தமிழர் எழுச்சிப் பயணம் - மக்கள் உற்சாக வரவேற்பு! சீரழியும் தமிழகத்தை மீட்க இளைஞர்களே-மாணவர்களே அணிதிரள்வீர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2015 16:31

வள்ளலார் பிறந்த அக்டோபர் 5ஆம் தேதி குமரி முதல் சென்னை வரை சுமார் 1400 கிலோ மீட்டர் தூரம் தமிழர் எழுச்சிப் பயணத்தில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் ஆற்றிய பேச்சுக்களின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

"தமிழ்நாட்டில் தமிழ் பயிற்சி மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக இல்லை. ஆங்கிலேயர் நாட்டைவிட்டு வெளியேறியபோதிலும் ஆங்கிலம் இன்னமும் அரசோச்சுகிறது. தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தை அரியணையில் ஏற்றியிருக்கின்றன.

kumari-

பறிபோகும் உரிமைகள்

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சினைகளில் அண்டை மாநிலங்கள் நம்மை வஞ்சிக்கின்றன. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் மதிக்க மறுக்கிறார்கள். மத்திய அரசோ மெளனம் சாதிக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நாம் தன்னுரிமை பெறுவது அவசியமாகிறது.

கொள்ளை போகும் கனிம வளங்கள்

தமிழகத்தில் குவிந்துக்கிடக்கும் கனிம வளங்கள் காட்டு வளங்கள், நீர் வளம் ஆகியவை சூறையாடப்படுகின்றன. தமிழக ஆறுகளில் உள்ள மணல் நாள்தோறும் 90 ஆயிரம் லாரி அளவுக்கு சூறையாடப்படுகின்றது. மணல் கொள்ளையர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் மூலம் ஆண்டிற்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான அளவு மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் அரசுக்கோ ஆண்டிற்கு வெறும் 42.49கோடி மட்டுமே வருவாயாகக் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, குமரி மாவட்ட கடற்கரையோரங்களில் குவிந்து கிடக்கும் தாதுமணல் நாள்தோறும் 10 ஆயிரம் டன் அளவுக்குக் கொள்ளையடிக்கப்படுகிறது. தாது மணலின் சந்தை விலை 1 டன் இலட்சம் ரூபாய் ஆகும். ஆனால் அரசுக்குக் கிடைப்பதோ வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆண்டிற்கு ரூ.30 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்குச் செலுத்தப்படுகிறது. ஆனால், தனியார் ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளன. தினமும் 10 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு கிரானைட் வெட்டி எடுக்கப்படுகிறது. இதன் சந்தை விலை 1 கன மீட்டர் ரூ.50 ஆயிரம் ஆகும். கிரானைட் கொள்ளையர்கள் ஆண்டிற்கு சுமார் 20 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைகிறார்கள்.

விளைநிலங்கள் பறிப்பு

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கும் அந்நிய நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் சொற்பத் தொகையில் பறிமுதல் செய்யப் பட்டு தாரை வார்க்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப் பட்ட பஞ்சமி நிலங்கள் அதிகாரிகளின் துணையுடன் கள்ளத் தனமாக பிறகு மாற்றப்படுகின்றன.விளை நிலங்களில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. கடற்கரையோரம் உள்ள நிலங்கள் உல்லாச விடுதிகள் கட்டுவதற்கு அளிக்கப்படுகின்றன. மொத்தத்தில் விளை நிலங்களின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது.

அழியும் கடல் வளம்

இந்திய நாட்டின் கடற்கரைப் பரப்பளவில் 13 சதவீதம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. மொத்தக் கடலுணவில் 12.62 சதவிகிதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப்பு அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள பவளப்பாறைகள் வரைமுறையில்லாமல் சூறையாடப்படுகின்றன. இதன் விளைவாக கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

வெட்டப்படும் மரங்கள்

தமிழகத்தின் நீர் வளத்திற்கு அடிப்படைக் காரணமான சோலைக் காடுகள் 30க்கு மேல் உள்ளன. இவைகள் தொடர்ந்து அழிக்கப்படுவதால் மழை குறைந்து ஆறுகள் வற்றிவிட்டன. காட்டு மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகின்றன. இந்தியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அதில் சரிபாதி அதாவது 5 கோடி பனைமரங்கள் உள்ளன. பனைமரங்களில் இருந்து உற்பத்தியாகும் பதநீர், கருப்பட்டி போன்ற தொழில்கள் நசிந்துவிட்டன. பனைமரத் தொழிலாளர்கள் பாரம்பரியத் தொழிலைவிட்டு இடம்பெயர்ந்து வருகிறார்கள். பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்றன.

