாகும்.

புரட்சிக் கவிஞர் பொதுவுடைமையைப் பாடிய கவிஞர் மட்டுமன்று; புதுவையில் நடந்த தேர்தலில் பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் வ. சுப்பையாவுடன் கூட்டணி கண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டவர். இறுதிவரை பாரதி. தமிழ், பொதுவுடைமை ஆகியவற்றில் தீவிரப் பற்றுக் கொண்டவர்.

ரஷ்யாவில் மாபெரும் அக்டோபர் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. ஜார் மன்னனின் ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்களும், அண்டை நாட்டுப் பகுதிகளும் விடுவிக்கப்பட்ட பெருமை மாமேதை லெனின் அவர்களையே சாரும். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற லெனின் அவர்களின் அதிநுட்பமான அரசியல் செயலாற்றலை, இந் நூலின் அடிநாதமான கருத்தாக ஆசிரியர் பழ. நெடுமாறன் எடுத்துரைத்திருக்கிறார். உலகின் பலநாடுகளில் இன்றும் சோதனைக் களமாக இருப்பதை நினைவுபடுத்துகிறார். ஓவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட பிரச்சனைகள் உள்ளன. மொழிப் பிரச்சனை முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.

16 பாகங்களில் 114 துணைத் தலைப்புகளில் மிக விரிவாகவும், தெளிவாகவும் எண்ணிலடங்காச் செய்திகளை இந்த நூலில் பழ. நெடுமாறன் பதிவு செய்திருக்கிறார். நூற்றுக்கணக்கான நூல்களையும் இதழ்களையும் பயின்று சேகரித்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். அனைத்து அத்தியாயங்களையும் அதன் செய்திகளையும் சிறப்புகளையும் அணிந்துரையில் கோடிட்டுக் காட்டினால் அதுவே தனி நூலாகி விடும்.
பழ. நெடுமாறனின் இந்த நூல் அளவில் பெரியது மட்டுமின்றி சொல்லிய விஷயமும் பெரியது.

பழ. நெடுமாறனின் எழுத்துப் பணியில் இந்த நூல் அவருக்கு மகுடமாகும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற அரிய நூல்களை அவர் எழுதவேண்டும். அது தமிழ்ச் சமூகத்திற்கு பழ. நெடுமாறன் செய்யும் மகத்தான பணியாகும்.

இந்த நூல் சிறந்த வரலாற்று ஆவணமாகும். இந்திய ரஷ்ய நட்புறவில் அரசியல், சமூகத் துறையில் மட்டுமல்லாமல், இலக்கிய கலாச்சார நட்பையும் அறிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.