தமிழன் கால்வாயும் - சுற்றுச் சூழலும் - மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன் ஒரு நேர்காணல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00
http://thenseide.com/images/Sachi.jpgசேது சமுத்திரத் திட்டமா? தமிழன் கால்வாய்த் திட்டமா? எது சரியான பெயர்?

சேது என்றால் அணை அல்லது கரை அல்லது மேடு. சமுத்திரம் என்றால் ஆழ்கடல். வாய் பேசமுடியாத பெண்ணுக்குத் தேன்மொழி என்று பெயர் வைப்பது போல் இருக்கிறது.

சேது சமுத்திரத்திட்டம் என இதனைக் கூறுவது கரையில் இருபக்கமும் தமிழர்கள் கடலில் இருக்கும் திடல்களை உடைத்து மணலை அள்ளி ஆழமாக்கி வருகின்ற கால்வாய். தமிழன் கால்வாய் என்பதே பொருத்தமான பெயர். இப்பெயரையே 1942இல் சி. பா. ஆதித்தனாரும் விதந்துரைத்தார்.

பனாமா நாட்டில் பனாமாக் கால்வாய், யப்பானுக்கு அருகில் யப்பான் கடல், சீனத்துக்கருகில் சீனக்கடல், இங்கிலாந்துக்கு அருகில் ஆங்கிலக்கால்வாய், அரபு நாடுகளுக்கருகில் அரபிக்கடல், வங்காளத்துக்குக் கீழே வங்காள விரிகுடா, தமிழர் வாழும் இரு நாடுகளுக்கு இடையே தமிழன் கால்வாய் என்பதே பொருத்தமான பெயராகும்.

தமிழன் கால்வாயின் நீளம், அகலம், ஆழம் என்பன எவ்வளவு?

வடகடல் எனப்படும் பாக் நீரிணையிலேயே தமிழன் கால்வாய் அமைகிறது

தென்கடல் என அழைக்கப்படும் மன்னார் வளைகுடாவில் ஐந்து கிலோ மீட்டர் வரை வடகடலிலிருந்து இந்தக் கால்வாய் நீள்கிறது.

வடக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே தென்கடலையும் நடுவில் உள்ள வடகடலின் ஊடாக இணைப்பதே தமிழன் கால்வாய்.

வங்காள விரிகுடாவிற்கு அருகே கோடியக்கரையில் 36 கி.மீ. நீளத்திற்கு 300 மீட்டர் அகலத்தில் இப்பொழுது சராசரியாக உள்ள 6 மீட்டர் ஆழத்தை 12 மீட்டர் ஆழமாக்க வேண்டும்

தென்கடலுக்கு அருகே தனுக்கோடிக்குக் கிழக்காக 20 கி. மீ. நீளத்திற்கு 300 மீட்டர் அகலத்தில் இப்பொழுது சராசரியாக உள்ள 3 மீட்டர் ஆழத்தை 12 மீட்டர் வரை ஆழமாக்க வேண்டும்.

மொத்தம் 56 கி. மீ. நீளம், 300 மீட்டர் அகலம் கொண்ட கடற்கரையை 12 மீட்டர் வரை ஆழமாக்க வேண்டும்.

ஆழமாக்கும் போது வாரப்படும் மணல் சேற்றை வங்காள விரிகுடாவிலும், தென்கடலிலும் உள்ள 100 மீட்டருக்கு அதிகமான ஆழங்களில் கடனுள் கொட்ட வேண்டும்.

இதனால் தமிழகக் கடல் எல்லைக்குள் 206 கி. மீ தொடக்கம், 210 கி. மீ. வரை நீண்ட தூரத்துக்குத் தமிழன் கால்வாய் அமையும்.

மீனவர்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாவார்களா? இந்தக் கால்வாயைத் தோண்டுவதால் மீனவர்களுக்கு நன்மையா? தீமையா?

நாகப்பட்டினம் மாவட்டம் தொடக்கம், இராமநாதபுரம் மாவட்டம் வரையான 5 மாவட்டங்களில் ஏறத்தாழ 3 இலட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். இவர்களை நம்பி 12 இலட்சம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் இருக்கிறார்கள்.

ஏறத்தாழ 225 மீனவ ஊர்களில் இவர்கள் வாழ்கிறார்கள்.

வள்ளங்கள், படகுகள், கட்டுமரங்கள் என 25 ஆயிரம் கடலோடும் நாவாய்கள் இவர்களிடம் உள்ளன. இவற்றுள் இயந்திரம் பூட்டிய விசைப்படகுகளாக 7000 வள்ளங்கள் உள்ளன.

