தமிழ் வழிக் கற்றவருக்கே வேலை வாய்ப்பு - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:46

தமிழ்வழிக் கல்வி இயக்ககத்தின் முடிவான கொள்கைகளை மீண்டும் அரசுக்கும் மக்கட்கும் தெளிவுபடுத்துகின்றோம்.

அ. மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக்கொள்கை.

ஆ. எந்த இந்திய மொழிகளையும், ஆங்கிலம் முதலான அயன்மொழிகளையும் துணை மொழிகளாகக் கற்கலாம். கற்க வேண்டும். கற்கும் பொது வாய்ப்புப் பெருக வேண்டும். இது துணை மொழிக் கொள்கை.

இ. தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கற்றவர்க்கே வேலையும் வேலை வாய்ப்பும் உயர் கல்வியும், பிற வாய்ப்புகளும் உண்டு. இது வாழ்வுக் கொள்கை. சோறும் பொருளும் உலக மதிப்பும் தராவிட்டால். தமிழ் தீண்டா மொழியாகிச் செத்துவிடுமல்லவா? ஆதலின், வேலைப் பிழைப்பு, தமிழ் வழிக்கே வழங்கப்படும். எந்த இந்தியன் தமிழ்வழிக் கற்றாலும் அவனுக்கும் அவளுக்கும் எல்லாம் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும். தமிழை வேலை மொழியாக்காது பயிற்று மொழியாக மட்டும் வைப்பது பால் சுரவாத மார்பையொக்கும்.

ஈ. ஆங்கில வழியில் உயர்கல்வி கற்பார் கற்கட்டும அதற்கு இவ்வியக்கம் பெருந்தடையில்லை. வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பரந்த அளவில்வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றுதானே ஆங்கில வழியிற் கற்கின்றார்கள். அவர்கள் வேலைகளைப் பரந்த அளவில் பெறட்டும். தமிழ் வழிக்கற்றவர்கட்கு, தமிழ்நாட்டில் வேலைகளை விட்டுக்கொடுக்கட்டும். இதுவே வாழ்வறம். உலக மொழியான ஆங்கில வழியிற் பட்டம் பெற்றுவிட்டுத் தமிழ்நாட்டில் வேலை கேட்பதும் தமிழ்நாட்டை நம்பித் தமிழ் கற்றவரின் வேலை வாய்ப்பிற் பங்கு போடுவதும் முறையன்று. தமிழ் மாநிலத்தில் வேலை வேண்டுமென்றால். தமிழ்வழிப்படி, வேறு வழிகளிற் படித்தால் வேறிடங்களில் வேலை தேடு. இதுவே. இவ்வியக்கத்தின் நல்லுரை.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.