தமிழக முதல்வரின் வரலாற்றுக் கடமை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 12:05

"தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடித்தால் ரூ.15 கோடி அபராதம் விதிப்பதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக'' இலங்கை அரசின் மீன்வளத்துறைத் தலைமை இயக்குநரான பெர்ணான்டோ எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி சென்று அந்நாட்டுத் தலைவர் களுடன் சுமூகமாகப் பேசிவிட்டுத் திரும்பிய இரண்டே நாட்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே "இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைப வர்களைச் சுடும் உரிமை தங்கள் கடற்படைக்கு உண்டு'' என எச்சரித்தார்.

சின்னஞ்சிறிய நாடான இலங்கையின் பிரதமர் முதல் அதிகாரிவரை மிரட்டுவதற்கு தமிழக மீனவர்கள் செய்த தவறுதான் என்ன?

தமிழ்நாட்டின் இராமேசுவரம் முதல் நாகப்பட்டினம் வரை 540 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் சுமார் 3 இலட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். 800 விசைப்படகுகள் உள்ளிட்ட 7,000 படகுகளில் மீன்பிடிக்கிறார்கள்.

எதிர்க்கரையில் இலங்கையின் தலைமன்னாரில் தொடங்கி காங்கேயன்துறை வரை 800 கிலோ மீட்டர் கடற்கரையில் 3 இலட்சம் தமிழ் மீனவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால், போருக்குப் பிறகு இப்போது 75,000 மீனவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். 150 விசைப்படகுகள் உள்பட 800 படகுகளில் மீன்பிடிக்கிறார்கள்.

தமிழகக் கடலில் உள்ள மீன்களும் இலங்கைக் கடற்பகுதிக்குள் உள்ள மீன்களும் சுதந்திரமாக தங்கு தடையின்றி அங்கும் இங்கும் சென்று வருகின்றன. அவற்றைத் தடுப்பாரில்லை. அதைப்போல இருபுறத்திலும் வாழும் மீனவர்களும் தடையின்றி அங்கும், இங்கும் சென்று பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தொழில் நடத்தி வந்துள்ளனர்.

தமிழ் நாட்டு மீனவர்களும் ஈழத் தமிழ் மீனவர்களும் காலங் காலமாக கொண்டும் கொடுத்தும் உறவாடி வந்தவர்கள். திருமண உறவுகள் இன்னமும் தொடர்கின்றன. கடந்த பல நூறாண்டு காலத்தில் இவர்களுக்குள் எத்தகைய மோதலும் நிகழ்ந்தது இல்லை. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றால் சில வேளைகளில் எதிர்க்கரையில் உள்ள நெடுந்தீவு போன்ற தீவுகளில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டுத் திரும்புவார்கள். அதேபோல ஈழத்தமிழ் மீனவர்களும் தமிழ்நாட்டில் வேதாரண்யம், நாகை போன்ற ஊர்களின் கடற்கரைகளில் தங்கி இளைப்பாறிவிட்டுத் திரும்புவார்கள். எந்தவொரு காலக்கட்டத்திலும் இவர்களுக்குள் மீன்பிடித்தலை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் நடைபெற்றதே கிடையாது.

ஆனால், 1950களில் இலங்கை இரப்பர் தேயிலைத் தோட்டங்களில் வேலை தேடுவதற்காக படகுகள் மூலம் சென்ற தமிழ்நாட்டுத் தமிழர்களை கள்ளத்தோணிகள் என அழைத்து இலங்கைக் கடற்படை சுட்டுக்கொல்லத் தொடங்கியது. காங்கேயன்துறை, காரைநகர், தலைமன்னார், கற்பிட்டி ஆகிய இடங்களில் சிங்களக் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டன. அதிலிருந்து தமிழர்களைத் துயரம் துரத்தத் தொடங்கியது.
கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை அரசின் தமிழின ஒழிப்புக் கொள்கை யின் விளைவாக மீன்பிடித்தடை விதிக்கப்பட்டது. ஈழத் தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல முடியவில்லை. சென்றால் இலங்கைக் கடற்படை அவர்களைச் சுடும். அதைப்போல தமிழ்நாட்டு மீனவர்களையும் சிங்களக் கடற்படை வேட்டையாடத் தொடங்கிற்று. 750க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 2000க்கும் மேற்பட்டோர் அங்ககீனம் ஆனார்கள். தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் பெறுமான படகுகள், வலைகள் ஆகியவை சேதமாக்கப்பட்டன.