கழிவுநீர் கலக்கும் ஆறுகள்

தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பவானி, சிறுவாணி, நொய்யல், பாலாறு, வைகை, தாமிரவருணி போன்ற ஆறுகளில் சாயநீர், சாக்கடைநீர், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆகியவை கலந்து ஆறுகள் சீரழிந்து வருகின்றன. சென்னையில் உள்ள அடையாறு கூவம் என்ற ஆறுகள் சாக்கடை ஆறுகளாக மாறியதைப்போல தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

குடும்பங்களைச் சீரழிக்கும் மது

வள்ளுவரில் தொடங்கி வள்ளலார் வரை கள்ளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். அத்தகைய சான்றோர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இன்று மது ஆறாகக் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழ்நாட்டில் மதுபான ஆலைகள் 11, பீர் உற்பத்தி 8ஆகியவை உள்ளன. திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கே இவை சொந்தமானவையாகும். தமிழ்நாட்டில் 6,820 மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சட்டப்படியான பார்கள் 3200, சட்டவிரோதமான பார்கள் 2600 உள்ளன. அரசுக்கு ஆண்டிற்கு 25ஆயிரம் கோடி வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், மதுக்குடிக்கவும், அதன் காரணமாக மருத்துவச் செலவுக்கும் மயங்கிக் கிடந்து வேலை இழப்பின் விளைவாகவும் ஆண்டிற்கு மொத்தம் 67,443 கோடி இழப்பு மக்களுக்கு ஏற்படுகிறது. இந்தியாவிலேயே அதிகமான இளம் விதவைகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். இளைஞர்களும், மாணவர்களும் மது மயக்கத்தில் கிடக்கிறார்கள்.

உருவாகும் பேரபாயங்கள்

சென்னைக்கு அருகே கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு அதுவும் சரிவர வேலை செய்யவில்லை. கூடங்குளத்தில் மற்றொரு அணுமின் நிலையம் மக்களின் எதிர்ப்புக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது. மற்ற தென் மாநிலங்களால் தங்களுக்கு வேண்டாம் என மறுக்கப்பட்ட அணுஉலை கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த அணு உலை வெடித்தால் அந்த அபாயம் தமிழக மக்களுக்கு. ஆனால், இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை நான்கு தென் மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

உலகம் முழுவதிலும் அணு உலைகளை மூடி வரும் இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் அணு உலைகள் அமைக்கப்படுவது தமிழகத்திற்குப் பேரபாயத்தைக் கொண்டுவந்து சேர்க்கும்.

தஞ்சைச் சமவெளிப் பகுதியில் பூமிக்குக் கீழே நிலக்கரி படிம இடுக்குகளில் மீத்தேன் எரிவாயு உள்ளது. இதை வெளியில் எடுக்க அந்நிய நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.3,500 கோடியில் அமைக்கப்படும் இத்திட்டத்தின் விளைவாக அந்நிறுவனத்திற்கு ரூ.6 இலட்சம் கோடி ஆதாயம் கிடைக்கும். ஆனால், காவிரிப் படுகை பாலைவனம் ஆகிவிடும்.

தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிபுரம் என்ற ஊரில் நியூட்ரினோ துகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சுற்றுப்புற மக்கள் கதிர்வீச்சு அபாயத்திற்கு உள்ளாவார்கள்.

எண்ணூரில் இருந்து மதுரை வரை 615 கிலோமீட்டர் நீளத்திற்கு விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இதன் விளைவாக விவசாய நிலங்களும் கிணறுகளும் பாசனக் கால்வாய்களும் பாதிப்பிற்கு உள்ளாகும். இலட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

தமிழ்நாடா? திறந்தவீடா?

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 9-10 ஆகிய நாட்களில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை ரூ.200 கோடி செலவில் தமிழக அரசு நடத்தியது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் ரூ.2.42 இலட்சம் கோடி அளவிற்கு தொழில்துறையில் முதலீடுகள் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார்.

இந்த முதலீட்டாளர்களுக்கு எத்தகைய நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. சீனா போன்ற நாடுகளில் தங்களிடம் இல்லாத தொழில்நுட்ப அறிவையும் பற்றாக்குறையாக உள்ள முதலீட்டையும் போக்க அந்நிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் தமிழர்களின் உழைப்புத் திறன் ஆகியவற்றை அந்நியர்கள் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் சம்பாதிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.

அந்நிய நிறுவனங்களுக்கு அரசு நிலமாக இருந்தால் இலவசமாகவும், விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களாக இருந்தால் குறைந்த விலையிலும் அவற்றை வாங்கி இந்நிறுவனங்களுக்கு அரசுக் கொடுக்கும். தண்ணீர், மின்சாரம் ஆகியவை சலுகை விலையில் அளிக்கப்படும். 24 மணி நேரமும் தங்குத் தடையில்லாத வகையில் மின்சாரம் வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை உண்டு. இந்நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய தனி துறைமுக வசதி, சாலைக் கட்டமைப்பு ஆகியவற்றை அரசு அமைத்துக் கொடுக்கும். குறைந்த ஊதியத்தில் நமது தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படும். இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைக்க முடியாது. இதே தொழிற்சாலைகளை வெளிநாட்டில் அமைத்தால் உற்பத்தி செலவு கூடும். எனவேதான் அவர்கள் தமிழ்நாட்டில் அமைக்க முன் வருகிறார்கள்.

