யார் தேசபக்தர்கள் -இளைய சுப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00

தாங்கள் மட்டுமே சுத்த சுயம்பிரகாசத் தேச பக்தர்கள் என்றும், பிற மதத்தைச் சார்ந்தவர்கள் தேசத் துரோகிகள் என்றும் இந்துத்வா வாதிகள் கூறிவரு கின்றனர்.

ஆனால் நாட்டின் நிகழ்வுகளோ வேறு உண்மையைச் சொல்கின்றன.

கேரளாவில் உள்ள தும்பா ஏவுகனைத் தளம் பற்றிய ஒரு செய்தி நம்மில் பலருக்குத் தெரியாது.

தும்பாவில் ராக்கெட் ஏவுதளத்தை (Equatorial Rocket Launching Station)நிறுவ வேண்டும் என்று 1962இல், இந்திய விண்வெளி ஆய்வுக்குழு முடிவெடுத்தது. நிலத்தினுடைய காந்த சக்தி கொண்ட, நிலநடுக்கோட்டிற்கு (பூமத்திய ரேகை) அருகில் தும்பா அமைந்திருப்பதே, அவ்வூரைத் தேர்ந்தெடுத்ததற்கான அறிவியல் காரணம். ஆமதாபாத்திலுள்ள, இயற்பியல் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானி முனைவர் சிட்னிஸ்தான் தும்பாவைத் தேர்வு செய்தவர்.

கேரளாவில், திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பா, மீனவ மக்கள் வாழும் ஒரு சிற்றூர். பெரும்பான்மை யாகக் கிறித்துவர்கள்.

தும்பாவில் ஏறத்தாழ 600 ஏக்கர் நிலப்பரப்பில், ஏவுகணைத் தளத்திற்கான இடம் தேர்வானதும், மக்களுக்குச் சொந்தமான அவ்வளவு பெரிய இடத்தை, அரசு கைப்பற்றுவதில் பல சிக்கல்கள் எழுந்தன.

அதிலும் குறிப்பாக, அந்தப் பகுதியில் கிறித்துவர்களின் பெரிய தேவாலயம் ஒன்றும் இருந்தது. அதையும் கையகப்படுத்த வேண்டிய நிலையில், திருவனந்தபுரத்தின் ஆட்சியர் கே. மாதவன் நாயர் அன்று பிஷப்பாக இருந்த அருள்தந்தை டாக்டர் திரெய்ராவைச் சந்தித்து உரையாடினார்.

முதலில் அதிர்ச்சியடைந்த அருள்தந்தை, பிறகு மற்றவர்களோடு கலந்துரையாடினார். கிறித்துவ மக்களிடமும் மெல்ல எடுத்துச் சொன்னார். தங்களின் கண்முன்பே, தாங்கள் வணங்கிய தேவாலயம் இடிபடப்போவதை எண்ணி அவர்களும் கலங்கினர். இறுதியில், இறைவன் சித்தம் அதுவெனில் எமக்கும் சம்மதம் என்று கூறினர்.

நாட்டின் அறிவியல் மேம்பாட்டிற்காகத் தங்கள் தேவாலயம் இடிக்கப்படுவதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியை, நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தன்னுடைய ்அக்னிச் சிறகுகள்” நூலில் குறித்துள்ளார்.

்தூய மேரி மேக்டலீன் தேவாலயத்தில் தும்பா விண்வெளி மையத்தின் முதல் அலுவலகம் அமைக்கப்பட்டது. பிரார்த்தனை அறைதான் எனது முதல் ஆய்வுக்கூடம். பிஷப்பின் அறை, எனது வடிவமைப்பு மற்றும் வரைகலை அலுவலகமாக மாறியது” என்கிறார் அப்துல் கலாம்.

இப்போது சொல்லுங்கள்-

நாட்டிற்காகத் தங்களின் ஆலயம் இடிபடச் சம்மதித்தவர்கள் தேசபக்தர்களா அல்லது தங்களின் அயோத்தி கோயிலுக்காக, நாட்டையே இடித்துக் கலவரப் படுத்துபவர்கள் தேசபக்தர்களா?

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.