1983ஆம் ஆண்டு கொழும்பு இனக் கலவரத்திற்குப் பிறகு தமிழகத்திற்குப் படகுகள் மூலம் தப்பிவர முயன்ற ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக் கடற்படை மூழ்கடித்துக் கொலை செய்தது. அதிலிருந்து தப்பித் தமிழகத்தின் கரைகளுக்கு வந்து சேர்ந்த அகதிகளின் படகுகளை இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நூற்றுக்கணக்கான படகுகள் இயற்கையின் சீற்றங்களுக்கு இரையாகி சிதிலமடைந்து யாருக்கும் பயன்படாமல் கிடக்கின்றன.

"ஈழத் தமிழரை ஒடுக்கினோம். இனி தமிழ்நாட்டு தமிழர்களையும் ஒடுக்குவோம்'' என்பதுதான் இலங்கைப் பிரதமர் முதல் அதிகாரி வரை விடும் எச்சரிக்கையின் பொருளாகும்.

இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளான மியான்மார், பாகிஸ்தான், வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகள் எல்லைமீறி வரும் இந்திய மீனவர்களைச் சுடுவோம் என ஒருபோதும் மிரட்டியதில்லை. அதைப்போல மேற்கண்ட நாடுகளின் மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தால் சுடுவோம் என இந்தியக் கடற்படையும் அவர்களை ஒருபோதும் அச்சுறுத்தியதில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் எல்லை தாண்டிவரும் மீனவர்களை சுடுவதோ, பிடித்துச் சித்திரவதை செய்வதோ நடைபெறுவதே இல்லை.

மன்னார் கடலுக்கு அப்பால் இலங்கையின் தென்கிழக்குக் கோடியில் 2 இலட்சம் வரையிலான சிங்கள மீனவர்கள் வாழ்கிறார்கள். கன்னியாகுமரிக்குத் தெற்கே இந்தியக் கடல் எல்லைக்குள் சிங்கள மீனவர்களின் இழுவைக் கப்பல்கள் மீன்பிடிக்கின்றன. ஆண்டு தோறும் அக்கடலில் 6 கோடி ரூபாய்களுக்கு மேல் பெறுமான மீன்களை சிங்களர்கள் அள்ளிச் செல்கின்றனர். ஆனால், இந்தியா ஒருபோதும் அதைத் தடுத்ததில்லை.

1974ஆம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்பாடு இருநாடுகளுக் கிடையே எல்லைக்கோடு மற்றும் அதன் தொட்ர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக மட்டும் செய்யப்படவில்லை. பாக் வளைகுடாவில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் இரு நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சமாகும். இந்த அடிப்படையில்தான் கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா விட்டுக்கொடுத்தது. இலங்கை நம்பிக்கைத் துரோகம் இழைத்து தமிழக மீனவர்களைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா -இலங்கைக்கிடையே மற்றொரு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. இதன் விளைவாக 1974ஆம் ஆண்டு உடன்பாட்டின்படி தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டதாக இலங்கை கூறத்தொடங்கியது.

ஆனால், சட்டப்படி அது சரியல்ல. உடன்பாட்டின் ஆறாம் பிரிவில் "இலங்கை மற்றும் இந்திய கலங்கள், இரு நாட்டு கடலிலும் இதுவரை காலங்காலமாக அனுபவித்துவந்த அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்திய-இலங்கை மீனவர்கள் அனுபவித்து வரும் மீன்பிடி உரிமை எந்த வகையிலும் மாற்றப்படவோ, திருத்தப்படவோ, குறைக்கப்படவோ இல்லை'' என்பது தெளிவாகும்.

நாடுகளுக்கிடையேயான 1969ஆம் ஆண்டு வியன்னா உடன்பாட்டில் உள்ள 60(1) விதியின்படி "இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் முக்கியமான அம்சம் என்பது ஒரு நாட்டினால் மீறப்படும்போது மற்ற நாட்டிற்கு அந்த உடன்பாட்டை முழுமையாக இரத்து செய்யவோ, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ இயலும்'' எனவே 1974, 1976" உடன்பாடுகளை முறித்துக்கொள்ளவும் கச்சத்தீவினைத் திரும்பப்பெறவும் இந்தியாவிற்குச் சட்டப்படி உரிமை உண்டு.