ஒரேயொரு கிழக்கிந்தியக் கம்பெனியை ஆற்காடு நவாப் சென்னை மாகாணத்தில் வணிகம் செய்ய அனுமதித்தார். ஆனால் அவர்கள் நாளடைவில் இந்தியா முழுமையுமே கைப்பற்றினர். தங்களுக்குப் பூட்டப்பட்ட அடிமை விலங்கை தகர்த்தெறிய எண்ணற்றவர்கள் உயிர்துறக்கவும், சிறைகளில் சித்திரவதைகளை அனுபவிக்கவும் நேர்ந்தது. ஆனால், இப்போது நூற்றுக்கணக்கான அந்நிய நிறுவனங்களை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பதின் விளைவு என்ன ஆகும் என்பதைச் சிந்தித்துப்பாராமல் செயல்படுகிறார்கள்.

ஈழத்தமிழர் நிலை

இலங்கையில் 2009ஆம் ஆண்டு 2 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி. உலகத்தின் மனசாட்சியையே உலுக்கியது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இணைந்து இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றின. அதற்கிணங்க ஐ.நா. விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு அது அளித்த பரிந்துரையில் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவித்தது. போன்றவற்றை சிங்கள இராணுவம் செய்திருக்கிறது எனக் குற்றம்சாட்டியது.

ஆனால், இலங்கையில் சீன ஆதரவாளராக இருந்த இராசபக்சேவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு சிறீசேனாவின் ஆட்சி வந்தபிறகு அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொண்டது. இலங்கை அரசே உள்விசாரணை நடத்தலாம் என்ற தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வந்து இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது. கொலையாளியே நீதிபதியானால் என்ன நடக்கும்? தமிழர்க்கு நீதி கிடைக்காது?

அமெரிக்காவின் போக்கில் இந்த திடீர் மாற்றம் ஏன்? இலங்கை மற்றும் இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கம் இருக்கக்கூடாது. தனது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் புவிசார் அரசியலுக்கு ஏற்றதாகும். எனவே ஈழத்தமிழர்களை காவுக்கொடுத்தாவது தனது ஆதிக்கத்தின்கீழ் இலங்கையைக் கொண்டுவர அமெரிக்கா முயல்கிறது. இதற்கு இந்தியாவும் துணைநிற்கிறது. இத்தகையப் போக்கிற்கு தமிழர்கள் பதிலடி கொடுத்தே தீரவேண்டும்.

அமெரிக்க உற்பத்திப் பொருள்களுக்கு இந்தியா குறிப்பாக தமிழகம் பெரும் சந்தையாகத் திகழ்கிறது. எனவே 7 கோடித் தமிழர்களும் அமெரிக்க உற்பத்திப் பொருள்களை புறக்கணிக்க சூளுரை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழக இளைஞர்களும் மாணவர்களும் பெப்சி, கோக் போன்ற அமெரிக்க பானங்களைக் குடிக்காமல் புறந்தள்ள வேண்டும். மெக்டொனால்டு, கே.எஃப்சி. போன்ற அமெரிக்க உணவு விடுதிகள் தமிழகம் எங்கும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றைப் புறக்கணிக்க வேண்டும். திட்டமிட்டு இவ்வாறு செய்வோமானால் இலங்கையில் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களை நம்மால் காக்க முடியும்.

தமிழகம் சீரழிவதை தடுத்து நிறுத்த இளைஞர்களும் மாணவர்களும் முன்வரவேண்டும். இந்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத் தலைமுறை இயற்கை வளங்களை இழந்து அந்நிய நிறுவனங்களின் அடிமை நாடாக மாறிய பாழ்பட்ட தமிழகத்தில்தான் வாழவேண்டிய பரிதாப நிலை ஏற்படும்.

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுப்பது, நிர்வாகத்தில் நிலவும் இலஞ்ச ஊழல்- மது ஒழிப்பு, சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாவுமணி, சாதி-மதவெறி ஒழிப்பு, சனநாயக மீட்பு, எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை ஆகியவற்றுக்காக மாணவர்களும் - இளைஞர்களும் போராட முன்வரவேண்டும். அப்போதுதான் மக்களும் துணிந்து போராட முன்வருவார்கள். தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலை மலர வேண்டுமானால் மக்கள்திரள் போராட்டங்கள் ஒவ்வொரு ஊரிலும் வெடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த சீரழிவுகளிலிருந்து தமிழகத்தை மீட்க முடியும். இந்த உணர்வை மக்களிடையே பரப்புவதற்காகவே தமிழர் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். வழிநெடுக மக்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தொடர்ந்து போராடுவோம், வெற்றிபெறுவோம்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.