காவியத்தைப் பற்றி ஒரு காவியம் - பேராசிரியர் அ. அய்யாசாமி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 ஜூலை 2015 11:39

"காலத்தை வென்ற காவிய நட்பு' என் ற தலைப்பே ஒரு கவிதை. நூலின் பொருளோ உண்மையிலேயே காலம் கடந்ததொரு காவியம்தான். சோவியத் யூனியனுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பு ஜவஹர்லால் நேரு, ஸ்டாலின், குருஷ்சாவ் ஆகியோரின் காலத்தில் முகிழ்த்து மலர்ந்தது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே இந்த நட்பு சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலேயே தொடங்கி, நூற்றாண்டு தோறும் காலத்துக்கேற்ற வகையில் வளர்ந்து இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவாகப் பரிணமித்தது என்பதைப் பழ. நெடுமாறன் அவர்களின் இந்த நூல் தெள்ளென விளக்குகிறது.

கி.மு. 3000-கி.மு.2000 ஆண்டுகளுக்கிடையே சிந்து சமவெளிக்கும் மத்திய ஆசியாவுக்குமிடையே தொடர்புகள் இருந்தன. தென் ரஷ்ய ஸ்டெப்பி புல்வெளிகள் அமைந்துள்ள இடமே ஆரிய இனத்தின் பிறப்பிடம் என்ற செய்திகளை நூலின் முதல் பாகம் தெரிவிக்கிறது. ரஷ்யாவின் பல பகுதிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே மொழிவழியாகவும் பண்பாட்டின் அடிப்படையிலும், பண்டைக் காலத்திலேயே உறவுகள் இருந்திருக்கின்றன. கி.பி. 15ஆம் நூற்றாண்டு முதல் பல ரஷ்யப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார்கள். கி.பி.1469ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த அபனாசி நிகிதன் இந்தியாவின் செல்வ வளம், பழக்க வழக்கங்கள், உணவு, மக்களின் வறுமை ஆகியவற்றைப் பதிவு செய்து "முக்கடல்களுக்கு அப்பால் பயணம்' என்னும் நூலை எழுதினார். 18ஆம் நூற்றாண்டில் சென்னைக்கு வந்த ஜிராசிம் லெபதெவ் என்ற இசைக் கலைஞர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களைக் கவர்ந்தார். இப்படி மேலும் பல பயணிகள்.

சோவியத் பகுதிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே வணிகத் தொடர்புகள் தொடர்ந்து இருந்து வந்துள்ளன. அர்மீனியர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு வந்து குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொண்டு வணிகத்தில் ஈடுபட்டார்கள். அர்மீனியாவிலுள்ள தேவாலயத்தைத் தமிழ் திரைச் சீலைகள் அழகு செய்வதும் அர்மீனியத் தலைநகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகள் இருப்பதும் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கும் செய்திகள். இந்து சமய நூல்களையும், சமற்கிருதப் பனுவல்களையும் ரஷ்ய அறிஞர்கள் மொழி பெயர்த்துத் தம் மக்களிடையே உலவவிட்ட செய்திகளும் பவுத்த சமயம் ரஷ்யாவில் பரவிய வரலாறும் அதனை அறிந்து கொள்வதில் ரஷ்யர்கள் ஆர்வம் காட்டிய செய்திகளும் விரிவாகக் கூறப்படுகின்றன.

ரஷ்யப் புரட்சிக்கு முன்னரே மன்னராட்சிக் காலத்திலேயே இரு நாடுகளுக்குமிடையில் நட்புறவு இருந்ததை இந்நூலின் மூன்றாம் பாகம் விரித்துரைக்கிறது. 1857 புரட்சிக்கு இந்திய மன்னர்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் நானாசாகிப் தன் தூதுவர் ஒருவரை ரஷ்யாவிற்கு அனுப்பியதும் பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கின் மகன் மாஸ்கோ சென்று உதவி கேட்டதும் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றதும் அந்நாளைய சூழ்நிலையில் இவை வெற்றிபெறாமல் முறியடிக்கப்பட்ட விவரங்களும் இதுவரை நம்மில் பலர் அறிந்திராதவை. இத்தனைக்கும் மேலாக விவேகானந்தர் சோஷலிச சிந்தனையாளராக விளங்கியதும் ரஷ்யப் புரட்சிக்குப் பல ஆணடுகளுக்கு முன்னரே அவர் புரட்சி வெடிக்கும் என்று கூறியதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் செய்திகளாகும்.

ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மையில் வதைபட்ட ரஷ்ய மக்களும் ஆங்கில அடக்குமுறையில் சிக்கித் தவித்த இந்திய மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதும் ஆதரவை நல்கியதும் ஆதரவை நாடியதும் இயல்பான நடவடிக்கைகளாக இருந்தன. சோவியத் புரட்சியை அடுத்து வந்த அறிவிப்பு ஒவ்வொன்றும் இந்திய விடுதலை வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டியது. இந்தியாவில் நடைபெற இருக்கும் புரட்சி உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதால் அதற்கு ரஷ்ய மக்கள் தங்கள் சக்தி அனைத்தையும் திரட்டி உதவவேண்டும் என்று லெனின் தனது நீலநூலில் முழக்கமிட்டார்.

ரஷ்யாவைப் பின்பற்றி மக்களைத் திரட்டுதல், தொழிலாளர்களை ஒன்றுபடுத்துதல், மக்களைப் புரட்சிக்கு ஆயத்தப்படுத்துதல் என்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் நிகழத் தொடங்கின. ஆயுதங்களைத் தயாரிக்கவும் சேகரிக்கவும் கற்றுக்கொள்வதில் ஆங்காங்கு இருந்தவர்கள் முனைப்புக் காட்டினார்கள்.

ரஷ்யப் புரட்சியைக் குறித்தும் அதன் விளைவுகளைக் குறித்தும் அதிலிருந்து இந்நாட்டினர் கற்றுக்கொள்ள வேண்டியவை குறித்தும் காந்தி பல கட்டுரைகளை எழுதினார். திலகர், தாகூர், விபின் சந்திரபால், லாலா லஜபதிராய், ஜவகர்லால் நேரு, அன்னிபெசன்ட் போன்ற பல தலைவர்களும் கட்டுரைகள் எழுதினார்கள். அவற்றின் காரணமாக இந்திய விடுதலை இயக்கம் ஒரு தெளிவான வடிவத்தைப் பெற்றது.

காந்தி தன் குருநாதராக ஏற்றுக்கொண்ட ரஷ்ய ஞானி டால்ஸ்டாயுடன் கொண்டிருந்த கடிதத் தொடர்பைப் பத்தாவது பாகம் விரிவாக எடுத்துரைக்கிறது. காந்தியின் தத்துவத்தை உருவாக்குவதில் டால்ஸ்டாய்க்குப் பெரும் பங்கு இருந்தது எனத் தெரிவிக்கிறது. லெனின் காந்தியைப் பற்றியும் அவரது போர் முறையைப் பற்றியும் உயர்வான கருத்துக் கொண்டிருந்தார் என்பதைப் பிறிதொரு கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

ஜவஹர்லால் நேருவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இருந்த தொடர்பைப் பற்றி எழுத முப்பதுக்கு மேற்பட்ட பக்கங்கள் தேவைப்படுகின்றன நெடுமாறன் அவர்களுக்கு. "நேரு - மார்க்சிஸ்ட் அல்லர் எனினும் அவர் லெனினை முற்றிலுமாகப் புரிந்துகொண்டிருந்தார்'' என்கிறார் அவர். சோசலிசக் கருத்துக்கள், சோவியத் புரட்சியின் செல்வாக்கு, லெனினின் வழிகாட்டல் ஆகியவற்றைப் பற்றி அவருக்கிருந்த புரிதல் இந்தியாவின் பொருளாதாரத் திட்டத்தைக் கட்டியமைப்பதில் அவருக்குப் பெரும் தூண்டுதலாக இருந்தது. நேருவின் உலகப் பார்வைக்கும் அவரது ரஷ்யா பற்றிய புரிதலே காரணமாக இருந்தது என்பதனை உலகறியும். நேருவிற்குப் பிறகு அவரது மகள் இந்திராவும் சோவியத் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுக்கு வழிவகுத்து அதே பாதையில் நாட்டை இட்டுச் சென்றார்.