பாக் வளைகுடா, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக்கொன்ற நிகழ்ச்சிகள் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கத் தக்க குற்றமாகும். அவற்றை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் இந்திய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்தியத் தண்டனைச் சட்டம் 4ஆவது பிரிவில் நாட்டிற்கு வெளியே நடக்கும் குற்றங்களை தண்டிக்கும் வகை கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் அல்லது விமானம் ஆகியவற்றுக்கு எதிராக எந்த நாட்டினாலும் எந்த இடத்திலும் குற்றம் இழைக்கப்பட்டாலும் அவர்களைத் தண்டிக்க இந்திய நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக அரபிக் கடல் பகுதியில் இத்தாலியக் கடற்படையைச் சேர்ந்த மாலுமிகள் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட படகில் சென்றவர்களைச் சுட்டுக்கொன்றதற்காக கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டதும் இதன் அடிப்படையில்தான். சிங்களக் கடற்படையால் 750க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதிலும் கூட இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நட்ட ஈடு வாங்கித் தரவுமில்லை.

5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இலங்கைக் கடல் எல்லைக்குள் 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே தமிழக மீனவர்கள் எல்லை தெரியாமல் சென்று மீன்பிடிக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் ஆண்டுதோறும் தமிழகத்திற்குக் கொண்டு வரும் மீன், இறால் ஆகியவை ரூ.1 கோடிக்குமேல் பெறாது. ஆனால், இலங்கையின் மீன்வளத்தையே தமிழக மீனவர்கள் சுரண்டுகிறார்கள் என சிங்கள அரசு பொய்க்குற்றம் கற்பித்து தனது அட்டுழியங்களை நியாயப்படுத்த முயல்கிறது. ரூ.15 கோடி அபராதம் விதிக்கப் போவதாக மிரட்டுகிறது.

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் இந்த அட்டுழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாராமுகமாக உள்ள இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், அதிகாரமும் தமிழக முதலமைச்சருக்கு உள்ளன.

போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை, ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு, மீனவர்கள் பிரச்சினைக்குத் மனித நேய அடிப்படையில் தீர்வு ஆகிய மூன்று பிரச்சினைகள் குறித்து தமிழக சட்டமன்றத்திலும் இலங்கை வடக்கு மாகாண சபையிலும் ஒரே மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரனை அழைத்துப் பேசி இருவருமாக மேற்கண்ட மூன்று பிரச்சினைகள் குறித்து கூட்டறிக்கை வெளியிடவேண்டும். அவ்வாறு செய்வது அழிவின் விளிம்பில் நின்று தத்தளிக்கும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் புதிய நம்பிக்கையை ஊட்டும். ஈழத் தமிழர்களும் தமிழக மீனவர்களும் தனித்துவிடப்படவில்லை அவர்களுக்கு ஆதரவாக ஏழரைக் கோடி தமிழ் மக்களும் திரண்டு நிற்கிறார்கள் என்பது உலகத் தமிழர்களுக்கும் உற்சாகமூட்டும். உலக நாடுகளின் போக்கில் மறுசிந்தனை ஏற்பட வழிவகுக்கும்.

"மேற்கு வங்க முதலமைச்சரும் வங்கதேச பிரதமரும், இந்தியாவில் உள்ள பஞ்சாப் முதலமைச்சரும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் முதலமைச்சரும் வெவ்வேறு நாட்டினர் ஆயினும், மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தொப்புள்கொடி உறவு பூண்டவர்கள் என்ற முறையில் இணைந்து பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொண்டனர். அத்தீர்வை இந்திய அரசும் பாகிஸ்தான் அரசும் வங்க தேச அரசும் ஏற்றுக்கொண்டன. இது வரலாற்று உண்மையாகும்.

ஈழத் தமிழர்கள் உள்பட உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் தாய்த் தமிழகத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தாயாக நின்று தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய மகத்தான கடமையை செய்து வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெறுமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி : "தினமணி' 30-10-15

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.