தமிழக எல்லைக்குள், வடகடலில் ஏறத்தாழ 6000 சதுரகிலோ மீட்டர் பரப்பளவே உள்ளது.

வள்ளங்களின் எண்ணிக்கையையும், பயன்படுத்தும் வலைகளின் வகைகளையும்பார்க்கும் பொழுது வடகடலில் மீன்பிடி அழுத்தம் அதிகமாகவே இருக்கு மெனத் தோன்றுகிறது.

தமிழகத்தின்மொத்த மீன் உற்பத்தியில் பாதியை இந்த மீனவர்கள் தருகிறார்கள்.

சிறிய கடலில் அளவுக்கதிகமாக மீன் பிடிக்கிறார்கள். திறமையுள்ள இவர்களுக்கு மீன்பிடிப் பரப்பளவு அதிகமாக வேண்டும். மீன்பிடி எல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும்.

கோடியக்கரை அருகே 36 கி. மீ. நீளமான கால்வாயும், தனுஷ்கோடிக் கருகே 20 கி. மீ. நீளமான கால்வாயும் வருமானால் இந்த 5 மாவட்ட மீனவர்களும் அக்கால்வாய்கள் வழியே வங்காள விரிகுடாவிற்கும், தென் கடலுக்கும் எளிதாகப் பயணிக்கலாம்.

இந்தியப் பொருளாதார வெப்பக் கடற்பகுதிக்குள் இழுவைக்கப்பல்களைக் கொணர்ந்தும், தூண்டில் மிதப்புகளை நீள விட்டும் கடல்தரை மீன்வளங்களையும், மேல் மட்டத்திலுள்ள வஞ்சிரம், அறுக்குற சுறா போன்ற மீன்வகைகளையும், தாய்லாந்து, தாய்வான், பர்மா, இந்தோனேசியா, யப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மீனவர்கள் அள்ளிக்கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.

தமிழன் கால்வாயின் இருமுனை ஆழமாக்கலும் வடகடலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களுக்கு வெளிகடலுள் பாரிய இழுவைக் கப்பல்களுடன் போகும் வழியைத் திறப்பன.

காவிரி தொடக்கம் வைப்பாறு வரை உள்ள ஆறுகளும் சிற்றாறுகளும் மேலணைத் தடுப்புகள் இருப்பதனால் கடலுக்குள் நீரைக் கொட்டுவதில்லை. இதனால் முதல் நிலை உற்பத்திக்குத் தேவையான நைட்ரசன், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற ஊட்டம்தரும் மூலப்பொருள்கள் போதுமான அளவு சேர்வது இல்லை.

ஆழமற்ற இருமுனைகளையும் ஆழமாக்குவதால் வங்காள விரிகுடா விலிருந்தும், தென் கடலிலிருந்தும் மாறி மாறி நீரோட்டம் பெருகும், முதனுற்பத்திக்குத் தேவையான ஊட்ட மூமூலப்பொருள்களின் அளவு வடகடலில் அதிகரிக்கும். உயிரின வளம் பெருகும்.

எப்படிப் பார்த்தாலும் மீனவர்களின் வருவாய் பெருகும். மீன் உற்பத்தி அதிகரிக்கும். வடகடலில் மீன்பிடி அழுத்தம் குறையும். இம்மீனவர்களின் மீன்பிடி எல்லைகள் வெளிக்கடலுள் பரந்து விரியும்.

கால்வாய் தோண்டப் படும்போது பவளப்பாறைகள் அழியும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறதே?

வடகடலில் மட்டும்தான் கால்வாய் அமையவிருக்கிறது. தென் கடலில் 5 கி. மீ. தூரம் வரைதான் கால்வாய் நீளும். மேற்கே வான் தீவு தொடக்கம் கிழக்கே செங்கால் தீவுவரை உள்ள 21 தீவுகள் உள்ளடக்கிய கடல் பகுதியைச் சுற்றுச்சூழல் அமைச்சு பாதுகாப்பு வலயமாக அறிவித்துள்ளது. இது தென்கடலில் உள்ள பகுதி. கால்வாய் முடிவடையும் இடத்திலிருந்து 25 கி. மீ. தொலைவிற்கு அப்பால்தான் செங்கால் தீவு உள்ளது. கால்வாய் அமையும் 206 கி. மீ. நீளம் வரையும் கடல் தரையில் சொல்லக்கூடிய அளவுக்குப் பவளப்பாறைகள் இல்லை. எனவே கால்வாய் அமைப்பதனால் பவளப்பாறைகள் அழியும் என்று கூறுவது தவறான, உண்மைக்கு மாறான வாதமாகும்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.