தமிழ் வழியிலேயே அனைத்தையும் பயில வேண்டும் - அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 13:57

அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,வேளாண்மை, மின்னியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற உயர் கல்வி, ஆராய்ச்சித்துறைகளில் பயன்பாட்டு மொழியாக தமிழைக் கொண்டு வரத் தேவையான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் உள்ள பாடப்புத்தகங்கள், ஆஙகிலம், உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து, அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். அதை அனைத்து உயர் கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும், தாய் மொழியான தமிழையும் அடிப்படையாக வைத்து நமது மொழியை வளர்க்க வேண்டும். முதலில் தமிழ் மொழியின் உயர் கல்வியைக் கற்பிக்கச் செய்து, அதன் பிறகு, ஆராய்ச்சியையும், நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் வாயிலாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து உலக அளவில் அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். அதைப் புத்தகங்களாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் வெளியிடுவது கட்டாயத் தேவை.

உயர் கல்வி - தொழில் நிறுவனங்கள் : தமிழ் வளர்வதற்கு உயர்கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முகாமையானது. தொழில் நுட்பங்கள், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிகளைச் செய்து தாய்மொழியிலேயே சிந்திக்கும் திறனையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்த வேண்டும்.

இதன் மூலம், நாம் உலகத்தரத்தோடு புதிய கருவிகளை, இயந்திரங்களை உருவாக்கம் செய்து உலக நாடுகளோடு போட்டி போட்டு வெற்றி பெற முடியும். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன்மூலம், தொழில்மேம்பாடு அடைவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் சூழல் ஏற்படுவதுடன், தாய்மொழியிலேயே படிப்பதால் தமிழும் வளரும்.

ஆட்சி அதிகாரத்திலும், சட்டம், நீதியிலும் தமிழ்மொழியையே முழுமை யாகப்பயன்படுத்த வேண்டும். அதேசமயம், தொடர்பு மொழியாக ஆங்கிலத் தைக் கற்றுக்கொண்டு அதை, துணை ஆட்சி மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.

(தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் - பக்கம் 9)

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.