ரஷ்யப் புரட்சியின் வெற்றியினாலும் தன்மையினாலும் அதனால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களினாலும் உந்தப்பெற்று நாட்டு விடுதலைக்காக மட்டுமின்றித் தொழிலாளர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் சங்கம் அமைத்துப் பாடுபட்ட வ.உ.சிதம்பரனார், பொதுவுடைமைக் கொள்கையை நாடெங்கும் பரப்பியவரும் லெனினின் அன்பிற்கும் பாத்திரமானவருமான சிங்காரவேலர், பொதுவுடைமைக் கொள்கைகளையும் சுயமரியாதைக் கருத்துக்களையும் சுதந்திரச் சிந்தனையையும் தமிழகத்தில் பரப்பிய பெரியார், முதன் முதல் தொழிலாளருக்கெனச் சங்கம் அமைக்கப் பாடுபட்ட தமிழ்த் தென்றல் திரு.வி.க., லெனின்பால் மாறாத பற்றுக்கொண்டவரும் பல வேலை நிறுத்தங்களை நடத்தியவருமான டாக்டர் பி. வரதராஜúலு நாயுடு, புரட்சி இயக்கத்தை வளர்த்த நீலகண்ட பிரம்மச்சாரி, காந்தியடிகளின் தத்துவங்களோடு கார்ல் மார்க்சின் தத்துவங்களையும் சேர்த்துப் பரப்பிய சுப்பிரமணிய சிவா, சோவியத் நாட்டிற்கு நேரில் சென்று கண்டறிந்து வந்த தத்துவங்களைத் தமிழகத்தில் பரப்பிய எஸ்.சீனிவாச ஐயங்கார், பொதுவுடைமைக் கொள்கையைத் தன் வயப்படுத்திக்கொண்டு அதனைத் தமக்கே உரிய பாணியில் "அபேதவாதம்' என்ற பெயரில் எடுத்துரைத்த சி. இராஜகோபாலாச்சாரியார், பொதுவுடைமைக் கருத்துக்களைப் பரப்புவதற்காகக் கொடுமைகள் பலவற்றுக்கு ஆளான ப. ஜீவானந்தம் ஆகியோரைப் பற்றிய விரிவான கட்டுரைகள் இந்நூலுக்கு அணி சேர்க்கின்றன.

ரஷ்ய-இந்திய உறவு மக்களுக்கிடையில் ஏற்பட்ட உணர்வுபூர்வமான உறவாதலால் கலைஞர்களும் எழுத்தாளர்களும் அதில் பெரும் ஈடுபாடு காட்டியதில் வியப்பில்லை. இந்திய நாட்டு பனுவல்களும் இலக்கியங்களும் சோவியத் நாட்டு வாசகர்களுக்கு விருந்தாயின. அதேபோல் ரஷ்ய இலக்கியங்களில் எண்ணற்றவை இந்தியர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. அது மட்டுமேயன்றி ரஷ்ய இலக்கியத்தின் தாக்கத்தினை இந்திய நாட்டு மொழிகளில் தோன்றிய இலக்கியங்களில் வெளிப்படையாகக் காண முடிந்தது. இவற்றையெல்லாம் விளக்கமாகவே இந்த நூல் தெரிவிக்கிறது.

உலகையேபுரட்டிப்போட்ட அக்டோபர் புரட்சியைப் பற்றிப் பாடினார்கள் என்பது மட்டுமல்ல, அதற்குப்பிறகு இந்திய மொழிகளின் இலக்கியப் பாதையே மாறிவிட்டது. ஏனெனில் சிந்தனையாளர்களின் சிந்தை முழுவதும் புரட்சியும் பொதுவுடைமையும் ஆக்கிரமித்துக்கொண்டன. அந்த வரிசையில் மும்மொழிக் கவிஞர் மிர்ஜாகாலிப், ரவீந்திரநாத் தாகூர், இக்பால், வள்ளத்தோல், நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரின் எழுத்துக்களை விரிவாக ஆராய்கிறார் நூலாசிரியர். ரஷ்யப் புரட்சியின் பெருமையை நன்கு உணர்ந்து அதனை "யுகப் புரட்சி'என்று வாழ்த்தி வரவேற்ற பாரதியாரைப் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதுகிறார் . பொதுவுடைமைக் கொள்கையைப் போற்றும் புதிய உலகம் செய்ய மக்களை அழைத்த பாவேந்தரைப் பற்றிய கட்டுரையுடன் நூல் நிறைகிறது. நூலைப் படித்த நமது நெஞ்சமும் நிறைகிறது.

முப்பதாண்டு உழைப்பு என்கிறார் நெடுமாறன் அவர்கள். அந்த உழைப்பு வீண் போகவில்லை. புதை பொருள் ஆராய்ச்சிபோல் நமக்குத் தெரிந்திராத எத்தனையோ செய்திகளைத் தெரிவிக்கும் அவருக்கு அறிவுலகம் கடமைப்பட்டிருக்கிறது.

கள்ளச் சிரிப்பும், பசப்பு மொழிகளும் பாசாங்கு நடத்தையுமே ராஜதந்திரம் என்று ஆகிய, தன்னலம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில், தலைவர்கள் கூடி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதே நோக்கமாகிவிட்ட இந்த வேளையில், இரு நாட்டு மக்களும் வரலாற்றுப் போக்கினாலும் உணர்வின் மூலமும் ஒன்றுபட்டிருந்த நிகழ்வுகளை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். தமிழகத்து நூலகங்கள் அனைத்திலும் இந்த நூலின் பிரதிகள் இடம்பெற வேண்டும்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.